ஒரு நைஜீரியக் காதல் கதை


பெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை பெற்றுவிடுகின்றன. பெண்களின் அகவுலகம் அறியப்படாத ரகசியங்களால் நிரம்பியிருக்கிறது. உலக இலக்கியங்கள் எத்தனையோ வழிகளில் அதனை திறக்க முற்பட்டாலும் அதன் அறியப்படாத பக்கங்கள் பெருகிய வண்ணமே இருக்கின்றன. அவ்வகையான சில ரகசியங்களை நைஜீரிய எழுத்தாளரான அபுபக்கர் ஆடம்  இப்ராஹிம் திறக்க முற்பட்டிருக்கிறார். அவருடைய நாவலான “தீக்கொன்றை மலரும் பருவம்” நாவலை தமிழில் லதா அருணாச்சலம் சுவை குன்றாமல் மொழிபெயர்த்திருக்கிறார்.
நாவல் இலக்கியம் தொடர்ந்து முரண்பட்ட மனிதர்களை சந்திக்க வைப்பதில் இன்பம் காண்கிறது. அவர்களின் அகச்சிக்கலை கண்டு கெக்கலியிடுகிறது. இந்நாவலில் கைம்பெண்ணான ஹஜியா பிந்த்தா விளிம்பு நிலையிலிருந்து வந்து சமூகப்பிரச்சினைகளை விளைவிக்கும் ரௌடியான ரெஸாவை சந்திக்கிறாள். எதிர்பாராத சந்திப்பு இருவருடைய வாழ்க்கையையும் மாற்றத் துவங்குகிறது. தனது இளைய மகனை இழந்த சோகமும் தாயன்பை உணராத ரெஸாவின் நினைவுகளையும் இவர்களின் உறவு கிளருகிறது. ஆனால் நவீன வாழ்க்கை நினைவின் உறவுகளுக்கு புதிய முகவரிகளை அளிக்கின்றன. அவ்வகையில் தாய் மகன் எனும் நினைவிலான கற்பனை உறவுகளை கலைந்து யதார்த்த வாழ்வில் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொள்கின்றனர். ஒருவர் மற்றவரின் ஆற்றாமைகளை பூர்த்தி செய்கின்றனர். சமூகம் இவர்களின் உறவுக்கு அளிக்கும் முத்திரைகள் அவமானங்களை சுமக்க வைக்கிறது. சங்கடம் கொள்ள வைக்கிறது. சமூகத்தை விட்டு விலகவும் முடியாமல், உறவுகளை துண்டிக்கவும் இயலாமல் நகரும் அவ்விருவரின் முரண்பட்ட இயல்பு வாழ்க்கையை துல்லியமாக, அதே நேரம் ரம்மியமாக எழுத்தாளர் பதிவுசெய்கிறார்.
சான்சிரோ எனும் பிராந்தியத்தில் இந்நாவல் களம் கொள்கிறது. அங்கு நிகழும் அரசியல் மாற்றங்களும், அதிகார வேட்கையும், அதற்கென நிகழும் வன்மமான போட்டிகளுக்கும் நாயகன் ரெஸா துணைபோகிறான். அதிகாரத்தின் கைக்கூலிகளாக மாற்றப்படும் விளிம்பு நிலை மக்களிடமிருந்து பறிக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமைகள். சுகாதாரமான வாழ்விடமும், வாழ்வியலுக்கேற்ற கல்வியும் பறிக்கப்படுவது குறித்த அறியாமையில் அதிகாரம் அவர்களை ஆட்கொள்கிறது. நயவஞ்சகமாக பேசி அவர்களின் சிந்தனையை மழுங்கடித்துவிடுகிறது. சமூகப் போராளிகளாக கற்பனை செய்ய வைத்துவிடுகிறது. நாயகன் ரெஸாவும் விதிவிலக்கல்ல. போதைப்பொருட்களும் சமூக அறங்களுக்கு எதிரான திருட்டும் கொள்ளையும் இயல்பாகிப் போவதன் பிண்ணனியையும் அவர்களின் வாழ்க்கையோடு பதிவு செய்திருப்பது அச்சமூகத்தின் ஆவணமாக விளங்குகிறது.
மறுமுனை ஹஜியா பிந்த்தாவின் வாழ்க்கை குறித்த விவரிப்புகள் இந்த அரசியல் களேபரங்களுக்கு இடையில்  அமையப்பெற்றிருக்கும் குடும்ப அமைப்பு குறித்தான பார்வையாக அமைகிறது. இயந்திரம் போல அன்பற்று நகரும் குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண்ணின் அடிப்படை தேவை எதுவாக அமைகிறது எனும் கேள்வியில் நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு பெண்ணும் பயணம் செய்கின்றனர். மேலும் இந்நாவலில் அனைத்து வயதிலும் குறைந்தது ஒரு பெண் கதாபாத்திரமாவது இடம்பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. அனைவரும் இழப்பை சுமக்கின்றனர். அன்பை தேடுகின்றனர். இழப்பும் அன்பும் ஆடும் கண்ணாமூச்சியில் சிலர் குளிர் காய விரும்புகின்றனர்.
ஹஜியா பிந்த்தாவும் ரெஸாவும் ஒருவர் மற்றவரின் வலிகளை சுமக்கத் தயாராக இருக்கின்றனர். ரெஸாவின் அடிப்படைத் தேவைகளை உணரவைக்கிறாள். பிந்த்தாவுடைய அன்பின் தேடல் ரெஸாவிடம் பூர்த்தியாகிறது. ஆனாலும் அவர்களுக்கு இடையில் இருக்கும் இழந்த மகனின் நினைவும், பிரிந்த தாயின் நினைவும் சங்கடமாக அமைகிறது. நவீன வாழ்க்கை மரபான சித்தாந்தங்களுக்கு முரண்பட்டு நிற்கும் தன்மைகொண்டது. மரபை பின்தொடரமுடியாமலும் புதிய வாழ்க்கை முறையில் தைரியம் கொள்ள முடியாமலும் திணறி ஊசலாடும் மத்திய தர குடும்பத்துக் கதைகளுக்கு பொது உதராணமாக பிந்த்தாவின் வாழ்க்கை அமைகிறது. சுதந்திரம் குறித்த சிந்தனை இருவரிடம் மேலோங்கியிருக்கிறது. குடும்பம் எனும் அமைப்பிலிருந்து விடுபட விரும்புவதும், அன்பு எனும் சங்கிலியில் சிக்கிக் கொள்ள விரும்புவதும் ஒரே தருணத்தில் நிகழ்கிறது. நாவலின் ஒவ்வொரு பக்கங்களிலும் முரண்கள் ததும்புகின்றன. நாவலின் கடைசிப் பகுதிகளை நெருங்கும்போது பிந்த்தாவும் ரெஸாவும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் போல உருமாறிக் கொள்கின்றனர். ஒருவரின் தேவைகளையும், நிறைகளையும் பிறிதொருவரிடமிருந்து முழுதுமாக அறிகின்றனர்.
சமகால நாவல் இலக்கியத்தில் நல்லதொரு முன்னுதாரணமாக இந்நாவல் விளங்குகிறது. வரலாற்று நிகழ்வை, அரசியலை, அதன் சமூகத்தை, அதனூடே இயல்பாக இருக்க விரும்பும் குடும்ப அமைப்பை சமமான அளவில் விவரித்து செல்கிறார். வழக்காற்று மொழியிலேயே நாவலை எழுதியிருக்கிறார். வணிக திரைப்படத்திற்கொப்ப வன்முறைகளும், திருப்பங்களும் நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. ஆனால் அச்சமூகத்தின் பிரதிபலிப்பு என்பதை உணரத் துவங்கும் தருணத்தில் சுவாரசியத்திற்கு பதில் அச்சமூகம் குறித்த பச்சாதாபமே மேலோங்குகிறது. ஹஜியா பிந்த்தாவின் கதாபாத்திர வடிவமைப்பும், அவளுடைய காதல் ஏக்கங்களும் நவீன இலக்கியத்தின் மறக்கவியலாத பெண் கதாபாத்திரங்களில் நிச்சயம் இடம்பெறும்.

- கணையாழி

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக