வாழ்வின் தீராத உரையாடல்


இலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்திலிருந்து இயல்பாக இடம்பெற்று வருவது. அதுகுறித்து உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தத்துவ நிலைப்பாடுகளுக்கு இலக்கியம் உருவம் கொடுக்க முனைந்திருக்கிறது. செவ்வியல் இலக்கியங்களிலிருந்து நவீன கதையாடல்கள் வரை இந்த தன்மை நீட்சி கொள்கிறது. மரணம் குறித்த அனைத்து கோப்டாடுகளும் வாழ்வை மதிப்பிடுவதற்கான வழிமுறையாக மொழியில் மாற்றப்படுகிறது. மதங்களும் இத்தன்மைக்கான சாட்சியங்களை தன்னுள் கொண்டிருக்கின்றன. விதவிதமான வடிவங்களை மரணம் மொழியளவில் எடுத்துக்கொண்டாலும் அதைக் குறித்த முழுதான அறிதல் மொழிக்கு அப்பால் எப்போதும் நின்றுகொண்டிருக்கிறது. அதற்கு நவீன இலக்கியம் கொடுத்திருக்கும் பல உருவங்களில் தனித்துவமாக நிற்கிறது மார்ட்டீன் ஓ’ கைன் ஐரிஷ் மொழியில் எழுதிய Cre na Cille எனும் நாவல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு மூல நூல் வெளியாகி அறுபது ஆண்டுகளுக்கு பிறகு சாத்தியப்படுகிறது. Alan Titley - The Dirty Dust எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் ஓராண்டு இடைவெளியிலேயே Liam MacCon Iomaire மற்றும் Tim Robinson ஆகியோரது உழைப்பில் மற்றுமொரு மொழிபெயர்ப்பும் வெளியாகிறது. ஐரிஷ் மொழியின் செவ்வியல் இலக்கியத்தில் இடம்பெறும் இந்த நவீன நாவலை Alan Titley இன் மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் ஆர்.சிவக்குமார் “வசை மண்” எனும் பெயரில் செறிவுற மொழிபெயர்த்துள்ளார்.
அடுக்கடுக்காக ஆங்கிலத்தில் வெளியாகும் இரண்டு மொழிபெயர்ப்புகளின் வழியே இந்நாவல் தன்னுள் கொண்டிருக்கும் சவாலை நம்மிடம் அறிமுகப்படுத்துகிறது. மொழியில் இருக்கும் பெரும் சாவலை மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியை இந்நாவல் முன்வைக்கிறது. மொழியியல் ஆர்வலரான மார்ட்டீன் ஓ’ கைன் ஒரு மழைநாளில் நண்பருடன் பெண் சடலம் ஒன்றை புதைக்க செல்கின்றார். அப்போது மழையில் சரியான இடத்தை கண்டுபிடிக்க இயலாமல் ஏற்கனவே ஒரு பெண் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் அவளையும் புதைக்கின்றனர். அப்போது அவருடன் வந்தவர் ஒரு தகவலை சொல்கிறார். ஏற்கனவே புதைக்கப்பட்டவள் புதிதாக புதைக்கப்படுகிறவளுடனான கருத்து முரண்பாட்டில் இருந்தவள் என்று. ஒரே இடத்தில் புதைக்கப்படுவதால் இருவருக்கிடையில் பேச்சுவார்த்தையில் உரசல்கள் நீளும் என்று ஆசிரியரின் நண்பர் சொல்கிறார். இங்கிருந்தே வசை மண் நாவலுக்கான சிந்தனையை ஆசிரியர் எடுக்கிறார். 
1940 களில் இந்நாவலை ஐரிஷ் மொழியில் எழுதுகிறார். நாவலில் உரைநடைக்கான இடத்தை முழுதுமாக நீக்கிவிடுகிறார். மேலும் நாவலில் காலம் நகர்வதில்லை. அயர்லாந்தின் கன்னிமாரா எனும் இடத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டமே நாவலின் கதைக்களம். அங்கு புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களுக்கிடையேயான முடிவுறாத உரையாடல்களும் அதற்கிடையில் அவர்கள் காக்கும் மௌனங்களுமே நாவலாகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நிச்சயிக்கப்பட்ட காலத்துடன் உரைந்துவிடுகிறது. வாழ்ந்த வாழ்க்கையை அசைபோடுவதும் புதிதாக வரும் பிணங்களிளிடமிருந்து தங்களுடைய மரணத்திற்கு பிறகான நாட்களின் சமூகத்தையும். அதில் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதுமே அவர்களுக்கான அன்றாடமாகிறது.
உரைநடையில் கதாபாத்திரங்களை தனித்தனியாக ஆசிரியர் குறிப்பிடுவதில்லை. தொடர்ந்து நிகழ்த்தப்படும் உரையாடல்களே நாவலின் பக்கங்களை நிறைக்கின்றது. தமிழ் வாசகர்களுக்காக சில அடிக்குறிப்புகளும் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்த முன்குறிப்பு விளக்கங்களும் நூலில் இடம்பெறுகிறது. நாவலின் அளவில் அவரவர்களின் பேச்சின் வழி மட்டுமே கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்துகிறார். பக்கங்கள் நகர நகர வாசகர்களுக்கு ஒவ்வொரு பிணங்களின் வாழ்க்கையும், அவர்களின் ஆசைகளும் தெளிவாக புரிபடத் துவங்குகின்றன. இடையிடையில் ஊதுகொம்பு எனும் கதாபாத்திரத்தின் வழியே பேசுகிறார். சிறிய அளவில் இடம்பெறும் ஊதுகொம்பின் சொற்கள் பிணங்களின் உரையாடல்களுக்கு தத்துவ முகத்தை அளிக்கிறது. கல்லறைத் தோட்டத்தை குடியிறுப்பாக உருவகிக்க உதவுகிறது.
புதைக்கப்பட்டவர்களின் உரையாடல்கள் பெரும்பாலும் வசைகளாக, வம்புப்பேச்சாக அவரவர்களின் பார்வையில் எழுப்பப்படும் நினைவோடைகளாக எழும்புகிறது. எல்லோருடைய பேச்சிலும் பிறிதொருவர் காயப்படுகின்றனர். நாவலின் மையக்கதாபாத்திரமக அமைவது கெய்த்ரியானோ பௌடீன். அவளை புதைப்பதிலிருந்தே நாவல் ஆரம்பம் கொள்கிறது. அவள் மீது ஏற்கனவே காழ்ப்பு கொண்டிருக்கும் பலர் அவள் மீதான வசையையும் அவளின் இழி நடத்தையையும், வாங்கிய கடனை திருப்பி அடைக்காத குணத்தையும் நினைவுபடுத்திய வண்ணமிருக்கின்றனர். மேலும் அவளுக்கும் அவளுடைய சகோதரியான நெள் பௌடீனுடனான பனிப்போரையும் நினைவுபடுத்திய வகையில் வசைபாடுகின்றனர். உயிருடனிருக்கும் நெள்ளின் மரணத்தை விரும்பும் மனதையும் வாழும்போது நெள் பௌடீன் தனக்கு செய்ததாக ஏற்றி சொல்லப்படும் பொழிப்புரையும் கெய்த்ரியானோவின் கதாபாத்திரமாக உருக்கொள்கிறது. மேலும் அவளுடைய சொந்தக்காரியான பாபா பௌடீனின் நிலத்தை சரி பங்காக நெள்ளிற்கும் கெய்த்ரியானோவிற்கும் பிரித்துக் கொடுப்பதில் சரி விகிதமாக அமையாது எனும் கற்பனை அவளின் தீய எண்ணங்களுக்கு வலு சேர்க்கிறது. மேலும் பொருளாதார ரீதியில் நெள்ளை விட கெய்த்ரியானோ பின்தங்கியவள். இத்தகவல் கெய்த்ரியானோவிடம் இருக்கும் தீய எண்ணங்களுக்கு பொருளாதார ரீதியான தாழ்வு மனப்பான்மை காரணமாக இருக்கக்கூடும்  எனும் காரணத்திற்கு வலு சேர்க்கிறது. இறந்தபின்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் மகனுக்கு நிலத்தில் ஒரு பகுதி சென்று சேருமா எனும் எண்ணங்கள் அவளின் சிந்தனைகளாக மரணித்திற்கு பின் நீள்கிறது.
கெய்த்ரியானோவைப் போன்று ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கு தேவையான தகவல்களை தேடும் வேட்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். முதலாம் உலகப் போரில் புதைக்கப்பட்டவர்கள் இரண்டாம் உலகப் போரோடு தொடர்பற்றவர்களாக இருக்கின்றனர். கதை இரண்டாம் உலகப் போரின் காலக்கட்டத்தில் நிகழ்கிறது.. ஆதலால் ஹிட்லரை ஆதரிப்பவர்களும், அவரை எதிர்ப்பவர்களும் ஒருங்கே பேச்சில் ஈடுபடுகின்றனர். எழுதி வெளியாவதற்கு முன்பே இறந்த கவிஞர் தன்னுடைய இலக்கியத் தன்மையை பறைசாற்றியபடி இருக்கிறார். ஒவ்வொரு வீடாக திருடும் மனிதனை அங்கிருக்கும் பிணங்களில் பலர் குறை கூறுகின்றனர். இவர்கள் அனைவருடைய உரையாடல்களும் ஒரு முற்று புள்ளி நோக்கி நகர்வதில்லை. மாறாக வாழும்போது பேசிய சொற்களை இறந்தபின்னும் பிரதி எடுக்கின்றனர்.. அவர்கள் வாழும்போது முன்வைத்த குற்றாச்சாட்டுகளை மீட்டுரைக்கின்றனர். ஆனால் அதற்கான தீர்வை எதிர்நோக்க மறுக்கின்றனர். வாழ்ந்த வாழ்க்கையும் அதுவரை மேற்கொண்டிருந்த பார்வையையும் பகுத்தறிய யாருமே விரும்புவதில்லை. தங்களுடன் கருத்தில், வாழ்க்கையில் முரண்பட்டவர்கள் சீக்கிரம் கல்லறைத் தோட்டத்தை வந்துசேர வேண்டும் என்பதே பெருவிருப்பமாக அமைகிறது. அவரவர்களின் பிரச்சினைகளிலிருந்தே பிறரை மதிப்பீடு செய்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
புதிதாக வரப்படும் பிணங்கள் நாவலில் பெரும் பங்கு வகிக்கின்றன. கதையின் காலம் புதுப் பிணங்களாலேயே நீட்சி கொள்கிறது. புதிதாக வருபவர்களிடம் அவரவர்களின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கையை, அவர்கள் இறந்த பின் நிகழ்ந்த வாழ்க்கையை அறிய விழைகின்றனர். அன்புடன் விசாரிக்க வேண்டிய விஷயங்களை குறைவாகவும், சபிக்க விரும்பும் மனிதர்கள் சீரழிந்துவிட்டார்களா எனும் கேல்வியை விரிவாகவும் கேட்கின்றனர். பின்னிருக்கும் கேள்வியுடன் அவர்வர்களின் ஆசைகள் பேச்சின் மணிமகுடமாக அமைகிறது. தன்னுடைய தீராத ஆசைகளை உயிருடன் இருப்பவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா எனும் எண்ணம் அவர்களின் அமைதியை குலைத்துவிடுகிறது. இறந்தவர்களுக்கு குழப்பமாகவும் தெளிவற்றதாகவும் இருக்கும் ஆசை அவர்களை புதைத்திருக்கும் இடம் குறித்தான கேள்வியாக அமைகிறது. கல்லறைகளை அவர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வூரில் பிரித்திருக்கின்றனர். வாழ்ந்த வாழ்க்கையை விட புதைக்கப்பட்ட இடம் கௌவரமான இடமாக அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். மாற்றி புதைத்திருப்பார்களோ எனும் கேள்வி அவர்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதுநாள் வரை தான் வாழ்ந்திருக்கும் வாழ்க்கைக்கான நன்றிக்கடனாக சிறந்த இறுதி மரியாதையை இவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்  எனும் ஏக்கத்தை பழிப்புடன் பறைசாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். மற்றொரு கவலை அவர்களின் மேல் பதித்திருக்கும் சிலுவையின் வகை. அவ்வூரான கன்னிமாராவில் இருக்கும் பளிங்கில் செய்திருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். மரணத்தை செவ்வியல் தன்மையுடன் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
இவ்வனைத்து விஷயங்களும் நாவலின் அடிநாதமாக இருக்கும் அபத்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. வஞ்சம், பொறாமை, கபடம், கள்ளம் முதலிய அத்தனை முரணான சிந்தனைகள் வாழ்க்கையை செப்பனிட மறுக்கிறது. இவை நிறைந்த வாழ்க்கையை வாழாது, சக மனிதர்களின் மீதான மனிதத்தையும் குலைத்து பேராசைகளுடன் இறப்பதற்கான வாய்ப்பை நல்குகிறது. ஆனால் சொற்களின் வழி மட்டுமே திருப்தியை உணரக்கூடிய காலத்தில் கன்னிமாரா பளிங்கையும் கௌரவமான அடக்கத்தையும் விரும்புபவர்களாக தங்களை நிறுவிக்கொள்கின்றனர். வாழும்போது பேசிய அத்தனை உரையாடல்களையும் மீட்கும் போது அவர்களை துரத்திய அத்தனை குற்றாச்சாட்டுகளும் மீண்டெழுகின்றன. அவற்றிடமிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஓயாமல் வாதாடுகின்றனர். தங்களைப் பற்றியே பேசுகின்றனர்.
சக மனிதனை நினையாமல் தங்களை சுற்றியே உலகை கட்டமைத்துக்கொள்ளும் கூட்டாத்தாரிடையிலும் ஒரு அரசியல் அரங்கேற்றமும் பண்பாட்டு கூட்டமும் உருவாகிறது. கூட்டுறவை உருவாக்க சில பிணங்கள் முனைகின்றனர். ஆனால் அதில் எல்லோரையும் ஒன்றிணைக்க முடிவதில்லை. காலம் உறைந்த நிலையில் ஏற்கனவே சொல்லப்பட்ட சொற்கள் மீண்டும் மீண்டும் உலவுகின்றன. காழ்ப்புகளும் பசப்புகளும் அச்சொற்களின் உருவமாகின்றன. கூட்டுறவு வாழ்வியலின் நீட்சியாக மட்டுமே வாய்க்கப்பெறும் என்பதை அபத்த உரையாடலின் வழியாக நிறுவுகிறார்.
வாழ்வின் வினைகளுக்கு பிரதிபலனாக மரணம் அமையும் எனும் சித்தாந்தத்திற்கு எதிராக வாழ்வின் நீட்சியாக மரணம் இடம்பெறும் என்பதை நாவல் பேசுகிறது. வாழ்வின் தீராத அத்தனை விஷயங்களையும் மரணமும் சுமக்கத் துவங்குகிறது. மேலும் நாவல் இறந்தவர்களைப் பேசினால் அதற்கு நிகராக அதன் அடியாழத்தில் உயிருடன் வாழ்பவர்களின் அன்றாடத்தை கேலி செய்கிறது. வாழ்வின் அபத்தத்தை எடுத்துரைக்கிறது. இறந்தவர்கள் குறித்து இருக்கும் கருத்தாக்கங்களையும், எதிர்மறையான எண்ணங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது. மறைந்தவர்களின் காலம் வாழ்பவர்களிடம் உறைந்துவிடுகிறது. அவர்கள் பேசிய சொற்கள் மட்டும் காலத்திற்கும் நிற்கிறது. அவற்றுடன் உரையாடும் தருணங்கள் வாழும் போது செய்யும் நற்செயல்களால் மட்டுமே சாத்தியப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் இந்நாவல் ஒரு நீதிக்கதை. ஆனால் எடுத்துக்கொள்ளப்படும் வடிவமும் மொழியும் நவீன இலக்கியத்தின் பெரும் அங்கமாக உருமாறிவிடுகிறது. வசைகளால் நிரம்பிய வாழ்க்கை மரணத்திலும் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது. மரணம் எல்லோருக்கும் நிம்மதியை கொடுத்துவிடுவதில்லை. வாழ்வில் முற்றுபெறாத உரையாடல்களை மரணம் நீட்சிகொள்ள செய்கிறது. அதை புனைவடிவமாக அதிலும் நவீன கதையாடல்களில் பெரும் சவாலாக மார்ட்டீன் ஓ’ கைன் வடித்துள்ளார். ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பில் நாவல் தமிழிலும் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது. வட்டார மொழியியல் பிரிவில் அயர்லாந்தில் சிறந்து வழங்கும் நாவலின் தன்மையை மொழி சிதைவுறாமல் தமிழாக்கியிருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் முன்னுரைகள் இந்நாவலின் பண்பாட்டு தளத்தில் வாசகர்களின் புரிதலை மேம்படுத்த நன்கு உதவுகிறது. இங்கிருக்கும் வழக்காற்று கதையாடல்களுக்கும் சவாலான புதினமாக அமைகிறது வசை மண்.
- காலச்சுவடு

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக