காந்தியத்தின் எளிய அறிமுகம்காந்தி குறித்த பலவேறு அறிமுகக் கையேடுகள் தமிழில் கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் காந்தியின் வாழ்க்கைச் சித்திரத்தை விவரிக்கின்றன. அவற்றிலிருந்து நீதி போதனைகளை கையாண்டு வாசகர்களுக்கான அறிவுரை கூறுபவர்களாக காந்தி குறித்து எழுதுபவர்கள் மாறிவிடுகிறார்கள். இதன் மறுபுறம் காந்தி மீதான வெறுப்பை உமிழ்பவர்கள் காந்தியின் வாழக்கை வரலாற்றிலிருந்து மேலோட்டாமான சுவடுகளை கையாண்டு தங்களின் அறத்தை நிறுவ முயல்கிறார்கள். இரண்டிலும் தென்படும் போதாமையின் முக்கிய கூற்று காந்தி வாழக்கையில் தென்படக்கூடிய காந்தியத்தை எளிமையாக கடந்துவிடுவது. காந்தியின் வாழக்கையையும் காந்தியக் கோட்பாட்டையும் ஒன்றாக மட்டுமே அறிந்து கொண்டிருப்பது தவறான புரிதலுக்கே இட்டுச் செல்லும். இதை சற்று எளிமையாக விளக்கலாம். காந்தியம் எனும் கோட்பாடு உலகின் பலவேறு மனிதர்களிடம் தென்படுகிறது. அவற்றில் ஒருவர் காந்தி. அவர் அதனை ஒரு போராட்ட முறையாக மாற்றினார். பலகோடி மனிதர்களை, அதுவும் எளிய மனிதர்களை ஒன்றுதிரட்டினார்.  நிலுவையில் ஏற்கனவே இருந்த வாழக்கை முறைக்கு புது அர்த்தம் சூட்டினார். அவர் அதன் முழு வெளிப்பாட்டை மக்களின் வழியே உலகிற்கு காண்பித்தவுடன் காந்தியம் எனும் புதிய பெயர் சூட்டப்படுகிறது. அது வெறும் போராட்ட வடிவம் மட்டுமன்று. மாறாக வாழ்வியல் கூற்று. இத்தன்மை பலவேறு மனிதர்களால் எளிமையாக புறக்கணிக்கப்படுகிறது.

இதைப் புரிந்துகொள்வதற்கு காந்தி குறித்த ஆசையின் கட்டுரைகள் வாசகர்களுக்கு பெரும் உதவி புரிகின்றன. இந்து தமிழ திசையில் தொடர்ச்சியாக காந்தி குறித்த கட்டுரைகளை, தொடரை எழுதி வந்தார். அதன் மொத்த தொகுப்பாக என்றும் காந்தி எனும் நூல் வெளியாகியிருக்கிறது. இந்நூல் இரண்டு பாகமாக பிரிந்திருக்கிறது. முதல் பாகம் கிட்டதட்ட காந்தியின் மொத்த வரலாற்றையும் கால வரிசைப்படி சுருக்கமாக பேசுகிறது. ஆனால் அவையும் வெறும் வரலாறாக இல்லாமல் அவரின் வாழக்கைப்போக்கில் எங்கெங்கு எல்லாம் காந்தியம் வெளிப்பட்டிருக்கிறது எனுமிடத்தை வெளிச்சமிட்டு காட்டும் கட்டுரைகளாக அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாகம் காந்தியக்கூற்றுக்களின் விரிவாக்க கட்டுரைகளாக அமைகின்றன. அவருடைய கொள்கைகளை சிறு சிறு துண்டுகளாக்கி அதைப் பல்வேறு உதாரணங்கள் கொண்டு விளக்குகிறார். இரண்டு பாகங்களும் வாசித்து முடிக்கையில் காந்தியம் குறித்த விரிவான அறிமுகக்கையேடாக அமைகிறது. புதிதாக காந்தியை வாசிக்க விரும்புவார்களுக்கும் காந்தியின் கோட்பாடுகளை எங்கிருந்து புரிந்துகொள்ளலாம் எனும் குழப்பம் கொண்டவர்களுக்கும், அல்லது காந்தியின் மீதும் காந்தியத்தின் மீதும் முரண்பாடான பார்வை கொண்டவர்களுக்கும் இந்நூல் முக்கியமானதாகிறது. நூலின் இரண்டாம் பாகத்தில் சொல்லப்படும் விஷயங்களும் உதாரணங்களும் முதற்பகுதியிலேயே சொல்லப்பட்டாலும் அவற்றை வேறு சில உதாரணங்களுடன் ஒப்பிட்டு கூறுகையில் காந்தியத்தின் மீதான வெளிச்சம் பன்மடங்ககாகிறது.

மொத்த நூலிலும் என்னை வெகுவாக கவர்ந்தது ஒரு புகைப்படமும் அதை சுற்றி எழுதப்பட்ட கட்டுரையும். அந்நியத்துணி எரிப்பு போராட்டம் இந்தியாவில் நிகழத்தப்படுகிறது. அதனால் இங்கிலாந்திலிருக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதையும் காந்தி அறிந்துகொள்கிறார். இந்நிகழ்வு நிகழந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து செல்கிறார். இந்தியாவில் நிகழ்ந்த அந்நியத் துணி எரிப்பால் பாதிக்கப்பட்ட உழைப்பாளர்களை நேரில் சந்தித்து உரையாடுகிறார். அவருடைய எண்ணம் அந்த உழைப்பாளர்களே இந்த சுரண்டாலுக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதே. அந்த புகைப்படமும் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எப்போதும் புன்னகையுடன் தென்படும் காந்தியின் புகைப்படத்துன் னிருக்கும் அனைத்து உழைப்பாளர்களின் முகத்திலும் புன்னகை தவழ்கிறது. சமகால புகைப்பகளில் தென்படும் புன்னகைகளுக்கும் இந்த புன்னகைக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு காந்தியத்தின் வீச்சை நன்கு உணர்த்தவல்லதாய் அமைகிறது. காந்தியம் எதன் பலத்தில் வேரூன்றி இருக்கிறது எனில் உரையாடலில் மட்டுமே. காந்தி அனைத்து தரப்பினரையும் உரையாட அழைக்கிறார். உரையாடலின் வழியே பேதங்களைக் களைந்து சமாதானத்தை இரு தரப்பாரிடமும் கொணரமுற்படுகிறார். பல்வேறு இடங்களில் வெற்றியும் பெறுகிறார். ஒவ்வொரு தோல்வியின் போதும் ஏற்படும் இடர்பாடுகளை கணக்கில் கொண்டு அடுத்தடுத்த போராட்டங்களில் களைந்து எறிகிறார். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் பெருந்திரளாய் ஒன்றிணையும் மக்களின் கூட்டம் காந்தியின் உரையாடலிலேயே சாத்தியமாகிறது. சில கட்டுரைகளில் கூறுகிறார் காந்தியின் சன்னமான குரல் சில அடுக்கு மக்களைக் கூட தாண்டாது. ஆனால் பல அடுக்குகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய மக்களுக்கும் காந்தி ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லும் விஷயங்களும்  சென்று  சேர்ந்திருக்கிறது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணமாக அமைவது அவருடைய உடல்மொழி என்கிறார். உரையாடலுக்கு எதுவெல்லாம் சாத்தியமோ அத்தனையையும் அவர் தனக்கான ஊன்றுகோலாக அமைத்துக்கொள்கிறார்.

சமகால அரசியல் போக்குகளில் காந்தியத்தை பின்தொடர்வது முழுவதும் சாத்தியமற்றது. ஆனால் தனிப்பட்ட வாழக்கையில் சாத்தியமானதே. அதுவே சமூக அரசியலுக்கான முதற்படியாக அமையும். காந்தி எனும் மனிதர் நமக்கு தேவையில்லை. ஆனால் சமூகத்தில் நிலவும் அத்தனை இடர்பாடுகளுக்கும் ஓட்டு மொத்தமாக மக்களை எழுச்சி கொள்ள செய்ய அவருடைய சிந்தனை முறை தேவையானதே. அனைத்து துறைகளிலும் அதன் அவசியம் இருக்கிறது. ஆனால் அதை அறிந்துகொள்வதற்கான முதற்படி அவருடைய நீதி போதனைகளால் ஆன வாழக்கை வரலாறாக அமைவதே சாபக்கேடாக அமைகிறது. நவீன வாழக்கை நீதி போதனைகளை விரும்புவதில்லை. சாகசங்களை விரும்புகிறது. காந்தியையும் அவருடைய போராட்ட முறையையும் அதன் நியாயம் குன்றாமல் சாகசமாக விவரிக்க வேண்டிய கடமை நவீன காந்தியவாத எழுத்தாளர்களுக்கு முக்கியமாகிறது. அதன் தொடக்கமாகவே ஆசையின் இந்தக் கட்டுரை தொகுப்பை உணரமுடிகிறது.
நூலின் ஒவ்வொரு கட்டுரை குறித்தும் விரிவாக பேசும் அளவு விஷயங்கள் இருக்கின்றன. காந்தி குறித்த ஒவ்வொரு நூலும் அவர் பற்றி எனக்குள் இருக்கும் பிம்பத்தை கூர்படுத்துகிறது. இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக வாழந்தார் என்று நம்புவது ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல் கடினமாகத் தான் இருக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக