காந்திய வழியில் லாபம்!


சமகாலப் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு எதிர்த்திசையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது காந்திய பொருளாதாரக் கொள்கை. நிறுவனம் எனும் அமைப்பில் லாபத்தின் வரையறை பணம் எனும் ஒற்றை அடையாளமாக மட்டுமே தேங்கி நிற்கிறது. காந்தியப் பொருளாதாரம் பணத்தை இரண்டாம் பட்சமாக மட்டுமே அணுகுகிறது. அறத்தின் வழியில் சீராக ஒரு நிறுவனம் இயங்குகிறதா எனும் கூற்றையே லாபத்தின் விளக்கமாக காந்தியம் பேசுகிறது. அவ்வகையில் மக்களுக்கான சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அச்சேவையை நிறுவனங்களாக, மக்களின் அமைப்பாக மாற்றிய பதினோரு மனிதர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் பாலசுப்ரமணியம் முத்துசாமியின் இன்றைய காந்திகள் நூல் விரிவாக விளக்குகிறது.
பணத்தை மட்டுமே லாபமாக கருதும் நிறுவன அமைப்பு இயல்பாகவே சுரண்டலைத் துவங்குகிறது. பணத்தை மதிப்பு குறைவாகவும் காலத்தை மதிப்புமிக்கதாகவும் புரிதல் கொள்கிறது இந்த நிறுவனப்பண்பாடு. இதில் பணத்தை முதலீடாக்கி மக்களிடமிருந்து சுரண்டப்படும் காலம்(உழைக்கும் நேரம்) அந்நிறுவனத்தின் லாபமாக உருமாருகிறது. இந்நிலையை இப்பதினோரு பேரின் வாயிலாகவும் தகர்த்தெரிய முற்படுகிறார். சுயசார்பின்மையே சுரண்டலுக்கான முதற்படியாகிறது. குழுவாக வாழும் மக்களிடையே நிலவும் சமூகவியல் பிரச்சினைகளுக்கு அவர்களுக்குள்ளேயே இருக்கும் திறனறிந்த மனிதர்களைக் கொண்டு தீர்வு காண்பதும் அதை நிறுவனமாக்கி கூட்டுறவாக வாழ்வதையும் காந்தியம் அடிகோடிடுகிறது. இந்நூலின் முதல் கட்டுரையான வர்கீஸ் குரியனில் அமுல் நிறுவனத்தின் சிந்தனையை, கூட்டுறவைப் போற்றிப் பாதுகாக்கும் தன்மையை நுட்பமாக விவரிக்கிறது. பாலைக் கறக்கும் முதல்நிலை உழைப்பாளர்கள் வீணாகும் பாலை சேமிக்க விரும்புகின்றனர். அதற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் மேலை நாடுகளில் இருக்கிறது என்பதையும் அந்த இயந்திரம் அதிக விலையாகிறது என்பதையும் நிறுவனத்தார் அறிகின்றனர். பின் அதை இந்தியாவிற்குள்ளேயே தயார் செய்ய தேவையான தொழில்நுட்பத்தை தேடுகின்றனர். மேலை நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் இயந்திரம் பசும்பாலிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை. இத்தேடல் தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது எருமைப்பால் என்பதால் அதற்கேற்ப இயந்திரத்தை இந்தியாவிலேயே உருவாக்குகின்றனர். அதற்கு ஆகக்கூடிய செலவும், வெளிநாட்டிலிருந்து வாங்கியிருந்தால் ஆகக்கூடிய செலவும் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசமாக அமைகிறது. சமூக நோக்கில் காணும்போது அறிவின் வளர்ச்சிப்பாதையை கூட்டுறவு மேம்படுத்துகிறது என்பதை இந்த எடுத்துக்காட்டின் வழியே கணக்கிடமுடிகிறது.
இப்படி மக்களின் உழைப்பில் உருவாகும் பொருட்களுக்கான சந்தையை உருவாக்கும் லட்சுமி சந்த் ஜெயின், பணம் இருப்பவர்களிடம் பணம் பெற்று கண்களுக்கான சிகிச்சை அளித்து பின் அதை மூலதனமாக்கி பணமற்ற ஏழைகளுக்கு அதே தரத்திலான கண் சிகிச்சையை இலவசமாக அளிக்கும் அரவிந்த் கண் மருத்துவமனை, பதினோரு ரூபாய் கூலி உயர்வு போராட்டத்தில் துவங்கி தகவல் அறியும் உரிமை சட்டம் நோக்கி மக்களின் சிந்தனையையும் மக்களையும் இழுத்து சென்ற அருணா ராய் என்று ஒவ்வொருவரும் பிரத்யேகமான கதைகளை, சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு கதைக்கும் பல்வேறு ஒற்றுமைகள் நிலவுகின்றன. அவர்களின் செயல்பாடுகள் விரைவில் நிகழக்கூடியதல்ல. தற்காலிக தீர்வுக்கானதுமல்ல. அந்தந்த பிராந்திய மக்களிடையே இருக்கும் அறிவுத்திறனையும், அன்றாட பணிச்சுமைகளுக்கு இடையில் கிடைக்கும் உழைக்கும் நேரத்தை அந்த சமூகத்திற்கே திரும்பக்கொடுக்கும் சிந்தனை முறையையும் போதிக்கின்றனர். அதிலும் பங்கர் ராயின் கதை வேறொரு புள்ளியை தீண்டுகிறது. மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு நடந்து சென்று அங்கிருக்கும் பெண்களுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் எடுக்கும் கருவிகளுக்கான செய்முறைகளை சொல்லிக்கொடுகிறார். அதில் அவர் குறிப்பிடும் விஷயம் ஆண்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் சமூககக்கல்வி அவர்களுக்கு மட்டுமானதாக சுருங்கிவிடுகிறது. பெண்களுக்கு சொல்லப்படும் விஷயங்கள் அவர்களைச் சார்ந்துள்ள சமூகத்திற்கானதாக மாற்றம் கொள்கிறது.
இந்நூல் பேசும் அத்தனை பொருளாதாரக் கொள்கைகளும், போராட்டங்களும் பெண்களின் ஈடுபாட்டுடன்  பெறும் மாற்றங்களாக மலர்ந்துள்ளன. அபய் பங் மற்றும் ராணி பங் ஆகியோரின் செயல்பாடுகள் மகப்பேறு காலங்களில் இறக்கும் சிசுக்களை காப்பாற்றும் எண்ணத்தோடு நிகழ்ந்திருக்கிறது. அதே போல் இலா பட் என்பவரின் முறைசாரா தொழிலாளர்களுக்கான சங்கம் குறித்த போராட்டமும் பெண்களை மையப்படுத்தி ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கின்றன. இவ்விரண்டு கட்டுரைகளும் பெண்களின் ஈடுபாடு போராட்டங்களுக்கு வெறும் வண்ணம் சேர்ப்பதில்லை. மாறாக அப்போராட்டங்களின் வெற்றிக்கு, ஒரு சமூகத்தின் மலர்ச்சிக்கு வித்தாக அமைகிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. மேலும் இந்த பதினோரு மாமனிதர்களின் செயல்பாடுகளும் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பல நாடுகளுக்கு அச்சேவை சென்று சேர்ந்திருக்கிறது என்பதும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறது.
நாம் கற்கும் கல்வியும் செய்யும் பணிகளும் எந்த சமூகத்திற்கானது எனும் கேள்வியை இந்நூல் கேட்டவண்ணமிருக்கிறது. அன்றாடம் துரிதமாக ஓடிக்கொண்டிருக்கும் லாபம் எனும் நோக்கத்தின் மதிப்பீடு என்ன என்பதையும் சந்தேகிக்கிறது. பொருளாதார ரீதியில் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதே காந்தியின் கனவு. அவற்றை சாதித்துக்காட்டிய பதினோரு மாமனிதர்களின் கதை எதிர்காலத்திற்கான பெரிய பாடத்தை புகட்டிச் செல்கிறது.

- இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக