சொற்களில் அமீரக வரைபடம்


அமீரகம் குறித்த உரையாடல்கள் குடும்பங்களில், தெருக்களில், நண்பர்களிடையே வாடிக்கையாகிவிட்டது. தோராயமாக கணக்கிட்டாலும் ஒவ்வொருவருக்கும் தெரிந்த ஒரு நபராவது அமீகரகத்தில் வசிக்கிறார்கள். அவர்களின் இந்தியா வருகையை அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உலகமயமாக்கலுக்கு பின் அனைத்து பொருட்களும் ஒரு சந்தையின் குடைக்குள் கொண்டு வரப்பட்டாலும் அந்நாட்tu பொருட்களின் மீதிருக்கும் ஆர்வமும் ஆசையும் குறைந்தபாடில்லை. அமீரகத்திற்கு தமிழகத்தில் இருக்கும் பொதுப்பெயர் துபாய். அங்கிருந்து கொண்டுவரப்படும் மிட்டாய், வாசனை திரவியம், ஆடைகள், பேரிச்சைகள், உலர் பழங்கள் என சகலமும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைகிறது. மேலும் அமீரகம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள் மேலதிகமாக நகைச்சுவை தன்மையுடன் மட்டுமே நின்று போய்விட்டிருக்கிறது. வணிகம், எண்ணெய் வளம் ஆகிய இரண்டைக் கடந்து அங்கு ஒன்றுமே இல்லை எனும் நிலையே ஊடகங்கள் பொதுப்பாணியில் பதியவைத்திருக்கிறது. மாறாக அங்கிருக்ககூடிய வரலாற்று சிறப்புகளையும், அதன் வரலாற்றையும், சமகாலத்திற்கேற்ற சுற்றுலாத் தளங்களையும் விரிவாக சொற்களில் வடித்திருக்கிறார் அபிநயா ஶ்ரீகாந்த். அவருடைய “ஏழு ராஜாக்களின் தேசம்” நூல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு தேசங்களையும் விரிவாக, மேலதிக தகவல்களுடன் அலசுகிறது.
பொதுவான வரலாற்றில் துவங்கி ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் இருக்கக்கூடிய முக்கியத்துவங்களின் மீது  வெளிச்சத்தை பாய்ச்சுகிறார். அமீரகத்திற்கு பொதுக்கனவு ஒன்றிருப்பதை ஆசிரியர் கொடுக்கும் தகவல்களிலிருந்து அறிய முடிகிறது. உலகத்தை தன் வசப்படுத்துதலே அக்கனவு. உலகம் சுற்றிப் பார்க்க விரும்பும் மனிதர்களுக்கு அமீரகமே உலகமாகிறது. உலகின் அனைத்து மாதிரிகளையும் உருவக்கியிருக்கின்றனர். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைக்குகளை கூர் நோக்குடன் உலகுடன் ஒன்றுப்பட்ட பொறியியல் அமைப்பாக மாற்றியிருக்கின்றனர். பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள், பொறியியலாலர்கள், வடிவங்கள் அதனுள் இருக்கும் வண்ணங்கள் என ஒவ்வொரின்றின் பின்பும் நவீன கட்டமைப்பின் சவால்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
நவீன கட்டுமானங்களுக்கு நிகராக வரலாற்று விஷயங்களும் கோட்டைகளும் நிறைய இருப்பதற்கான ஆதாரங்களையும் பகிர்கிறார். பனியா இனத்தின் வறுமையையும் அதனை அவர்கள் கடந்து வந்து அமீரகங்களின் தலைவர்களாக எழும்பி நிற்பதன் வளர்ச்சியையும் பார்க்கும்போது வரலாற்றை அம்மண்ணின் மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.
பல்வேறு உணவு வகைகளின் விரிவான அறிமுகங்களும், அதற்கான சுவையின் விவரிப்புகளும் தனி அத்தியாயங்களாக இடம்பெற்றிருக்கின்றன. அங்கு இருக்கக்கூடிய பயணங்களுக்கான போக்குவரத்து விவரணைகளும் இந்நூலை பயணக் கையேடாக பயன்படுத்தும் வகையில் சிறப்பு அந்தஸ்து பெறுகிறது. அமீரகத்திற்கு சுற்றுலாவிற்காகவோ பணி நிமித்தமாகவோ செல்ல விரும்புவோருக்கு இந்நூல் நிச்சயம் உதவிக்கரமாய் அமையும். அதற்கு முக்கிய காரணியாக இருப்பது நூலில் விரவியிருக்கும் தகவல்கள் மட்டுமன்று. ஒவ்வொரு தகவலுக்கும் இணைகோடாய் ஆசிரியரின் அனுபவமும் இடம்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு இடத்தில் செலவாகும் தினார்களின் தகவலும் திட்டமிடலுக்கு வசதியாய் அமையும்.
இந்திய மனம் எப்போதும் பயணத்தில் நினைவோடைகளுடன் அப்போதைய பயண நிலத்தை ஒப்பிட்டுக்கொள்ளும். சில இடங்களில் சிறுமை கொள்வதும் பல இடங்களில் சொந்த நிலத்தின் மீது எழும்பும் ஆற்றாமையும் இயல்பானவை. இவ்விரண்டு உணர்வுகளையும் பயணமே தரவல்லவை. இந்த உணர்வெழுச்சிகளுக்கு சமூகத்தின் அத்தனை விதமான படிநிலைகளும் காரணமாகின்றன. நாம் வாழும் சமூகத்தின் கட்டுமானம், பொருளாதாரம், கலாசாரம், உணவு பழக்கவழக்கம் இத்யாதி. இவையனைத்தையும் செல்லும் இடங்களில் அறிந்துகொள்வதே பயணத்தை பூர்த்தியாக்குகின்றது. அவ்வைகையில் சொற்களின் சட்டகங்களில் ஆசிரியர் அமீரகத்தை அடைக்க முற்படுகிறார். எளிமையான அத்தியாயங்களும் அதற்குள் கிளைவிடும் சிறுசிறு பகுதிகளும் வாசகர்கள் நினைவு வைத்துக்கொள்ள உதவியாய் அமையப்பெற்றிருக்கிறது. பயணக்கையேடாக இந்நூலை அனைவரும் பயன்படுத்தலாம்.

- கல்கி

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக