வாய்மொழியில் ஒரு அறைகூவல்


சமீபத்தில் மிகப்பிரபலமான ஆங்கில சீரீஸ் எச்.பி.ஓவில் வெளியான செர்னோபில். 33 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அணுக்கசிவினால் ருஷ்யாவின் ஒரு பகுதியான செர்னோபிலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏற்பட்ட பெருவிபத்தை அப்படத்தில் ஆவணப்படுத்தியுள்ளனர். மேலும் இப்படம் அவ்விபத்திற்கு பின்னாலிருக்கக்கூடிய காரணத்தை ஆராய முற்படுகிறது. அறிவியல் ரீதியான ஆதாரங்களைத் தேடி நகரும் படம் மானுடத்தின் வீழ்ச்சிக்கு நவீனமயமாக்கல் எவ்வகையில் காரணமாகிறது எனும்  புள்ளிக்கு நகர்கிறது. படத்தின் இறுதி காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம் செர்னோபில் எனும் ஒற்றைப் பேரிடரைக் காட்டிலும் மனிதர்களால் சக மனிதர்களுக்கும் கானுயிர்களுக்கும், தாய் மண்ணிற்கும் ஏற்படுத்தும் அழிவுகளுக்கு பின்னிருக்கக்கூடிய பேராசையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
இத்திரைப்படத்திற்கு ஆதாரமாக இருக்கும் புத்தகம் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் எழுதிய Voice of Chernobyl. இப்புத்தகத்தை சித்தார்த்தன் சுந்தரம் “செனோபிலின் குரல்கள்” எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மேலும் இந்நூலுக்காக அலெக்ஸியேவிச் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நூல் செர்னோபிலில் நிகழ்ந்த விஷயங்களின் வரலாற்று நூல் அல்ல. மாறாக அங்கு நிகழ்ந்த அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், அவ்விபத்து நிகழும்போது அவர்கள் கொண்டிருந்த அனுபவங்களின் பதிவாகவும் இந்நூல் அமைந்துள்ளது. மக்களிடையே அவ்விபத்து மூன்று விதமான சிதைவுகளாக பதிவாகியிருக்கிறது. அவை - போருக்கு நிகரான நாட்கள், புலம்பெயர் வாழ்க்கை, நோய்மையுடனான போர். இம்மூன்று விஷயங்களும் அவற்றின் கோரதாண்டவத்தை செர்னோபிலிலும் அதனைச் சுற்றியிருக்கும் பல கிராம மக்களிடையேயும் ஏற்படுத்தியிருக்கிறது.
அணுக்கசிவு ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே அரசிடமிருந்து எச்சரிக்கை தகவல்கள் மக்களிடம் சொல்லத் துவங்கப்பட்டது. ஆனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அணுக்கசிவினால் பாதிக்கப்படாத இடங்களிலும் அரசிடமிருந்து நிலைமை சீராக இருக்கிறது எனும் நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது. கள நிலவரத்தின் தீவிரத்தை மக்களிடையே சிறிதும் ஏற்படுத்தாமல் பொய்யான நம்பிக்கையை விதைத்தது வரலாற்றின் பெரும் இழுக்காக மாற்றம் கொண்டது. செர்னோபிலில் நிறுவப்பட்ட ஆர்.பி.எம்.கே என்ற வகையிலான அணுமின் நிலையம் ஐரோப்பாவிற்குள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனும் தகவலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செர்னோபிலில் நிறுவப்படும் முன்னே ஐரோப்பிய ஒன்றியத்துள் இதே வகையான அணுமின் நிலையத்தை  நிறுவ முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களின் சட்ட விதிகளுக்கும், எச்சரிக்கை விதிமுறைகளுக்குள்ளும் வராததால் அவ்வகையான அணுமின் நிலையத்தை தடை செய்திருக்கின்றனர்.
மேலும் அங்கு பணி செய்து நோய்மையால் பாதிப்பிற்குள்ளானவர்களிடம் ஆசிரியர் மேற்கொண்ட நேர்காணலின் வழியே அந்த அணுமின் நிலையத்தின் பின்னிருக்கக்கூடிய அறிவியல் விஷயங்களை விளக்க முற்படுகிறார். அணுகுண்டு செயல்படும் விதமும் ஒரு அணுமின் நிலையத்தின் செயல்முறையும் ஒன்றே. ஆனால் கட்டுபாடுகள் நிறைந்த வகையில் அந்த அணுச்சிதைவை மேற்கொள்ளும்போது மின்சக்தியை உருவாக்க முடியும் என்பதே அறிவியல். மேலும் அது நிறுவப்படும்போது செர்னோபில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதை நிறுவுவதன் வழியே உலகின் முன்மாதிரியாகிவிட முடியும் எனும் எண்ணம் அரசிடமிருந்து மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் அறிவியலின் வளர்ச்சியாக சொல்லப்பட்ட அணுமின் நிலையத்தை கடவுளுக்கு நிகராக, கடவுளுக்கு மாற்றாக கருதியிருக்கின்றனர். திருவிழாவைப் போன்று அதன் நிறுவுதலை மக்களும் ஊடகங்களும் கொண்டாடியிருக்கின்றனர்.
இந்த மனநிலையில் இருந்து அணுச்சிதைவினால் ஏற்பட்ட பாதிப்பை அறிந்தவுடன் மக்களிடம் ஏற்பட்ட குழப்பம் புரிந்து கொள்ள முடியாததாக இருப்பினும் அவர்களின் வாழ்க்கையில் இயல்பானதாய் அமைகிறது. போருக்கான ஆயத்தங்கள் ஊர்களில் நிகழத் துவங்குகின்றன. போர் தொடுக்கப்போகிறார்கள் எனும் உணர்வு எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. ஆனால் யார் நம் நாட்டின் மீது போர் தொடுக்கப்போகிறார்கள் எனும் இடத்தில் எல்லோரும் ஏமாற்றமே அடைகிறார்கள். போரின் பெரும் பிரதேசமான சோவியத் யூனியனின் கண்ணுக்கு புலப்படாத அணுக்கதிர்கள் மானுட இடத்தையே அழிக்கும் எனும் சொல்லாடலை மக்கள் ஏற்க தயாராக இல்லை. அரசோ மக்களின் அனுமதிக்கு காத்திராமல் புலம்பெயர்தலுக்கான அரசாணைகளை வெளியிடுகிறார்கள். மக்களும் புலம்பெயர்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வின் மொத்த அபத்தமும் செர்னோபிலின் அணுக்கசிவினால் ஏற்பட்ட தாக்கமும் புலம்பெயர் வாழ்க்கையிலேயே தீவிரம் கொள்கிறது.
மனிதர்களின் கண்டுபிடிப்புகள் அறிவியல் ரீதியில் உலகத்திற்காக அமைந்தாலும் அவற்றின் தீமைகள் சக மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனை தனிமையில் ஆழ்த்திவிடுகிறது எனும் உண்மை முகத்தில் அறையும் வண்ணம் சொல்லப்பட்டிருக்கிறது. அணுக்கசிவினால் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் நூல் முழுக்க கூறப்பட்டிருக்கும் பலரின் கதைகள் புலம்பெயர் வாழ்வை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. சொந்தங்கள் அவர்களை உதறிவிட்டிருக்கின்றனர். மேலும் செர்னோபில் கொடுத்த நோய்மையின் தகவல்கள் சீக்கிரமாகவே உலகிற்கு கசியத் துவங்குகிறது. அங்கிருந்து வெளியேரும் மக்களால் நோய்கள் பரவப்படும் எனும் கூற்று பரவலாகிறது. அணுக்கசிவு நிலம் சார்ந்த அகதிகளாக அம்மக்களை மாற்றியது எனில் நோய்மை வாழ்க்கைக்குள்ளேயே அவர்களை அகதியாக்கிவிடுகிறது. யாரிடமும் தஞ்சம் புக முடியாத சூழ்நிலையில் தனித்து வாழப்பழகுகிறார்கள். தற்கொலை செய்வதற்கு தகுதியுடைய வாழ்க்கையை, காரணத்தை செர்னோபில் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது.
இவ்வனைத்து வாழ்க்கை சார்ந்த சிடுக்குகளுக்கு இடையில் சோவியத் ஒன்றியமும் உடைகிறது. அதன் காரணங்களுள் செர்னோபிலும் ஒன்றாகிறது. புலம்பெயர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு அடையாளம் மற்றொரு சிக்கலாகிறது. சோவியத் ஒன்றிய தேசம் எனும் நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் மேல் செர்னோபிலியன் எனும் அடையாளம் ஏற்றப்படுகிறது. யூனியனின் அங்கமாக பேசப்பட்டிருந்த தங்களது அடையாளம் தனித்த அடையாளம் ஆகும் போது குடிமகன் எனும் அந்தஸ்தை இழந்து நிரந்த அகதி எனம் இடத்தை அடைந்துவிடுகின்றனர்.
செர்னோபிலின் விஷயத்தை பேரழிவு எனும் சொல்லில் விளிப்பதை விட போர் என்று சொல்வதே சரியாக அமையும். ஈழ விடுதலை போராட்டத்தினிடையில் இருந்த மக்களின் வாழ்க்கையும், நாஜிப்படைகளின் கொடுங்கோன்மைக்கு இடையில் கழிந்த மக்களின் வாழ்க்கைக்கும் சற்றும் குறைந்ததல்ல செர்னோபில் மக்களின் வாழ்க்கை. அறிவியல் எனும் பெயரில் எதிர்காலத்தின் மீது தொடுக்கப்பட்ட போர் என்பதே செர்னோபிலை குறிப்பதற்கான சரியான சொல்லாடலாக அமையும். மனிதர்களின் தவறுகளால் ஏற்படும் சமூக பேரழிவுகள் அனைத்தும் அடையாளங்களை காணமாலாக்கும் தளத்திற்கு சென்றடைவது காலத்தின் நிதர்சனமாக அமைகிறது. தங்களின் வாழ்க்கையை சிடுக்குகளற்ற ஒன்றாக்கிக் கொள்ள, எளிமையாக்கிக் கொள்ள பிற மனிதர்களின் மீது அடையாளம் ஏற்றி ஒதுக்கி வைப்பது நூதன அதிகாரமாகிறது. இந்நூலில் சொல்லப்படும் பல்வேறு கதைகளும் இந்த தன்மையையே எடுத்துரைக்கிறது.
ஆசிரியரிடம் தங்களின் கதைகளை சொல்ல அவர்கள் தயங்குகின்றனர். இழந்த விஷயங்களின் புலம்பல்கள் ஒருபோதும் அவற்றை மீட்டுவிடாது என்பதில் வருத்தம் கொள்கின்றனர். தங்களின் தாய் நிலத்தின் மீதான ஈர்ப்பையும் பற்றையும் பேச்சின் போக்கில் எல்லோரும் வெளிப்படுத்துகின்றனர். என்றேனும் ஒரு நாள் அவ்விடத்திற்கு திரும்பி சென்றுவிட, மாட்டோமா எனும் ஏக்கம் எல்லோருடைய குரல்களின் வழியேவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் வளர்த்த கால்நடைகளைப் பற்றியும், அவற்றின் துக்கரமான இழப்பையும், தாங்கள் நட்டு வளர்த்த செடி, மரங்களைப் பற்றியும் ஆற்றாமையுடன் பகிர்கின்றனர். விலங்குகளையும் காய்கறிகளையும் அழிப்பதற்கும் அரசாணை வெளியிடப்பட்டது. அவற்றின் வழியேவும் கதிவீர்ச்சு பரவப்படும் எனும் முடிவு அவ்வகையான தீர்மானத்தை அரசை எடுக்க வைத்திருக்கிறது. உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதா எனும் கேள்வியும் மனிதர்களை காப்பாற்ற வேண்டியது தலையாய கடமையல்லவா எனும் கேள்வியும் ஒவ்வொருவரின் கதைகளிலும் முரண்கொள்கிறது.
அரசாணைகளை மீறி அவரவர்களின் வீட்டிலேயே, கிராமத்திலேயே தங்கிக் கொண்டதன் பின்னிருக்கக்கூடிய மண் சார்ந்த வைராக்கியமும், தங்களது வீட்டிலிருந்து எடுத்து சென்ற அவரவர்களின் மரபார்ந்த பொருட்கள் குறித்த நினைவோடைகளும் அவர்களின் அன்பை வெளிப்படுத்துகிறது. அன்பு மட்டுமே அத்தனை பேரழிவுகளுக்கு பின்னும் மீதமிருக்கக்கூடிய ஒன்று என்பதை ஒளிக்கீற்றாய் மக்களின் குரலில் உணர முடிகிறது. உடல் அழுகும் கணவனை இறக்கும் வரை அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்ட அன்பு பொழியும் பெண்ணின் கதை வாழ்க்கைக்கான அர்த்தத்தை நன்கு உணர்த்துகிறது. நூலில் பேசிய மனிதர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அந்த புலம்பெயர் வாழ்க்கையின் அபத்தத்தை நகைச்சுவையின் வழியே கடந்து செல்பவர்களாக இருக்கின்றனர். இடையிடையே சொல்லப்படும் நகைச்சுவை துணுக்குகள் செர்னோபிலின் அழிவை சுட்டுகிறது. காலம் கடந்து வாசிக்கப்படுவதால் நகைச்சுவை உணர்வைக் காட்டிலும் அக்காலத்திய சமூக அவலத்தை அவை எடுத்துரைக்கின்றன.
அறிவியல் மானுடத்தின் அளவுகோளிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் எனும் எச்சரிக்கை மொத்த நூலின் அடிகோடாக சொல்லப்படுகிறது. ருஷ்யாவின் ஒரே ஒரு அணுமின் நிலையத்தில், ஏற்பட்ட அணுக்கசிவு மனிதர்களின் தவறுதான். அதன் தாக்கம் தலைமுறைகளுக்கானது. எல்லைகளுக்கு அப்பால் விரிந்து கிடக்கும் உலகத்திற்கானது. அபரிமிதமான மின்சாரம் மற்றும் நவீன தேவைகளுக்காக இயற்கையை எளிமையாக சூரையாட தயாராக இருக்கும் பெரு நிறுவனங்களுக்கானது. மனித மன பேராசைக்கான அறைகூவலாக இம்மக்களின் குரல் இருக்கிறது. நூலில் பேசியிருக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கைப் பாட்டை விவரிக்கின்றனர், நகைச்சுவை சொல்கின்றனர், அவர்கள் அறிந்த அப்போதைய கள நிலவரத்தை சொல்கின்றனர், பாதிக்கப்பட்ட தங்களுடைய உறவினர்களின் மீதான அன்பை பேசுகின்றனர்,  தங்களை கைவிட்ட மக்களை எண்ணி புலம்புகின்றனர். வாசிக்கும் நமக்கோ அவர்களின் குரல் பேரோலமாக ஒலிக்கிறது. வாய்மொழியில் விடுக்கப்படும் அறைகூவலாக உருவமெடுக்கிறது. அறிவியலின் பெயரால் இயற்கைக்கு புறம்பாக நிகழ்த்தப்படும் அத்தனை விதமான அநியாயங்களுக்கும் எச்சரிக்கையாக அமைகிறது. இந்நூலும் இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஐந்துமணி நேர திரைப்படத்தையும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும். அடுத்த தலைமுறையின் தேவை என்ன என்பதையும் அறிவியலுக்கும் மானுடத்திற்கும் இடையிலான சமரை புரிந்து கொள்ளவும் பேருதவியாய் அமையும்.

- கணையாழி

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Unknown said...

good info

www.nattumarunthu.com nattu marunthu kadai online

Post a comment

கருத்திடுக