ஒழுங்கின்மையின் நிழல்


இயற்பியலில் எண்ட்ரொப்பி என்றொரு தத்துவம் இருக்கிறது. பொதுவாக சுடுநீரை வைத்து அதை விளக்குவர். நீரை சூடாக்கும் போது அதனுள் இருக்கும் ஒரு அணுக்கூட்டம் தன் இயல்பை உடைத்துக்கொண்டு மீறும். பின் அதனோடு ஒட்டியிருக்கும் ஒவ்வொரு அணுக்கூட்டமாக தங்களின் நிலையை குலைத்துக்கொண்டு வேறொரு நிலைக்கு தங்களை உருமாற்றிக்கொள்ளும். தொடர்ந்து நீரை சூடுபடுத்தும்போது நீரிலிருக்கும் அனைத்து அணுக்களும் தங்களுடைய நிலையைக் குலைத்துக்கொள்ளத் துவங்கும். அதுவரை அணுக்களிடமிருந்த இருந்த ஒழுங்கு குலையும். ஒழுங்கிலிருந்து ஒழுக்கமின்மைக்கு நகரும் இத்தன்மையை இயற்பியல்வாதிகள் எண்ட்ரோப்பி எனும் சொல்லில் குறிக்கின்றனர். இந்த தத்துவத்தின் தன்மையில் அமைக்கப்பட்டுள்ள நாவல் ஆஸ்திரேலிய எழுத்தாளரான லாரா ஃபெர்குஸின் My sister’s chaos. இதனை தமிழில் அனிருத்தன் வாசுதேவன் “இழப்பின் வரைபடம்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இது லாரா ஃபெர்குஸின் முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கதாபாத்திரங்கள், ஒரு வீடு, அவ்வப்போது வந்து செல்லும் சில உதிரி பாத்திரங்கள் என குறுகிய அளவிலான மனிதர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டு உலகம் முழுவதையும் உள்ளடக்க கூடிய ஒரு கதையை நுண்மையாக எழுதியிருக்கிறார். மானுடத்திற்கு எப்போதும் சவாலாக அமையும் போர் எனும் சொல்லாடல் குறித்த சந்தேகங்களை பெருந்தர்க்கமாக உருவாக்க முயல்கிறார். உலகம் முழுக்க நிகழ்ந்திருக்கும், நிகழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை விதமான போர்களுக்குமான மையம் என்ன ? ஒருவேளை அப்போர் முடிவிற்கு வருமாயின் அவை மனித இனத்திற்கு விட்டு செல்வது என்னவாக இருக்கும் ?இதுவரை முடிந்திருக்கும் போர்களின் மிச்சங்கள் எதை நினைவுறுத்துகின்றன ? ஒவ்வொரு போரின்போதும், போர் முடிந்தபின்னும் கைவிடப்படும் பல்லாயிரக் கணக்கான மனிதர்களை எளிதாக அகதி எனும் சொல்லிற்குள் உலகம் அடக்கிவிடுகிறது. அந்த அகதிக்கு இந்த உலகத்தில் எதன் மீது உரிமை இருக்கிறது ? எது அந்த அகதியின் சுதந்திரமாகிறது ? இவ்வனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் நாவல் எல்லாவற்றிற்கும் மையமாக அகதியின் அகவாழ்க்கை எதை சுற்றி உழல்கிறது எனும் கேள்வியை தீண்டுகிறது. இந்த தீண்டலே நாவலை அதன் சிடுக்கான வழியில் இயல்பாக பயணிக்கவைத்து அதன் புதிர் சுழலில் வாசகனையும் சிக்க வைக்கிறது.
பெரும் போருக்கு பின்னர் அகதியாக்கப்படும் ஒரு பெண்ணிடம் நாவல் தொடங்குகிறது. போருக்கு முந்தைய தருணத்தில் வரைபடம் உருவாக்கும் குழுவில் பணியாற்றியவள் கதையின் நாயகி. உலகளாவியப் வரைபடத்தை உருவாக்கும் பணியின் இடையில் போர் அப்பணியை நிறுத்திவிடுகிறது. போரினால் நிறுத்தப்படும் தருணத்தில் அதுவரை தயாரித்திருந்த வரைபடத்தின் சில முக்கிய கோப்புகளை ஒரு பென்ட்ரைவில் சேகரித்து தன்னுடன் வைத்துக் கொள்கிறாள். பின் அகதியாக வேறொரு தனித்த இடத்தில் தங்க நேரும் போதும் அவளுடைய வரைபட நிபுணத்துவம் வேறொரு அர்த்தத்தை பூசிக் கொள்கிறது. தான் தங்கியிருக்கும் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அளக்கிறாள். கணக்கிடுகிறாள். அத்துடன் அவ்வீட்டில் அன்றாடம் ஏற்படும் பெளதீக மாற்றங்களையும் சேர்த்து வரைபடமாகப் பதியத் துவங்குகிறாள். வீட்டை துல்லியமான வரைபடமாக்கும் விதத்தில் தன்னால் இழந்த நாட்டை மீட்டுவிட முடியும் எனும் நம்பிக்கையில் தன்னை உலகில் இருந்து துண்டித்துக்கொள்கிறாள். வீடே அவளது உலகமாகிறது.
நாவலின் மற்றொரு நாயகி மேற்கூறிய பெண்ணின் இரட்டைச் சகோதரி. நாவல் முழுக்க சகோதரி எனும் சொல்வழியாகவே அறியப்படுகிறாள். போரில் தொலைந்து, பின் அவளுக்கு ஏற்படும் தனிப்பட்ட நினைவுகளின் சுமையோடு மீண்டும் தன் சகோதரியை அடைகிறாள். ஓவியத்தின் மீது பற்று கொண்டு இழந்த நிலத்தின் நினைவுகளை, வலிகளை அவ்வப்போது ஓவியமாக்குகிறாள். போரின் இறுதி கட்டத்தில் தாய் நாட்டை ஒடுக்கிய ராணுவத்திற்கு எதிரான இயக்கத்தில் பணிபுரிந்திருக்கிறாள். போருக்கு பின்னர் அவளைப் போன்ற இயக்கத்தவர்களை பிடிக்கும் பணியும் சமூகத்தில் துவங்குகிறது. போரின் இறுதி நாட்களில் அவளுடைய காதலியையும் காதலியின் குழந்தையையும் இழந்து, பின் அவர்களைத் தேடி அதில் தோல்வியையும் தழுவியிருக்கிறாள். இழந்த நிலத்தின் வலியும் தொலைத்த காதலியின் நினைவும் அவளுடைய வாழ்க்கையாகிறது.
நாயகியைத் தேடி சகோதரி வருவதில் தொடங்குகிறது நாவல். நாயகியின் தனிமை நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் வழியே குலையத் துவங்குகிறது. இருவேறுபட்ட கருத்தியல்களும், வாழ்க்கை குறித்த பார்வையும் ஒரே இடத்தில் குவிக்கப்படும்போது அவை ஒன்றை ஒன்று விழுங்கும் முனைப்புடன் நிகழும் முடிவற்ற சமராக உருவம் கொள்ளத் துவங்குகிறது. இருவருமே போரின் வடுக்கைளை சுமக்கின்றனர். அதை நினைவடுக்குகளில் சேமித்து வைக்க வேறு வேறு வடிவங்களை கையாள்கின்றனர். ஒருவரிடம் இருக்கும் ஒழுங்கு துல்லியமான பதிவுகளை விரும்புகிறது. மற்றோருவரிடமோ போரின் வடுக்கள் அதன் ரணத்துடன் பதிவு செய்யப்படுகிறது.
நாவலில் எங்குமே யாருடைய பெயரும் குறிப்பிடப்படுவதில்லை. இடங்களின் பெயர்களும் சொல்லப்படுவதில்லை. வீடே நாவலின் களமாக அமைகிறது. பெயர்களற்ற நாவலின் கதைசொல்லல் முறை நாவல் பேசும் அரசியலின் தன்மையை கூர்படுத்துகிறது. போர் குறித்த விவரணைகள் இடம்பெறாவிடினும் குறிப்பால் உணர்த்தப்படும் இடங்கள் பிரம்மாண்டமான கற்பனைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதே நேரம் அந்த கற்பனைகள் யதர்த்தத்தை மீறாத வண்ணம் அமைந்திருக்கிறது. இதுவரை நாம் அறிந்திருக்கும் போர்களை நாவலில் சொல்லப்படும் அத்தனை குறிப்புகளோடும் ஒப்புமை செய்ய முடிகிறது. லட்சியங்களுடன் தொடங்கப்படும் போர்கள் அந்த லட்சியத்தை பின்பற்றும் மக்களுக்கு எதிரானதாகவே உருமாறும் புதிரும், அவர்களை எதிர்ப்பது ஒற்றை எதிரி அல்ல என்ற புரிதலும், மக்களின் மீது சர்வதேச அமைப்புகளின் வல்லாதிக்க மனப்பான்மையும், போரின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளும், அனைத்து லட்சியங்களாலும் கைவிடப்படும் மக்களின் எளிய வாழ்க்கையும், போருக்கு பின் சமூகம் கொடுக்கும் பேரமைதியும், சுய வாழ்க்கையில் ஏற்படும் பெருங்குழப்பமும் எல்லைகளுக்கு அப்பால் பேருண்மையாக நிலைத்து நிற்கிறது. லாரா ஃபெர்குஸின் மொழி அவ்வுண்மையை கேள்விக்குள்ளாக்கும் தருணங்களில் போர் மனிதர்களுக்கு எதிரானதன்று மானுடத்திற்கு எதிரானது எனும் தீர்வை நம்பகத்தன்மையுடன் அணுகுகிறது.
நாவல் மூன்று பகுதிகலாக பிரிக்கபட்டிருக்கிறது. முதல் பகுதியான நிலப்பரப்பு இருவரின் போர் நினைவுகளை விவரிக்கிறது. இருவரும் அனுபவித்த போரின் வடுக்களை வேறு வடிவங்களுக்குள் புகுத்த முனைகிறார்கள். அதில் நாயகியின் வரைபடம் யதார்த்தத்தை மீறிய ஒன்றாக சகோதரிக்கு தோற்றம் கொடுக்கிறது. அதற்கான விவாதத்தில் மேம்பட்ட யதார்த்தத்தை தன் வரைபடம் பிரதிபலிக்க முயலுவதாக நாயகி விவரிக்கிறாள். மொத்த நாட்டையும் இழந்துவிட்டு பின் தான் வசிக்கும் வீட்டை மட்டும் வரைபடத்தின் வழியே மீட்டுருவாக்க முனையும் தன்மையை சகோதரி கேள்விக்குள்ளாக்குகிறாள். வீட்டை நாடாக பாவிக்கும் குணத்தின் வழியே எல்லைகளையும், அவ்வெல்லைகளை முன்வைத்து நிகழ்த்தப்படும் போரையும் அதனூடாக விரிவடையும் ஆதிக்க அரசியலையும் விவரித்திருக்கும் பகுதிகள் போரை ஆயுதமாக எண்ணும் அரசுகளை கேலிக்குட்படுத்தும் கூற்றுகளாக அமைகின்றன. எல்லைகளை விரிவு செய்யும் நோக்கில் நிகழ்த்தப்படும் ஆதிக்கமும், எல்லைகள் அழிந்து கொண்டே இருப்பதில் இருக்கும் யதார்த்தமும் வரைபடங்களையும் வரலாற்றையும் காலாவதியாக்கிக் கொண்டேயிருக்கிறது. அதிலும் குறிப்பாக காலாவதியாகும் எல்லைகளை பதிவு செய்வதே வரைபடத்தின் நோக்கம் என்று நாயகி நம்புகிறாள்.
இரண்டாம் பகுததியில் வீட்டை துல்லியமாக பதிவு செய்வதை ஆசிரியர் விவரிக்கிறார். அந்த வரைபடத்திற்கு ஏதேனும் அர்த்தம் இருக்கக்கூடுமா எனும் சகோதரியுடைய சந்தேகத்தின் லயத்தில் அப்பகுதி நகர்கிறது. சகோதரி அவ்வீட்டில் கண்டுபிடிக்கும் நிலவறை நாயகிக்கு பேரதிர்ச்சியாய் அமைகிறது. அத்தனை நாட்கள் அவ்வீட்டை ஒவ்வொரு அங்குலமாக அறிந்தும் பதிவு செய்தும் தனக்கு தெரியாத ஒன்றை புதிதாய் வந்தவள் கண்டுபிடிக்கிறாள் என்பதை உணரும் தருணத்தில் வரைபடத்தின் மீதான நம்பிக்கையை இழக்கிறாள். சகோதரிகளுக்கு இடையேயான சண்டைகள் நேரிடையாக நிகழத் துவங்குகின்றன. அவ்வீட்டின் நிலவறைக்குள் சகோதரி தனித்து இருக்க விரும்புகிறாள். நாவல் அதன் நுண்படிம நிலைக்கு இப்பகுதியில் நகர்ந்துவிடுகிறது. மாபெரும் தாய் நாட்டிலிருந்து விலகி அகதியாக வாழ நேரும் நாயகியின் வாழ்க்கையும், அந்நாயகி மாபெரும் தேசமென கற்பனை கொள்ளும் அவ்வீட்டிலிருந்து விலகி அதன் நிலவறைக்குள் அகதியாக மாறிக் கொள்ளும் சகோதரியின் வாழ்க்கையும் ஒருவர் மற்றொருவரின் பிம்பம் எனும் நிலைக்கு கதை நகர்ந்துவிடுகிறது.
பௌதீக ரீதியாக ஒருவர் மற்றொருவரின் பிம்பமாக மாறினாலும் நாவலின் மூன்றாம் பகுதியில் கருத்தியல் ரீதியான பிம்பமாகின்றனர். தனித்து ஒதுங்கிக் கொள்ளும் சகோதரி அவளை அறியாமலேயே நாயகியின் வாழ்க்கையை வாழத் துவங்குகிறாள். தன் ஓவியத் திறமையையும் நாயகியின் வரைபடத்தையும் வைத்துக்கொண்டு தொலைத்த தன் காதலியை கண்டடைந்துவிடலாம் என்று நம்புகிறாள். இதன் மறுபுறம் நாயகி வரைபடத்தின் நம்பிக்கையிலிருந்து அவளை அறியாமல் விலகி யதார்த்தத்தை புரிந்துகொள்ள நகர்கிறாள். இருவரும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் நாவல் தன் முடிவை எய்துகிறது.
நாவலை வேறு வேறு விதமான வாசிப்புகளுக்கு உட்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருப்பது நாவலின் பெரும் பலம்.  நவீன கதையாடலின் அரசியலும், வடிவமும் சமகால எழுத்துகளுக்கு சவாலாக அமைகின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் எண்களில் தலைப்பை கொண்டிருக்கின்றன. அதில் வரும் சிறு சிறு மாற்றங்களும் கதையின் தன்மைக்கு ஏற்பவே அமையப்பெற்றிருக்கிறது. நாவலின் குலைந்த வடிவத்தை அது பேசும் அரசியலே தீர்மானிக்கிறது. ஒரே சமயத்தில் மாயப்புனைவாகவும், அரசியல் கதையாடலாகவும், அறிவியல் நுட்பங்களால் நிறைந்த வாழ்க்கையாகவும், தத்துவச் சமராகவும் இந்நாவல் காட்சியளிக்கிறது. நாயகியை மையப்படுத்தியே சொல்லப்படும் கதை  நாயகியின் உணர்ச்சியை, பதற்றத்தை வாசகரை சேர்ப்பிப்பதிலும் வெற்றியைக் காண்கிறது. ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்கும் இடையில் நிகழும் பெரும் போரில் பேருண்மைகள் பொதிந்திருக்கின்றன. அவற்றின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக நாவல் கட்டவிழ்க்கிறது. ஒவ்வொன்றின் முடிவுலும் ஒழுங்கின்மை புன்னகைத்தபடி இருப்பது நாவலின் பாடுபொருளை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

- காலச்சுவடு,
செப்டம்பர் 2019

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக