கதைகளுக்குள் ஒரு குடும்பம்

ஜூலை மாத கணையாழியில் "ஏன் எழுதினேன் ?" பகுதியில் வெளியான கட்டுரை.


இரண்டாயிரத்திற்கு பின் எழுத வந்த எனக்கு கதைகள் பெரும் சவாலாக அமைந்தன. எதை கதையாக்குவது எனும் கேள்வியில் சுழன்றடித்து, எது கதை எனும் அடிப்படைவாத பிரச்சினைகளில் உழன்றுகொண்டிருந்த தருணம். வாசிப்பே இலக்கியம் சார்ந்தும், வாழ்க்கைக் குறித்த புரிதல் சார்ந்தும் உதவும் பெருந்துணை. நவீன தமிழ் இலக்கியத்தின் வாசனை மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் வேறுபல கிளைக்கேள்விகளை என்னுள் விதைத்தன. தேனிக்கூட்டின் உள்ளிருக்கும் சிறு சிறு அறைகளைப் போல பல்வேறு அடுக்குகளை அறிமுகப்படுத்தின. தமிழ் கதைகளின் அடிநாதம் என்ன எனும் சுனைக்குள் மூழ்கி மேலெழும் தருணத்தில் குடும்பம் எனும் சொல் அடர்வனமாக என்னுள் உருக்கொண்டது. எழுதிய கதைகளில் எத்தனை கதைகளை எதன் அடிப்படையில் நிராகரிப்பது என்பதற்கான வரையறையை இலக்கியம் அறிமுகம் செய்த ‘குடும்பம்’ அளவுகோலாக துணை நின்றது. 
நூற்றாண்டு கால சிறுகதை வரலாற்றில் பெரும் இடத்தை குடும்பம் ஆக்ரமித்திருக்கிறது. நவீன இலக்கியம் முன்வைக்கும் குடும்பம் எளிய வட்டங்களால் நிறைவடையும் தன்மைகளற்றது. பல்வேறு நுண்வட்டங்களால் ஆன புதிர்பாதை. ஒருவர் பயணிக்கும் வழியை பிறிதொருவர் அறிந்திருக்க வாய்ப்பற்ற வழித்தடம். ரகசியங்களால் நிறைந்த அமைப்பு. நன்மைகளும் தீமைகளும் இரண்டறக் கலந்து கிடக்கும் அரசியல் சட்டகம். அனைத்துவிதமான அடிப்படை உணர்ச்சிகளும் அதன் எல்லைகளைத் தீண்டிப் பின் விலகும் விளையாட்டுத் திடல். அதன் பலவிதமான வடிவங்களை, வண்ணங்களை தமிழ் இலக்கியம் வேறு வேறு வகைகளில் எழுதிப் பார்த்த வண்ணம் இருக்கின்றன. ஒருமுறை தோன்றும் வடிவங்களும் வண்ணங்களும் மறுமுறை தோன்றுவதில்லை. இந்த மாற்றங்களை, அல்லது பரிமாணங்களை காலம் மட்டுமே முடிவு செய்கிறது.
புதுமைபித்தனில் தொடங்கி சமகாலத்தில் எழுதி கொண்டிருக்கும் எஸ்.சுரேஷ் வரை குடும்பம் எனும் அமைப்பின்  தனித்துவமான பார்வையை முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர். குடும்பம் எனும் அமைப்பு சிதையாமல் பாதுகாக்க அதன் அங்கத்தினர் முன்னெடுக்கும் செயல்பாடுகளும், குடும்பம் சிதறும் தருணத்தில் வேறு ஓரிடத்தில் புதிதாக முளைக்கும் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியும் முன்னேற்பாடுகளற்று சுயம்புவாக, அதே நேரம் உலக அசைவில் இடையறாத சுழற்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பின்னிருக்கக்கூடிய காரண காரியங்களை காலமும், சமூகமும், அச்சமூகம் முன்வைக்ககும் காலத்திகேற்ற பண்பாடும் தீர்மானிக்கிறது.
கூட்டுக் குடும்பங்கள் சிதைவுற்று தனிக்குடும்பங்கள் ஆவதும், தனிக்குடும்பங்களின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் ஓர் குடும்பம் ஆவதும் நவீனத்தின் சாயலாய் தொக்கி நிற்கிறது. அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டதிலிருந்து குடும்பம் ஆதிக்கத்தின், தனிமனிதனின் நிறுவனமயமாக்கப்பட்ட அதிகார அமைப்பாக உருவெடுக்கத் துவங்குகிறது. குடும்பம் எனும் அமைப்பை சிதையாமல் காக்க ஒவ்வொருவரின் அன்றாடமும் அனைத்து காலகட்டங்களிலும் போராட்டமாக அமைகிறது. அதன் சவால்களைக் கடந்தே தனி மனிதனின் பார்வை சமூக பிரச்சினைகளின் மீது கசிகிறது. இப்போராட்டங்களிலிருந்து தப்பி ஓட விரும்பும் மனம் சாதியையும் மதத்தையும் குடும்ப அமைப்பின் அரணாக்கிக்கொள்கிறது. வீட்டின் ஜன்னல் வழியே ஊடுருவும் காற்றைப் போல அரசியல் குடும்ப அமைப்பிற்குள் மென்மையாக ஊடுருவுகிறது. குடும்பச் சவால்களுடன் சமர் புரிகிறது. மனிதனை அங்கிருந்து பிரித்தெடுத்து சமூகத்திற்கான மனிதனாக உருமாற்றுகிறது.
இந்த தன்மையை நூற்றாண்டு கால தமிழ் சிறுகதைகளில் பல இடங்களில் இனங்காணமுடிகிறது. நகரமயமாக்கலுக்கு பின்னான சமூகத்திலிருந்து எழுத வந்த எனக்கு சிதைவுற்ற குடும்ப அமைப்பே அறிமுகமானது. அதிலிருந்து தப்பித்து செல்ல முனையும் இளைய மனமும், பழைமையை போற்றியும், அதே நேரம் நவீன வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுக்க முடியாமல் தவிக்கும் மனிதர்களுக்கும் இடையிலான சிந்தனைப்போராக சமகால வாழ்க்கை தன்னை கெக்கலியிட்டது. அரசியல் நெருக்கடிகளுக்கு இடையிலும், இயற்கை பேரிடர்களுக்கு இடையிலும், உரிமைகளை இழந்துவிட்டு கதறியழும் நொடியிலும் சிந்தனைகளை குடும்பம் சிறைபடுத்தி வைத்துக்கொள்கிறது. செல்லப்பிராணிகளின் மீது காட்டப்படும் ஜீவகாருண்யமும் விலங்குகளை வளர்க்கிறோம் எனும் பெயரில் மனிதத்தன்மையை விலங்குகளுக்கு கற்பிக்கும் செயலும் குடும்பம் வளர்த்தெடுக்கும் முரண்களின் சாயலாகிறது. உடைமை சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பெயராக குடும்பம் அமையும் தருணத்திலிருந்தே உலகத்தின் அத்தனை விஷயங்களையும் தனதாக்கிக் கொள்ளும் முனைப்பில் அக்குடும்பத்தின் உறுப்பினர்களும் தங்களை தயார்படுத்திக்கொள்கின்றனர். தங்களது சந்ததிகளையும் அதற்கு பயிற்றுவிக்கின்றனர். எக்கணத்திலும் சிதைவுறாமல் இருக்க வேண்டிய அத்தனை பாலபாடங்களையும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்திய வண்ணம் குடும்பம் தன்னை தற்காத்துக்கொள்கிறது. இருப்பினும் அதற்குள் இருக்கும் பயமும் அமைப்பினர்களுக்கு இடையிலான சந்தேகமும், அவர்களின் இடையில் நிலவும் இடைவெளிகளையும், ஒரே வீட்டில் இருக்கும் சிதறுண்ட ஒன்றுக்கொன்று அறிந்திராத உலகங்களும், அதன்வழியே கதைகளையும் காலத்திற்கு சாட்சியாக கசியவிட்டுக்கொண்டிருக்கிறது.
எந்த தருணத்தில் கதை எனும் சொல்லை நினைத்தாலும் அதன் இணைச்சொல்லாக குடும்பம் எனும் சொல் என்னுள் கிளைவிடுகிறது. சில நேரங்களில் சிறையாகவும் சில நேரங்களில் பூங்காவனமாகவும் மாயவித்தை காட்டும் நனவிலியாக, கதைசொல்லியாக எனக்குள் குடும்பம் உருவெடுக்கிறது. காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு எனும் தலைப்பையும் அதன் சாயலிலேயே அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். சிறிய, கட்டமைக்கப்பட்ட வட்டங்களுக்குள் இருந்துகொண்டு கண்டுகொள்ளாமல் விடப்படும் சமூகத்தின் உதிரிகளின் மீதான வெளிச்சமாக அதை உணர்கிறேன். இவ்வகைமையில் கதைகளை முன் தீர்மானம் செய்யும் போது நானும் சிறு வட்டங்களுக்குள் அடைந்துவிடுகிறேனோ எனும் அச்சம் சூல்கொள்கிறது. இருப்பினும் அவற்றினுள் குடைந்தவண்ணம் மேற்கொள்ளும் பயணம் என்னை காணாமலாக்குகிறது. அறியப்பட்ட கதைகளையும், தகவல்களுக்கிடையில் ஒளிந்துகொண்டிருக்கும் வாழ்க்கையையும் அவை குடும்பம் எனும் அமைப்பை சுற்றி புனைந்துகொண்டிருக்கும் சிலந்தி வலைக்குள்ளும்  சொற்களின் வழியே சிக்கிக்கொள்கிறேன். அவை எனக்கு வேறொரு பரிமாணத்தில் காலத்தை உணர்த்துகின்றன. அவற்றை கதைகளாக எழுத முனைகிறேன். எழுதிய கதைகளும் மற்றொரு பரிமாணத்தில் சவாலாகிவிடுகின்றன. 
காலத்தால் கைவிடப்பட்டு காணாமல்போகும் மனிதர்களுக்கு கதைகள் எப்போதும் அடைக்கலம் கொடுக்கின்றன. அவ்வகையில் என் கதைகளையும் அந்த தராசிலேயே எடையிட விரும்புகிறேன்!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக