காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு


~1~
வெள்ளநீர் வற்றத் தொடங்கியிருந்தது. தெருமுனையின் மண் பாங்கான இடங்களில் நீர் தேங்கியிருந்தது. தார்ச்சாலைகள் சில இடங்களில் பெயர்ந்து கிடந்தன. சாக்கடையில் ஓடும் நீரின் வேகமும், அளவும் குறைந்திருந்தது. அரசுப் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் ஏற்றி செல்லப்பட்டவண்ணம் இருந்தனர். அவர்களின் முகங்கள் அழுக்கேறியிருந்தன. மூன்று நாட்களாக குளிக்காமல் இருந்ததன் சாயலும், உறக்கமின்றி வீங்கிய கண்களும் பார்ப்பவர்களை கழிவிரக்கம் கொள்ளத் தூண்டின.
சைதாப்பேட்டையிலிருந்தும், ஆலந்தூரின் உட்பகுதிகளிலிருந்தும் நீர் தேங்கியிருந்த இடங்களிலிருந்து மக்களை வெளிக் கொணர்ந்து தேவாலயங்களிலும், பள்ளிகளிலும் தங்க வைத்திருந்தனர். பட் ரோட்டில் இருந்த தேவாலயத்திலிருந்து மக்களை ஏற்றிச் செல்ல பேருந்து காத்திருந்தது. அருகில் இருந்த காவல் துறையினர் கூட்டம் நெரிசலாக இருப்பதை சீர்படுத்த குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். சில வயோதிகர்கள் பேருந்து இலவசமாக, மக்களுக்காக இயக்கப்படுகிறது என்று காவல்துறை சொல்வதை சந்தேகத்துடனேயே ஏற்றுக்கொண்டனர். சுற்றியிருந்த மக்கள் கூட்டம் அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது.
தேநீர் கடைகளில் கூட்டம் மிதமாக இருந்தது. அருகிலிருந்த மளிகைக் கடையில் கூட்டம் நெரிசலென மாறியிருந்தது. ஆங்காங்கே மீண்டும் மழை வரும் என்றும், வந்த வெள்ளத்தின் கற்பனைக்கெட்டாத விவரணைகளும் கேட்ட வண்ணமிருந்தன. மளிகைக் கடையில் பாலின் விலையை வெள்ளகாலத்திலிந்தது போல் அல்லாமல் நிஜ விலைக்கே விற்கத் துவங்கியிருந்தனர். முந்தைய நாள் வாங்கிய விலையின் ஞாபகத்தில் வந்த சிறிலுக்கு பாலின் விலை சமாதானமாக அமைந்தது. கைவசம் இருந்த மீதக் காசில் தேநீர் அருந்த யோசித்தான். சாலைப் பக்கம் வேடிக்கைப் பார்த்தவாறு மிடறுத் தேநீர் தொண்டை வழி பிரயாணிக்கத் துவங்கியிருந்தது.
சிறிலின் கண்களிலிருந்து தூக்கம் தேநீரின் சூட்டில் கரைந்து கொண்டிருந்தது. கண்கள் அன்றைய முதற்சூரியனின் வெளிச்சத்தில் பிரகாசமடைய ஆரம்பித்தன. கடைசி கட்ட தேநீரை உறிஞ்சும்போது எதிரிலிருந்த கூட்டத்தோடு உரையாடிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் சிவராமனைக் கண்டான். வெள்ளத்திற்கு முந்தைய நாட்களின் நிகழ்ச்சிகளை மனம் மீட்கத் துவங்கியது. தேநீருக்கான காசை கொடுக்கும் போதே “சிவராமன் சார்… சிவராமன் சார்” என்று கத்தினான். சாலையின் குறுக்காக செல்லும் வாகனங்களின் கனத்த ஓசையின் இடையில் எழுப்பிய குரல் தேநீர்க் கடையைக் கூட தாண்டவில்லை. பணம் கொடுத்துவிட்டு வேகமாக சாலையைக் கடந்து சென்றான்.
மக்களை பேருந்தில் ஏற்ற உதவிக் கொண்டிருந்த சிவராமனால் சிறிலை சில நொடிகளுக்கு அடையாளம் காண முடியவில்லை. சிறில் வெள்ளத்திற்கு முன்பு அவரை சந்தித்திருந்த விஷயங்களை விளக்கினான். சிவராமனுக்கு நினைவுகள் மீண்டன. வெள்ளப் பணிகளில் இருந்த ஓய்வற்றத் தன்மை சிறிது மறதியை அளித்திருந்தது.
கடைசி பேருந்தில் தேவாலயத்தில் இருந்த மீத மக்களை ஏற்றியவுடன் அவரும் வீட்டிற்கு செல்ல தனக்கான பைகளை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் சிறிலிடமிருந்து வந்த பிடிவாதமான அழைப்பு மறுக்க முடியாமல் போனது. சிறிலின் அப்பாவும் சிவராமனின் அப்பாவும் தொழில்வழித் தோழர்கள் என்பதால் நிர்பந்தத்துடன் சிறில் கூறும் வீட்டிற்கு வர சம்மதித்தார். தன் இரு சக்கர வாகனத்தில் அவனையும் அழைத்துக்கொண்டு ஓட்ட ஆரம்பித்தார். தோமையர் மலை அடிவாரத்தில் தாம்பரம் செல்லும் இணைப்பு சாலையில் வாகனம் உருளத் துவங்கியது. நீர் படிந்திருந்த சாலையின் வாசனை வழி முழுக்க நாசியைத் துளைத்தது. இடையிடையே மீண்டும் வெள்ளத்தின் முன் நிகழ்ந்த கதையை கேட்டுக்கொண்டார். கதையின் இடையில் தாம் செல்லும் வீட்டினனின் பெயரையும் கேட்டுக்கொண்டார். அந்த பெயர் அவருக்கும் வித்தியாசமாக இருந்தது.
***
வீடு பூட்டப்பட்டிருந்தது. மென் பச்சை நிற வீட்டின் சில இடங்களில் வண்ணம் உரிந்து விழுந்திருந்தன. வீட்டின் நிறம் மங்கி பழைமையின் சாயலைக் காட்டிக் கொண்டிருந்தது. சிவராமனின் முகத்தில் அதிருப்தியும் கூடியது. உடன் வந்த சிறிலுக்கு மீண்டும் தோற்றது சற்று வேதனையளித்தது. வீட்டின் வாசலிலேயே தலையில் கை வைத்தவாறு அமர்ந்துகொண்டான். இருவரிடமும் இருந்த கோபமும் சோகமும் பிறிதொருவரிடமிருந்து ஆறுதல் தேடியது. வீட்டைப் பார்த்த வண்ணம் கீழே அமர்ந்திருக்கும் சிறிலையும் பார்த்துக்கொண்டார். அந்த வீடே சிறிலின் பிரச்சினையாக மாறியிருந்தது.
மூன்று வாரத்திற்கு முன்பு சிவராமனுக்கும் சிறிலுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தெருவாசிகளிடம் அதிகம் பேசாதவன் சிறில். காலையில் பணிக்கு செல்வதையும் பின் மாலையில் திரும்பி வருவதையுமே பெரும்பாலும் தெருவாசிகள் பார்த்திருக்கின்றனர். அவ்வப்போது தங்கையுடன் தோமையர் தேவாலயத்திற்கு செல்வதை பார்ப்பர். பெற்றோர்கள் இருவருமே இறந்தவுடன் தங்கை ஜெனொபெலுடன் வாழ்ந்து வருகிறான். ஜெனொபெலின் மீது குடும்பமும் தெருவும் அதிகமாக பாசம் வைத்திருந்தது. அவளது ஆசைக்கிணங்க இளங்கலை வரலாறு படிப்பிலும் சிறில் சேர்த்துவிட்டிருந்தான்.
அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தவள். அம்மாவின் பிரிவு அவளை வெகுவாக நொடித்துப் போட்டது. அதிலிருந்து மீள சில வாரங்கள் பிடித்தன. அவ்வப்போது இரவில், தூக்கத்தின் இடையில் எழுவதும் அவளுக்கு வாடிக்கையானது. சுவிசேஷங்களை அவளுடன் இணைந்து சொல்லி துர்சொப்பனங்கள் திரும்பி வராது என்று அறுதல் படுத்தி உறங்கச் சொல்லுவான். அம்மா இறந்த பின்பும் வேதாகமத்திலிருந்து கதைகளை அம்மாவே சொல்வதாக கற்பனை செய்து உறங்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டாள்.
முதன்முதலாக சிவராமனை சந்தித்ததற்கும் தங்கையே காரணமாக இருந்தாள். அம்மாவின் நினைவுகள் கொடுத்த சோகங்களிலிருந்து மீட்க ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் தங்கையுடன் சென்னையைச் சுற்றக் கிளம்பிவிடுவான். சில வாரங்களில் வேடந்தாங்கல் வரை பைக்கிலேயே சென்றதுமுண்டு. இயற்கை சார்ந்த இடங்களுக்கு சென்றபோதும் அவளுடைய இயல்பை அவனால் காண முடியவில்லை. வேறு வேறு இடங்களைத் தேர்வு செய்து சோதனை செய்து பார்த்தான். காந்தி மண்டபத்தில் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் தருணத்தில்  அவள் முகத்தில் சந்தோஷம் இல்லை. ஒவ்வொரு முறையையும் போல அம்மாவைப் பற்றியும், அம்மாவின் நினைவுகள் எப்படி நம்மை வழிநடத்தப் போகிறது என்பதையும் பேசினான். அவளுடைய முகபாவங்களில் சிறியதொரு சலனமும் தென்படவில்லை. ஆலமரத்தின் அடியைப் பார்த்துக்கொண்டிருந்த ஜெனொபெல் சிறிலிடம் பேசத் துவங்கினாள். மண்ணிற்கும் ஆலமரத்திற்குமான உறவையும் தாயின் நினைவையும் பிணைத்துக் கூறினாள். மீண்டும் நிலவிய மௌனம் சிறிலையும் அடிமரத்தைப் பார்க்க வைத்தது. கூர்ந்து நோக்கினான். வேர்கள் மண்ணுடன் இயைந்திருந்தன. வேரின் பிடிப்பு மண்ணின் சிறு துகளையும் விடாதிருந்தது. சிறிலுக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை. குழப்பத்துடன் பார்க்கையில் வேர்களும் குழப்பமாகவிருந்தன. சுருங்கிய நெற்றியுடன் ஜெனொபெலைப் பார்த்தான். மெல்லிய புன்னகை இதழில் படர்ந்திருந்தது.
அம்மாவை சுமந்து கொண்டே இருக்கும் ஜெனொபெலையும் அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவ்வப்போது மட்டுமே பேசுபவளாக மாறிப் போயிருந்தாள். கல்லூரியில் அவளுடன் படிக்கும் சக மாணவர்களிடமிருந்தும் அவள் அமைதியாக மாறியதன் வருத்தம் தென்பட்டது. அவளுக்கென இருந்த நண்பர் குழாமும் இதையே சொன்னது. இந்தியாவில் இருந்த ஏதேனும் இனக்குழு பற்றி ப்ரஜெக்ட் செய்யப்போவதாக அம்மாவிடம் ஜெனொபெல் சொல்லி வந்தாள். அம்மாவும் தன் தாத்தா பாட்டி வழி கேட்டறிந்த வரலாற்றுக் கதைகளை சொல்லுவாள். ஆனால் அம்மாவின் மறைவிற்கு பின் ஜெனொபெலின் படிப்பு சோடைபோனது. ஜெனொபெலின் இயல்பு இதுவல்ல என்பதால் அந்த இயல்பிற்காக சிறில் வருந்தினான்.
ஒரு ஞாயிறன்று காலை ஜெபம் முடித்து வீடு திரும்பும் போது ஜெனொபெலின் நண்பர்கள் வீட்டு வாசலில் காத்திருந்தனர். அவளையும் அழைத்துக் கொண்டு எக்ஸ்பிரஸ் அவென்யு மாலிற்கு செல்ல ஆசைப்பட்டனர். ஒருவேளை அவர்களுடன் இருப்பது அவளுக்கு ஆசுவாசமாக இருக்கக்கூடும் என்றெண்ணி அனுப்பி வைத்தான். நினைத்தபடி அன்றைய இரவு ஜெனொபெல் வருத்தத்தின் சாயல்களின்றி உறங்கினாள். காரணம் புரியாமல் இருந்தாலும் தங்கையின் சிரிப்பு அவனுக்கும் சந்தோஷத்தை அளித்தது.
தங்கையின் சிரிப்பை நினைக்கும் போது கிளம்பத் தயாராக காத்திருந்த சிவராமனின் நினைவு தட்டுப்பட்டது. முகத்தில் இருந்த சிடுசிடுப்பையும் மீறி அவனிடம் ஆறுதல் கூறினார்.
***
எக்ஸ்பிரஸ் அவின்யு மாலின் சரவிளக்குகளும் படாடோபக் கடைகளும் அவளை ஈர்க்கவில்லை. உடன் வந்த ஐவரும் ஒவ்வொரு கடையாக நுழைந்து வேடிக்கைப் பார்த்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உரையாடலில் பங்கு கொள்ளாமல் அமைதியாக உடன் நடந்தாள். அவளுடைய மௌனத்தால் சிலர் பேச நினைத்தும் பேச முடியாமல் போனது. சோகத்தைத் தாமாக ஏற்றி அப்பிக் கொண்டிருக்கிறாள் என்றும் முணுமுணுத்துக்கொண்டனர். அப்படி சொன்னவர்களை சிலர் கண்டிப்பதும், சிலர் வேண்டுமென்று ஜெனொபெலிற்கு ஆறுதல் கூற முற்படுவதும் இயல்பாய் நிகழ்ந்தது. ஆனாலும் ஜெனொபெலால் அவர்களுக்கு இணைவாய் பேசமுடியவில்லை. இரண்டரை மணி நேர நடைக்கு பிறகு மூன்றாம் தளத்தை அடைந்திருந்தனர். சில விளையாட்டு விஷயங்களும், மாயாஜால திரையரங்கும், பேய் வீடும் அத்தளத்தின் ஒரு கோடியில் இருந்தன. பேய் வீட்டைப் பற்றி சிலர் பயத்துடன் கதை கட்டத் துவங்கினர். முதன் முதலாக ஜெனொபெல் பேச முற்பட்டாள். அங்கு செல்லலாமா என்று பேய் வீட்டைச் சுட்டி நண்பர்களிடம் கேட்டாள். அனைவருக்கும் பயம் கலந்த உற்சாகம் எழும்பியது. ஐவரும் சென்ற பின்பு ஜெனொபெல் நுழைந்தாள். ஆங்காங்கே இயந்திரப் பேய்கள் அமர்ந்திருந்தன. சில பிசாசுகள் கட்டைகளை வைத்து தரையில் தட்டிக் கொண்டிருந்தன. சில பேய்களின் மீது வெளிச்சம் அவ்வப்போது பாய்ச்சப்பட்டிருந்தன. சில பேய்கள் கல்லரையிலிருந்து எழுந்து திடிரென தோன்றும் வெளிச்சத்தில் பயம்காட்டின. ஊளைச் சத்தமும், மயானத்தின் மௌனமும் முன் சென்ற ஐவரையும் அச்சமூட்டியது. ஒவ்வொரு அறியப்படாத பேய் உருவத்திற்கும் சப்தம் எழுப்பிப் பயத்தை வெளிக்காட்டினர். பின் எழும்பிய சிரிப்பின் ஒலி பயத்தை காணாமலாக்கியது. அப்பியிருந்த இருளும் மௌனமுமே ஜெனொபெலுக்கு ஆசுவாசமாய் அமைந்தது. ஐவரும் ஒருவரின் ஆடையை இன்னொருவர் பிடித்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர், அதில் யார் முதலில் போவது எனும் சர்ச்சையும் நுழையும் முன் எழுந்து அடங்கியது. வழி முழுக்க பரவியிருந்த இருளின் தன்மை பாதையிலும் பயம் கொள்ள வைத்தது. பேய்களைக் கண்டு திடுக்கிட்டாலும் எளிதில் கடந்து செல்பவளாக ஜெனொபெல் இருந்தாள். ஐவரும் வெளி வந்தபின் உள்ளே பிறிதொருவர் செய்த சேட்டைகளைப் பகடி செய்து கொண்டிருந்தனர். பயம் கடந்து எழுந்தன சிரிப்பின் சப்தங்கள். கடந்து சென்ற பொழுதை எள்ளி நகையாடின சொற்கள். சிரிப்பு சிறிது சிறிதாக குறையும்போது ஜெனொபெலின்  நினைவு அனைவருக்குள்ளும் எழுந்தது. சுற்றி முற்றி பார்த்தனர். சிரிப்பு முழுதுமாக நீங்கி பதற்றம் மேலேறியது. பேய்வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த வாயில் காப்பாளனிடம் சென்று அவளைப் பற்றி வினவினர். தங்களுடன் வந்த ஆறாவது நபரைப் பார்த்தீர்களா என்று அருகில் இருந்த உதவுபவர்களிடமும் நுழைவுச் சீட்டு விநியோகிப்பவர்களிடமும் விசாரித்தனர். கேட்டதற்கிணங்க சுற்றி முற்றி பார்த்தார். பயம் மேலிட உள்ளே சென்று பார்த்துவிட்டு வருகிறீர்களா என்றும் கேட்டனர். ஐவரில் இருவருக்கு பதற்றத்தில் கண்ணீர் தழும்பியது. உதவுபவர்களில் ஒருவனும் பேய்வீட்டினுள் நுழைந்து பார்த்து வரச் சென்றான். வெளியே வரும்போது உடன் ஜெனொபெலும் இருந்தாள். அனைவருக்கும் ஆசுவாசம் திரும்பியது. ஐவரும் உதவியவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஜெனொபெலை அழைத்து செல்லத் துவங்கினர். செல்லும் போது ஏன் தாமதம் எனும் கேள்வியை பலவிதமாக கேட்டவாறு சென்றனர். பின்னாலிருந்த உதவுபவர் நுழைவுச் சீட்டை விநியோகிப்பவரிடம் பூடகமான தொனியில் இருளில் ஜெனொபெல் அமர்ந்திருந்ததை விவரித்தான். ஐவரின் காதுகளிலும் அச்சொல் விழவில்லை.
***
ஜெனொபெலின் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது என்று சிறில் நம்பத் துவங்கினான். நண்பர்களுடன் அதிகமாக குழும ஆரம்பித்தாள். அடிக்கடி வெளி செல்வதும் வாடிக்கையானது. அவளுடைய இயல்பு வாழ்க்கைக்காக காத்திருந்த சிறிலுக்கு வெளிசெல்வது இடையூறாகவோ, தடை செய்ய வேண்டியதாகவோ தோன்றவில்லை.
ஜெனொபெலிற்கு பேய் வீடுகள் பிடித்துப் போனது. சில நேரங்களில் நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ செல்ல ஆரம்பித்தாள். சென்னையில் இருக்கும் ஒவ்வொரு மேல்தட்டு வணிக வளாகங்களுக்கும் பயணப்பட்டாள். கூட்டம் அதிகமில்லாத வார நாட்களில் தனியே சென்று பேய் வீடுகளில் பயணித்தாள். தாமதமாக வெளி வரும் ஜெனொபெலை ஏளனமாக பார்த்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமானது. பெண்களாக இருக்கும் பட்சத்தில் சில வார்த்தைகளையும்  சந்தேகத்தின் சாயலுடன் கேட்க நேரிட்டது. ஒவ்வொரு பேய் வீடும் திருப்தி தராத தருணத்தில் வேறு பேய் வீடுகளுக்கு செல்லத் தொடங்கினாள். பொழுது போக்கிற்கென சிறில் கொடுக்கும் பணம் அனைத்தையும் இருள் வழியான பாதையில் பயணிக்கவே பயன்படுத்தினாள். யாரோ நம்மை இங்கிருந்து துரத்தப் போகிறார்கள் என்ற பயமும், இந்த பேய் வீடு கூட பயத்திலிருந்து சுய ஏளனத்திற்கு உணர்வுகளை உட்படுத்தும் எனும் தன்னுணர்வும் அவளுள் கசப்பை ஏற்படுத்தியது. கனவுகளுக்குள் இருள் மட்டுமே நிரம்பிய வீட்டை நிர்மாணிக்கத் துவங்கினாள். ஒவ்வொரு பேய் வீடாக சென்று திரும்பும் போதும் இருளில் உணர்ந்த புதுமையைப் பட்டியலிட ஆரம்பித்தாள். பெரிதான வித்தியாசங்களை நிர்மாணிக்கப்பட்ட  பேய் வீடுகள் அவளுக்கு கொடுக்கவில்லை.
நிஜமான இருளுக்கு பயந்தாள். வேறு இடங்கள் தெரியாமையால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து சென்ற இடங்களுக்கே மறுபடியும் சென்றாள். அவ்வப்போது சிறிலையும் உடன் அழைத்து செல்வதுண்டு. ஆனால் அவன் உடனிருக்கும்போது வெகு நேரம் இருட்டில் இருக்க முடியாததால் அந்தப் பயணங்களை சீக்கிரமே மறந்தாள்.
பேய் வீட்டின் அனுபவங்கள் கசக்க ஆரம்பித்தன. செல்லும் அனைத்து இடங்களிலும் இது போன்று பேய் வீடுகள் வேறு ஏதேனும் இடங்களில் இருக்கின்றனவா என விசாரிக்கத் துவங்கினாள். வேறு ஊர்களுக்கோ மாநிலங்களுக்கோ செல்லும் தைரியம் இல்லை என்பதால் சென்னைக்குள்ளேயே தேடினாள். கேள்வியை எதிர்கொண்ட பலர் திகைத்தனர். சிலர் இதுவே சிறந்த பேய் வீடு என முத்திரைக் குத்தினர். வேறு சிலர் அவள் ஏற்கனவே சென்றிருந்த பேய் வீடுகளை அறிமுகம் செய்தனர். பதில்களும் கசந்தன. இருளின் வேறு வேறு வடிவங்களுக்காக ஏங்கினாள். மனதுள் இருக்கும் இருட்டை ஈடு செய்யும் புற இருட்டை நாடினாள்.
தீவுத் திடலில் பொருட்காட்சி ஆரம்பித்திருப்பதன் செய்தி அறிந்தாள். அங்கும் பேய் வீடு இருக்கிறது என்பதை அறிந்தவுடன் கொஞ்சம் புதுமையை எதிர்நோக்கினாள். ஆரம்ப இரண்டு நாட்களில் அங்கு பேய்வீடு நிர்மாணிக்கப்படவேயில்லை. தொடர்ந்து சென்று வந்த பின் வார நாளொன்றில் பேய் வீட்டினுள் நுழைந்தாள். சிறிதும் சுவாரஸ்யம் தராமல் இரைச்சலின் கூடாரமாக மாறியிருந்தது. முகத்தில் தோன்றிய சுருக்கங்களுடன் வாசலில் நுழைவுச் சீட்டு விநியோகிப்பவனிடம் வேறு பேய்வீடுகள் சார்ந்த தகவலை விசாரித்தாள். சிறிது நேரம் மௌனம் காத்தவன் ஓர் முகவரியை அளித்தான். கைவசம் எழுதிக் கொண்ட முகவரியுடன் அவரைப் பற்றி அவன் சொன்ன அறிமுகம் ஆர்வத்தை மேலிடச் செய்தது.
“அவரு சொந்த வீட்டையே பேய் வீடா மாத்தி மக்கள பயமுறுத்துறாருமா.”
அன்றைய  தூக்கத்தில் தன்னுடைய வீட்டை பேய் வீடாக கற்பனை செய்ய முயன்று தோற்றாள். பார்க்கவிருக்கும் வீடு சார்ந்த எதிர்பார்ப்பும் கூடியது. மறுநாள் மாலை ஆறரை மணிக்கு முகவரியில் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு சென்றாள். அவள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. சிறிலுடைய சைக்கிளில் தோழியின் வீட்டிற்கு செல்கிறேன் என்ற காரணத்தைக் கூறி எடுத்துச் சென்றாள்.
***
~2~
மெலிந்த தேகம். வெளுப்பேறிய நிறம். ஆங்காங்கே பழுப்பு நிற ரோமங்களும் மேலெழுந்தவாறிருந்தன. இதழில் சிரிப்பு படர்வதற்கான சாத்தியப்பாடுகளின்றி வறண்டிருந்தன. பார்வையின் கணிப்பில் வயது முப்பதிலிருந்து நாற்பதற்குள் இருக்கும் என கணித்தாள். வீட்டின் வாசலில் கைவசமிருந்த பத்திரிக்கையில் கவனம் கொண்டவனாய் அமர்ந்திருந்தான். அமர்ந்திருந்த நாற்காலியின் ஒரு காலிற்கு அருகில் நுழைவுச் சீட்டிற்கான புத்தகத்தின் பக்கங்கள் காற்றின் விசைக்கேற்ப திரும்பிக் கொண்டிருந்தன. வேகம் கொண்டு தெரு வரை வந்த ஜெனொபெலின் கால்கள் வீட்டை நெருங்க நெருங்க தயக்கம் கொண்டன. அவ்வீட்டிற்கு மக்கள் அதிகமாக வரவில்லை. சிறுவர்களும் சுற்றி எங்கும் தென்படவில்லை என்பதால் தயக்கம் கூடியது. அருகில் சென்றவுடன் வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த “இருள் கூடு” எனும் பெயர்ப்பலகை தென்பட்டது. மனதிலிருந்த ஆசையின் விளையவாய் தைரியம் எழ வாசற்கதவின் மீது கை வைத்தாள்.
அவளுடைய தயக்கத்தில் தன்னைத் தேடி வந்திருக்கும் வாடிக்கையாளர் என்பதை அறிந்துகொண்டான். பள்ளி மாணவனைப் போன்று வீடு பற்றி ஒப்பிக்கத் துவங்கினான்.
“வணக்கம் மேடம். நீங்க தேடி வந்திருப்பது இந்த வீடு தான். இது பேய் வீடு இல்ல. இது ஒரு விளையாட்டு மாதிரி. உள்ள போறதுக்கு முன்னாடி இத வாசிச்சிருங்க மேடம்”
ஜெனொபெலிற்கு மேடம் எனும் சொல் அந்நியமாகப் பட்டது. அவன் கொடுத்த லேமினேட் செய்யப்பட்ட தாள் அழுக்கேறியிருந்தது. ஒரே தாளை பல ஆண்டுகளாக வாடிக்கையாளரிடம் கொடுத்து வருவதன் சாயல் அதில் தெரிந்தது. எழுத்தின் வடிவமும் பழைய புத்தகங்களில் காணப்படும் எழுத்துகளை ஒத்திருந்தது. வாசிக்க ஆரம்பித்தாள்.
“1. இது பேய் வீடு அல்ல. இருள் சூழ்ந்திருக்கும் புதிர் பாதை நிரம்பிய அறை.
2. பேய்கள் போன்று அச்சுறுத்தும் உருவங்களோ பொம்மைகளோ உள்ளே கிடையாது.
3. இந்த இல்லத்திற்கு மொத்தம் ஆறு வாசல்கள். இத்தாளின் பின்புறம் வீட்டின் கீழ்ப்பகுதிக்கான வரைபடம் இருக்கிறது. ஒரு வாசலின் வழி உள்ளே அனுப்பப்படுவீர்கள். முன்னரே  எவ்வாசல் வழி வெளியே வர வேண்டும் என நீங்கள் சொல்ல வேண்டும். ஒருக்கால் சொன்ன வழியிலேயே திரும்பிவிட்டால் உங்கள் தொகை திருப்பித் தரப்படும். வரவில்லையெனில் தொகை திருப்பித்தரமாட்டாது.
4. இருள் அச்சுறுத்தினாலோ, வழி தெரியவில்லை என பயந்தலோ என் பெயரை சத்தமாக உச்சரியுங்கள். நான் சொற்களின் வழியே உங்களை வெளிக்கொண்டுவருவேன்.
என் பெயர் கவான் டஃபே.”
வீடும் அதன் விதிமுறைகளையும் போல அவனுடைய பெயரும் விநோதமாக இருந்தது. கைவசமிருந்த அட்டையைத் திருப்பி வீட்டின் வரைபடத்தை பார்த்துக்கொண்டாள். சில வாசல்களின் வழி நுழையும் இடத்திலிருந்து மனப்பாடமாகியிருந்தது. நுழைவுக் கட்டணமான நாற்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு நுழைந்தாள். வாசற்கதவு தாழிடப்பட்டது.
***
ப்ரிக்ஸ் கற்களில் இருக்கும் கரடுமுரடான தன்மையைக் கால்களில் உணர்ந்தாள். காரை பூசப்படாத தரையாக இருக்கும் என்று யூகித்தாள். பக்கவாட்டுச் சுவர்களும் அதே தன்மையைக் கொண்டிருந்தன. சுவரைத் தீண்டிய வண்ணம் மனப்பாடம் செய்த பாதையை யோசித்துப் பார்த்தாள். அந்தத் தாளில் வீட்டின் அளவு குறிப்பிடப்படவில்லை. எங்கெல்லாம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையை இழந்திருந்தாள். கால்களை மெதுவாக நகர்த்தி ஒவ்வோர் அடியாக முன்னகர்ந்தாள். சுற்றியிருந்த இருள் அவளை சுதந்திரமாக்கியது. இருட்டினுள் சிரிப்பதை உணர்ந்தாள். சில தருணங்களில் இருள் அவளை பயமுறுத்தியது. பயமுறுத்திய இடங்களில் எல்லாம் நின்று இருளை சுவாசித்தாள். ஒவ்வொரு நிமிடத்திலும் எடுத்து வைக்கப்போகும் ஓரடியில் இருக்கும் எதிர்பார்ப்பை பன்மடங்காக்கினாள். சில இடங்கள் கிளைபிரிந்தன. சில இடங்களில் வேறு அறையிலிருந்து வந்த பாதைகள் இணைந்தன. ஓன்றரை ஆள் செல்லக்கூடிய அளவிலான பாதை வளர்ந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்தாள். கணித்துவிட்டு வந்த பாதைகள் நினைவிலிருந்து கழன்று ஓடத் துவங்கின. சுவரோடு சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அம்மாவின் நினைவுகள் எழுந்தன. சில சுவிசேஷங்கள் அம்மாவின் குரலில் நினைவிலாடின. கைகள் உதறத் துவங்கின. பயத்தில் இதழ்களும் துடித்தன. வேறு வழி இனி இல்லை என்பதறிந்து வாசித்த அவன் பெயரை நினைவு கூர்ந்தாள்.
“காவான் டஃபே… கவான் டஃபே….”
சிறிய இடைவெளியில் இருளும் மௌனமும் அவளுடைய செவிகளை நிறைத்தன.
“அச்சம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் இரு சுவர்களிலும் உள்ளங்கைகளை அழுத்தி வையுங்கள்”
அவள் வைப்பதற்கும் அவன் தொடர்வதற்கும் நேரம் கச்சிதமாய் அமைந்தது.
“இரு பக்கவாட்டு சுவர்களும் ஒரே கற்களால் ஆனது அல்ல. எப்பக்கம் சுவரில் கடினத்தன்மை கூடுதலாக இருக்கிறதோ அங்கு இடக்கையையும் பிறிதொரு சுவரில் வலக்கையையும் வையுங்கள்”
பொம்மலாட்டப் பதுமையைப் போன்று ஜெனொபெல் அவன் குரலிற்கு இணங்கிக் கொண்டிருந்தாள்.
“இப்போது சுவற்றைத் தீண்டிய வண்ணம் நடந்து வாருங்கள். நுழைந்த வாசலை அடைவீர்கள்”
அவன் எதிலிருந்தோ வாசிக்கிறான் என யூகித்தாள். வெளியே வரும்போது அழுததன் சாயல் கண்களில் தெரிந்தன. கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவனிடமிருந்து பார்வையை விலக்கிக் கிளம்பத் தயாரானாள்.
“உங்களை ரொம்ப பயமுறுத்திருந்தா மன்னிச்சிருங்க”
தலையாட்டலில் இல்லை எனக் கூறினாள்.
“உங்க அனுபவத்த விருப்பமிருந்தா இந்த நோட்புக்ல எழுதிட்டு போங்களேன்”
சம்மதித்து நோட்டு புத்தகத்தைத் திறந்தாள். கடைசியாக வந்து சென்றவர் ஐந்து நாட்களுக்கு முன் என்றிருந்தது. எழுதியிருந்தவற்றில் பாதிக்கும் மேல் பயத்தின் விவரணையாக பதிவாகியிருந்தது. பலராலும் விடையை அடைய முடியவில்லை. அவனும் சொல்பவனாக இல்லை. தன் கையிலிருந்த பேனாவில் தன்னுடைய அனுபவத்தைப் பெயரிட்டு எழுத முனைந்தாள். பெயரை மட்டும் எழுதிவிட்டு நகர்ந்து சென்றாள்.
சைக்கிளை மிதிக்காமல் தெருமுனை வரை தள்ளிக்கொண்டு சென்றாள். நோட்டுப் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பிப் பார்க்கும் சப்தம் மெலிதாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். கவான் டஃபேவின் முகத்தில் சிரிப்பு தழும்பியது.
***
வாரத்திற்கு மூன்று முறை வந்து சென்றாள். நாளுக்கு நாள் கவான் டஃபேவிற்கு உரையாட துணை கிடைத்தது. ஜெனொபெல் ஒவ்வொரு முறையும் தோற்று அவனுடைய குரலில் நுழைந்த வாசலிலேயே வெளியேறுவதை வாடிக்கையாக்கிக் கொண்டாள். வேறு வாசல்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆசை மட்டும் தேக்கமாக இருந்தது. சில நாட்களில், தொடர்ந்து தோற்பது வேதனையாக இருப்பின் நானே உனக்கு வேறு வாசல்களைக் காட்டுகிறேன் என பரிதாபத்துடன் கவான் டஃபே கூறினான். ஜெனொபெல் புன்னகையுடன் மறுத்துவிட்டாள்.
வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை வீட்டிற்குள் செல்லும் போதும் எவ்வேலையும் செய்யாமல் வீட்டின் கதவையே கவான் டஃபே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான். உள்ளிருந்து குரல் வந்தவுடன் மனப்பாடம் செய்யப்பட்ட கிளியைப் போன்று வழி சொல்லத் தொடங்குவான். அவர்களுடைய குரலின் ஒலியே அவனுக்கான அடையாளம். அன்று ஜெனொபெல் சென்று வெகு நேரமாகியது. எப்போதும் கணக்கிட்டு வைத்திருந்த காலம் தாண்டியும் அவளுடைய குரல் எழாதது புன்னகையையும் சந்தேகத்தையயும் ஒருங்கே எழ வைத்தது. கதவை உன்னிப்பாக கவனித்தான். அதில் உரிந்திருந்த மரப்பட்டைகளும், உதிர்ந்திருந்த வண்ணங்களின் தடங்களும், குழவிகளின் கூடுகளும் என்றும் இல்லாதததுபோல் தெளிவாகத் தெரிந்தன. ஜெனொபெலின் குரல் வந்தது. முதன்முதலாக கேட்ட ஜெனொபெலின் குரலில் இருந்த பயம் இப்போது இல்லாதிருந்தது. இருளுக்கு நன்கு பழகியிருந்தாள். அக்குரலுக்காக காத்திருந்தவன் போல எப்போதும் சொல்வதைச் சொல்ல ஆரம்பித்தான்.
“அச்சம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் இரு சுவர்களிலும் உள்ளங்கைகளை அழுத்தி வையுங்கள். இரு பக்கவாட்டு சுவர்களும் ஒரே கற்களால் ஆனது அல்ல. எப்பக்கம் சுவரில் கடினத்தன்மை கூடுதலாக இருக்கிறதோ அங்கு இடக்கையையும் பிறிதொரு சுவரில் வலக்கையையும் வையுங்கள். இப்போது தீண்டிய வண்ணம் நடந்து வாருங்கள். நுழைந்த வாசலை அடைவீர்கள்”
வீட்டிற்குள் அவனுடைய குரலை நகல் செய்து கொண்டிருந்தன ஜெனொபெலின் உதடுகள். கவான் டஃபேவுடைய குரலில் புதிதாக தெரிந்த பயம் அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
ஒவ்வொரு முறையையும் போல் அன்றும் இருள் நிரம்பிய வீட்டிலிருந்து வெளிவரும் போது வெளிச்சத்தைக் கண்டு கண்கள் கூசின. கவான் டஃபேவின் சுருங்கிய கண்களைப் பார்த்தாள். களைப்புற்று இருந்தன. அனுமானம் செய்த பயம் முகத்திலும் எதிரொலித்தது. சிறிது நேரம் பேசிவிட்டு செல்லலாம் என வாசற்படியில் அமர்ந்துகொண்டாள். ஆட்கள் குறைவாக வருவது குறித்து விசாரித்தாள்.
மௌனம் நீடித்தது. சோகத்தை மெருகேற்றும் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாது என விசனப்பட்டாள். வீடு திரும்ப முடிவெடுத்தாள். அதற்குள் கவான் டஃபேவின் குரல் ஒலித்தது.
“ஆரம்பிச்ச நேரத்துல வந்துகிட்டுதான் இருந்தாங்க. அப்பறம் இங்க இருக்குற சுவாரஸ்யம் அவங்ககிட்ட கொறஞ்சி போயிருச்சு. முதல்ல குடும்பம் குடும்பமா வந்துட்டு போவாங்க. இப்ப உங்கள மாதிரி எங்கருந்தாவது, யார் சொல்லியாவது வந்தா தான் உண்டு!”
விளம்பரம் குறித்து ஜெனொபெல் யோசிக்கும் போது கவான் டஃபே பேச்சைத் தொடர்ந்தான்.
“வெளம்பரத்துல ஈடுபாடு வரல. இதோட சுவாரஸ்யம் குறையற வரைக்கும் தான் வருமானம். கொறஞ்சிருச்சுனா மக்கள் போயிடுவாங்க. ஆரம்பத்துல வர்ற வருமானத்த நம்பி கனவு கட்ட ஆரம்பிச்சிருவோம். அப்பறம் வியாபாரம் படுத்துரும். பட்டாலும் புத்தி போகல. அதனால வர்றவங்க மட்டும் வரட்டும்னு விட்டுட்டேன்”
ஒவ்வொரு சொல்லிலும் தன்னிடம் ஏதோ ஒன்றை கேட்க வரும் தொனியையும் சுயபகடியையும் ஜெனொபெலால் உணர முடிந்தது. அவர் வசமிருந்து கேள்விக்காக காத்திருந்தாள். அன்று அவளுடைய முகம் பிரகாசமடைந்திருந்தது. எப்போதும் விளையாட்டில் தோல்வியும் அன்றைக்கான முகமனுமாக செல்லும் ஜெனொபெல் அன்று ஆற அமர பேச வேண்டும் எனும் தீர்மானத்தில் இருந்தாள். அவனைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினாள். தங்கியிருக்கும் வீட்டைப் பற்றி அறிவதிலிருந்து உரையாடலை தொடங்க முற்பட்டாள்.
 “எனக்கு வீடு மேல தாம்மா”
கைகளால் சுட்டிக் கட்டினான். முப்பத்தி எட்டு வயதிற்கான சாயலை அவன் பெற்றிருக்கவில்லை. தசைகளில் மட்டுமே திருமணமாகாததன் சுகந்தம் இருப்பதை பார்க்க முடிந்தது. ஒவ்வொருமுறையும் அவனிடமிருந்து புதிதாக ஒன்றை கவனித்து வந்தாள். அன்று பேசலாம் என்று அமரும்போது கணித்த அனைத்தும் நினைவிற்குள் சென்று மறைந்தது. ஆர்வம் மேலெழ அவசரமாக தன் கேள்வியைக் கேட்டு முடித்தான் கவான் டஃபே.
“இன்னிக்கு எப்படி அவ்ளோ தூரம் போனீங்க ?”
வெகு நாட்களுக்கு பிறகு சப்தமாக சிரித்தாள். அவளுடைய சிரிப்பை, கேள்வி கொடுத்த சந்தேகத்துடன் ரசித்தான். பதில் சொல்லாமல் கிளம்புவதற்கு எழுந்து கொண்டாள்.  வாசற்கதவுவரை சிரித்தவாறு சென்றாள். மர்மவீடு வைத்திருப்பவனுக்கு அவிழ்க்கமுடியாத முடிச்சை கொடுத்த திருப்தி. பதில் அளிக்காமல் புன்னகையுடன் திரும்பி சென்றாள்.
***
ஜெனொபெல் வேறொரு வாசலின் வழி வெளியேறும் நாளும் சீக்கிரத்தில் வந்தது. கதவைத் திறக்க முடியாமல் திறந்து வெளி வந்தாள். பல நாள் போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றியை இருவரும் சிரிப்பில் கொண்டாடினர். கவான் டஃபேவின் கண்களில் மட்டும் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. அவளுடைய சிரிப்பை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கவான் டஃபே தேம்பித் தேம்பி அழத் துவங்கினான். ஜெனொபெலால் அவனது அழுகையை புரிந்துகொள்ளமுடியவில்லை. வேறு வாசல் வழி வருவதற்காகத் தானே போட்டி எனும் பெயரில் வீட்டை நிர்மாணித்திருக்கிறான். இதில் வாடிக்கையாளன் வெற்றியடைந்ததற்கு ஏன் தான் தோல்வியுற்றதாய் நினைக்கிறான் ? ஒருவேளை கொடுத்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்பதற்காகவா ? விளையாட்டுகளை வியாபாரமாக நடத்துபவனுக்கு தோல்வியுறுவதுதானே லாபம் ஈட்டும் செயல் ? புரியாமல் திகைத்து நின்றாள். ஏன் அழுகிறாய் என்று கனிவுடன் விசாரித்தாள். பதிலேதும் கிடைக்கவில்லை. தேம்பித் தேம்பி அழுதவன் அவள் கொடுத்த பணத்தையும் நுழைவுச் சீட்டிற்கான புத்தகத்தையும் வாசலிலேயே விட்டுவிட்டு புதிரான இல்லத்திற்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டான். அவனுடைய அழுகை வீட்டுக்குள்ளிருந்து எதிரொலித்தது ஜெனொபெலின் காதுகளுக்கும் எட்டியது. சமாதானம் சொல்லத் தெரியாமல் வீடு திரும்பினாள்.
அடுத்த இரண்டு வாரங்களிலும் அவள் அங்கு செல்லவில்லை. இரவுகளில் கவான் டஃபேவின் அழுகைச் சத்தம் தனக்குள் கேட்ட வண்ணம் இருப்பதாய் உணர்ந்தாள். சில நேரம் பல்லியின் சப்தம் கூட அவனது அழுகையை நினைவூட்டியது. அதற்கான காரணம் அறிய வேண்டும் எனும் எண்ணம் மீண்டும் அவ்விடம் செல்ல உந்தித் தள்ளியது. இரண்டு வாரங்கள் கழிந்த பின் மறுபடியும் அத்தெரு நோக்கி நடந்தாள். முதல்முறை அங்கு வந்தபோது பார்த்த அதே தோரணையில் மாதாந்திர பத்திரிக்கை, கால்மாட்டில் ரசீது புத்தகம் சகிதமாக அமர்ந்திருந்தான். ஜெனொபெலை பார்த்தவுடன் பல நாட்கள் கழித்து பார்ப்பதன் பூரிப்பு சிரிப்பில் மின்னியது. சந்தேகத்துடன் வந்த ஜெனொபெலிற்கும் அந்த சிரிப்பு சந்தோஷத்தை அளித்தது. கைவசம் கொண்டு வந்திருந்த நாற்பது ரூபாயை நீட்டினாள்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஜெனொபெல்”
தன் பெயரை நினைவு வைத்திருந்ததும் ஜெனொபெலிற்கு மகிழ்ச்சியை அளித்தது. பணத்தைத் திரும்ப வைத்துக்கொண்டு உரையாட சம்மதித்தாள். முன்னிருந்த படிகளில் கால்களை மடக்கி அமர்ந்துகொண்டாள்.
“அன்னிக்கு நடந்ததுக்கு மன்னிச்சிருங்க. என்னிக்காவது ஒருநாள் யாராவது இத ஜெயிப்பாங்கன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். ஆனா அந்த நாள எப்படி எதிர்கொள்றதுனு எனக்கு தெரியல. கற்பனை செய்யவும் முடியல. நடந்தவொடன அழுகை மட்டுந்தான் வந்தது. உங்களுக்கு வாழ்த்துகள் சொல்ல கூட மறந்துட்டேன். வாழ்த்துகள் ஜெனொபெல்”
அவள் பதிலளித்த நன்றியில் இவ்வளவுதானா எனும் கேள்வியும் அடங்கியிருப்பதை இனங்கண்டுகொண்டான். ஆனாலும் அவன் காத்த மௌனம் அவளுக்கும் ஆச்சர்யமாய் இருந்தது. அன்று நிகழ்ந்ததை மறந்தவளாய் சுவராஸ்யத் த்வனியை குரலில் வரவழைத்துக்கொண்டு கேள்வி கேட்டாள்.
“நாம ரெண்டு பேரும் உள்ள போவோம். வேற வழில என்னைய கூட்டிட்டு போறீங்களா ?”
அவனுக்கும் அந்த பயணம் எதிர்பார்ப்பிற்கு அப்பாலிருப்பதாக உணர்ந்து சம்மதித்தான். இருவரும் நுழைந்தனர். தெருவில் ஆங்காங்கே சிலர் அதை வேடிக்கைப் பார்த்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தவில்லை. கவான் டஃபேவின் தோள்களில் கைவத்த வண்ணம் பின்சென்று கொண்டிருந்தாள். கவான் டஃபேவின் இரண்டு கைகளும் சுவற்றை தடவியபடி சென்றுகொண்டிருந்தன. மௌனமாக சென்று கொண்டிருந்த பயணத்தை சுறுசுறுப்பாக்க அவருடைய பெயர் காரணத்தைக் கேட்டாள். அப்போதும் கவான் டஃபேவிடம் மௌனம் நிலவியது. மௌனத்தில் ஜெனொபெலின் கேள்வி தந்த எதிரொலியும் வீட்டிற்குள் முடிந்திருந்தது.
“என் கொள்ளுத் தாத்தாவோட பேரு கார்ல் கூப்பர். அவரு ஒரு ஆங்கிலோ-இந்தியன். கல்யாணம் பண்ணிக்க பொண்ணு கெடைக்கல. வம்சத்துல தொடர்ந்து இருந்து வந்த வழக்கத்துல அவரால காதல் கல்யாணமும் செஞ்சிக்க முடியல. இந்து மதம் அவர கல்யாணம் பண்ணா தள்ளி வச்சிரும். திருச்சபையும் அதையே வேற தொனில சொல்லிச்சு. தேசாந்திரியா கெடந்துடறேனு ஊர் ஊரா திரிய ஆரம்பிச்சாரு. படிப்பறிவும் அதிகம் கெடையாது. க்ளார்க்கு வேலைக்கு போற அளவு இங்க்லீஷ் தெரியும். சர்ச் வழியாவே படிச்சதுனால இந்தியர்கள விட சரளமா பேசறதும் எழுதறதும் அவருக்கு போதுமானதா இருந்துச்சு. ஆனாலும் வேலைக்கு போகல. அப்ப வேலை கெடைக்கறதோ குதிரை கொம்பு. ஊர விட்டு கெளம்புன பெறகு திண்டிவனம் பக்கத்துல ஒரு பாதிரியார பாக்குறாரு. மொதல்ல மயங்குனது அந்த பாதிரியாரோட கொரல்ல தான்.”
கவான் டஃபேவின் குரல் எதிரொலிப்பதன் வழி கதைகளை அடுக்கடுக்கான குரல்களில் கேட்டு வந்தாள்.
“கொள்ளுத்தாத்தாவுக்கு நல்லா தெரிஞ்ச ஒரே புக் பைபிள் தான். ஊர் ஊரா சுத்தும் போதும் கைலயே வச்சிருந்திருக்காரு.”
இருவரும் நகராமல் ஒரே இடத்தில் கதைத்துக் கொண்டிருப்பதன் பிரக்ஞையும் உடலில் சில்லிட்டு நினைவுகளானது.
“திண்டிவனத்துல கெடச்ச திண்ணைல தூக்கம், குடுக்கற எடத்துல சாப்பாடுனு இருந்திருக்காரு. பாதிரியார் ஒருத்தர் இங்க சின்ன பசங்களுக்கு கிறித்துவம் சொல்லிதராருன்னு கேள்விப்பட்டு போய் பாத்திருக்காரு. அப்பதான் முன்ன சொன்ன குரல் மயக்கம் ஆரம்பம் ஆகுது. கொழந்தைங்களுக்கு எப்படி கிறித்துவத்த சொல்ல முடியும் ? சொன்னாலும் வெறும் கதை தான பதியும்னு சந்தேகத்துல கேக்க போயிருக்காரு. அவரு கேட்டாரா இல்லையானு தெரியல. ஆனா அந்த ஊர்லயே கொஞ்ச நாள் தங்கியிருந்திருக்காரு. அந்த பாதிரியாரோட பேச கொள்ளு தாத்தனுக்கு சில நாள் வாய்ப்பு கெடச்சிருக்கு. மொத சந்திப்புலயே மத போதகர்களா மாற கொழந்தைங்களுக்கு பயிற்சி தர்றீங்களானு நேரடியா கேட்டுட்டாரு. பாதிரியார் பொறுமையா அதுக்கும் பதில் சொல்லியிருக்காரு.”
கவான் டஃபேவின் குரலில் இளமை ததும்பியது. நினைவுகள் அவனுடைய உண்மையான குரலை அடையாளம் காட்டின. வயதிற்கேற்ற கம்பீரம் சொற்களில் குடியேறியது.
“ஒவ்வொரு கிறித்துவனும் மதபோதகனா இருக்கணும். இது கிறித்துவத்துக்கு மட்டும் இல்ல. ஒவ்வொரு மதத்துக்கும் பொருந்தும். ஒவ்வொரு மதமும் தனக்குள்ள சகலத்தையும் அடக்கி வச்சிருக்கு. தர்மம் –அதர்மம், நன்மை-தீமை. இந்த பைனரி விஷயங்கள்லருந்து நல்லத பிச்சி எடுக்க வேண்டியது ஒரு மதபோதகரோட கடமை. மனுஷனுக்கு கெடச்ச பெரிய வரம் அவனோட புலப்படாத ஆன்மா. உடல் மட்டும் தான் மனுஷனுக்கு தெரியும். அதனால புலன் மயக்கத்துக்கு எளிமையா ஆளாகறான். திருப்தி கிடைக்கல. காரணம் ஆன்மா அத ஏத்துக்கல. ஆன்மா ஏத்துக்கற வழிய காமிக்க வேண்டியது தான் மதபோதகரோட கடமை.
ஆனா அத ஏன் கொழந்தைங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும்னு தர்க்கம் பண்ணிருக்காரு, கேட்ருக்காரு. அதுக்கும் பாதிரி விளக்கியிருக்காரு.”
இது வீட்டின் குரலாகவே இருக்குமோ எனும் சந்தேகமும் ஜெனொபெலுக்கு எழுந்தது.
“அறிவியல்ல ரெசொனன்ஸ்னு ஒரு தத்துவம் இருக்கு. அது ஒரு மோன நிலை. அது எப்ப கிடைக்கும்னா பொருளுக்குள்ள இருக்குற அதிர்வும் வெளில இருக்குற அதிர்வும் ஒன்றிணையற நேரத்துலதான் இந்த நிலை வரும்னு சொல்றாங்க. மனிதனோட மகத்தான கொடை இந்த இயற்கை. அந்த இயற்கையோட ஒன்றிணைந்து வாழ வேண்டிய நிர்பந்தம் நமக்கு இருக்கு. இயற்கை கிட்ட இல்லாத சுயநலம் மனிதர்கள் கிட்ட ஒட்டிகிட்டு கெடக்கு. அதனால இயற்கையையே அழித்து வாழக் கூட நாம தயங்க மாட்டோம். இயற்கையோட இணைந்து வாழ்றதே நமக்கான நிர்பந்தம். அது முடியுமா ? அதுக்கு நாமளும் இயற்கைல ஒண்ணுனு உணரணும். வன்முறைய உடல் தான் உற்பத்தி செய்து. இந்த எண்ணம் நம்மை எதையும் இயற்கையா பார்க்க வைக்காது. எல்லாத்துக்கும் மேல மனுஷந்தான்னு எண்ண வைக்கும். இத உடைக்க மதம் தான் ஒரே துணை. ஒவ்வொருத்தர்குள்ளயும் இருக்குற மோசஸையும். நோவாவையும் ஏன் கர்த்தரையுமே வெளிக்கொண்டு வரணும். அப்படி கொண்டு வந்தா மானுடத்தையே அது காப்பாத்தும். இயற்கையோட ஒண்ணு சேக்கும்.”
கவான் டஃபேவின் நாக்கு வறண்டது. குரலில் வறட்சி தென்பட்டது. தொடர் பேச்சில் தாகம் எடுத்தது. எடுத்த பெருமூச்சுகளும் எதிரொலித்தன. பேருரையின் முடிவில் மௌனம் பன்மடங்காகியிருந்தது. தொண்டையை செறுமிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.
“அந்த பாதிரினால கொள்ளுத்தாத்தா ரொம்ப ஈர்க்கப்பட்டாரு. அவர் கூடயே தங்கிட்டாரு. ஆனா ரொம்ப நாள் இருக்க முடியல. கால்கள் ஓடணும்னு உந்தித் தள்ளுச்சு. பாதிரியாரோ நீ கல்யாணம் பண்ணி மக்களுக்கு சேவை செய்னு உத்தரவிட்டாரு. வாழ்க்கைக்கான அர்த்தத்தையே கொடுத்த ஆளோட பேச்ச தட்டாம அவர் தலைமைலயே கல்யாணமும் செஞ்சிகிட்டாரு. அப்ப சபை நடூலயே தன் குடும்பத்துல வர்ற மொத ஆண் குழந்தைக்கு உங்க பேரையே வைக்கறேன்னு சொல்லிட்டாரு. ஆனா தொரதிருஷ்டம் ஆண்கொழந்தையே பொறக்கல. கிட்டதட்ட அம்பது வருஷம் கழிச்சு நான் பொறந்தேன். வழி வழியா சொன்ன கர்ண பரம்பரை கதையா நானும் இந்தப் பேரை சுமந்துகிட்டு திரியறேன்”
தாகத்தின் நினைவுகள் மேலோங்கியதால் ஜெனொபெலை அழைத்துக்கொண்டு வேறு ஒரு வாசலுக்கு வந்தான். பாதைகள் குளிர்ந்திருந்தன. கதவு திறக்க கடினமாயிருந்தது. வெகு நாட்களுக்கு பூட்டப்பட்டு இருந்ததால் முதல்முறை ஜெனொபெல் பட்ட கஷ்டத்தை கவான் டஃபேவாலும் உணர முடிந்தது. சிரமங்களைக் கடந்து வெளியில் வந்தவுடன் இருவருக்கும் கண்கள் கூசின. இம்முறை தெருவாசிகள் முன்பைக் காட்டிலும் விநோதமாகப் பார்த்தனர். அதைக் கண்டுகொள்ளாமல் இருவரும் பேச்சில் சுவாரஸ்யமாயினர். வீட்டை சுத்தம் செய்வதன் பொருட்டு சில யோசனைகளை ஜெனொபெல் தெரிவித்தாள். கவான் டஃபேவிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. மீண்டும் விதிமுறை காகிதத்தை எடுத்து வெளிவந்த வழியை அதன் வழி காண முற்பட்டாள். அதன் கீழ் எழுதியிருந்த சில நுணுக்கமான வரிகளை இம்முறை கூர்ந்து கவனித்தாள்.
சிலுவைக்கு நான் கனம்
எனக்கு சிலுவை கனம்
எனக்குள் சிலுவை ஒரு கைப்பாவை
சிலுவைக்குள் நானொரு பறவை
வீட்டை கவான் டஃபேவின் சிலுவையாக கற்பனை செய்தாள். பேசிமுடித்து இருவரும் விடைபெறும்போதே பேசிய நேரம் முழுக்க கவான் டஃபேவின் கண்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன என்பதை அறிந்துகொண்டாள். வறண்ட கண்ணிர்த் தடங்கள் தாடை வரை நீண்டிருந்தது. கவான் டஃபேவிற்கு இது வெறும் வியாபாரத்திற்கான வீடு அல்ல என்பதை உணரத் துவங்கியிருந்தாள். மீண்டும் காகிதத்தில் இருந்த வரிகள் நினைவிலாடின.
***
ஜெனொபெலும் கவான் டஃபேவும் அடிக்கடி வீட்டிற்குள் உரையாடிக் கொண்டிருப்பது தெருவாசிகளுக்கு இடையூறானது. அந்த வீடு பற்றிய பழைய கதைகள் மீண்டும் பேசுபொருளாயின. தெருத் தெருவாக கதைகள் நீண்டன. அண்ணன் சிறிலிற்கு அக்கதைகளும், தங்கையின் போக்கும் குறித்த செவிவழிச் செய்திகள் பேரதிர்ச்சியைக் கொடுத்தன.
கவான் டஃபே ஒரு பள்ளி ஆசிரியன். ஓவியங்களுக்கும் கைவினைப் பொருட்களுக்கும் வகுப்பெடுக்கும் செய்நேர்த்தி மிக்கவன். பள்ளியில் பணி சேர்ந்த புதிதில் வேலைகள் அதிகமாக கொடுக்கப்படவில்லை. ஆனால் சமச்சீர் கல்வி முறை பிரகடனப்படுத்தப்பட்டபின் அவனுக்கான வேலைகளும் தொழில் முனைவுகளும் அதிகமாயின. உடன் பணிபுரியும் ஆசிரியர்களின் பேச்சிற்கிணங்க மாணவர்களுக்கான ப்ராஜெக்ட் வொர்க் செய்து தருவதை  மாலை நேரப் பணியாக்கிக் கொண்டான். உலகின் பிரபல கட்டிடங்கள், சில தனிப்பட்ட வரைபடங்கள், ரெக்கார்ட் நோட்டில் வரைவது போன்றவற்றை சில்லறைகளுக்காக செய்ய ஆரம்பித்தான். அக்கம் பக்கத்துத் தெருவாசிகளும் கொடுத்துவிட்டு சென்றனர். கிடைக்கும் சொற்ப வரும்படியும் பிடித்தமான வேலை செய்வதால் திருப்தியாக அமைந்தது.
தொடர்ந்து கைவினைப் பொருட்கள் செய்யும்போது தனக்கென சில பொம்மைகளைச் செய்வதையும் வழக்கமாக்கியிருந்தான். அவனுக்கென கொடுக்கப்பட்டிருக்கும் மேஜையினுள் சாக் பீசில் செய்த பொம்மைகள், வரைபடங்கள் என நிறைய சேகரித்து வைத்திருந்தான். சில நேரம் களிமண்ணில் செய்த பொம்மைகளும் காணக்கிடைக்கும்.
ஆசிரியர் வேலையில் இருக்கும் போதே தான் தங்கியிருந்த வீட்டை மறுநிர்மாணம் செய்ய ஆரம்பித்திருந்தான். மொட்டை மாடியில் சின்ன அறை ஏற்படுத்திக் கொண்டான். கீழிருந்த சாமான்கள் அனைத்தையும் மேல் பகுதியில் வைத்துக்கொண்டான். கீழே காலியாக இருக்கும் வீட்டை யார் விசாரித்தாலும் தான் இங்கு வணிகம் செய்யப்போகிறேன் என்று கூறத் தொடங்கினான். கீழ் வீட்டை சொந்தமாகவே நிர்மாணிக்க ஆரம்பித்தான். ஜன்னல்கள் இருந்த இடங்களை பெயர்த்து எடுத்து சில இடங்களில் காரைகளாகவும், சில இடங்களில் கதவுகளாகவும் மாற்றி வைத்தான். தெருவாசிகளுக்கு ஆச்சர்யமானது. புற வாசல்களை மாற்றும் வரை மட்டுமே தெருவாசிகளால் பார்க்க முடிந்தது. அதற்குப் பின் இரவிலேயே பணி செய்யத் துவங்கினான். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்த பின் அந்த இடத்தை இப்போதிருக்கும் மர்ம வீடாக பிரகடனப்படுத்தினான். கைப்பட நகல் எடுத்திருந்த துருப்புச் சீட்டை ஒவ்வொரு வீடாக விநியோகித்தான். செய்தித்தாள்களின் வழியேவும் அக்கம் பக்கத்து தெருவாசிகளுக்கும் சென்றடைய வைத்தான். ஆரம்பத்தில் கூட்டம் கூடின. பின் அந்த வியாபாரம் சோபை பெறாததால் மக்கள் அவனை கைவிட்டனர். வீட்டின் மீதிருந்த புதிர்த்தன்மை உழைப்பை கோருவதால் மக்களிடம் கசப்பு தட்டியது.
ஜெனொபெல் எப்படியோ அவனைக் கண்டறிந்து தொடர்ந்து செல்கிறாள் என்பதை அறிந்து சிறில் வேதனையுற்றான். அவளுடைய நண்பர்களிடம் சமீப காலத்திய நடவடிக்கைகளை விசாரித்தான். பேய் வீடுகள் சார்ந்து அவளுக்கு எழும்பியிருந்த மோகம் மேலும் ஆச்சர்யப்படுத்தியது. இறுதி ஆண்டிலிருந்த படிப்பு நின்றுவிடுமோ எனும் பயமும் உருவாகியிருந்தது. அதனுடன் வேதனையும் கலந்திருந்தது. அவளுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றான். அத்தெருவிலிருக்கும் இஸ்திரி கடை வழியாகவும், மளிகைக் கடைகள் வழியாகவும் தங்கையைப் பற்றி தெரிந்துகொள்ள முற்பட்டான்.
தெருவில் இருந்த ஒரு வீட்டில் ஜியோ டவர் அமைந்திருந்தது. மொட்டை மாடியின் மேலிருந்து துவங்கும் டவர் அது. தெருவிலிருப்போர் பார்க்காத நேரத்தில் டவர் இருந்த வீட்டில் எகிறி குதித்தான். மொட்டை மாடிக்கு சென்றான். அங்கிருந்து மாய வீட்டின் முதல் தளம் தெளிவாகத் தெரிந்தது. மொட்டை மாடியின் பாதி அளவே அறையாக இருந்தது. அறைக்கதவும் திறந்திருந்தது. சுவற்றில் சாய்ந்த வண்ணம் ஜெனொபெல் அமர்ந்திருந்தாள். இடையில் நான்கைந்து வீடுகள் இருப்பினும் சிறிலால் மாயவீட்டையும் தங்கையையும் நன்கு அடையாளம் காணமுடிந்தது. கண்களைச் சுருக்கிப் பார்க்கும்போது மடியில் தலைசாய்த்து ஆடவன் ஒருவன் படுத்துக்கிடக்கிறான் என்பதையும் அனுமானிக்க முடிந்தது. விரக்தியில் இறங்கி வீடு நோக்கி ஓட ஆரம்பித்தான்.
ஜெனொபெல் வீடு திரும்பியவுடன் கோபத்தின் வேகத்தில் அனைத்து தகவல்களையும், தான் கண்டவற்றையும் இணைத்துக் கூறினான். ஜெனொபெல் தலைகுனிந்து நின்றாள். வெகு நேரம் சிறிலின் திட்டும், ஜெனொபெலின் மௌனமும் நீடித்தது. தொடர்ந்த திட்டை இடைமறித்து ஜெனொபெலும் உரக்கக் குரலெடுத்து பதலளித்தாள்.
“ஊர் தப்பா பேசறதுனால உனக்கு தலைகுனிவா இருக்குன்னா கல்யாணம் கூட பண்ணி வை. ஆனா நீயா ஒண்ண நெனச்சிகிட்டு அது வழியா என்னைப் பாக்காத. அது தான் அசிங்கமா இருக்கு”
முதன்முதலாக வெளிப்பட்ட ஜெனொபெலின் கோபம் அச்சமூட்டியது. அப்போதே தற்செயல் நிகழ்வென கான்ஸ்ட்பில் சிவராமனுடன் பழக்கமானது. தங்கையின் விஷயத்தை முழுதாகச் சொல்லி கவான் டஃபேவை மிரட்டச் சொல்லியிருந்தான். அம்மாவின் நினைவுகளை மீட்டும் வண்ணம் அனுதாபம் காட்டி தங்கையை ஏமாற்ற நினைப்பதாக புகார் செய்தான். காரணங்கள் ஆதாரங்களற்று இருப்பதால் மிரட்டிப் பார்ப்போம் என்று சிவராமனும் ஆறுதல் சொல்லியிருந்தார்.
 சொல்லிய தினத்திலிருந்து மழை வலுத்திருந்தது. மறு நாள் வெள்ளம் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது. வீட்டின் உத்தரத்திலிருந்து நீர் வடிய துவங்கியிருந்தது. சில பானைகளை வைத்து சொட்டும் நீரை ஜெனொபெல் பிடிக்க முயன்றாலும் நீர் நின்றபாடில்லை. மழையின் வலுவும் குறைந்தபாடில்லை. சிவராமனைப் பார்க்க முடியாமல் போனது. ஜெனொபெல் கவான் டஃபேவின் நிலை நினைத்து வருத்தம் கொண்டாள். வீட்டில் தேங்கத் துவங்கியிருந்த நீரின் அளவு கவான் டஃபேவின் நினைவை அதிகப்படுத்தியது. நீருக்கிடையில் மாட்டிக் கொண்ட வீடாக கவான் டஃபேவை அவ்வப்போது கற்பனை செய்துகொண்டாள். வெள்ளத்தின் போது ஏற்பட்ட மின்சார வெட்டுகள் உருவாக்கிய இருட்டு ஜெனொபெலை அச்சுறுத்தியது. கவான் டஃபேவுடன் தான் மேற்கொண்ட ஒவ்வொரு உரையாடலையும் அசைபோட்ட வண்ணம் பயத்திலிருந்து மீள முயற்சித்தாள். அண்ணனிடம் வெள்ளத்தில் அவனின் நிலைமையைப் பார்த்து வரச் சொன்னாள். அவளையும் போகவிடாமல் தானும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
***
கவான் டஃபேவின் வீட்டை முதல்முறையாக பார்த்தாள். ஒவ்வொரு பொருளின் மீதும் பயன்படுத்தாததன் சாயலாக தூசி படிந்திருந்தது. சில கண்ணாடிப் படங்கள் மட்டும் துலக்கமாய் மாசற்று காணப்பட்டன. தொலைக்காட்சியோ, வானொலிப் பெட்டியோ, செய்தித்தாள்களுக்கான சுவடோ அங்கு தென்படவில்லை. மூன்று அறை கொண்ட வீடு. ஒரு அறை முழுக்க ஓவியம் இருந்ததற்கான கேன்வாஸ்கள் கிடந்தன. அவற்றின் மையப்பகுதி கிழிக்கப்பட்டு இருந்தது. குப்பைக்கூளமென அவை வைக்கப்பட்டிருந்தன. அறை சந்தேகத்தையே கொடுத்தது. வாசலில் காய வைத்தத் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த கவான் டஃபேவிடம் தன் சந்தேகம் குறித்து விசாரித்தாள். ஒவ்வொரு துணியாக மடித்து வைக்கும் வரை வீட்டை வேடிக்கைப் பார்க்கட்டும் என அமைதியாக காத்திருந்தான். ஜெனொபெலும் கேள்வியைக் கடந்து மற்ற அறைகளை பார்க்க நகர்ந்து சென்றாள். சிறிய அறையில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் புதுமையான விஷயங்களைப் பார்க்க முடிந்தது.
துணியை மடித்து வைத்துவிட்டு வாசலின் நிலையருகில் அமர்ந்துகொண்டான். மேகங்களில் கருமை ஏறியிருந்தன. அதை வெறித்தவாரு அமர்ந்திருந்த கவான் டஃபேவிற்கு அவளுடைய குரல் பின்பக்கத்தினின்று கேட்டது. வீட்டிற்குள் அவளுடைய குரலில் இனிமை கூடியிருந்ததாக உணர்ந்தான். அறையின் சுத்தத்தை விசாரித்தாள்.
“நான் உன் மடில படுத்துக்கட்டுமா ?”
அவனுடைய பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேகங்களிலிருந்து கண்களை அவனால் எடுக்க முடியவில்லை. கேட்டறிந்த கதைகளை அசை போடவைத்தன மழைமேகம். அவளுடைய கண்களும் வாசல் வழி வானத்தை நோக்கின. மேற்கொண்டு கவான் டஃபே பேச்சைத் தொடர்ந்தான்.
“பெரிய மழை வர்றதுக்கான நம்பிக்கைய கொடுக்கும். ஆனா ஏமாத்திடும்.”
கருமை போர்த்தியிருந்த மழைமேகத்தை சுட்டிக்காட்டினான். 
“பாட்டி, அம்மானு எல்லாரும் இப்படியான மழை மேகத்த பாத்திருக்காங்க.”
அவனுடைய கண்களிலிருந்தும் நீர் கசிந்தது. அவள் மேற்கொண்டு கேட்கவே பெருவிருப்பம் கொண்டாள்.
“நீ பாத்ததெல்லாம் பாட்டி வரைஞ்சது. பாட்டியும் காதல் கல்யாணம் தான். இந்தியர கல்யாணம் செஞ்சிகிட்டாங்க. அவர் ஒரு ஓவியர். ஆனா பாட்டிய ஓவியச்சி ஆக்கணும்னு மட்டும் நெனச்சாரு. பாட்டிக்குள்ள இந்திய கலாச்சாரம் அதிகமா இருந்திச்சு. சமைக்கணும்,. அவர பாத்துக்கணும்னு நாள கடத்துனாங்க. ஆனா பாட்டிய வரைய வச்சாரு. தெனமும் பயிற்சி குடுத்தாரு. சில நேரம் அவர்கிட்ட வரைய வேண்டி வந்தவங்களும் கோவிச்சிக்க ஆரம்பிச்சாங்க. அவரு கண்டுக்கல. பாட்டியோட கண்கள் அவருக்கு அதிகமா பிடிச்சது. வாழ்நாள்ல பலமுறை அவர் வரைஞ்ச ஒரே ஓவியம் பாட்டியோட கண்ணுதான். இதே கருமை”
அவளுடைய கண்கள் மீண்டும் வானத்தைப் பார்த்துத் திரும்பின.
“பாட்டிக்கு வம்சம் வளரணும்னு ஒரே ஆசை. அரசாங்கத்துல ஆங்கிலோ இந்தியர்களுக்கு தனிச்சட்டம் போட்டாங்க. தனி குழுமங்கள் அங்கங்க ஆரம்பிச்சாங்க. அதைக் கூர்மையா கவனிச்ச பாட்டிக்கு தர்மசங்கடமான நிலைமை தான் வந்துச்சு. தாய் வழி வம்சத்தினருக்கு ஆங்கிலோ இந்திய உரிமையும் சலுகையும் மறுக்கப்பட்டுச்சு. இத தாத்தா சாதாரணமா எடுத்துகிட்டாரு. அந்த நாள் வரைக்கும் சாதாரணமா போய்கிட்டிருந்த காதல் வாழ்க்கைல சண்டை முளைக்க ஆரம்பிச்சிச்சு. சில்லறை விஷயங்கள தூக்கி எறியச் சொன்னாரு. பாட்டியால முடியல. ரெண்டு பேராலயும் நேர்க்கோடு கூட போட முடியாத அளவு உளைச்சல். ஆறுமாத கர்ப்பிணியா இருக்கறப்ப தாத்தா தற்கொலை செஞ்சிகிட்டாரு. ஏன்னு பாட்டியால கூட கணிக்க முடியல. அப்ப தாத்தா கடைசியா வரைஞ்ச கண்ல மட்டும் கண்ணீர் இருந்ததா அம்மா சொல்லி கேட்ருக்கேன். அது தான் அவருக்குள்ள இருந்த பாட்டியோட கண்ணா இருந்திருக்கும்”
மேகங்கள் கலையத் துவங்கின. மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.
“ரெசொனன்ஸ்”
அதன் மீதிருந்த பார்வையின் பிடிப்பு நகர்ந்தது. சொல்லிக் கொண்டிருக்கும் கதையின் மீதான பிடிப்பை கவான் டஃபே இழக்கத் துவங்கினான். அம்மாவைப் பற்றி விசாரித்த ஜெனொபெலிற்கு சுரத்தற்று பதில் சொல்லி முடித்தான்.
“அம்மா வாத்தியாரானாங்க. சின்னதா கடை வக்க முடிஞ்சது. அதுல என்ன வளக்கவும் முடிஞ்சது. நானும் அம்மா வழில வாத்தியாராயிட்டேன். ஆனா அந்த வேலை பிடிக்கல”
ஏன் என்று எதிர்பார்த்திருந்த கேள்வி ஜெனொபெலிடமிருந்து வரவில்லை. அவளது கண்கள் கலைந்து செல்லும் மேகங்களை வெறித்தவாறிருந்தன. கண்ணீரும் காரணமற்று கசிய ஆரம்பித்தது.
“அங்க இருக்குற பைபிள பாரு. அது மட்டும் எப்பவும் சுத்தமா இருக்கும்”
கண்கள் கேட்க வேண்டிய கேள்விகளை முக அசைவுகள் பிரதிபலித்தன. புருவங்களுக்கு கீழ் கண்ணீரை அக்கண்கள் அடக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். மடியிலிருந்து எழ முற்பட்டபோது மீண்டும் தலையைத் தொடையில் ஆழ்த்தினாள். கவான் டஃபே தலையில் ஏறியிருந்த கனம் குறையத் தொடங்கியது. ஜெனொபெலின் கண்கள் பைபிளின் பக்கம் திரும்பின. அவனுடைய முக பாவங்கள் சுருக்கம் கொண்டன.
“இத சொல்றது தான் ரெண்டு தலைமுறையா எங்கள காப்பாத்திச்சுனு கத கதயா சொன்னாங்க. என்னால நம்ப முடியல. மதத்த தாண்டி ஒண்ணு இருக்குனா அது இருள்ல தான் இருக்கும். ஒவ்வொரு ரகசியத்துக்கும் இருள் தேவைப்படுது. சின்ன வெளிச்சம் பட்டாலும் அந்த ரகசியம் பூதாகாராமா தெரியும். எனக்குள்ள இருக்குற ரகசியத்த பைபிள் மூலமா தெரிஞ்சிக்க முடியல. பாட்டி மாதிரி வரைஞ்சு பாத்தேன். ஒரு கோடு கூட வரல. எழுத வார்த்தயே கெடைக்கல. ஆனா நினைவுகள் கனமா இருந்துச்சு. வெளிய கொட்ட வழி தெரியல. ஒரு நாள் தோமையர் மலைல இருக்குற ஃபாதர் கிட்ட எல்லாத்தையும் சொன்னேன். மறுபடியும் பைபிளுக்கு வழி காட்டுனாரு. சில நாள் தான் ஒத்து வந்துச்சு. வீட்டுக்குள்ளயே முடங்குனேன். பகல் முழுக்க தூங்குனேன். இரவெல்லாம் முழிச்சிகிட்டு இருந்தேன். சின்னச் சின்ன நினைவுகள் அலைக்கழிச்சது. இந்தப் புதிர உருவாக்க ஆரம்பிச்சேன். எனக்காக மட்டுமே உருவாக்க ஆரம்பிச்சேன். தொலைஞ்சு போக. கற்பனையான வட்டத்துக்குள்ள தொலைஞ்சு போக”
சில நேரம் மௌனம் நீடித்தது. வாசலுக்கு வெளியே முதல் தூறல் விழ ஆரம்பித்தது. மழையின் அளவு சிறிது சிறிதாக வலுத்தது.
“வரலாறோட நிழல் ரொம்ப கருமையா இருக்கு. அது சொந்த வரலாறா இருந்தாலும் சரி. நான் அப்பாவ பாத்ததில்ல. பொறந்ததுமே போயிட்டாராம். இறந்ததா தான் சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா அம்மா சாகறதுக்கு முன்னாடி நாள் இரவுல பைபிள கைவசம் வச்சிகிட்டு கதை சொன்னாங்க. குறிப்பா மகதலீனாவோட கத. அம்மாவோட கண்ல கண்ணீர் வந்துச்சு.”
குரல் குறைந்து முணுமுணுப்பாக மாறியது.
“தாத்தா வரைஞ்ச ஓவியத்தோட நிழல்.”
வெகு நேரம் மௌனம் நீடித்தது. மடியிலிருந்து எழுந்துகொண்டு ஜெனொபெலைக் கீழ்தளத்திற்கு அழைத்து சென்றான். உள்ளே சென்று தாளிட்டுக்கொண்டான். நடு இல்லத்திற்கு கூட்டிச் சென்று சத்தமாக அழத் தொடங்கினான். வெகு நேரம் காத்திருந்த ஓலம் என்பதை முதல் ஒலியிலேயே இனங்கண்டுகொண்டாள். அவன் மனம் பிறழ்ந்துவிட்டதோ எனும் எண்ணம் துளிர்விட்டது.
“யார் ஜெனொபெல் நீ ? ஏன் உன் கண்ணு தாத்தா வரைஞ்ச ஓவியத்தோட சாயல்ல இருக்கு ? அந்த கண்ணுல ஒரு இழப்பு தெரியும். பரிதவிப்பு தெரியும். காதல் தெரியும். கத சொல்ற கண் அது. உன்னோடதும் அதே தான். கொஞ்சம் கூட பிசகில்ல. நானே அத வரையலாம்னு பலதடவ முயற்சி செஞ்சிருக்கேன். ஒருதடவ கூட வராது. ஆனா எனக்குள்ளயே அந்த கண் இருக்கு. என்னைய பாத்துகிட்டே இருக்கு.”
இடைவிடாமல் சொற்களைக் கொட்டினான்.
“நீ நிக்கிறியே அதுக்கு கீழ தான் அந்த ஓவியம் இருக்கு ஜெனொபெல். பாக்க முடியுதா ? எனக்கு கீழ தான் அந்த உண்மையான கண்களோட கல்லரை இருக்கு. ஒவ்வொரு வாசல்லயும் அதோட வழிலயும் ஓவியமும் பைபிளும் அங்கியும் ஆடையும் கல்லறைகளும் நெறைஞ்சு கெடக்கு. இத சும்மகுற ஒருத்தனால எப்படி வெளில இயல்பா இருக்க முடியும் ஜெனொபெல் ?”
இருளில் தடவித் தடவி ஜெனொபெலின் அருகில் வந்தான். அவளுடைய கைகள் தரையைத் தீண்டிக் கொண்டிருந்தன. கீழே இருப்பதாக சொல்லப்பட்ட ஓவியத்தை தேடும் தன்மையும் ஆர்வமும் கைவிரல்களில் தெரிந்தன. அவளுடைய கன்னங்களில் வழிந்த கண்ணீரையும் உணரமுடிந்தது. ஈரப்பதத்துடன் கன்னச்சதுப்பில் முத்தமிட்டான். அவளது கைகள் தரையிலிருந்து எழும்பி அவனைத் தன்பக்கமாக இழுத்துக்கொண்டன. இருள் அவர்களுக்கான வெளிச்சமானது. வெகு நேர அரவணைப்பின் இடையில் கவான் டஃபேவின் மெல்லிய குரலில் அவளுடைய செவி மடல்களில் கிசுகிசுத்தான்.
“ஏன் என்னைத் தேடித் தேடி வந்த ?”
“இங்க தான் அம்மாவோட கண்கள பாக்க முடிஞ்சது”
வந்த வழியே திரும்பிச் செல்ல முயன்றாள். கவான் டஃபேவின் கூர்மையான செவிகள் கால் பாத ஓசையை அளவிட்டன.
“ஏன் வந்த வழிலயே போற ? உனக்குத்தான் இங்க இருக்குற எல்லா ரகசியமும் தெரியுமே ?”
“ஒரு ரகசியத்த எப்பவும் ரெண்டாவது தடவ கேக்க முடியாது”
ஒவ்வொரு வாசலின் வழியாகவும் ஜெனொபெல் ஒரே முறை தான் சென்றிருக்கிறாள் என்பதை நினைவுபடுத்தி ஆச்சர்யம் அடைந்தான். அவள் முழுதாக தன்னிலிருந்து விலகிச் செல்கிறாளோ எனும் அச்சம் மேலிட்டது. ஜெனொபெலுக்கு அறைக்குள் முதன்முதலாக வந்தது போன்று குளிர்மை நிரம்பியிருந்தது. கால் பாதங்களின் வழியே கதைகள் குளிரில் பேசப்பட்டுக்கொண்டே வந்தன. வாசற்கதவை திறந்தபின்னும் மழைமேக இருள் அவளுக்கான ரகசியங்களை தயாரித்துக்கொண்டிருந்தன.
வாழ்வில் தனக்கென பேசிய ஜெனொபெல் பற்றி ஏதும் தனக்கு தெரியாது என்பதை உணர்ந்தான். சுயநலப் பேச்சினை முழுதுணரும் போது வாசல் வந்தடைந்திருந்தான். ஜெனொபெல் தெருவைத் தாண்டி சென்றிருந்தாள். மழை வலுத்திருந்தது. மீண்டும் வீட்டிற்குள் சென்று தன்னை ஒளித்துக்கொண்டான். வெறுமையை அதிகமாக உணர்ந்தான். முதன்முறையாக இருள் கவான் டஃபேவைப் பயமுறுத்தியது.
***
~3~
சிறில் காவல் நிலையத்திற்கு கிளம்பியபோது தெருவில் வெயில் கிளை பரப்பத் தொடங்கியிருந்தது. ஜெனொபெலும் துரிதமாக கவான் டஃபேவின் இல்லம் நோக்கி புறப்பட்டாள். கால்கள் வேகமெடுத்தன. உரையாடிய வார்த்தைகளின் நினைவு உந்தித்தள்ளின. வழியில் தண்ணீர் தேங்கியிருந்ததன் அடையாளத்தை சுவர்கள் சுமந்திருந்தன.
கவான் டஃபேவின் வீட்டு வாசலில் தண்ணீர் மிச்சமாய் தேங்கியிருந்தது. வாசலில் நாற்காலியும் நுழைவுச் சீட்டிற்கான புத்தகமும் இல்லாமல் போனது மேலும் அச்சமுற வைத்தது. கீழிருக்கும் வீட்டினுள் நுழையாமல் மொட்டை மாடிக்கு விரைந்தாள். மூச்சிரைத்தவாறே கதவுகளைத் திறந்தாள். துருவேறிய தாளைத் திறக்க சற்று கடினமாயிருந்தது. இரும்பின் ஓசை வீட்டுனுள்ளிருந்தும் எதிரொலித்தது. அதன் ஓசை கீழிருக்கும் வீட்டின் நினைவுகளை மேலும் கொணர்ந்தன. கண்ணீரைக் கண்கள் கட்டுப்படுத்தி சேர்த்து வைத்துக்கொண்டன. கதவைத் திறந்தவுடன் அறையில் பூசியிருந்த வெறுமை பயமுறுத்தியது. ஒரு பொருள் இருந்ததன் சாயல் கூட இன்றி காலியாகக் கிடந்தது.  சந்தேகம் மேலிட்டது. கீழ் வீட்டிற்கு ஓடினாள்.
அறைக்கதவை திறந்தவுடன் இனங்காணமுடியாத நாற்றம் முகத்தில் அறைந்தது. இருளின் அடர்த்தி மட்டும் குன்றாமல் இருந்தது. தொற்றிக்கொண்டிருந்த அச்சத்தின் தன்மை குறையவில்லை. ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் போதும் கால்களின் கீழிருந்த துகள் போன்ற ஸ்பரிசம் சந்தேகத்தைப் பன்மடங்காக்கின. கைகளை இடவலமாக நீட்டும்போது ஆச்சர்யம் அதிகரித்தது. ஒவ்வொருமுறையும் ஸ்பரிசித்த சுவர் அவ்விடத்தில் இல்லை. துகள்களின் மீது சுவற்றைத் தேடி பக்கவாட்டில் நகர்ந்தாள். பத்திருபது அடிகள் கடந்தே சுவற்றை அடைய முடிந்தது. அறையின் விஸ்தீரணத்தை அறிந்துகொண்டாள். கைகளை இரு பக்கம் நீட்டியபடி அறைக்குள் ஓட முடிந்தது. இடர்பாடுகள் இல்லை. இருளின் அடர்த்தி குறைவதை உணர்ந்தாள். அறையில் படர்ந்திருக்கும் துகளின் தன்மையை அறிய முடியாமல் திகைத்தாள். மீண்டும் வெளியே சென்றுவிடலாம் எனும் எண்ணம் வாசல் கதவு பக்கம் தட்டுத் தடுமாறி நகர வைத்தது. வாசற்கதவின் கைப்பிடியை பிடிக்கும் இடத்தில் சில காகிதங்கள் தட்டுப்பட்டன.  அவற்றையும் எடுத்துக்கொண்டு வெளிச்சத்திற்கு வந்தாள்.
எடுத்திருந்தது மூடப்பட்டிருந்த பெரிய தபாலுக்கான கவர். அதைத் திறந்தவுடன் இரண்டு தாள்கள் தட்டுப்பட்டன. ஒன்று மடித்தும் மற்றொன்று மடிக்கப்படாமலும் வைக்கப்பட்டிருந்தன. மடிந்திருந்த காகிதத்தை வெளியில் எடுத்தாள். சற்று கடினமான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
அன்புள்ள ஜெனொபெலுக்கு,
எங்கிட்ட சில ரகசியம் இருந்துச்சு. அத சொல்ல ஆள் தேடிகிட்டு இருந்தேன். குறைந்தபட்சம் அவங்க என் நிழல் மாதிரியாவது இருக்கணும்னு நினைச்சேன். ஆனா நான் வேற ஒருத்தரோட நிழல்னு உணர வச்சிட்ட. அதனாலயே உங்கிட்ட ரகசியங்கள சொன்னேன். சொல்லப்பட்டாத ரகசியம் எல்லார மாதிரியே நம்மகிட்டயும் இருக்குனு நம்புறேன் ஜெனொபெல்.
அன்புடன்,
கவான் டஃபே.
 கடைசி வரி மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. புருவங்களை சுருக்கியவாறு சூரியனைப் பார்த்தாள். இளங்காலை வெயில் கண்களை கூசச் செய்யவில்லை. மீண்டும் சிறிய கடிதத்தின் கடைசி வரியை வாசிக்கும் போது பாதங்களின் மீது அப்பியிருந்த கருமையை நோட்டம் விட்டாள். துணுக்குற்று இரண்டு கால்களையும் அணிந்திருந்த பாவாடையிலிருந்து நீட்டிப் பார்த்தாள். வெளியில் தெரிந்து கொண்டிருந்த கணுக்கால் வரை கருமை ஏரியிருந்தது. தீண்டிப்பார்க்கையில் துகள்களாக கருமை கைகளில் ஒட்டிக் கொண்டது. விரல்களால் எடுத்து உரசுகையில் காற்றுடன் பறந்து சென்றன. மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்த்தாள். எடுப்பதும், விரல்களால் தேய்ப்பதும், காற்றில் பறக்க விடுவதும் தொடர் செய்கைகளாக சில நொடிகள் நீண்டன. பதற்றம் கொண்டவளாக மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். தடைகளற்ற வெறும் அறையாய் இருந்ததன் மறுபக்கம் சென்றாள். சுவற்றைத் தடவிய வண்ணம் ஒவ்வொரு கதவாக சென்றடைந்தாள். ஒவ்வொன்றாக திறக்கையில் சூரியனின் கதிர்கள் வீட்டின் மையத்திற்கு வர ஆரம்பித்தன. ஆறு வாசல்களையும் திறந்தவுடன் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரின் மடை உடைந்தது. சுவற்றில் சாய்ந்த வண்ணம் தரையில் அமர்ந்தாள். அறை முழுக்க எரிக்கப்பட்டதன் மிச்சமாய் காகிதத்தின் துகள்கள் பரவியிருந்தன. கேன்வாசின் உடைபட்ட மர விளிம்புகளும் கருகிப் போயிருந்தன. சில மரப் பொம்மைகளின் கருகிய வடிவங்களும் மிச்சமாக இருந்தன. கவான் டஃபேவின் ஆடைகளும் தீய்ந்திருந்தன. கதவுகளின் வழியே கசிந்த காற்றில் ஈர்ப்பதம் ஏறியிருந்தது. வெள்ளம் விட்டுச் சென்ற ஈரப்பதம் கண்ணீரைக் கடந்து சிந்திக்க வைத்தது. இவ்வளவு வெள்ளமும் கவான் டஃபேவின் நெருப்பை அணைக்கவில்லையா எனும் கேள்வி உதிக்கும் போது கைவசம் மடங்காமல் இருந்த காகிதத்தின் நினைவெழுந்தது. அதை வெளியில் எடுத்தாள். கடிதத்தில் இருந்த சில வரிகளுக்கான அர்த்தத்தைக் கண்டாள். அறைக்குள் சன்னமாக வெள்ளநீர் நுழைந்து கொண்டிருந்தது.
***
சிறில் எஸ் ஒன் காவல் நிலையத்திற்கு சென்றான். வாசலிலிருந்த கான்ஸடபிளிடம் தான் சிவராமனைக் காண வந்திருப்பதாக தெரிவித்தான். சிவராமனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கும் வரமாட்டார் என்று கிடைத்த பதில் சிறிலை முகம் சுருங்க வைத்தது. தொடர்ந்து வெள்ளத்தினூடே வேலைப் பார்த்ததில் ஆரம்பித்திருந்த காய்ச்சல் அதிகமானதால் வர இயலவில்லை என்பதை விரிவாகக் கூறினார். ஆனாலும் சிறில் சமாதானம் ஆகவில்லை என்பதால் தொடர்ந்து பேச ஆசைப்பட்டார். சிறில் வந்ததன் நோக்கத்தை விசாரித்தறிந்தார். முதலில் தயங்கிய சிறில் பின் தங்கைக்கு நிகழ்ந்த அனைத்தையும் சிவராமனிடம் சொன்னது போல் விரிவாகக் கூறினான். கேட்டுக்கொண்டிருந்த கான்ஸ்டபிளின் முகத்தில் சிந்திப்பதன் சாயல் தெரிந்தது. பேசிக்கொண்டிருந்த சிறிலை இடைமறித்தார். தன்னுடன் வருமாறு அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குள் சென்றார். மேஜையின் இழுப்பறையை திறந்து அதிலிருந்து சில அச்சடிக்கப்பட்டத் தாள்களை எடுத்தார். ஒவ்வொன்றிலும் முகங்கள் அச்சாகியிருந்தன. அம்முகத்தின் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து ஒரு தாளை சிறிலிடம் நீட்டினார்.
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
பெயர் : கவான் டஃபே
வயது : 38
நிறம் : மாநிறம் (மெலிந்த தேகம்)
உயரம் : 160-170 செ.மீ
எடை : 60-65 கி
தங்கியிருந்த இடம் :  செயிண்ட் தாமஸ் மவுண்ட் அடிவாரத்தில்
காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் அனைத்தும் கிட்டதட்ட ஒரே சாயலில் இருப்பதாய் உணர்ந்தான். மேலும் காணாமல் போன தேதி என்று நான்கு மாதத்திற்கு முந்தைய நாளொன்று தோராயமாக கொடுக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த முகத்தையும் அன்று மொட்டை மாடியிலிருந்து வேவு பார்த்தபோது கண்ட முகத்தையும் ஒப்பிட நினைத்தான். மாதங்கள் குழப்பத்தில் ஆழ்த்தின. ஆனாலும் நினைவிற்குள் வர மறுத்தது. தன் தங்கையிடம் விசாரித்துவிட்டு வருவதாகக் கூறி தாளின் நகலைக் கேட்டு வாங்கிக் கொண்டான். வீடு அடையும் வரை அவ்வப்போது புகைப்படத்தைப் பார்த்து மனதில் கவான் டஃபே முகத்தை நிறுத்திக்கொள்ள பிரயத்தனம் செய்தான்.
வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. தட்டிப் பார்த்தான். உட்புறத்திலிருந்து பதிலேதும் வரவில்லை. ஒருவேளை ஜெனொபெல் பின்பக்கமாக வேலையில் இருக்கக்கூடும் என காத்திருந்தான். இடையில் மீண்டும் கவான் டஃபேவின் வீட்டிற்கு சென்றிருப்பாளோ எனும் சந்தேகம் எழுந்து மறைந்தது. மறுபடியும் சற்று ஓங்கி தட்டினான். இம்முறை கதவு திறந்தது.
“பாத்ரூம் போயிருந்தேன். அங்கருந்து கத்துனா கேக்காது வேற. அதுக்குள்ள அவசரம்”
மீண்டும் சமையலறை நோக்கி நகர்ந்தாள். முன்னறையில் இருந்த சிலுவையின் அடியில் புதிதாக தாளொன்றிப்பதைப் பார்த்தான். அடுக்கிலிருந்து துருத்திக் கொண்டிருந்தது. எடுத்துப் பார்க்கையில் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அனிச்சை செயலென உதடுகள் புன்முறுவலிட்டன.
“இது நிச்சயம் அம்மாவின் கண்கள் தான்”
காகிதம் குறித்து சற்று சப்தமெழுப்பி சமையலறையில் இருந்த ஜெனொபெலிடம் விசாரித்தான். அவள் பதில் சொல்லவில்லை. அவனும் அதை பிரேம் போட்டு வைத்துக்கொள்ளலாம் எனப் பாராட்டியவாறு அடுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான். இருவரும் சீக்கிரத்தில் கவான் டஃபே எனும் சொல்லை மறந்து போயினர்.

தொகுப்பு : காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு
யாவரும் பதிப்பகம்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக