அரசனைக் கொல்லும் அற்ப மனிதர்கள்


வேளாண் துறை மாணவரான அதியமான கார்த்திக் பயணங்களில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். ஆப்ரிக்க மண்ணின் வழியே அவர் மேற்கொண்ட பயணங்கள் சாகச அனுபவங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அதைக்க் கடிதத்தின் வடிவில் வாசகர்களுக்கு நிறைவான அனுபவமாக கடத்துகிறார்.
நூல் முழுக்க விரவிக் கிடக்கும் அவரது பயணங்கள் கொள்ளையர்கள், திருடர்கள், விலைமாதர்கள், நகரங்களால் புறக்கணிக்கப்பட்ட மக்களும் அவர்தம் இனங்களும், பூர்வகுடிகள், மலைவாழ்மக்கள் முதலிய பல்வேறு மனிதர்களையும் அவர்கள்தம் வாழ்க்கையையும் உள்ளடக்கியிருக்கிறது. அம்மக்களின் அறிமுகம் அவர்களின் வரலாற்றையும், அவர்தம் நாடோடிக் கதைகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன. அனைத்துக் அனுபவங்களிலும் அந்தந்த தேசங்களின் அரசியலும் கலந்திருக்கிறது.
மலைகளையும் காடுகளையும் அதன் அழகையும் வர்ணிக்கும் ஆசிரியர் அதன் வழியே நிகழும் வணிகத்தையும் விரிவாக பேசுகிறார். அதற்கு உதாரணமாக கென்யா நாட்டில் விளைவிக்கப்படும் மிரா எனும் செடியைப் பற்றிய கடிதம் உலகயமாக்கல் எங்ஙணம் எளிய மனிதர்களை சுரண்டுகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. மிரா எனும் தாவரத்தின் அடிப்பகுதி போதை வஸ்துவாக ஐரோப்பியர்களும் அரேபியர்களும் பயன்படுத்துகின்றனர். செடியிலிருந்து எடுக்கப்பட்டதிலிருந்து இதன் போதைத் தன்மை சிறிது சிறிதாக குறையத் தொடங்குகிறது. அதனால் செடியிலிருந்து பிடுங்கப்பட்டவுடனேயே அதை ஏற்றுமதி செய்வதற்காக, அவசரகதியில் ஏற்றி செல்ல விற்பனையாளர்கள் விரைகிறார்கள். அவர்களின் வேகத்தில் நிறைய சாலை விபத்துகளும் நிகழ்கின்றன. இந்த செயல்கள் அனைத்துமே அரசிற்கு புறம்பாக நிகழ்கிறது. எனினும் அரசு அதன் விற்பனையை நம்பியே இருக்கிறது. அதனாலேயே பட்டினியால் அதிகம் வாடும் கென்யாவில் இரண்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் மிரா பயிரிடப்படுகிறது. இந்த முரண்கொண்ட அமைப்பு முறையில் ஊழல் புரையோடிய விஷயமாகிறது.
ஆப்ரிக்காவின் ஒவ்வொரு தேசத்தின் வாயிலாக சொல்லப்படும் இது போன்ற கதைகளும் அதிகாரவர்க்கத்திற்கு சாதகமாக நிலவும் அரசின் போக்கை அடிகோடிட்டுக் கொண்டே செல்கிறது. எளிய மனிதர்களை சிதைக்க அதிகாரம் தயக்கம் காட்டுவதேயில்லை. பணமே பிரதானம் எனும் அமைப்புமுறை உழைப்பை சுரண்டுவதில் சுணக்கம் கொள்வதில்லை. ஆப்ரிக்க மண்ணில் உழைப்புடன் இயற்கையும் சேர்த்தே சுரண்டப்படுகிறது. இயற்கையே சந்தையின் பெரும் மூலதனமாகிறது. பசியும், வறுமையும், அச்சுறுத்தும் துப்பாக்கிகளும் இயற்கையுடன் வாழ்ந்த பழங்குடியினரை எளிமையாக அப்புறப்படுத்திவிடுகிறது.
ஆப்ரிக்க மண்ணையும் அதன் அரசியலையும் நூல் விரிவாக அலசி இருப்பினும் அதன் வழியே உலகளாவிய வணிகத்தையும் அதன் அறத்தையும் ஆசிரியர் கேள்விக்குட்படுத்துகிறார். நுகர்வு கலாச்சாரத்தின் பண்டங்களில் பாதிக்கும் மேலானவை எங்கோ ஒரு மூலையில் துரத்தப்படும் பழங்குடியினரின், பூர்வக்குடி மக்களின் வாழ்க்கை அடமானமாக வைக்கப்பட்டதன் அடையாளமாக இருக்கிறது. அதன் குற்றவுணர்ச்சியின்றி நகரும் நகரவாழ்க்கையை கேள்விகளாலும், சுரண்டப்படும் மக்களின் வாழ்க்கை விவரிப்புகளாலும் சீண்டிப் பார்க்கிறது. காலத்தால் கைவிடப்படும் நாட்டோடிகளின் இழப்பையும் நவீனத்தின் வணிகத்தையும் எதிரெதிர் முனையில் நிறுத்தி பெரும் தர்க்கத்தை, எதிர்காலத்தின் இயற்கை வளம் குறித்த சந்தேகத்தை இந்நூல் ஒவ்வொரு பக்கத்திலும் எழுப்பிய வண்ணம் கடந்து செல்கிறது. இயற்கை எனும் பேரரசனை வணிகத்தின் பெயரில் அற்ப மனிதர்கள் வீழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

- இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

மேற்குத் தொடர்ச்சி மலை இரண்டாம் பாகம் எடுக்கலாம் போல.....!

Post a comment

கருத்திடுக