பயணம் தரும் பாடம்


இடங்களைத் தேடிச் சென்று பார்ப்பது மட்டுமே பயணங்களன்று. மாறாக அந்த பயணங்கள் உருவாக்கும் உணர்வலைகளும், நினைவுகளின் பின்னோக்கிய பயணமும், பால்யத்தின் அனுபவங்களுடன் ஒன்று கலக்கும் அந்நிலத்தின் வரலாறும் பயணத்தின் அர்த்தமாகிறது. அவ்வகையான வெவ்வேறு பயணங்கள் குறித்த 23 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
தான் சென்று பார்த்த இடங்களின் வர்ணனைகளில் அவ்விடத்தை துல்லியமாக பதிவு செய்கிறார். நயாகாரா நீர்வீழ்ச்சியின் சாரலும், உதயகிரி கோட்டையின் வெம்மையும், மைசூர் அரண்மனையின் அழகியலும், குகைகளின் வாழ்க்கையும், பாஷோவின் நினைவிடமும் முதலிய பல்வேறு இடங்களை வர்ணிக்கிறார். ஆனால் வர்ணனைகளைக் கடந்து அதன் வழியே அவர் முன்வைக்கும் அனுபவங்களும் வரலாற்றுடன் பிணைந்திருக்கும் உணர்வுகளும் இடத்தைக் கடந்த ஒன்றை வாசகருக்கு அளிக்கிறது. அவை வாசிப்பில் கிடைக்கும் இன்பமன்று. மாறாக பயணம் எனும் சொல்லின் அர்த்தம் இடங்களால் மட்டுமே நிரம்பியதன்று என்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் உணரமுடிகிறது.
அனைத்து கட்டுரைகளும் ஒப்புமைகளால் நிறைந்திருக்கிறது. சில இடங்களில் நேரடியாக இடங்களை ஒப்பு நோக்குகிறார். சில இடங்களில் வாழ்க்கையை, வேறு சில இடங்களில் வரலாற்றை ஒப்புமை செய்கிறார். பாஷோவின் நினைவிடத்தைப் பற்றிய கட்டுரைகளில் பாஷோவிற்கு இணையாக கம்பர் இடம்பெறுகிறார். ஆனால் கைவிடப்பட்ட கம்பரின் நினைவிடமும், கொண்டாடப்படும் பாஷோவின் நினைவகமும் எஸ்.ராமகிருஷ்ணனின் அனுபவமாக கட்டுரையில் உருவெடுக்கிறது. பல இடங்களில் வரலாற்று தன்மையற்ற குணத்தினால் நம் சிறப்புகளை நாமே கைவிட்டுவிடுகிறோம் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
மைசூர் அரண்மனை பற்றிய கட்டுரை பயணம் குறித்த மாறுபட்ட பார்வையை அளிக்கிறது. முதலில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அனைத்து பயணங்களும் அதன் பிரம்மாண்டத்தை காலப்போக்கில் இழக்கத் துவங்குகிறது. வாழ்க்கை குறித்த புரிதலும், சக மனிதனின் மீதான கரிசனமும் நிலவியல் சார்ந்த பிரம்மாண்டத்தைக் கடந்த ஒன்றாக மாறிவிடுகிறது. அதை உணர்வதற்கு வரலாறும், பல்வேறு நிலப்பரப்புகளினூடாக பயணமும், அதன் வழியே சந்திக்கும் மனிதர்களும், அவர்களின் வாழ்க்கைப்பாடுகளும் உணர்வதற்கு துணை நிற்கின்றன.
சிறிய அளவிலான நூலாகினும் அதன் வழியே அவர் அறிமுகப்படுத்தும் இடங்களும், வரலாற்றுத் தகவல்கலும், அவ்வூர்களின் சிறப்பம்சங்களும், குறுகிய பார்வைகளின் வழியே நாம் அவதானிக்க மறந்த விஷயங்களின் எடுத்துரைப்புகளிலும் பயணம் குறித்து நாம் கொண்டிருக்கும் புரிதலை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. எங்கெங்கு பயணிக்க வேண்டும் என்பதைத் தாண்டி பயணத்தில் எப்படியான பார்வை வேண்டும் என்றும், ஒரு பயணத்திற்கு தேவையான முன்தயாரிப்புகளையும் இந்நூல் கோடிட்டு உணர்த்துகிறது. வரலாற்று புரிதலும் அறிதலும் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பயணம் தரும் பாடம் சொற்களுக்கு அப்பால் உணர்தலால் நிரம்பியிருக்கிறது.
  • இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக