அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்கும் கதைகள்

புலம்பெயர் வாழ்க்கை பல்வேறு தேசங்களில், பல்வேறு காலகட்டங்களில் நிலைபெற்று இருந்திருக்கிறது. அந்த வாழ்க்கை இலக்கிய தடங்களில் சிறிய அளவிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழத்துக் கதைகள், பா.சிங்காரத்தின் புனைவுகள் அவற்றுள் முதன்மையான சிலவாகும். ஆனால் பதிவு செய்யப்படவேண்டிய வாழ்க்கையை பலர் வாழ்ந்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று மலேசியா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை. அதைப் பதிவு செய்த முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர் கே.எஸ்.மணியம். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கதைகளை விஜயலட்சுமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

‘கே.எஸ். மணியம் சிறுகதைகள்’ நூலில் 1980-1990 காலகட்டங்களில் எழுதப்பட்ட ஆறு சிறுகதைகளும், அவரைப் பற்றியும் அவருடைய புனைவுலகு குறித்த சிறிய முன்னுரையும், பின் நேர்த்தியான அவரது நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆறு சிறுகதைகளும் இனிமையான வாழ்க்கையிலிருந்து தொடங்குகின்றன. பக்கங்களின் விசைக்கேற்ப கதைமாந்தர்கள் இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணர போராடுபவர்களாக உருவெடுக்கின்றனர்.
‘குடியேறிகள்’ எனும் சிறுகதையில் மலாய் மொழியில் நாயகனை குடியேறி என ஒருவன் திட்டுகிறான். அந்த சொல் எக்காரணத்தால் அவனிடமிருந்து வெளிப்பட்டது என தனக்குள் தேடுவதன் வழியே சிறிய அளவிலான வரலாறு கதையில் பேசப்படுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு குழந்தைப்பேறு கிடைக்கும் தம்பதியின் கதை ‘பலி’. அவர்களுக்கு இரண்டு கருச்சிதைவும் ஏற்படுகிறது. அதனால் மூன்றாவதாக பிறக்கும் குழந்தையை மிகக் கவனமாக, அதே நேரம் இக்குழந்தையையும் இழந்துவிடுவோமோ எனும் பயத்துடன் வளர்க்கின்றனர். குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சி அவர்களுக்கு ஆசுவாசத்தை அளிக்கிறது. பள்ளி செல்லத் துவங்கியவுடன் அரசாங்க பள்ளியில் பின்பற்றப்படும் இன அரசியல் மற்றும் குழந்தைகளிடையில் பள்ளியே எற்படுத்தும் பேதம் பிஞ்சு மனதில் தாழ்மையுணர்ச்சியை விதைக்கும் இடமாக உருவெடுக்கிறது. தனக்கு ஏற்பட்ட கருச்சிதைவையும் இன அரசியலால் தன் குழந்தைக்கு சிதைக்கப்படும் சுயமரியாதையையும் ஒன்றிணைக்கும் இடம் அடையாளங்கள் குறித்த அர்த்தங்களின் மீது பெரு வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. இதே போன்று மாயமான் எனும் சிறுகதை நகரமயமாக்களுடன் அடையாளச் சிதைவை ஒன்றிணைக்கிறது. இராமாயணத்தில் இடம்பெறும் மாரீசனின் சிறுகதையில் துவங்குகிறது. எளிய மக்களிடமிருந்து பிடுங்கப்படும் உழைப்பு பெரு நகரங்க்களின் வளர்ச்சியாக உருவெடுக்கிறது. பின் அந்த எளிய மனிதர்களுக்கு அந்நகரங்களில் கொடுக்கப்படவேண்டிய உரிமைக்கு பதில் நுகர்வோர் கலாச்சாரத்தை வைத்து ஈடுசெய்ய முயல்வது சுய உரிமையை அபகரிக்கும் நவீன கொள்ளையாக கதையில் உருக்கொள்கிறது.
ஒவ்வொரு கதையும் பன்முக கலாச்சாரத்தை வலியுறுத்துவதில் முதன்மையான எண்ணம் கொண்டிருக்கிறது. ஒற்றை கலாச்சாரம் நோக்கி நகருந்தோறும் உழைப்பு சுரண்டப்படும் எனும் அபாய ஒலி கதையின் வரிகளில் எதிரொலித்த வண்ணமிருக்கிறது. உழைப்பின் சுரண்டலை எதிர்க்க அயராது புதிய புதிய வடிவங்களை கையாளும்’க்ளிங் க்ளிங் பெண்’ சிறுகதையும், கஞ்ச முதலாளிகளுக்கு மத்தியில் உழைப்பை வாரி வழங்கும் ‘வசந்தாவின் கனவு’ சிறுகதையும் மதிப்பற்று போகும் உழைப்பின் உருவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.
உடைமை மனோபாவத்திலிருந்தே சுரண்டலுக்கான வித்து தோன்றுகிறது. உழைப்பை பொருட்படுத்தாது இனத்தை முன்வைக்கும் அரசியலை இக்கதைகள் விமர்சனம் செய்யவில்லை. மாறாக தன் உழைப்பிற்கான அங்கீகாரத்தையும், சுயமரியாதையையும் தேடும் மனிதர்களை பதிவு செய்கிறது. கதைகள் அவை நிகழும் நிலத்தால் மலேசியாவை மையங்கொண்டிருந்தாலும் உலகளாவிய சுரண்டல்களையும், அடையாளங்களை இழந்த எளிய மனிதர்களின் கனவுகளையும், நூதனமாக அதிகாரம் செலுத்தும் நகரமயமாக்களையும் படம்பிடித்து காட்டுகிறது. அவருடைய நேர்காணலில் இடம்பெறும் இவற்றை பற்றியான அரசியல் கதைகளில் கலைத்தன்மையடைவதை வாசிப்பில் நன்குணரமுடிகிறது

- இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக