எளிய மனிதர்களின் புன்னகை


பாவண்ணனை மொழிபெயர்ப்பாளராய் மட்டுமே வாசித்திருக்கிறேன். எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் நாவலை மொழிபெயர்த்தவர். அது என் மனதிற்கு நெருக்கமான நாவலும் கூட. அந்நாவலின் மொழிபெயர்ப்பு அதன் செறிவான நடையின் வழியே நன்குணரமுடியும். இதை விவரிப்பதன் நோக்கம் மொழிபெயர்ப்பாளர் தன் செறிவான நடையின் வழியே ரசனையை வாசகனிடம் கடத்துகிறார். அது படைப்பாளியாக அவர்களுக்குள் இருக்கக்கூடிய தனித்துவ பார்வையை வாசகனுக்கு அறிமுகப்படுத்தும். பருவம் நாவல் வாசிப்பு அவருடைய புனைவுலகத்தை அறிவதற்கான ஆசையைத் தூண்டியது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் எழுதி வருபவர். நாவல், சிறுதை, கவிதை, மொழிபெயர்ப்பு என பல்வேறு வடிவங்களை கையாண்டிருக்கிறார். அவர் எழுதிய நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து சிறந்தவற்றை எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் “பிரயாணம்” எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார். அந்நூல் பாவண்ணனின் புனைவுலகிற்கும், அவருடைய சிறுகதை உலகிற்குமான வாசலாக அமைகிறது.
யதார்த்தவாத கதைகள் கோலோச்சத் துவங்கிய காலத்தில் பிரச்சார த்வனி மேலோங்கியது. பின் வாழ்க்கையை ரசனை அடிப்படையில் பதிவு செய்யப்படும் கதைகள் தோன்றின. பின் வாழ்வின் அபத்தங்களை வெளிச்சமிடும் கதைகள் உருவாயின. பின் கதைகள் வாழ்வின் இருண்மைகளை அடையாளம் காட்டின. இவை தேய்வழக்காக மாறி பின் அவற்றில் மாறுபட்ட கதை சொல்லல் திறமைகளை காலத்திற்கேற்ப எழுத்தாளர்கள் கையாளத் துவங்கினர். யதார்த்தவாத கதைகளில் படைப்பாளர்களின் அனுபவமும் அவை கொடுக்கும் பார்வையும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைகிறது. அவ்வகையில் அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றோருக்கு நெருக்கமான புனைவு களத்தை பாவண்ணன் தேர்வு செய்கிறார். ஆனால் கதையை முடிக்கும் இடத்தில் பிற யதார்த்தவாத படைப்பாளிகளை விட தனித்துவமாக தன் படைப்பை முன்னிறுத்திவிடுகிறார்.
கதைக்கு தேர்வு செய்யப்படும் மனிதர்கள் அன்றாடங்களுக்கான பொருளாதாரத் தேவைகளை ஈடு செய்ய முடியாதவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அனைவரும் கனவு காண்பவர்களாக இருக்கின்றனர். அந்த கனவின் நிறைவேறாத் தன்மை அவர்களை அன்றாடங்களின் மீதான வெறுப்பு கொண்டவர்களாக மாற்றுகிறது. வாழ்க்கைப்பாட்டிற்காக இடம்பெயரும் மனிதர்களின் கனவுகளை எழுத்தில் பதிவு செய்கிறார். கதைகளில் இடம் பெறும் மனிதர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவே இடம்பெறுகின்றனர். அந்த மனம் அவர்களின் பணியிடத்தில் இருக்கும் மேலதிகாரர்களாலும், குடும்ப அமைப்பினாலும் உருவாக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு வண்டி எனும் சிறுகதை. குதிரை வண்டிக்காரன் ஒருவன் சவாரிக்காக காத்திருக்கிறான். வயோதிகன். அவனுக்கு அருகில் டாக்ஸிக்களில் பலர் சவாரிக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் அந்த வயோதிகனை ஏளனம் செய்கின்றனர். பெண்ணொருத்தி வியாபாரத்திற்கான பண்டங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமாக சென்று சவாரிக்கான விலையைக் கேட்கிறாள். அனைவரும் அதிக விலை கேட்க, குறைந்த விலையில் குதிரை வண்டிக்காரனிடமே பயணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள். குதிரையும் சரி, வண்டிக்காரனும் சரி சாப்பிட்டு பல நாட்கள் ஆனவர்களைப் போல தோற்றமளிக்கிறார்கள். சவாரியினிடையில் வண்டிக்காரன் தன் பால்ய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறான். அவனுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த சவாரிகளும், சௌகரியாமாகவும் செழிப்பாகவும் வளர்ந்த குதிரையைப் பற்றியும் நினைவின் சேகரிப்பிலிருந்து பகிர்கிறான். வறிய நிலைக்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் போக்குவரத்தின் புதிய வடிவங்களும் காரணமாகின்றன. கதையை பரிதாபத்துடன் கேட்கும் பெண்ணும் வேகமாக சென்று சேர்வதில் குறியாக இருக்கிறாள். சவாரி முடிந்து பணம் கிடைத்தவுடன் சாப்பாட்டை மட்டுமே யோசிக்கிறான். தான் சாப்பிட்டு குதிரைக்கும் வாங்கி செல்கிறான். ஆனால் குதிரையின் சடலமே கிடைக்கிறது. குதிரையாலும் கைவிடப்பட்டபவனாகிறான்.
இந்தக் கதையை குறிப்பிட்டு விவரிப்பதன் காரணம் இதில் இருக்கும் பல அம்சங்கள் அனைத்து கதைகளிலும் பிரதிபலிக்கின்றன. தேர்வு செய்யப்படும் மனிதர்கள். அவர்களை நசுக்கும் காலத்திற்கேற்ற வளர்ச்சி. முடிவடையா தர்க்கம் ஒன்றே மனதில் சூல் கொள்கிறது. காலத்திற்கேற்ப அவர்களும் தங்களது தொழிலை மாற்றியிருக்கலாம். ஆனால் மண்ணுடனும் விலங்குகளுடனும் இணக்கமாக வாழ்ந்த தலைமுறைக்கு மரபார்ந்த வாழ்க்கை பெரும் பொக்கிஷமாக மாறிவிடுகிறது. அடுத்து பணம் கிடைத்தவுடன் அவன் சாப்பிடும் இடத்தை விவரிக்கும் இடங்களில் அவனுடைய புன்னகையை பார்க்க முடிகிறது. பல கதைகளில் இந்த புன்னகை கதையை அழியாத நினைவாக மாற்றிவிடுகிறது. மேலும் மனிதர்கள் மனிதர்கள் அவர்கள் கொண்டிருக்கும் அபரிமிதமான நம்பிக்கைகளாலேயே கைவிடப்படுகிறார்கள் எனும் கேள்வி அனைத்து கதைகளிலும் எதிரொலிக்கிறது.
வியந்தோதும் இந்த புன்னகை வேறொரு கேள்விக்கும் உள்ளாக்கப்படுகிறது. யதார்த்தவாத கதைகளின் முடிவுகள் வாழ்வின் அபத்தத்தை வெளிச்சமிட்டு காட்டத் துவங்கிய காலத்தில் பாவண்ணனின் கதைகள் இனிமையான வாழ்க்கை தருணங்களுடன் முடிவடைவதில் முக்கியமடைகின்றன. பயணம் மேற்கொள்ளும் எண்ணம் கொண்ட குமாஸ்தா, சிறுவனின் ஏக்கத்திற்காக தன் சைக்கிளை பழக்கி பின் அவணையறியாமல் சிறுவனுக்கே கொடுத்துவிட்டு நீங்கும் இடங்களை எழுதும் வரிகள் சாதாரணக் கதைகளை தேவதைக் கதைகளின் தன்மைக்கு சென்றுவிடுகின்றன. காலத்தோடு பொருந்தக் கூடிய கதையாடலா என்பதில் சிக்கல் அடங்கியிருக்கிறது. நவீனத்தில் மரபம்சத்தை பொருத்தக் கூடிய இடமாகவே இதைப் பார்க்க முடிகிறது,
மேலும் கதைகளில் குதிரைகளும் பாண்டிச்சேரியில் இருந்த பிரஞ்சு காலனியின் வரலாற்று சுவடுகளும் காலத்தின் வாசம் மாறாமல் இடம்பெறுகின்றன. வரலாற்றாலும், அரசியலாலும், குடும்பத்தாலும் கைவிடப்பட்ட மனிதர்களின் குரலை பாவண்ணனின் கதைகள் பதிவு செய்கின்றன. அவர்களின் பயம் உடல் முழுக்க பரவியிருக்கிறது. அந்த பயத்திலிருந்து மீள அவர்கள் முயல்வதில்லை. மாறாக பயத்துடன் வாழ்ந்து புன்னகைக்கவே விரும்புகிறார்கள். அந்த புன்னகையை அனைத்து கதைகளிலும் இணங்காணமுடிகிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக