வாழ்வைக் குடைந்து வாழ்பவர்கள்


எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின்
'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள பதினோரு கதைகளை வாழ்வை அணுகுதல், வாழ்வை வாழுதல் என்ற முறைப்படி மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அளகபாரம், நிர்தாட்சண்யம், புனைசுருட்டு, கறை கதைகளை முதல் பகுதிகளாகவும், மண்டூகம், விருட்சம் கதைகளை இரண்டாம் பகுதிகளாகவும், கதவு எண் : 8, காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு, தாயம், அப்பாவின் ரகசியம், ஞமலி கதைகளை மூன்றாம் பகுதிகளாகவும் அட்டவணைப்படுத்தி பிரிக்கலாம்.

'உறவினர்களின் தொடர் அழுத்தத்தில் கூடல் வெறும் சடங்காகவே இருவருள்ளும் உருவெடுத்திருக்கும் தம்பதியினர் / இந்த மாடர்ன் லைப்பில் எல்லா சிக்கலுக்கும் விடை இருக்கு, ஆனால் அது எனக்கு அந்நியமா இருக்கு என்று சொல்லும் முதிய எழுத்தாளருக்கும் தற்கால வாசகனுக்கும் இடையேயான உரையாடல் / பண மதிப்பிழக்க காலத்தில் தங்கும் விடுதி தேடி அலையும் வேலைக்குச் செல்லும் பெண் / முன்னாள் குடிகாரரின் திருந்திய குடும்ப, அலுவலக வாழ்க்கை' என்று முதல் பகுதி கதைகள் அனைத்தும் நமது அன்றாடங்களின் அருகாமைகள் அல்லது அகங்கள் தான். சின்ன சின்ன மகிழ்வுகளுக்கு வாழை மரங்கள் ஊன்றி தோரணம் கட்டுதல், மறுகணமே வெளியேறும் கண்ணீரின் கொள்ளளவைத் தாங்கமுடியாமல் திணறுதல், உறவுகளைக் கையாளத் தெரியாமலும் முயற்சித்தலிலும் காலங்களை ஓட்டிவிடுதல் என்று வாழ்க்கை என்றப் புள்ளியை அழிக்க மனம் வராமலும், நிறைவாக வாழ முடியாமலும் உழலும்  நம்மின் பெரும்பான்மையினர்தான் முதல் பகுதி.

'ஆமை, முயலுக்கு இடையேயான பண்டையக் கால ஓட்டப்பந்தயத்தில் ஆமையின் வெற்றிக்கு முயல்களின் வழக்குத் தொடுத்தலில் இன்றும் பஞ்சாயத்து நடக்கிறது. அதற்கு தவளை ராஜா தலைமை வகிக்கிறார். ஆமைக்கு ஆதாரவாய் பேசும் முயல்களும் இருக்கின்றனர். அவர்களை முயல்களே வெறுக்கின்றனர். சின்னங்களை ஒதுக்கி, ஓட்டு தேர்தல் முறையினைக் கொண்டுவருகின்றனர் / லாபத்தின் வேட்கையில் மதிப்பீடுகளைக் கொலை செய்யாதீர்கள் என்று வழிப்போக்கன் ஒருவன் சொல்கிறான்' என்று இரண்டாம் பகுதியில் இருக்கும் 'மண்டூகம்' மற்றும் 'விருட்சம்' கதைகள் வீதி நாடகங்களை நிகழ்த்தி சமகால அரசியல் கொள்கைகள், கோட்பாடுகளை கீறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாறிமாறி இந்தக் கதைகளைப்  போட்டு உருட்டி சிரிக்கின்றனர், கேள்வி கேட்கின்றனர், வெட்கி கோவம் கொள்கின்றனர். ஆகமொத்தம் ஊருக்குப் பொதுவாகவும், வெளிப்படையாகவும், இப்போதைய அவசரத் தேவையாகவும் இவைகள் நீதி கதைகளாகின்றன.

இந்த இரண்டு பகுதிகளில் இருக்கும் வாழ்வுக்கும், மனிதர்களுக்கும் நடுவில்தான்  மூன்றாம் பகுதியில் இருக்கும் மனிதர்களும் அவர்களது வாழ்வும் இருக்கிறது. ஏன் இவைகளை கடைசியாக வைக்கிறேன் என்றால், கடைசி பெஞ்சுகளிலும், வரிசைகளிலும்தான் இருண்மை கனங்களும், அமைதி கதைகளும் அதிகமாகவே இருக்கின்றன. கொஞ்சம் நேரம் எடுத்து, அவைகளின் தோள்களில் கைகள் போட்டால் அவைகள் இணக்கமாகி கொட்டோ கொட்டென்று பேசிவிடும்.

'கடிதங்கள் போய் சேரவேண்டிய இடங்களுக்குப் போகவில்லை என்றால் குப்பைகள் ஆகிவிடுமா? என்று கேள்வி கேட்டு கடிதங்களை முனை மழுங்காமல் கொண்டுப்போகும் தபால்காரன் / அம்மாவை இழந்த ஒருத்தி இருட்டுக்குள்ளும், புதிர்களுக்குள்ளும் தாயின் விழிகளைத் தேடுகிறாள். கூடவே தனது அடையாளத்தையும், ரகசியத்தையும் தேடும் ஆங்கிலோ இந்திய ஓவியனும் / சூதின் சந்ததியான மகனொருவன் எப்போதும் தாயக் கட்டைகளை உருட்டியபடியே இருக்கிறான். அவனுக்கு வெற்றி தோல்வி முக்கியமல்ல. அந்தக் கட்டைகளும் விளையாட்டும்தான் முக்கியம். ஏனென்றால் அந்த தாயக் கட்டை உருட்டல் அம்மாவின் குரலாகவே இருக்கிறது என்று சொல்கிறான் /

ஆதியிலிருந்து புத்தகங்கள் விற்கும் அப்பா அதற்கு காசே வாங்கியது இல்லை. இப்போதைய ஆன்லைன் ஊரிலும் அதே வேலையைச் செய்து லாபம் பார்க்கவில்லை. அவரிடமும் ஒரு ரகசியம் இருக்கிறது / நாய்களின் ஊளைகளைக் கணித்து அவைகளிடம் பாசம் காட்டும் ஒருத்தி ஒரு தெருவில் இருக்கிறாள். நாய் பிடிக்கும் வண்டிகளை அவள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள்' என்று

இவர்கள் தங்களது வாழ்க்கைப்
புள்ளியில் மிகத் தைரியமாக வாழ்கிறார்கள், கையில் பூதக் கண்ணாடிகளை வைத்துக்கொண்டு புள்ளிக்குள் புள்ளி புள்ளிக்குள் புள்ளி என்று உள்ளே குடைந்து இருளுக்குள்  போய் கொண்டேயிருக்கிறார்கள். அமானுஷ்யங்கள், பைத்தியங்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எப்பெயர் வைத்தாலும் கண்டுகொள்ளாத பிடிவாதக்காரர்கள். வாழ்க்கைப் புள்ளியை சட்டென அழிப்பதற்கும் அஞ்சக்கூட மாட்டார்கள். அதேநேரத்தில் தீர வாழ்ந்துவிட வேண்டும் என்றும் துடிப்பவர்கள். அவர்களுக்குள் 'அவ்வளவு' இரங்கல்களும், வேண்டல்களும், நிறைவேறாத ஆசைகளும் மண்டிக் கிடக்கின்றன. கடிதங்கள் எழுதி பகிர்தல்களைத் தாராளமாகத் தருகின்றனர்.   

இந்த மூன்று பகுதிகளும் ஒன்றுக்கொன்று தங்களது தலையில் சுமக்கும்  பாரங்களைப் பொறுத்து வரிசையில் நிற்கின்றன. அந்த விதத்தில் பார்த்தால் மூன்றாம் பகுதிக்கு முன் மற்ற இரண்டு பகுதிகளும் அவற்றின் சத்துகளுக்கு ஏற்ற பாரங்களைச் சரியாக தாங்கி நிற்கின்றன. ஏனென்றால் மூன்றாம் பகுதி உடைக்காத முரட்டு கருங்கற்களை சுமக்கின்றன. அந்தப்  பாரங்கள் நமக்குள் ஒருவித பிறழ்வையும், பயங்களையும், நடுக்கங்களையும் அதிகமாக கொடுக்கின்றன. வெளியிலும், மொழியிலும், சொல்லல்களிலும் கிருஷ்ணமூர்த்தி நமது கைகள் பிடித்து போகும்போதே திடீரென கைகளை உதறிவிட்டு எங்கோ போவார், திரும்ப வந்து கைகளைப் பிடித்து அதே வழியில் கூட்டிச் செல்வார்.

ஒரு சில கதைகளிலும், இடங்களிலும் கைகளை உதறிச் செல்பவர் திரும்ப வந்து பிடிக்க நேரம் ஆகிறது. அந்த நேரங்களில் அதே இருளுக்குள் நாம் திக்கி நிற்கிறோம். அந்த நேரங்களில் பதட்டப்படாமல், விதிகளையும், வழமைகளையும் தேடாமல் மனதிற்கு சின்ன பயிற்சி கொடுத்து கொஞ்சம் ஒருமுகப்படுத்தினால் இருளுக்குள் இருக்கும் வாசனையை நுட்பமாக நுகரமுடிகிறது. உடனே வந்து கைகளைப் பற்றி அழைத்துச் சென்று வெளியில் விடுவார்.

இறுதியாக, 158ம் பக்கத்தின் நுனியில் கிருஷ்ணமூர்த்தியின் கைகளும், நமது கைகளும் விடுபடும் தருணத்தில் ஒன்றுமட்டும் ஒருவித கலக்கத்தில் தெளிவாக தோன்றுவது போல் இருக்கிறது. வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் நமது வாழ்வை வாழும் நமக்குத்தான் அது வெளிச்சம். இந்த மூன்று பகுதிகளும் சேர்ந்ததுதானே நமது வாழ்க்கை. இம்மூன்று பகுதிகளால் ஆனதுதானே நாம்.

- காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு நூல் குறித்து முத்துராசா குமாரின் பதிவு

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக