ஓர் புதிய கல்வி


நம் கல்வி திட்டத்தின் மீதான விமர்சனத்தின் தன்மை மாறாமல் காலந்தோறும் மக்களால் வைக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது. அவ்விமர்சனமும் ஒரே ஒரே தன்மையிலானதாக அமைகிறது. அதற்கான மாற்றங்கள் பாடதிட்டத்தின் அளவில் நிகழ்கிறதே ஒழிய அதன் செயலாக்கத்தின், வெளிப்பாட்டின் அளவில் நிகழ்வதில்லை. தனிப்பட்ட சில கல்வி நிலையங்கள் புதிய  முறையிலான கல்வியை போதிக்க முனைகின்றன. இருப்பினும் அவை பெருவாரியான மக்களிடம் சென்று சேர்வதில்லை. நிர்ணயிக்கப்பட்ட லட்சியங்களை சென்றடையவேண்டி பிள்ளைகள் நிர்பந்திக்கப்பட்ட கல்வி முறைக்குள் சிக்க வேண்டிய அவலம் காலம் காலமாய் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இவற்றின் மீதான விமர்சனத்தை தொடர்ந்து பேசும் மக்கள் அதற்கான மாற்றை எதிர்நோக்கியே காத்திருக்கின்றனர். புத்தகங்களும் பாடங்களும் கல்வி நிலையங்களும் சுமையின்றி இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர்.
1932 இல் குஜராத்தி மொழியில், அம்மாநிலத்தின் கல்வியாளர்களுள் ஒருவரான ஜிஜுபாய் பதேக்கா என்பவர் எழுதிய நூல் ‘திவ சப்னா’. அந்நூல் டாக்டர் சங்கரராஜுலு என்பவரால் ‘பகல் கனவு’ எனும் தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்நூல் நிர்ணயிக்கப்பட்ட அல்லது நிலுவையில் இருக்கும் பாடதிட்டத்திற்கான புதிய கல்விமுறையை போதிக்கிறது. கல்வி சார்ந்த அர்த்தப்பாட்டையும் விழிப்புணர்வாய் விளக்க முயற்சிக்கிறது இந்நூல்.
அடிப்படை கல்வியில் மொழி, சமூகம், பூகோளம், அறிவியல், கணிதம் ஆகியன உள்ளடங்கியிருக்கின்றன. இவற்றுள் இருக்கும் கருப்பொருள்கள் நடைமுறைக்கு அப்பால் இருக்கும் சொற்கோர்வைகளால் அமைந்திருக்கின்றன. இத்தன்மை மாணவர்களை பாடங்களிலிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. பாடங்களை புரியாத விஷயங்களாக மட்டுமே கருத வைக்கிறது. இருப்பினும் மதிப்பெண் மையப்படுத்திய தேர்ச்சி முறை என்பதால் மனனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவை தொடர்ச்சியாக நிகழ்வதால் கல்விமுறை மனனம் செய்வதோடு மட்டுமே அறியப்படுகிறது.
இத்தன்மையிலிருந்து மாறாத பள்ளுயொன்றில் மாற்றுக் கல்விமுறையை சோதித்து பார்க்க விரும்பும் ஒரு ஆசிரியரின் கற்பனைக் கதை தான் பகல்கனவு. இலக்கிய வடிவ வகைமைகளுக்குள் சரிவரப் பொருந்தாமல் போனாலும் பேச விரும்பும் விஷயங்களை சரிவரப் பேசுகிறது இந்நூல்.
நான்காம் வகுப்பின் ஒரு பிரிவிற்கு நாயகனை ஆசிரியராக நியமிக்கிறார் தலைமை ஆசிரியர். அதிலும் பிரதானமாக நிர்பந்தம் ஒன்றையும் முன்வைக்கிறார். புதிய கல்விமுறை எப்படியாக இருப்பினும் இறுதித்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்பதேயாகும். பதிலுக்கு நாயகனான ஆசிரியரும் தன் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுமுறையை தலைமை ஆசிரியர் மட்டுமே மேற்பார்வையிட வேண்டும் எனும் பதில் நிர்பந்தத்தை வைக்கிறார்.
கதைகளின் வழியேவும் விளையாட்டுகளின் வழியேவும் பாடதிட்டங்களை நடத்த முயல்கிறார். ஆரம்ப சில நாட்களில் மாணவர்களுடன் இணங்கிச் செல்ல முடியாமல் பின் ஒரே சீர்மையில் மாணவர்களுடன் பாடதிட்டத்தில் பயணிக்கிறார். பாடங்களை நடத்துவதற்கு முன் சில அடிப்படை கேல்விகளுக்கு விடை காணமுயல்கிறார். அவையாவன,
  • இந்த பாடம் இவர்களின் வயதிற்குரியதா ?
  • யதார்த்த வாழ்க்கையும் இந்த பாடமும் எப்படி ஒன்றிப் போகிறது ?
  • எந்த வகையில் மாணவர்களிடம் இந்த பாடங்களை கொண்டு சேர்ப்பது ? எந்த வழிமுறையை பின்பற்றுவது ?
  • பாடதிட்டத்தில் இல்லாத புத்தகங்களின் வழியேவும், சுற்றுலாக்களின் வழியேவும் மாணவர்களிடம் இருக்கும் அனுபவங்களை பாடத்துடன் எப்படி ஒன்றிணைப்பது ?
இந்த கேள்விகளை ஒவ்வொரு பாடத்தோடும் பொருத்தி சோதனை செய்கிறார். மாணவர்களுடன் இணக்கமாகும் தருணங்கள், சக ஆசிரியர்களிடமிருந்து புகார்களை எதிர்கொள்ளுதல், தமைலை ஆசிரியரின் சவால் என சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்டிருக்கிறது. நடைமுறையில் இருக்கும் கல்விக்கூடங்களில் இந்த முறை சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் வீட்டில் இம்முறையை பயன்படுத்தலாம்.
கல்வியை நல்விதையாக உணர இந்நூல் நிச்சயம் உதவும். ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் இந்நூல் இடம்பெறுவது கல்வியின் மறுமலர்ச்சிக்கு நிச்சயம் துணைபுரியும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக