கிராம அரசியலுக்கான அறிமுகம்


அரசியலுக்கு அடிநாதமாக இருப்பதை பொருளாதாரம் என்பதாகவே உணர்கிறேன். நவீன மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் அடித்தளத்திலிருந்தே கட்டமைக்கப்படுகிறது. வர்க்க பேதங்களையும் அதைப் பாதுகக்க சாதிய வலைப்பின்னல்களையும் இவையே முன்னெடுக்கின்றன. மேலும் இக்கட்டமைப்புகள் உருவாக்கும் செல்வத்தை பாதுகாக்க அதிகாரம் உருவாக்கப்படுகிறது. அதிலிருந்து ஆண்டான் அடிமை முறைக்கான வித்துகள் உருவாகின்றன. மீண்டும் வறுமையின் நிழல் சில மனிதர்களின் மீது விழத் துவங்குகிறது. தோராயாமாக அனைத்து நாடுகளின் வரலாற்றிலும் இவ்விஷயங்கள் தவறாது இடம்பெற வல்லவையாகும்.
இவற்றை முன்கூட்டி உணர்ந்ததாலோ என்னவோ காந்தி முன்மொழிந்த அரசியல் தீர்வு சமூக வாழ்க்கையை கிராமத்துடன் பிணைத்து வைக்கும் எண்ணத்தை கொண்டிருந்தார். கிராமங்களுக்காக நகரங்கள் உருவாகவே கூடாது என்று அவர் எப்போதுமே சொல்லவில்லை. ஆனால் நகரங்களின் அறம் என்னவாக இருக்க வேண்டும் என்றும் அதில் கிராத்திற்கான பங்கு என்ன என்பதையும் திட்டவட்டமாக பதிவு செய்திருக்கிறார். அவ்வழியில் காந்திய இலக்கியச் சங்கம் வெளியீடான கிராம சுயராஜ்யம் எனும் நூல் கிராம அரசியலை குறித்த விரிவான பார்வையை நமக்கு அளிக்கிறது.
காந்தியிடம் நகரமயமாக்கல் குறித்த சில அடிப்படை கேள்விகள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. வளர்ச்சி மனிதனை சோம்பேறியாக்கிவிட்டால் என்ன என்பதே அனைத்திற்கும் முதன்மையானது. அனைவருக்கும் கல்வியும், சுகாதாரமும், வேலைவாய்ப்பும் நிரம்பிய சமூகத்தை அவர் கற்பனை கண்டார். அதற்கு கிராமமே உகந்தது என்கிறார். நூலின் ஆரம்பப் பகுதிகளில் கிராமங்கள் குறித்த விவரணைகள் இடம்பெருகின்றன. பின் நகரங்கள் குறித்த அறிமுகம் தொடர்கின்றன. அதன் பின் இரண்டிற்குமான இடைவெளிகளை பேசுகிறார்.
நகரமயமாக்கலின் விளைவாக மக்கள் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு புலம்பெயர்கிறார்கள். ஆனால் நகரங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பதாகவே இருக்க வேண்டும் என்கிறார். கிராமத்தில் இருக்கும் கைத்தொழில்கள் மனிதனை சோம்பேறியாக்குவதில்லை. எப்போதும் பணியுடன் இருக்கும் மனிதனை உருவாக்குகிறது. மேலும் சுயசார்பு கொண்ட மனிதனையும் அதன் வழி சுயசார்பு கொண்ட கிராமத்தையும் உருவாக்குகிறது என்கிறார். அதற்கு அவர் கையாளும் எடுத்துக்காட்டு தையல் மெஷினாக இருக்கிறது. சிங்கர் தையல் மெஷினின் கதையை விவரிக்கிறார். அதன் கண்டுபிடிப்பின் பின்னணியாக காதல் இருக்கிறது. மனைவியின் சிரமத்தை குறைக்கும் வண்ணம் அதை கன்டுபிடிக்கிறார். இதைக் கூறும் காந்தி இந்த இயந்திரம் தனி மனிதனின் உழைப்பை மீதப்படுத்துகிறது. அதே நேரம் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில் கூடுதலாக வேலை வாய்ப்பை நல்குகிறது. இவ்விதமான இயந்திரங்களை காந்தி வரவேற்கிறார். அதற்கு முக்கிய காரணம் மனித உழைப்பை முழுதும் நிராகரிக்காமல், உழைப்பை சீர்படுத்துகிறது என்பதே ஆகும். இதைக் கூறும் அதே நேரம் இயந்திர உருவாக்கம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் அரசியலை முன்வைக்கிறார். தனியாரிடம் செல்லும் இடங்களில் அவை செல்வங்கள் நோக்கிய பயணமாக மாறுகிறது. மாறாக அரசிடம் சென்று அவை மனித உழைப்பிற்கான சேவையாக மாற வேண்டும். இதன் வழி கிராம கைத்தொழில்கள் நவீனப்படுத்தப்படும். ஆனால் அவை ஒழிந்து விடாமல் இருக்கும்.
இதன் அடிப்படையில் கல்வியையும் முன்வைக்கிறார். கல்வியில் கைத்தொழில்கள் கற்றுத்தரப்பட வேண்டும் என்கிறார். அவை தனிமனிதனை வேலையற்றவனாக மாற்றாமல் நிரந்தரமாக வேலையொன்றை அறிந்தவனாக மாற்றுகிறது என்கிறார். மேலும் பெரு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கட்டமைக்கும்போது அவற்றிற்கேற்ப கல்வி நிலையங்களையும் அமைத்து அதற்குகந்த கல்வியை சேவையென அளிக்க வேண்டும் என்கிறார். இன்றைய காலகட்டத்திலிருந்து பார்க்கும் போது கல்வி நிலையங்களுக்கும் தொழில் மையங்களுக்கும் இடைப்பட்ட இடைவெளி வரலாற்றின் முரணாகப் படுகிறது. கல்வி நிலையங்கள் பெருகி தொழில் மையங்கள் குறுகிய வடிவில் காட்சியளிக்கின்றன. மேலும் அக்கல்வி நிலையங்கள் சுயசார்பு கொண்ட மனிதர்களை கொடுப்பதில்லை. மாறாக நிறுவனமயமாக்கப்பட்ட சூழ்நிலைவாதியாக மட்டுமே வெளித்தள்ளுகிறது. சுயசார்பற்றவனாக மனிதனை மற்றுவதில் கல்வி நிலையங்களுக்கு நிறைய பங்கு இருப்பதை அனைவராலும் நன்குணர முடியும்.
உழைப்பையே கூலியாகவும் உழைப்பையே வாழ்க்கையாகவும் தொடர்ந்து காந்தி முன்வைக்கிறார். அனைத்து கட்டுரைகளும் தனி மனிதனை பிராதானப்படுத்துகிறது. அதன் வழி கிராமத்தை கற்பனை செய்கிறார். காந்தியின் இந்த கிராம விடுதலை குறித்த நூல் சமகால கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது வழக்கொழிந்து போன கற்பனையாக காட்சியளிக்றது. ஆனால் நகரத்திற்குள்ளே ஒரு எளிய கிராம வாழ்க்கை மேற்கொள்வதன் வழியே இக்கற்பனைகளை உயிருள்ளதாக்கிக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கை மேலெழுகிறது. அதே நேரம் சமகாலத்தில் இருக்கும் பெரிய முரண் கைத்தொழில் விஷயங்கள் சந்தைப் பொருட்களாகிவருகின்றன. நகரத்தின் மோஸ்தர்களாகின்றன. கிராமத்திலிருந்து நெடுந்தொலைவு வந்தபின் கிராமப் பொருட்களை நவீன கண்டுபிடிப்புகளாக சட்டகத்தில் பொருத்திக் கொண்டிருகிறோம். அது ஒருபோதும் கிராம விடுதலையாகாது. மற்றொரு பார்வையில் அவை நகரத்தின் மற்றொரு வணிக வெற்றியாகவே அமையும். வணிகத்திற்கும் விடுதலைக்குமான முரண்பாட்டை அறிய இந்நூல் நிச்சயம் பேருதவி புரியும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக