வேர் தேடும் கதைகள்


மொழிபெயர்ப்பு நூல்களில் முன்னுரை முக்கிய பங்கு வகிக்கிறது. மூல மொழியின் பின்புலமாகவுள்ள கலாச்சார மதிப்பீடுகளையும், சமூக-அரசியல் விஷயங்களையும் அறிமுகம் செய்யும் விதத்தில் வாசகனை அக்கதைகளுக்கு அருகாமையில் மொழிபெயர்ப்பாளரால் கொண்டு செல்ல முடியும். அவ்வகையில் சாகித்ய அகாதமியின் வெளியீடான ‘பாகிஸ்தான் சிறுகதைகள்” வாசிப்பில் முழு நிறைவை கொடுக்கிறது. உருது, சிந்தி, பஞ்சாபி, சரைக்கி, பஷ்தோ, பலூச்சி ஆகிய மொழிகளிலிருந்து சிறுகதைகளை தேர்ந்தெடுத்து இந்திஜார் ஹுசேன் தொகுத்திருக்கிறார். அதை மா.இராமலிங்கம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இலக்கியத்தை இந்திய பாகிஸ்தான் பிரிவினையுடன் ஒப்பிடுகிறார். ஒரே மண்ணிலிருந்து கதைகள் தோற்றுவாய் கொள்கின்றன. ஆனால் பிரிவினைக்கு பிறகு இலக்கியங்கள் தங்களுக்கென தனித்த அடையாளங்களை, வேர்களை கோரி நிற்கின்றன. அங்கு பாகிஸ்தான் இலக்கியம் பெரும் சவாலை சந்திக்கிறது. எழுதப்படும் கதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மண்ணின் நினைவுகளாகவும், பிரிவினை கொடுத்த வேதனைகளின் நினைவு மீட்டல்களாகவும் தேக்கம் கொள்கிறது. இதன் வழியே அவ்விலக்கியத்தின் வேர் எது எனும் கேள்வியை நோக்கி சில எழுத்தாளர்களின் கதைகள் நகர்கின்றன. புனைவின் சாத்தியப்பாடுகளுடன், உலக இலக்கிய அரங்கில் சமர் புரிய அங்கிருக்கும் கதைகள் முளைக்கின்றன. பேசுபொருள் மேற்கூறிய விஷயங்களாக இருப்பினும் பேசுமுறை நவீன இலக்கியத்தின் சாயல்களை உள்வாங்கிக் கொள்கின்றன. நவீன சொல்லாடல்களை, கதைகூறுமுறைகளை சோதனையிட்டு மேல் செல்கின்றன. புதிய வேர்களை தங்களுடைய இலக்கியத்திற்கு பதிய வைக்க இந்நூலின் கதைகள் சிறப்புற வாசிப்பனுபவத்தை கொடுக்கின்றன.
இத்தொகுப்பின் கதைகளை சில வகைமைகளை வைத்து பிரிக்க முடிகிறது. அனைத்து கதைகளிலும் சிடுக்குகளற்ற எளிய கதைசொல்லல் முறை பின்பற்றப்படுகிறது. மதம் சார்ந்து இயங்கிய நம்பிக்கைகளாலான சமூகத்தின் மரபான விஷயங்களை கேள்விக்குட்படுத்துகிறது. மரபிற்கும் நவீனத்திற்குமான மோதல் அநேகமாக அனைத்து கதைகளிலும் தென்படுகிறது. இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் புராணீக விஷயங்களை நினைவோடைகளாக கதைகள் நவீன சமூகத்திற்கு அடையாமல் காட்டுகிறது.
தொகுப்பின் தொடக்கத்தில் சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதையொன்றும் இடம் பெறுகிறது. பின் இடம்பெறும் முப்பத்தியோரு கதைகளும் அறியப்படாத எழுத்தாளர்களின் புனைவுகள். தமிழுக்கு இந்நூல் மட்டுமே அவர்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த தன்மை வேறொரு வாசிப்பு முரணை அரிமுகம் செய்கிறது. குரூர கள யதார்த்தத்தை கொண்ட மண்ட்டோவின் படைப்புகள் மட்டுமே தமிழுக்கு வந்திருக்கிறது. அதே நேரம் பல்வேறு வடிவங்களில் கூர்மையான அரசியலை முன்வைக்கும் பிற எழுத்தாளர்களின் கதைகள் விடுபட்டு இருக்கிறது. இவை வாசிப்பின் அறியாமையிலிருந்து முளைக்கும் விஷயங்கள் என்றே கருதுகிறேன். இக்கதைகள் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் வெளிவந்த தமிழ் கதைகளும், உலக கதைகளும் போட்டியிடுவதற்கு மெத்த தகுதியுடைதாகவே இருக்கிறது. மேலும் புனைவின் சாத்தியப்பாடுகளில் பாகிஸ்தான் சிறுகதைகளில் தெளிவும், நேர்த்தியான வடிவமும், அதன் வழியே செறிவான அரசியலையும் இனங்காண முடிகிறது.
உதாரணத்திர்கு மிர்ஜர் ஹமீது பெய்க் என்பவரின் “மொகலாயர் விடுதி” எனும் சிறுகதை. காதல் ஜோடியொன்று தங்களது சிறு சிறு தீண்டல்களின் வழியே மகிழ்ச்சியை அடையாளம் கண்டுகொண்டு சாலையில் சென்று கொண்டிருக்கின்றன. தங்களை சுற்றி இருப்பவர்களின் முகம் கண்டு ஏற்படும் பயமும் அவர்களது உடல்மொழியில் வெளிப்படுகிறது. அப்போது அவர்கள் மொகலாயர் விடுதி ஒன்றுக்கு செல்கின்றனர். அவ்விடுதி வருபவர்களுக்கு மொகலாய வாழ்க்கையை அறிமுகம் செய்கின்றனர். ராஜ உபசாரம் செய்து விருந்தாளிகளை மகிழ்விக்கின்றனர். ஜோடிகளை பிரித்து தனித்தனியே அலங்கரிக்கின்றனர். அதில் வரும் ஆணிற்கு தன் ஜோடி தனியே எங்கே இருக்கிறாள் எனும் படபடப்பு மேலோங்குகிறது. அப்போது அலறல் ஒலி கேட்க ஓடிச் சென்று பார்க்கிறான். புதர் மண்டிய இடத்தில் அலங்கோலமாக இறந்து கிடக்கிறாள். தன் மீது அலங்கரிக்கப்பட்டிருந்த ஆடை ஆபரணங்களை அவளைப் பார்க்கும் முன்பே வெறுப்பில் கழற்றி எரிகிறான். அதற்கு பின் அங்கிருந்த பணியாட்கள் அவனிடம் நன்றாக இருந்த மொகலாய சாம்ராஜ்யத்தில் புகுந்த ஓநாய்களுக்காக மன்னிப்பு கேட்கிறான். ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்வதாக உறுதி அளிக்கிறான். கதை இந்த பிரிவுடன் முடிவுருகிறது. சாதாரண காதல் ஜோடியின் கதையாக சுருக்கம் கொண்டாலும், கடைசியில் சொல்லப்படும் உறுதி மொழி வரலாற்றின் கதையாக உருமாற்றம் கொள்கிறது. கதை வர்ணனைகளால் நிறைந்திருக்கிறது. அந்த வர்ணனை இந்துஸ்தானத்தின் வர்ணனை. ஓநாய்களின் வருகை சீர்குலைக்கும் மண்ணை காதல் கதைகொண்டு ஓர் எழுத்தாளானால் சொல்ல முடிகிறது என்பது வாசகனாக எனக்குள் வியப்பையும், எழுத்தாளனாய் எனக்குள் படிப்பினையையும் கொடுத்து செல்கிறது.
நான் ஒரு கதையை மட்டுமே இங்கு எடுத்துக்காட்டிற்கு சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு கதைகளிலிருந்தும் கற்றுக்கொள்ள, புனைவின் பலதரப்பட்ட கதவுகளை வாசகனுக்காக திறந்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு கதையுமே விவாதிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. தொகுப்பில் நான் ரசித்த சில கதைகளாவன,
பேன்ஸி ஹேர் கட்டிங் சலூன் – குலாம் அப்பாஸ்
தால் பாலைவனம் – அகமது நதீம் குவாஸ்மி
பூனைக்குட்டி – ஆஷ்ப்பாக் அகமது
ஓர் ஆன்மாவின் அவலம் – பானோ குத்சியா
சைபீரியா – முகம்மது கலீமுர் ரஹ்மான்
நெற்றிக்கண் – ஆசாத் முகம்மதுகான்
மொகலாயர் விடுதி – மிர்ஜா ஹமீது பெய்க்ல்
அரிப்பு – அஸீப் ஃப்ரூக்கி
கோடித்துணி – அமர் ஜலீல்
கதவு எண் : 34 : நஸீம் சாரல்
குதிரைக்காரன் – நஸீர் பலோச்
ஓநாய் – ஃப்ரூக் ஸர்வர்
கிட்டதட்ட கால்வாசிக்கும் மேலான கதைகளை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இவை அனைத்துமே புதுமையான விஷயங்களை நேர்த்தியாக அளிக்கின்றன. இது போன்ற ஒரு தொகுப்பு முறை நமது முன்னோடிகளின் எழுத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உலகிற்கு அளிக்கப்படுமானால் நமது நவீன வேரை உலகிற்கு கொண்டு செல்ல முடியும் எனும் ஏக்கத்தையும் நூல் கொடுத்து செல்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக