ஏவாளான காந்தியின் கதை

கதை வடிவத்தில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்து நிறுவப்பட்ட மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனை மோதிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்கு புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றை கூர்ப்படுத்துகின்றன. சமகாலத்தன்மை கொண்டதாக மதிப்பீடுகளை புணரமைக்கின்றன. இவ்விளையாட்டில் தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’, சுனில் கிருஷ்ணனின் ‘ஆரோகணம்’ முதலிய சில எழுத்தாளர்களும் அவர்தம் படைப்புகளுமே நிலைபெற்று நின்றிருக்கின்றன. அந்த பட்டியலில் சி.சரவணகாரத்திகேயனின் “ஆப்பிளுக்கு முன்” எனும் நாவல் நிச்சயம் இடம்பெறும்.


காந்தியின் இறுதிக்கட்ட வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட விசேஷ மற்றும் விபரீத பரிசோதனை பிரம்மச்சரியம் சார்ந்தது. கஸ்தூரி பாவின் மரணம் நிகழ்வதற்கு சில காலம் முன் தொடங்கி காந்தியின் மரணம் வரை நீளும் நாவல் பிரம்மச்சரிய பரிசோதனையையே களமாக கொண்டிருக்கிறது.

அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் ஒடுக்கச் செய்யும் என்பதை தன் வாழ்வின் வழியே சோதனை செய்து நிரூபிக்க விரும்புகிறார் காந்தி.

பரிசோதனைக்கு உதவியாக ஆஸ்ரமத்தில் இருக்கும் பெண்களை நாடுகிறார். தன்னுடன் நிர்வாணமாய் உறங்குவதும், ஒன்றாய் குளிப்பதும் பரிசோதனையின் பகுதியாகிறது. பலர் முகம் சுளித்து விலகுகின்றனர். பதின்வயதில் இருக்கும் மநு மனமுவந்து பரிசோதனையில் பங்குகொள்கிறாள். காந்தியின் இச்செயல் சமூக ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. சமூகத்தில் இருக்கும் அவருடைய பிம்பத்தை சிதைக்க இக்காரணம் தயாராய் இருக்கிறது. இருப்பினும் தனக்குள் இருக்கும் பெண்ணுருவத்தை அடையாளம் காண அவர் மேற்கொள்ளும் போராட்டமாக நாவல் விரிவு கொள்கிறது.

காந்திக்கும் மநுவிற்குமான அன்பு அன்னைக்கும் மகளுக்குமான உறவை எட்ட முயல்கிறது. அதை எட்டும் தருணங்களில் காந்தியின் பரிசோதனை சார்ந்த எதிர்மறை எண்ணங்கள் காணாமலாகின்றன. காமத்தை ஒடுக்கும் தன்மையால் சமூக மாற்றங்களையும், அரசியல் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும் என தக்கர்பாபாவிடம் காந்தி வாதிடும் இடங்கள் பிரம்மச்சரியத்தைப் பற்றியும், சத்தியாகிரஹத்தைப் பற்றியுமான நவீன விளக்கங்களாக வாசகர்களை சென்றடைகிறது.

சபிக்கப்பட்ட கனியை உண்பதற்கு முன் ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாய் வாழ்கின்றனர். அப்பகுதி பைபிளில் குறுகிய காலமே நீடிக்கிறது. மேலும் அங்கு நிர்வாணம் பொருளற்றதாய் அமைகிறது. ஆனால் அவ்வாழ்க்கைக்குள் பேருண்மைகள் அடங்கியிருக்கின்றன. அவ்வுண்மைகளை சென்றடைய ஆசிரியர் காந்தியை கைக்கொள்கிறார். ஆதி மனிதர்களின் நிழல் காந்தியின் எளிய வாழ்க்கையில் படரவைத்திருப்பது சவாலானதும் பாராட்டிற்குரியதும் ஆகும்.  சின்ன சின்ன அத்தியங்களால் ஆன நாவல் மநுவின் அன்பால் நிறைந்திருக்கிறது. அந்த அன்பு காந்திக்குள் இருக்கும் ஏவாளை வாசகர்களுக்கு புன்சிரிப்புடன் அடையாளம் காட்டுகிறது.

- இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக