சீனக் கதைகள்


சீனக் கதைகளை அதிகமாக வாசித்ததில்லை. சற்று யோசித்தால் கூட ஓநாய்க் குலச் சின்னம் நாவல் மட்டுமே நினைவில் தட்டுப்படுகிறது. இந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சீன எழுத்தாளரான லூ சுன் என்பவறது சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கே.கணேஷ் என்பவர் அவருடைய ஒன்பது சிறுகதைகளை “போர்க்குரல்” எனும் தலைப்பின் கீழ் மொழிபெயர்த்திருக்கிறார். சீனத்தில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களின் சான்றாக இக்கதைகள் திகழ்கின்றன.

செகாவைப் போன்று லூ சுன்னும் அடிப்படையில் மருத்துவர். பின் சீனத்தில் நிகழும் புரட்சிகளில் பெரு வாரியான மக்கள் பார்வையாளர்களாக மட்டும் இருப்பதைக் கண்டு வெதும்புகிறார். இலக்கியம் மானுட மேன்மைக்கு உதவும் எனும் நம்பிக்கையில் இலக்கிய பங்காற்ற துவங்குகிறார். சீன மரபின் மீதும் வரலாற்றின் மீதும் பெரும் நம்பிக்கையை கொண்டிருக்கிறார். கதைகளில் தென்படும் சீன வாழ்க்கையிலும் இந்நம்பிக்கைகள் பிரதிபலிக்கின்றன.

மரபு காலந்தோறும் நீட்டிச் செல்ல வேண்டிய நன்மைகளையும், காலத்தைப் பொறுத்து நீக்க வேண்டிய மடமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. முன்னதை வளர்த்தும் பின்னதை நீக்கியும் கலையை மேன்மையுறச் வேண்டியது படைப்பாளியின் கடமையாகிறது. அதிலும் நன்மைகளை உரக்க கூறுவதைக் காட்டிலும் மடமைகளை நீக்குவது பிரதானமாகிறது. அதை லூ சுன்னின் கதைகள் செழுமையுடன் முன்வைக்கின்றன.

“ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள்” சிறுகதை சீனத்தின் முன்னோடி சிறுகதைகளில் ஓன்று. ஒருவனின் டைரிக் குறிப்புகளே சிறுகதை. நோயுற்றவன் மருத்துவத்தால் தனிமைப்படுத்தப்படுகிறான். அவனுடைய தனிமை வாழ்வில் அறியும் சமூகம் சார்ந்த விஷயங்கள் விடுதலைக்காக ஏங்க வைக்கிறது. சமுகத்தை நோயாளிக் கூடமாக எண்ணுகிறான். அவன் பார்வை வழியே முடங்கிக் கிடக்கும் மனதின் மீது வெளிச்சம் பாய்ச்சுக்கிறார். சமூகம் குறித்து பார்வைகளற்று இருப்பவர்களையும், சமூகம் மீது பார்வை கொள்ள விரும்புபவர்களையும் எதிர் எதிர் திசையில் வைக்கிறார்.

அலங்காரங்களற்று யதார்த்த வாழ்க்கையை சுமந்து செல்கின்றன லூ சுன்னின் கதைகள். காச நோய்க்கு பிணத்தின் ரத்தத்தில் தோய்த்த ரொட்டி குணாமாக்கும் எனும் மரபு அங்கு நிலை கொண்டிருக்கிறது. ஆனால் அதன் செயல்முறையில் சீனர்களின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை பிரதிபலிக்கிறது. இவ்விரண்டு தன்மையும் அநேக கதையாகளில் பிரதிபலிக்கின்றன. இத்துடன் கால மாற்றத்தால் சீன மக்கள் தங்கள் மரபிலிருந்து நழுவிச் செல்வதைம் உறக்கச் சொல்கிறது.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் “ஆ க்யூவின் உணமைக் கதை” ஓர் நெடுங்கதை. வரலாற்றாசியரின் பார்வையில் ஆ க்யூ என்பவனின் கதையை விவரிக்கிறார். கதையின் வடிவமும் நேர்கோடற்று நீள்கிறது. ஆ க்யூ எனும் மனிதனின் உண்மை வாழ்க்கையும் புனைவும் கலக்கும் இடங்கள் வரலாறு மழுங்கும் இடங்களாக உருக்கொள்ள விழைகிறது. மேலும் அக்கதாபாத்திரத்தின் வழியே சீனார்களிடையே நிலவிய வர்க்க பேதங்களை நுண்மையாக அணுகுகிறார். தனி மனிதன் பிற மனிதர்கள் மீது குற்றம் இழைப்பதற்கு சமூகம் காரணமாகிறது எனும் குரல் அனைத்து கதைகளிலும், குறிப்பாக இக்கதையில் உரக்க ஒலிக்கிறது.

லூ சுன்னைப் பற்றிய நேர்த்தியான அறிமுகமும், அவருடைய அரசியல் பார்வையையும், கதைத் தேர்வும், மொழிபெயர்ப்பும் சீனர்களின் இயல்பு வாழ்க்கையை அறிய உதவி புரிகிறது. பண்பாட்டு அசைவுகள் மாறிக் கொண்டே இருந்தாலும் மானுடம் மாறுவதில்லை என்பதை உவகையுடன் பேசுகின்றன இக்கதைகள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக