உடல் பேசும் கதைகள்

லைலா எக்ஸ் எழுதியிருக்கும் “பிரதியின் நிர்வாணம்” எட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஒரே கருப்பொருளின் எட்டு பரிணாமங்கள் என இக்கதைகளை குறிப்பிடலாம். அந்த ஒரே கருப்பொருள் பெண்ணுடலை மையப்படுத்தியதாய் இருக்கிறது. போர்க்காலம் என்று மட்டும் இல்லாமல் சகல நேரங்களிலும் பெண்ணின் உடல் அதிகாரத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறது. காயங்களால் வருடப்படுகிறது. அந்த காயங்களின் தோற்றத்தையும், அதன் பின்புலத்தையும் கதைகளாக்கியிருக்கிறார் லைலா எக்ஸ்.


ஒவ்வொரு கதையையும் பெண்ணிடமிருந்தே துவங்குகிறார். ஒடுக்கப்பட்ட குடும்ப அமைப்பு அல்லது கட்டுப்பாடுகளால் ஆன சமூக கட்டமைப்பை எதிர்த்து கதைமாந்தர்கள் உடல்சார் சுதந்திரத்திற்கான குரலை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். இயல்புணர்ச்சிகளை சமூக கட்டுப்பாடுகள் மரபு எனும் பெயரில் ஒடுக்கும்போது அவை உடல் வேட்கை எனும் பதத்திற்கு நகர்ந்துவிடுகின்றன. அப்படி ஒடுக்கப்பட்ட எட்டு வாழ்க்கையை ஆசிரியர் கதைகளாக வாசகர்களுக்கு அளிக்கிறார்.

உடலை ஓவியன் அணுகும் விதத்தையும் எழுத்தாளன் அணுகும் விதத்தையும் “பிரதியின் நிர்வாணம்” சிறுகதை பேசுகிறது. “வலது காதல் இடது காதலி” சிறுகதை உடலுக்கும் அரசியலுக்குமான தொடர்பையும் தர்க்கத்தையும் ஆராய முற்படுகிறது. பெண்ணின் அரசியல் பார்வை இயல்பு வாழ்க்கையோடு யதார்த்தத்துடன் எளிமையாக இருக்கிறது. ஆணின் அரசியல் பார்வை கற்பிதங்களிலிருந்து பயிலப்படுகிறது. இவ்விஷயத்தை உடலை மையப்படுத்தி புனைந்திருப்பது நவீனமாக வெளிவந்திருக்கிறது. “ஜெர்சி கனவுகள்” சிறுகதை கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி அமைந்திருக்கிறது. விளையாட்டு மற்றும் காதல் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் உடல் மூலதனம் ஆகும்போது ஏற்படும் மனப்போராட்டத்தை விளையாட்டின் விவரிப்புகளுடன் நுண்மையாக விவாதிக்கிறது.

உடல் விரும்பும் வேட்கைக்கும் குழந்தை பேற்றை விரும்பும் குடும்ப அமைப்பிற்குமான தர்க்கத்தை “கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது” சிறுகதையிலும், சொந்தங்களாலேயே சிதைக்கப்படும் பெண்ணுடலை “பதின்மம் × உடல் = இவ்வாழ்வு” சிறுகதையிலும்,  வேதநூல், கலை மற்றும் இலக்கியம் அணுகும் உடல் அரசியலும் களயதார்த்தத்தில் அரசியலாகும் உடலிற்கான வேறுபாட்டையும் “சூனியக்காரன்களின் கதை”யிலும் காண முடிகிறது. உடல் மற்றும் தோலுடைய நிறத்தின் வழியே சாதியத்தன்மை அடையாளப்படுத்தப்படுகிறது என்பதை “முத்தி” சிறுகதை நேர்மையாகவும் செறிவாகவும் பதிவு செய்கிறது.

இந்நூலின் கதாபாத்திரங்கள் கழிவிரக்கத்தை கோரி நிற்பதில்லை. மாறாக உண்மைகளின் துணைகொண்டு உடலை ஒடுக்கும் அதிகாரத்திற்கு எதிராக பெருங் கதையாடலை நிகழ்த்துகிறார்கள். அதை வேறு வேறு வடிவங்களில் லைலா எக்ஸ் புனைவாக்கியிருக்கிறார். ஆங்காங்கே தென்படும் கதைசொல்லியின் தத்துவார்த்த குரல் சற்று குறைவாக ஒலித்திருக்கலாம் என்பது மட்டுமே நெருடலான அபிப்பிராயம்

- இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக