பைத்தியத்தை வரையறுக்க ஓர் புனைவு

சென்ற ஆண்டு எனது சிறுகதைத் தொகுப்பிற்கு கூட்டமொன்று பரிசல் புத்தக நிலையத்தில் நிகழ்ந்தது. ஆரோக்யமான கருத்து பரிமாற்றங்களுக்கிடையில் வேல்கண்ணன் நூலொன்றை பரிந்துரைத்தார். எனது புனைவுகளில் தென்படும் உளவியல் கூறுகளும், தர்க்க மனப்பான்மையும் கூர்பட்டுக்கொள்ள உதவும் என சிபாரிசு செய்தார். அந்நூல் 1882 ஆம் ஆண்டு பிரேசிலில் மச்சடோ டி ஆசிஸ் என்பவரால் எழுதப்பட்ட “மனநல மருத்துவர்” எனும் நெடுங்கதையாகும்.


அத்தாகூய் என்ற நகரத்தில் வாழ்ந்த சிமோன் பக்காமார்த்தே எனும் மருத்துவரைப் பற்றி வரலாற்றாசிரியரின் கதைகூறல் மொழியில் இக்கதை அமையப்பெற்றிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கமும் இவருடைய புனைவுக்கான காலகட்டம். இதை விஞ்ஞான வளர்ச்சிக்கான காலகட்டம் என்றும் குறிப்பிடலாம். இந்த வளர்ச்சியால் ஈர்க்கப்படும் குணாம்சம் கொண்டவராகவே நாயகன் சிமோன் பக்காமார்த்தே சித்தரிக்கப்படுகிறார். விஞ்ஞானத்தை தவிர்த்து எதன் மீதும் நம்பிக்கையற்றவராகவே இருக்கிறார். கதையில் அவர் சாதாரண மருத்துவரும் கூட. அழகைப் பிரதானப்படுத்தாமல் நல்ல உடல் கூற்றியல் கொண்ட மோனா எவரிஸ்தா என்பவரை மனைவியாக்கிக் கொள்கிறார்.

அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. அவர் அறிந்த மருத்துவமும் கைகொடுப்பதில்லை. பிற தேசங்களிலிருந்து மருந்து கோட்பாடுகளை அறிய விழைகிறார். அம்மருத்துவ முறைகளும் கைகொடுக்கவில்லை எனும்போதும் அவருடைய விஞ்ஞான பசிக்கு அவை தீனியிட்டன. உடல் சார்ந்த மருத்துவம் மனதுடன் ஒன்றியிருப்பதாய் உணர்கிறார். அதை அனுபவப்பூர்வமாக அறிய அத்தாகூய் நகரத்தை சோதனை களமாக்குகிறார்.

மருத்துவருக்கு ஏற்படும் அத்திறப்பிலிருந்து கதை சிடுக்கான தர்க்கங்களுக்கு நகர்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஊருக்குள் நிறைய பேர் இருக்கிறார்கள் என அவர்களை குணப்படுத்த ஓர் காப்பகத்தை நிர்மானிக்கிறார். கிரீன்ஹவுஸ் எனப் பெயரிடுகிறார்.

மருத்துவர் தன் சிந்தையை முழுமையாக சோதனைக்கு கொடுத்துவிடுகிறார். ஒவ்வொரு மனிதரையும் மனப்பிறழ்வின் பார்வை கொண்டே அவதானிக்கிறார். விளைவாக பலர் அந்த காப்பகத்தில் சிகிச்சைக்காக அடைக்கப்படுகின்றனர். மக்களிடமே அந்த காப்பகம் சார்ந்து அச்சம் உருவாகத் தொடங்குகிறது. ஏறிக் கொண்டே செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும், அதனால் பயம் கொள்ளும் மக்களின் எண்ணமும் கிளர்ச்சிக்கும் அவ்வூரின் ஆட்சிமாற்றலுக்கும் வழிகோலுகிறது.

பைத்தியம் குறித்த தேடலுக்கு பகுத்தறிவை எல்லையாக வைக்கிறார். பகுத்தறியும் தன்மையை இழக்கும் தருணத்தில் பிறழ்வுக்கான சாத்தியங்கள் உருவாகின்றன என்கிறார். இத்தர்க்கம் பகுத்தறிவின் எல்லை எது எனும் கேள்விக்கு மருத்துவரையும் வாசகரையும் இட்டு செல்கிறது. இதை ஆமோதித்து மதமும் கதையில் பின்வருமாறு விளக்கமளிக்கிறது.

“இது பேபல் கோபுரத்தில் நடந்தது போன்ற ஒரு மொழிக்குழப்பம். எல்லாம் ஒன்றோடு ஒன்று முற்றாக சரிந்து குழம்பிப் போய் இருக்கிறது. ஒரு மனிதன் பகுத்தறிவை இழக்கும் போது ஒன்றிலிருந்து மற்றோன்றுக்கு வழுக்கிக்கொண்டே இருப்பான்.”

ஒன்றிப்போன கருத்தியல்கள் பகுத்தறிவின் எல்லை நோக்கி கதையை நகர்த்தினாலும் மருத்துவரின் இரண்டாம் செயல்பாடு கதையை மனநலம் நோக்கி நகர்த்திவிடுகிறது. காப்பகத்தில் இருக்கும் அனைவரையும் விட்டுவித்துவிட்டு முழுக்க சமநிலை கொண்டவர்களை காப்பகத்தில் அடைக்கத் துவங்குகிறார். பைத்தியம் அல்லது பிறழ்வு என்பதற்கான விளக்கம் நோக்கி இந்த இரண்டாம் செயல்பாடு அமைந்திருக்கிறது.

இந்நாவல் வெறும் மனநலம் சார்ந்த, விஞ்ஞானத்தின் மீது ஈடுபாடு கொண்ட மருத்துவரின் கதையன்று. அவர் வழியே சமூகத்தின் உளவியலை ஆராயும் கதை. ஒவ்வொரு நோயாளியைக் குறித்த விவரணைகளும் நூலில் இடம்பெற்றிருக்கிறது. அவை ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும் நோய்க்கூறாக புனைவு மொழியில் உருமாற்றம் கொள்கிறது. உதாரணமாக மருத்துவரின் மனைவிக்கு நகைகளின் மீதும், ஆடைகளின் மீதும் பெருங் கவர்ச்சி ஏற்படுகிறது. அது குறுகிய உலகிற்குள் அவளை அடைத்துவிடுகிறது என காப்பகத்தில் சேர்க்கிறார். சவரத் தொழிலாளி மருத்துவரை எதிர்த்து மக்களை ஒன்றிணைத்து கோஷமெழுப்பி கலகத்திற்கு வழிவகுக்கிறான். ஆட்சியையும் பிடிக்கிறான். கலகத்தில் வன்முறையும் இடம்பெறுகிறது. மக்கள் வன்முறையையும் தாங்கிக்கொண்டு வன்முறையாளர்களையே ஆட்சியில் அமர்த்துகிறார்கள் எனும் பார்வை சமூகத்தில் இருக்கும் mob psychology ஐ தோலுரித்து காட்டுகிறது. ஆசிரியரின் புனைவு மொழியில் கதையில் வரும் சின்ன கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு நோய்க்கூற்றின் அடையாளமாக உருவகப்படுத்தப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பக்கமும் ஒரு தர்க்கத்தை விளைவிக்கிறது. சமூகத்தின் நோய் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. மருத்துவத்தின் வழியே மக்களின் அரசியலைப் பேசுகிறது. அதை அழகுற ராஜகோபால் தமிழில் மொழியாக்கியிருக்கிறார். பரிந்துரைத்த வேல்கண்ணனுக்கு அன்பும் நன்றியும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக