தகவல்களில் ஒளியும் வாழ்க்கை


“எக்ஸ்டஸி” எனும் சொல்லிற்கு இணையம் ‘மெய் மறந்த இன்பம்’ எனத் பொருள்கொடுக்கிறது. இவ்வர்த்தம் வாழ்வியலோடு பொருள் கொள்ள வேண்டியதும் கூட. தமிழர்களுக்கு இத்தகைய கொண்டாட்டமான வாழ்வியல் கிடையாது. அதற்கு பல்வேறு சமூக காரணிகள் துணைபுரிகின்றன. அந்த காரணங்களின் துணை கொண்டு யதார்த்த வாழ்க்கைக்கும் கொண்டாட்டமான வாழ்க்கைக்குமான இடைவெளியை பேசுகிறது சரவணன் சந்திரனின் “எக்ஸ்டஸி” கட்டுரைத் தொகுப்பு. இளங்கோவன் முத்தையா என்பவர் இக்கட்டுரைகளை தொகுத்திருக்கிறார்.

அரசியல், சமூகம், வணிகம், பத்திரிக்கை, வாழ்க்கை போன்ற சகல விஷயங்களைப் பற்றிய தனித்துவ பார்வையை இக்கட்டுரைகள் கொண்டிருக்கின்றன. சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகள் குறித்தும் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை எளிய மனிதர்களின் வாழ்க்கையோடு பொறுத்திப் பார்த்து அதன் வழி பொது உரையாடலை துவக்குவது நூலின் தனித்துவ விஷயங்களாகின்றன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை சிறு குறு வியாபாரிகளின் நியாயப்பாடுகளிலிருந்து எழுதுவது அச்செயல்பாட்டின் குறுக்குவேட்டு தோற்றமாகிறது.

எளிய மனிதர்களின் கனவுகளை, அதை அடைய எத்தனிக்கும் முயற்சிகளை, அதற்கு உருவாகும் சமூகத் தடைகளை, அதனூடாக பொதிந்திருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை, அதற்கு துணை நிற்கும் சாதிய மனப்பான்மையை தோராயமாக அனைத்து கட்டுரைகளும் உள்ளடக்கியிருக்கின்றன. பயணங்களின் வழி சந்தித்த மனிதர்களையும் வாழ்க்கையையும் முன்வைத்து தமிழ் நிலத்தின் வாழ்க்கையை மதிப்பிடுகிறார். அதன் வழி வாழ்வாதார இழப்புகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் நல்ல புனைவுக்கான கரு. அதை கட்டுரையாக சுருக்கியிருப்பது மட்டுமே நூல்வழி வருத்தமாக எஞ்சி நிற்கிறது.

எளிய மனிதர்களின் கொண்டாட்டமான வாழ்க்கை அதிகாரத்திடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. அதை மீட்டெடுக்க போராடும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கிறது “எக்ஸ்டஸி” கட்டுரைகள்.

- இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக