காலத்தின் நிழல்


அசோகமித்திரனின் கட்டுரைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. இணையம் வழி ஒன்றிரண்டு வாசித்திருப்பதாக ஞாபகம். அவருடைய முகம் புனைவின் வழி மட்டுமே என்னுள் நிலைபெற்றிருக்கிறது. இந்நிலையில் அவருடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்றையாவது வாசித்து பார்க்கலாம் என்றெண்ணினேன். 2014 ஆம் ஆண்டு வெளியான “குறுக்குவெட்டுகள்” எனும் தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன்.


படைப்பாளரின் கட்டுரைகள் அக்குறிப்பிட்ட படைப்பாளி சார்ந்த ஆளுமையையும், சமூகம் சார்ந்த பார்வையையும் நன்குணர பேருதவி புரியும். அசோகமித்திரன் குறித்து ஏற்கனவே இருக்கும் பரவலான பிம்பமானவை எளிமையானவர், எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை தன் புனைவில் அடையாளம் காட்டியவர், எதிர் விமர்சனம் வைக்காதவர், மனிதர்களின் வாழ்க்கை சூழ்நிலையை பொறுத்தே மாறுகிறது என்பதை கதைகளின் வழி எடுத்துக் கூறியவர் என்பனவாகும். இவற்றின் நுண்மையான வடிவங்களை கட்டுரைகளில் இனங்காணமுடிகிறது.

கட்டுரைத் தொகுப்பு மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கிறது. “இயல், இசை, நாடகம்…சினிமாவும்”, “ஆடிய ஆட்டமென்ன”, “சில நூல்கள்” ஆகியனவாகும். இவற்றை கட்டுரைகள் என குறிப்பிடுவதைக் காட்டிலும் column writing  என சொல்லப்படும் பத்தி எழுதுதல் வகையை சார்ந்தது என்றே சொல்லலாம். எந்த ஒரு கட்டுரையும் குறிப்பிட்ட விஷயத்தை மையமாக வைத்து நகர்வதில்லை, மாறாக ஒவ்வொரு கட்டுரையும் ஆரம்பிக்கப்படும் இடத்திலிருந்து வாழ்க்கையை பரிசீலனை செய்யும் கருவியாக மாற்றம் கொள்கிறது. வேறு வேறு தகவல்கலைக் கொண்டு வாழ்க்கையை அளவிட முற்படுகிறார்.

2010க்கு பிறகான காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இவற்றில் இருக்கும் பல விஷயங்களும், கருப்பொருள்களும் அவரின் நினைவோடைகளாக இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு கட்டுரையும் இன்னமும் இவற்றைக் குறித்த ஆழமான விஷயங்களை எழுதி/எழுத வைத்திருப்பாரோ எனும் எண்ணத்தையும் இணைகோடாக கொள்ள வைக்கிறது. மேலும் அசோகமித்திரன் முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்து மறைந்தவர். அவருக்கு அந்த எழுத்து வாழ்க்கை எதை கொடுத்தது எனும் கேள்வியை அவரே பல முறை எதிர்கொண்டிருக்கிறார். எழுத்தாள வாழ்க்கை மீதான விமர்சனங்களை பல கட்டுரைகளில் முன்வைக்கிறார். எழுத்து வாழ்க்கை சார்ந்த கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கிறார்,

எப்படியோ காலம் தள்ளிவிட்டேன். ஆனால், இன்னொரு முறை முடியாது”

இந்த சொல் தமிழ் இலக்கியத்தின் சாபம் என்றே கருதுகிறேன். ஆனாலும் அவர் முன்வைத்த பாத்திரங்கள் யாருக்கானவை எனும் கேள்வியை சமூகம் எதிர்கொள்ள நேர்ந்தால் அன்று இப்படி அவரை சொல்ல வைத்தமைக்கு சிறிதேனும் கூனிக் குறுகும்.

கட்டுரைகளிலும் எளிய மனிதர்களை அடையாளம் காட்டுகிறார். சென்னை மீது அவருக்கு இருந்த வாஞ்சை எளிய மனிதர்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆட்டோ ரிக்ஷாக்களைக் குறித்த கட்டுரையில் ஆட்டோவிற்குள் ஒடுங்கும் மனிதனின் நிலையை விவரிக்கிறார். இந்தியா முழுவதும் இருக்கும் ஆட்டோக்காரர்களின் நிலையுடன் ஒப்பிடுகிறார். வெறும் கரிசனமாக துவங்கும் கட்டுரையின் சொற்கள் வாசிப்பின் போக்கில் சமூகம் சார்ந்த கேள்விகளாக பரிணமிக்கின்றன.

தேவ் ஆனந்த் குறித்த இரங்கல் கட்டுரையில் அவருடைய  வாழ்க்கையில் இருக்கும் கசப்பான அனுபவங்களை பட்டியலிட்டு, அதில் தேவ் ஆனந்த தன் சுயசரிதையில் தவிர்த்திருப்பதை எண்ணி பெருமை கொள்கிறார். வாழ்வின் கசப்புகளை களைந்தெறிவதும் தரிசனம் தான். அதை அன்றாடம் பார்க்கும் மக்களிடமும், அவர்களின் வாழ்க்கையிலிருந்து களைந்து எறிய முற்படுவதும் படைப்பாளின் கடமை எனும் பின்னொலியை அவ்வப்போது எழுத்து அனுபவங்களை பகிரும் கட்டுரைகளில் உணர முடிகிறது.

சென்னையைப் பற்றிய கட்டுரைகளிலும் சரி மனிதர்களைப் பற்றிய கட்டுரைகளிலும் சரி இறந்த காலத்தை சொற்களின் வழியே மீட்டெடுக்க முனைகிறார். தி.நகரின் வளர்ச்சியையும், பெருங்கூட்டம் அலைமோதும் சரவணா ஸ்டோர்ஸ் பற்றிய விவரணைகளின் வழியேவும் பழைய சென்னையை வாழ்வனுபமாக கொடுக்கிறார். வெள்ளம் வந்த நேரங்களில் காட்டு வளங்களை அழித்து கட்டிடங்களாக மாறிய தன்மையே காரணம் என பலர் விமர்சனம் வைத்தனர். அதே  சென்னையை அ.மி பார்க்கும் விதம் வேறாக இருக்கிறது. ஒரு கட்டுரையின் முடிவில் aerial view வில் சென்னையை விவரிக்கிறார். அதில் சில பச்சை நிறங்கள் அங்கங்கே தெரிகின்றன. முற்றாக அழிந்துவிடவில்லை. இருப்பதை பாதுகாப்போம் என முடிக்கிறார்.

மேற்கூறிய அத்தனை அம்சங்களும் நூலின் இரண்டாம் பகுதியிலும் நீடிக்கிறது. க்ரிகெட் குறித்து தமிழில் தொடர்ந்து நுண்மையாக எழுதுபவர்கள் குறைவானவர்களே. அதிலும் அ.மி தன் பங்கை ஆற்றியிருக்கிறார். க்ரிக்கெட் விளையாட்டு பல வகைமைகளைக் கடந்து இப்போது 20-20 போட்டிகள் பரவலாக ஆடப்பட்டு வருகின்றன. பாரம்பரியமாக க்ரிக்கெட்டை ரசித்து வருபவர்களுக்கு இந்த வேகமான ஆட்டம் சில மதிப்பீடுகளை இழப்பதாக தோற்றமளிக்கலாம். வெறும் வேகத்தை இவ்வகைமை பிரதானப்படுத்துகிறது என குறை கூறலாம். டெஸ்ட் போட்டிகள் க்ரிக்கெட்டின் உண்மையான உருவத்தை எடுத்துக் காட்டுபவை. அதன் ஆரம்பம் முதல் க்ரிக்கெட்டை ரசித்திருப்பவர் அ.மி.

க்ரிக்கெட்டைக் குறித்து மூன்று விதமான பார்வைகளை முன்வைக்கிறார். ஒன்று அவர் விளையாடிய பள்ளி கல்லூரிக் கால நினைவுகள். செகந்தராபாத்தில் விளையாடிய விளையாட்டுகளையும் அதில் சிறந்த வீரர்களை அவர் நினைவு கூறும் விதமும் அவரின் பால்யகாலத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அதன் வழியே ரஜாக்கர்களின் வாழ்க்கையையும், நவாப்பின் வீழ்ச்சியையும் பேசுகிறார். வரலாறு சில சமூகங்களை விளிம்பு நிலைக்கு தள்ளியிருந்தால் அவர்களின் திறமைகளும் விளிம்பு நிலையிலேயே வைக்கப்படும் என்பதை விளையாட்டை முன்வைத்து கூறுகிறார்.

மீத இரண்டு பார்வைகளும் சர்வதேச வீரர்கள் சார்ந்து அமைகிறது. அதில் ஒன்று ரஞ்சிக் கோப்பையிலிருந்து எழுந்து வரக்கூடிய வீரர்களின் கஷ்டங்கள் சார்ந்தவையாக இருக்கின்றன. அதில் தோற்கும் வீரர்களின் திறமையை அடையாளம் காட்டுகிறார். மற்றொன்று இந்தியா 1940-1950 காலகட்டங்களில் ஆடிய சர்வதேச ஆட்டங்களை நினைவுகூர்கிறார். அதை அவர் ரேடியோவின் வழியே ரசித்த விதத்தையும், அதற்காக அவர் செய்த பிரயத்தனங்களும் காலத்தின் கண்ணாடியாக எழுத்தில் நிற்கிறது. தொலைதொடர்பு சாதனங்களின் வழியே விளையாட்டு பொதுவுடைமையாகியிருக்கிறது. மதத்தை முன்வைத்தும் அல்லது மதம் சார்ந்த விளையாட்டு போட்டிகளும் நிகழும் எனும் தகவல்கள் க்ரிக்கெட் சார்ந்த மரபையும் அறியாமல் க்ரிக்கெட் ரசித்து கொண்டிருக்கிறோம் என்பதை எச்சரிக்கிறது.

கடைசி பகுதியாக “சில நூல்கள்” இடம்பெற்றிருக்கிறது. இத்தொகுப்பு முழுக்கவே ஆங்காங்கே பல நூல்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்கிறார். சொல் உதிர்ப்புகளாக அல்லாமல் தீவிரத்தன்மையுடன் அவற்றை முன்வைக்கிறார். நூல்கள், எழுத்தாளர்கள் என்று மட்டுமல்லாமல் திரைப்படங்கள், இசைக் கலைஞர்கள், நாடகக்காரர்கள் என்று அவர் முன்வைக்கும் பெயர்களும் அவர்கள்தம் படைப்புகளும் காலத்தின் அடையாளங்களாக உருவகப்படுத்தப்படுகின்றன. கூடுதல் தகவலாக புகைப்படக் கலைஞர்களையும் பல இடங்களில் புகழ்கிறார். சி.சு செல்லப்பாவைப் பொல அசோகமித்திரனும் புகைப்படம் எடுக்க முனைந்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படம் நியுயார்க் டைம்ஸில் வெளியாகியும் இருக்கிறது. மயிலாப்பூரில் இருக்கும் வேதபாடசாலையில் எடுத்த புகைப்படம். அதன் நெகடிவ் கூட தன் வசம் இல்லை என வருந்தியிருக்கிறார். இதுபோன்று நூல் கொடுக்கும் அசோகமித்திரனின் பிம்பம் அவரிடம் எப்போதும் இருக்கும் சிரிப்பின் நீளத்தை அதிகரிக்க வைக்கிறது.

எழுத்து படைப்பாளனிடம் கோரி நிற்கக்கூடிய பொறுப்புணர்ச்சியை பல இடங்களில் முன்வைக்கிறார். அனுபவம், எழுத்து சார்ந்து நிறைய விஷயங்களை அவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. முழு நேர எழுத்தாளன் ஆவதற்கு யாரையும் அவர் ஊக்குவித்ததில்லை. அதே நேரம் எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் வார்த்தை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாய் நிற்கிறது.

“எழுத்தாளனின் பணி, நன்கு எழுத முயற்சி செய்து வருவது தான். அவன் கவனம் அதில்தான் இருக்க வேண்டும். இதர நாடுகளோடும் இதர மொழிகளோடும் ஒப்பிட்டுக்கொள்வது எந்தப் பயனும் தராது. தன்மையில், வடிவத்தில், தரத்தில் ஒப்பிட்டுக்கொள்ளலாம்; கொள்ளவேண்டும். ஆனால் விளைவுகள் குறித்து அல்ல”

அசோகமித்திரனின் குறுக்குவெட்டுகளில் படிந்திருக்கிறது காலத்தின் நிழல்!

Share this:

CONVERSATION