வேரின்றி அமையும் உலகு


அடையாறில் 450 ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது என்பதை அறிந்த கனம் கற்பனையில் புதிதாய் விதையூட்டப்பட்டதை உணர்ந்தேன். இணையதளத்தில் அந்த மரத்தை தேடினால் எளிதில் அதைப் பார்த்துவிடலாம். ஆனாலும் மனம் ஒப்பவில்லை. சில நாட்கள் நேரில் சென்று பார்க்கவும் விரும்பாமல் கற்பனையிலேயே அதைக் காண முயன்றேன். விருட்சம். வரலாற்றின் சுவடுகளை சுமக்கும் அடிமரம். விழுதுகளின் வழியே நடந்தால் மறையக்கூடிய வகையில் காலம் சமைத்த ஆரண்யம். இருண்மையும் வெளிச்சமும் புகலிடம் தேடும் மரத்தை கற்பனையில் எட்டியிருந்தேன். முழுமையடையவிருந்த நேரத்தில் பார்க்க வேண்டிய எண்ணம் துரத்தியடித்தது.

நண்பர் ராஜனுடன் செல்லலாம் என முடிவெடுத்தேன். இருவருக்கும் ஒருசேர நேரம் ஒன்றியமையாதலால் நாட்கள் தள்ளிப்போயின. திடிரென ஒரு திங்களன்று செல்ல முடிவெடுத்தோம்.  அக்னி நட்சத்திர வெயில் காலையிலேயே வெம்மையை எழுப்பியது. சிறிது தூர நடைக்கே இருவருக்கும் வியர்த்தது.

அடையாறில் இருக்கும் தியோசாபிகல் சொசைட்டியினுள் அம்மரத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் பெரிய ஆலமரங்களில் இதுவும் ஒன்று. இணையத்தில் தேடுகையில் உலகம் முழுக்க வியாபித்திருக்கும் மதங்களிலிருந்து நற்கருத்துகளை, நல் மரபுகளை எடுத்து அதிலிருந்து பேருண்மையை நோக்கி மானுடத்தை வழிநடத்த துவங்கப்பட்டது இந்த அமைப்பு.  அதன் தலைமையகமாக அடையாறில் இருக்கும் இடம் திகழ்கிறது. காலையில் எட்டரை மணி முதல் பத்து வரை திறந்திருக்கும் என்பதை அறிந்திருந்தோம்.

வண்டியில் செல்வதிலிருந்தே இலக்கியம், சமூகம், விளையாட்டு, அரசியல் என பேச்சு தொடர்ந்தது. அங்கு நுழைந்தவுடன் ஆலமரம் சார்ந்த கற்பனைகள் எழத் துவங்கின. கதைவழி மட்டுமே அறிந்த மிருகத்தை காண விழையும் சிறுவனின் பார்வையைக் கொண்டிருந்தேன். செவிகளில் சன்னமாக ராஜனுடனான உரையாடல் விழுந்தவண்ணம் இருந்தது.

பெரிய பரப்பிலான வேலியில் ஆலமரத்தை அடக்கி வைத்திருந்தனர். வாயிலில் ஒரு திண்ணையும் நுழைவாயிலைப் போன்ற தோற்றமும் அமைந்திருந்தது. அதுவும் வேலிக்குள் அடங்கியிருந்தது. வாசலில் ஒருவர் மரத்தை பாதுகாத்துக் கொண்டிருந்தார்(!). கட்டுமான வேலைகள் நடப்பதால் மரத்தை சுற்றிப் பார்க்கவியலாது என்று நடைபயில்பவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் இருவரையும் சிறிது கவனித்த அவர் அருகிலிருந்த திண்ணையில் அமரச் சொன்னார். மரம் எங்களுக்கு பின்னிருந்தது.


மரத்தை அருகாமையில் தொட்டுப் பார்க்க முடியவில்லையே எனும் ஏக்கம் வலுத்தது. அதை விசாரிக்கையில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் உள்ளே அனுமதியில்லை என்றார். சிறிது நேர இடைவெளியில் அம்மரம் சார்ந்து அவர் அறிந்திருந்த தகவல்களை சிரிப்புடனும் சுவாரஸ்யம் குன்றாமலும் சொல்ல ஆரம்பித்தார்.

மரம் தோராயமாக ஆறு ஏக்கர் பரப்பளவில் வியாபித்து இருக்கிறது. அதன் மூல வேர் 1994 இலேயே வீழ்ந்துவிட்டது. (இணையத்தில் 1996 எனும் தகவல் கிடைக்கிறது). விழுதுகள் மரமாகி அவை இணைந்த விதமாக பரவி இருக்கிறது. மேலும் வேலியைத் தாண்டும் விழுதுகளையும் கிளைகளையும் குறிப்பிட்ட காலத்தில் செப்பனிட்டுவிடுகிறார்கள். வயதான விழுதுகள் அல்லது அடிமரம் உள்ளுக்குள்ளேயே வெடித்து உலுத்துவிடுகிறது.

மீண்டும் பார்வை மரத்தின் பக்கம் திரும்பியது. பார்வை லயித்து இருந்தாலும் என் கற்பனை உடையத் தொடங்கியது. கண்கள் அதன் விழுதுகளின் வழியே ஊடுருவி வழி தேட முயன்றது. கூறியவற்றிற்கு சற்றும் சம்மந்தமில்லாத விஷயங்களையும் ஆச்சர்யத்துடன் பகிர ஆரம்பித்தார். காலை ஐந்தரை முதல் ஏழரை வரை முக்கியஸ்தர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஸ்டாலின், விஜயபாஸ்கர் போன்றோர் வருவார்கள் என்று பகிர்ந்தார். வேரிலிருந்து முளைத்த கிளைகள் என மனம் அசைபோட்டது. மீண்டும் சன்னமான அமைதிக்கு பின் அவர் பகிர்ந்த செய்தி ஆலமரத்துடன் ஒன்ற வைத்தது. நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் காந்தி, நேரு மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் அமர்ந்திருந்தார் என்று திரும்பிவிட்டார். அச்செய்தி எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை, இருப்பினும் மகிழ்ச்சியளித்தது.

மேலும் சிலர் அங்கு நடைபயில வந்தவர்கள் அத்திண்ணையில் அமர விரும்பியதால் நாங்கள் வாசல் நோக்கி சருகுகளை மிதித்த வண்ணம் நடக்கத் துவங்கினோம். மரத்தைப் பார்த்த பின்பு பேசிய பேச்சுகள் அனைத்தும் மரத்துடன் இணைந்ததாகவே தென்பட்டது. காந்தி, திராவிடம், சாதியம், மார்க்சியம், இலக்கியம் என அனைத்தின் வேர்களையும் நாம் எப்போதோ தொலைத்துவிட்டோம். யாரோ நிர்ணயித்த சட்டகத்தினுள் காலந்தோறும் விழுதுகளும் கிளைவிட்டு படருகின்றன. சில விழுதுகள் வேலிகளை மீற முயல்கின்றன. மீண்டும் வேலிக்குள்ளே தள்ளிவிட ஆட்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சித்தாந்தமும் வேலிகளை மீற முயல்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில் வேலிகளில் இருந்து மீறுவதற்கே சித்தாந்தங்கள் உருவாகின்றன. பின் வந்த விழுதுகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. அதைப் பார்க்கும் எல்லோரும் மூலவேரைக் கேட்கிறார்கள். பார்வைக்கு அப்பால் வெறும் சொல்லாக மாறியிருக்கிறது பெரு விருட்சத்தின் விதை.

முடிவிலா தர்க்கத்தில் இருக்கும் போது ராஜனுக்கு நினைவுகள் வேறெங்கோ பறந்தவண்ணமிருந்தது. அலைபேசியில் காணொலி ஒன்றைக் காட்டத் துவங்கினார். சமீபத்தில் வெளியாகியிருந்த LA La Land திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியது. சில மைல்களுக்கு நீண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல். சிறிதும் அசைவின்றி மக்கள் காத்திருக்கிறார்கள். மஞ்சள் நிறத்திலான உடையில் பெண்ணொருத்தி காருக்குள் பாடிக் கொண்டிருக்கிறாள். பாடலில் ரசித்து இருப்பவள் காரை விட்டிறங்கி எல்லோரையும் எளிதாக பாடவும் ஆடவும் அழைக்கிறாள். போக்குவரத்து ஸ்தம்பித்த இடத்தில் இருக்கும் அனைவரும் தங்களை மறந்து இசையிலும் நடனத்திலும் திளைக்கிறார்கள். அதை ஆரம்பித்த பெண்ணை காட்சி காட்ட மறுக்கிறது. இடையிடையே வந்து செல்கிறாள். இயல்பாக போக்குவரத்தும் சீராகிறது. ஒழுங்கில் களைகிறார்கள்.  


.
இயற்பியலில் entropy எனும் விஷயம் இருக்கிறது. நீரை கொதிக்க வைக்கும்போது முதலில் ஒரு அணு தன் உருவை மாற்றும். நீரின் இயல்பில் ஒழுங்கின்மை ஆரம்பிக்கும் இடமது. பின் அது ஒவ்வொரு அணுவாக பரவி நீர் முழுக்க ஒழுங்கின்மையின் கூடாரமாக மாறும். அது தன்மையை இழந்து வேறொன்றாக மாறுகிறது. நீராவியாகிறது. காலத்தைப் பொறுத்து ஒழுங்கின்மையின் அளவும் கூடும் என்கிறது இயற்பியல். மேற்குறிப்பிட்ட பாடலின் விதத்தில் அன்றாட ஒழுங்கை குலைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். அந்த ஒழுங்கின்மை இயல்பில் நீர்த்துவிடுகிறது. அது நிலுவையில் இருக்கும்போது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருப்பின் சிரிக்கவும், கவலைக்கிடமான சூழல் எனில் வருத்தம் கொள்ளவும் தயராக இருக்கிறார்கள். ஆனால் அதன் ஆரம்பத்தை அறிய முனைவதில்லை. அவை கண்களுக்கு அப்பால் ஒரு சொல்லாக, காட்சியாக உருமாறியிருக்கும். கண்முன்னிருந்த ஆலமரமும், அவர் காண்பித்த காணொலியும் எனக்குள் ஒரு சொல்லாக மாறியிருக்கிறது.

நவீன வாழ்க்கையின் அத்தனை இயல்களையும் ஆலமரத்துடன் இணைத்து அறிந்து கொள்ளமுடிகிறது. எப்போதோ யாராலோ வைத்த விதையெனினும் விருட்சம் காலத்தைப் பொறுத்து, காலத்தின் அடையாளமாக மாறி நிற்கிறது. அதன் அருகிலேயே வசிக்கும் சர்ப்பங்கள் எப்போதும் ஆசிர்வதிக்கப்பட்டவை!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக