புதுமைப்பித்தனின் அகலிகை


இராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி.  அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். கௌதமர் ஆற்றங்கரைக்கு செல்லும் சமயம் அவரைப் போன்றே வேடம் பூண்டு அகலிகையை அடைகிறான். இதைக் கண்ட கௌதமர் அகலிகையை சந்தேகம் கொண்டு கல்லாக மாற சாபமிடுகிறார். பின் ராமனின் கால்பட்டு மீண்டும் அகலிகையாகிறாள்.
இந்தப் புராணக் கதையை மையப்படுத்தி புதுமைப்பித்தன் இரண்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 1934 ஆம் ஆண்டு எழுதிய சிறுகதை அகல்யை. அக்கதையில் மனத்தூய்மையில் தான் கற்பு இருக்கிறது என்கிறார் கௌதமர். மேலும் உணர்ச்சி மிகுந்தால் தேவனும் மிருகமாவான் என்பதை சொல்லி இந்திரனை மன்னிக்கிறார். அதே நேரம் ஏன் உணர்ச்சி மிகுதியில் உன் உடல் கல்லானது என அகலிகையை சந்தேகிக்கவும் செய்கிறார். குற்றவுணர்ச்சியால் துடிக்கும் இந்திரனுக்கு மன்னிப்பு கிடைக்கிறது. ஆனால் கோபத்தின் கனலில் இருக்கும் அகலிகைக்கு சந்தேகமே பதிலாய் கிடைக்கிறது.
1943 இல் புதுமைப்பித்தன் எழுதிய மற்றொரு சிறுகதை சாப விமோசனம். ராமன் கால்பட்டு மீண்டும் அகலிகையான பிறகு அவளுடைய வாழ்க்கையை சித்தரிக்கும் சிறுகதை அது. விமோசனத்திற்கு பிறகு அவள் சந்திக்கும் ஒவ்வொரு ஆடவரிடமும் இந்திரனைக் காண்கிறாள். அச்சம் கொள்கிறாள். சுதந்திரமற்று தன்னை ஒடுக்கிக் கொள்கிறாள்.
அக்கதையில் சீதையும் இடம்பெறுகிறாள். ராமன் தன் கற்பை நிரூபிக்க விரும்பியதால் அக்னி பிரவேசம் செய்த விஷயத்தை கூறிய மறுநொடி ராமனை அகலிகை ‘அவன்’ என விளிக்கிறாள். மனைவியை சந்தேகித்து கல்லாக்கிய கௌதம ரிஷியையும் மனைவியை சந்தேகித்து அக்னிப்பிரவேசம் செய்யச் சொல்லும் ராமனையும் ஒரே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறாள்.  கற்பு எனும் கோட்பாடு யாரிடமிருந்து வரையறுக்கப்படுகிறது ? எந்த மக்களுக்காக தங்களது மனைவியின் கற்பை நிரூபிக்க விரும்புகிறார்கள் ? ஆகிய கேள்விகளை பொதுவில் எழுப்புகிறாள். உணரப்படுவதே உண்மை என்பது அகலிகையின் வாதம். ராமனும் கௌதமருமோ உலகிற்கு அவ்வுண்மையை நிரூபிக்க முனைகிறார்கள். அவர்கள் முற்படுவதில் பெண்களின் பக்கம் செவி கொடுத்து கேட்கப்படுவதேயில்லை. ஆடவர்களின் சொல் தீர்வாகிறது. ஆடவர்களின் செயல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகிறது.
இவ்விரு கதைகளும் வேறு வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ஒன்றில் பெண்ணின் கோபம் கேட்பாரற்று கிடக்கிறது. மற்றொன்றில் சாப விமோசனம் பெற்றும் இயல்பு வாழ்க்கைக்கான உரிமையைக் கோருகிறது. இந்த இருநிலைகள் சமகாலத்திலும் மாற்றம் கொள்ளாமல் நீடிக்கிறது. அகலிகையை வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணாக கருதும் கணத்தில் கதையின் தன்மை உருமாறுகிறது. அவர்களின் பார்வையில் பெண்களின் உலகம் பரிசீலனைக்குட்படுகிறது. அவை எழுப்பும் கேள்விகளும்,  கோரும் உரிமைகளும், விரும்பும் பாதுகாப்பும் இன்றளவும் பதிலற்று கிடக்கின்றன. அகலிகைகளால் நிரம்பிய உலகம் இது. ஆனாலும் அவர்களின் குரலை உலகம் முழுதாக அறிந்துகொள்ளவில்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுமைப்பித்தன்களால் சொல்லப்பட்ட வண்ணம் இருக்கிறது அகலிகைகளின் கதைகள்!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக