புனைவாகும் காந்தியும் காந்தியக் கதாபாத்திரங்களும்

கதை மாந்தர்களை முன்வைத்து கதையுலகத்தை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று கூட்டு அனுபவங்களின் ஒற்றைப் பிரதிநிதியாக ஒருவரைப் படைத்து நாமறிந்த உலகிலோ அல்லது கற்பனையிலான உலகிலோ உலவவிடுவது. இந்த மனிதருக்கு என எழுத்தாளர் முன்தீர்மானிக்கும் கொள்கைகளிலிருந்து பிறழாது இருப்பார். அக்கொள்கைகளுடன் கதையினுள் இருக்கும் சமூகத்தோடு இணங்கிப் போவதும், சிடுக்கு கொள்வதும் கதைப்போக்கின்பாற் பட்டது. இரண்டாவது வகை எழுத்து உலகம் நன்கறிந்த மனிதர்களை கதைமாந்தராக்குவது. இது முன்னதைக் காட்டிலும் சவாலானது. உதாரணம் கொண்டுசொல்கிறேன்.

என் வாசிப்பின் அடிப்படையில் காந்தியை முன்வைத்து எழுதப்பட்ட கதைகள் – அசோகமித்திரனின் ‘காந்தி’, தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காந்தியோடு பேசுவேன்’, பால் சக்கரியாவின் ‘இது தான் என் பெயர்’ முதலியன. இக்கதைகளின் பெரும் சவால் காந்தி எனும் கதாபாத்திரத்தித்தை காந்திய விழுமியங்களில் இருந்து வழுவாமல் பாதுகாப்பது. பின்னப்படும் கதை வழியே காந்தி தன் கொள்கைகளுடன் சண்டையிடலாம், தோற்றுப் போகலாம். ஆனால் காந்தியக் கொள்கைகளைப் பொய்யாக்கக்கூடாது. தகவல்கள் சமூக வரலாற்றை சொல்லிவிடுகின்றன. ஆனால் தகவல்களுக்கிடையே இருக்கக்கூடிய வாழ்வனுபவத்தை எடுத்துக்கூற ஓர் புனைவின் உதவி தேவையாய் அமைகிறது. காந்தியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆளுமைகளைக் குறிப்பிட்டு மட்டுமே இதைக் கூறியிருந்தாலும் சமூக நிகழ்வுகள் சார்ந்து எழுதப்படும் கதைகள், அக்கதைக்கான வடிவத்தைப் (நாவல், சிறுகதை, குறுநாவல்) பெற தகவல்கள் அனுபவங்களாக மாறக்கூடிய புனைவுத்தன்மை எழுத்தாளரிடம் தேவைப்படுகிறது. சமகாலத்தில் இத்தன்மை நீர்த்துவிடாமலிருக்கிறது என்பதற்கு சாட்சியாய் அமைகிறது சுனில் கிருஷ்ணனின் “ஆரோகணம்” சிறுகதை.

பால் சக்கரியா எழுதி சுகுமாரன் வழி தமிழ் மொழிபெயர்ப்பில் “இது தான் என் பெயர்” நாவலை சமீபத்தில் மீள்வாசிப்பு செய்தேன். அந்நாவல் கொலையாளியின் பார்வையிலிருந்தும், அவனுடைய கொள்கைகளிலிருந்தும் காந்தியைப் பேசுகிறது. அங்கு காந்தியின் குரல் எழுப்பப்படவில்லை. கொலையாளியின் குரலே நாவல் முழுக்க ஒலிக்கிறது. அந்நாவல் முடிகின்ற இடத்திலிருந்து சுனில் கிருஷ்ணனின் சிறுகதை ஆரம்பிக்கிறது. இறந்த பின் காந்தி செல்லும் ஆன்மவழிப்பாதையை விவரணைக்குட்படுத்துகிறார். காந்தி என்று விளிக்காமல் அவருடைய உடைமைகளையும் பனிமலையில் அவர் செல்லும் பயணங்களோடும் விவரணைகள் தொடர்கின்றன. காந்தியைச் சூழும் வாழ்வியல் வெறுமையும் இழையோடுகின்றது. பின் காலனைச் சந்திக்கிறார். காலனோடு உரையாடுகையில் நரகம் செல்லும் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். சிறுமை கொண்ட மனிதர்களால் நரகம் சூழ்ந்திருக்கிறது என்று காலன் சொல்வதே, தான் அங்கு செல்ல வேண்டும் எனும் முடிவை எடுக்க வைக்கிறது. இது வரையிலான கதை கதைசொல்லலின் வழி வாசகனை இழுத்து செல்லக்கூடியவை. இறுதிப் பத்தி காந்தியின் மகத்தான தரிசனமாக முடிவடைகிறது. அப்பத்தியில் நரகத்தின் விவரணை தொடங்குகிறது. சிறுமை கொண்ட மனிதர்கள் என விளித்தது மலம் அள்ளுவதையும், நோயாளிகளுக்கு சிசுருஷை செய்வதையும், சாக்கடை சுத்தம் செய்வதும் ஆகும். கதைக்குள் இவையனைத்தையும் செய்பவர் காந்தியாகவே இருக்கிறார். காந்திகளால் நிறைந்திருக்கிறது நரகம்.

கதை முடியும் இடத்தில் இது காந்தியைப் பற்றிய கதையா நரகத்தைப் பற்றிய கதையா எனும் கேள்வி எழுகிறது. அதற்கு காரணம் மேற்கூறிய தொழில்களெல்லாம் உண்மையில் சிறுமை கொண்ட மனிதர்கள் செய்வதா ? சொர்க்கத்தின் காவலாளிகாக இருப்பவர்கள் இவர்களை சிறுமை கொண்ட மனிதர்களாகத் தான் பார்க்கிறார்களா ? சிறுமை என்பதற்கு மானுடம் வைக்கும் விளக்கங்கள் என்ன ? காந்தி சிறுமையாக இருப்பவர்களை பொதுக்குணம் கொண்ட மனிதராகவும், குறிப்பிட்ட இன மக்களை சிறுமையெனக் கருதியவர்களை பொதுவுடைமை மனோபாவத்திற்கு மாற்ற முனைந்ததுமே ஆகும். அதற்கு அவர் கைகொண்ட முறை சொல்ல நிஜத்தின் வழி வாழ்ந்ததே ஆகும். இதைக் குறியீட்டாக்கி அற்புதமான கதையாக நல்கிய சுனில் கிருஷ்ணனுக்கு அன்பும் நன்றியும். காந்தி சார்ந்த தமிழ்ச் சிறுகதைகளை பட்டியலிட்டால் நிச்சயம் சுனில் கிருஷ்ணனின் ஆரோகணம் இடம்பெறும் என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை.
***

சுனில் கிருஷ்ணனின் எழுத்துகளை இதுவரை வாசித்ததில்லை. அம்புப் படுக்கை நூல் வெளியானதிலிருந்து அதன் மீதான ஈர்ப்பு வாசிக்கத் தூண்டியது. வாங்கியவுடன் ஆரோகணம் எனும் சிறுகதை காந்தியை மையப்படுத்தியது என்பதை அறிந்தவுடன் அதையே முதலில் வாசித்தேன். அது ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை தனியே எழுத நினைத்தேன். ஒவ்வொரு கதையாக வாசிக்க ஆரம்பித்தவுடன் சமகால இலக்கியச் சூழலில் சவாலான கதைக் கருவைக் கொண்டிருப்பவர் சுனில் கிருஷ்ணன் என்பதை இங்காண முடிந்தது.

சுனில் கிருஷ்ணன் அடிப்படையில் ஆயுர்வேத மருத்துவர். காந்தியின் மீது பெரும் ஈர்ப்பு கொண்டவர். இந்த இரு விஷயங்களும் சுனில் கிருஷ்ணன் எனும் தனி ம்னிதனுக்கு மட்டுமேயான அடையாளமாக இருப்பதில்லை. அதன் வழி அவர் கொண்ட அனுபவங்களையும். அனுபவமாகக்கூடிய தத்துவார்த்த சிந்தனைகளையும் நேர்த்தியான சிறுகதைகளாக மாற்றுகிறார். இவருடைய கதைகளில் சில பொதுத் தன்மைகளை காண முடிகிறது.

முதல் தன்மை உடல். உடல் கொண்டிருக்கும் பல்வேறு அலைச்சல்களை, அதன் அயற்ச்சிக்கு உட்படும் ஓட்டத்தை, மனதோடு ஒட்டாத தருணங்களை தனித்தனியே புனைவின் களமாக்குகிறார். வாசுதேவன், அம்புப் படுக்கை, குருதிச் சோறு, திமிங்கலம் முதலிய கதைகள் உடல் கொள்ளும் பல்வேறு பாவனைகளைப் பேசுகின்றன. உடலை நுண்மையாக அவதானிப்பதில் அம்புப் படுக்கை சிறுகதை முக்கியம் பெறுகிறது. அம்புப் படுக்கை என்பதை நோய்மையின் படிமமாக கதையுள் மாற்றுகிறார். நோய்மையின் பிரச்சினை வலியன்று. வலி கொடுக்கும் மரணம் சார்ந்த பயம் வாழ்க்கையின் மீதிருக்கும் பிடிப்பை நழுவ விடுகிறது. நோய்மை ஏற்படும் பொழுது நோய்க்கும் மனிதனுக்குமான உறவு ஆன்மீகமானது. அது மரணம் சார்ந்த பரிச்சயத்தையும் வாழ்க்கை சார்ந்த காதலையும் மேம்படுத்துகிறது. கடந்த காலத்தின் வழி அவற்றை பரிசீலனை செய்கிறது. இந்த சிறிய பகுதியில் சுனிலின் எழுத்துகள் பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.

இரண்டாவது பொதுத்தன்மை நவீன தொழில்நுட்பம் சார்ந்த விமர்சனப்பார்வை. கணையாழியில் நிகழ்ந்த அசோகமித்திரன் நினைவு குறுநாவல் போட்டியில் “பேசும் பூனை” வெற்றி பெற்றது. அக்கதை இத்தன்மையின் முழுமையான பார்வையை முன்வைக்கிறது. குழந்தைகள் விளையாடும் talking tom எனும் எளிய விளையாட்டை முன்வைத்து இணையம் எந்த விதத்தில் தனி மனிதனின் சுதந்திரத்தை பறிக்கிறது என்பதை நீள் கதையாக்கியிருக்கிறார். இதைத் தவிர்த்து திமிங்கலம் கதையில் உயிரியல் கண்டுபிடிப்புகள் சார்ந்தும், பொன்முகத்தை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் கதையில் அனுபவத்தை இடம்பெயர்க்கும் தொழில்நுட்பம் சார்ந்த விமர்சனம் இசை வடிவிலும் இடம் பெருகிறது.

இதில் சிறந்த கதையாக இருப்பது கூண்டு சிறுகதை. மாயக்கூண்டை கண்டுபிடிக்க அரசர் ஆணையிடுகிறார். ஆனால் கண்டுபிடிக்கப்படும் கூண்டு அதைக் கேட்கும் அரசரையும் உள்ளடக்கும் கூண்டாக மாறுகிறது. கூண்டு ஒவ்வொருவராக உள்ளிழுக்கும் பொழுது அரசும் மக்களும் இதை எப்படி பார்க்கிறார்கள், மொத்த அமைப்பும் கூண்டிற்குள் வந்தவுடன் ஓர் சமூகம் கூண்டிற்குள் உலகை எப்படி உருவாக்குகிறது என்பதையும் மிக நேர்த்தியான புனைவாக்கியிருக்கிறார். இந்தக் கூண்டு சிறுகதையைத் தனித்து கூறக் காரணம் கூண்டு பல்வேறு சமூக நெருக்கடிகளின் உவமை. இந்த நெருக்கடி எளிய செயலியின் வழியாகக் கூட ஏற்படலாம் எனும் எண்ணத்தையும் தரவல்லது என்பதை உணரமுடிகிறது.

மக்களின் தேவைக்கு கண்டுபிடிப்புகள் அவசியமாகின்றன. ஆனால் உழைப்பை இடம்பெயர்க்கும் கண்டுபிடிப்புகள் அரசியலாகிறது. சுரண்டலை துவக்குகிறது. வர்க்க பேதம் ஆரம்பிக்கிறது. நுண்மையான வடிவத்தில் ஆரம்பிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விமர்சனத்தையே சுனில் கிருஷ்ணனின் கதைகள் மேற்கொள்கின்றன. தொழில்நுட்பங்களை முழுமைக்கும் மறுக்கவில்லை. ஆனால் தேவைக்கு அதிகமான கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தக்கூடிய அரசியலை முற்போக்காக சந்திக்கின்றன சுனிலின் கதாபாத்திரங்கள்.

கதைசொல்லலில் புதுமையைக் காணமுடியாதது சற்று வருத்தமளிக்கிறது. முன்னோடி எழுத்தாளர்கள் பல்வேறு கதைசொல்லல் வடிவங்களை கையாண்டிருக்கின்றனர். அதை சோதனை முயற்சியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுத்தாளர்கள் முயன்று வருகின்றனர். அதன் வழியாகவே இப்புத்தகமும் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதிலிருந்து புதுமையான வடிவத்தை கைகொள்வதில்லை. எடுக்கும் வடிவத்தில் நேர்மையாக தன் கதையை வாசகனிடம் கொண்டு செல்கிறார். நேர்காணல் வடிவில், உரையாடல்கள் நிறைந்து, கலைத்து போடப்பட்ட கதை வடிவம் போன்று முயற்சி செய்கிறார். அதில் சிறப்பாக வந்திருப்பது குருதிச் சோறு எனும் சிறுகதை. நாடோடித் தன்மையில் குறுங்கதைகளாக சொல்லியிருக்கிறார். வறுமை–பசி-அன்னதானம் போன்ற பழமையான கதைக்கருவவை நவீன கதைசொல்லல் முறைக்கேற்ப சொல்லியிருப்பது நவீன கதைக்கூறலுக்கு மூன்னுதாரணமாக அமைகிறது.

முதல் தொகுப்பாக அமைந்திருப்பதும் அதில் அவர் காட்டியிருக்கும் பலதரப்பட்ட கதையுலகமும் அடுத்த கதைகள் குறித்த பெரும் எதிர்பார்ப்பை மீதமாய் விட்டுச் செல்கிறது. நவீன கதையாடல்களையும், கதைக்கூறல்களையும், இதிலிருந்து செறிவேற்றப்பட்ட மொழிநடையுடன் அடுத்தடுத்த தொகுப்புகளில், கதைகளில் எதிர்நோக்கும் பல வாசகர்களுடன் அடியேனும் எப்போதும் இருப்பேன்.


முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகள் சுனில் கிருஷ்ணன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக