சூதன் – காலத்தின் குறியீடு

எந்தக் கதையை வாசிக்கும் பொழுதும் நினைவில் இணைகோடென என்னுள் ஓடுவது பாரதக் கதைதான். அம்மாவின் வாய்மொழியில் துவங்கியது அப்பயணம். இன்றளவும் வெவ்வேறு எழுத்தாளர்களின் வழியே அறியப்பட்ட கதையின் நுண்வடிவங்களை கண்டுகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கதை வேறொரு வடிவத்தை எடுத்துக்கொள்கிறது. ஒருமுறை மனதை தன்வயப்படுத்தும் கதாபாத்திரத்திலிருந்து மறுமுறை விலகிவிடுகிறேன். இந்த சேர்தலும் பிரிதலும் தான் வாழ்க்கையை பாரதத்தின் வழி புரிந்து கொள்ள வைக்கிறது. மேலும் பாரதத்திற்கென தனியொருத் தன்மை இருக்கிறது. இந்த ஒரு கதை மட்டுமே வாசிப்பவைரையும் அவருக்குண்டான வடிவத்தில், மொழியில் அதே கதையை சொல்ல வைப்பது. மிகப்பெரும் கதைப்பரப்பு வேறு வேறு நியாயப்படுகளை கதை கேட்பவனிடம் விட்டுச் செல்கிறது. விட்டுச் செல்லும் விஷயம் வேரென  அமைந்து பாரதத்தை பேச வைக்கிறது.

இதை “ஜெய” என்றே வியாசன் தொகுக்கிறார். அவருக்கு பல சூதர்கள் சொல்லும் கதைகளிலிருந்து தொகுக்கப்பட்டு ஒரு குடும்பத்தின் கதையாகவும் ஒரு காலத்தின் கதையாகவும் விரிவுகொள்கிறது. இந்த சூதர்கள் வேறு வேறு தொழில் புரிபவர்களாக பாரதம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறார்கள். எத்தொழில் புரிந்திடினும் ஓரிடத்தில் அவர்கள் ஒன்றிணைபவர்களாகவும் இருக்கிறார்கள். அது அவர்களது கதை சொல்லும் தன்மை. நிகழ்ந்தவற்றை, கண்டவற்றை வேறொருவரிடம் கடத்துபவர்களாகவே இருக்கிறார்கள். இதுகூட சூதர்கள் அறிந்துகொண்டவற்றிலிருந்து உள்ளுணரும் நியாயப்பாட்டை முன்வைத்து கதைகளை சொல்கிறார்கள். அதை வாசிக்கும் தருணத்தில் எந்த கதாபாத்திரம் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நாம் அதை மீட்டுருவாக்கம் செய்ய முனையும் சூதர்களாகவே மாறத் துவங்குகிறோம்.

இந்நிலையில் பாரத்தை வெறும் இதிகாசமாகவும், புராணக் கதையாகவும், ஆன்மீகத்தில் தோய்ந்த கதையாகவும் மட்டும் கொள்ளமுடியுமா எனும் கேள்வி பொதுவாகவே எழுகிறது. சக நண்பர் ஒருவருடனான உரையாடலில் மகாபாரதத்திலிருந்து மாயத் தன்மையை எடுத்துவிட்டால் பின் சுவாரஸ்யம் துளிக்கூட இருக்காதே என்றார். மாயத்தன்மை இருப்பதனாலேயே அதன் மீதான நம்பகத்தன்மை குறையத் துவங்குகிறது. இந்த மாயத் தன்மையை நீக்கிவிட்டு சொல்லப்பட்டவற்றின் நுண்மைகளை ஆராயும் பட்சத்தில் இந்நெடுங்கதை வரலாற்றின் பக்கம் சார்பினைக் கொள்ளக்கூடியதாக அமையும். இந்த புள்ளியிலிருந்து பாரதத்தை புதிதாக அணுகுபவர் மராத்திய ஆய்வாளார் இராவதி கார்வே. தன்னுடைய “யுகத்தின் முடிவில்” நூலில் பாரத்தை இந்தப் புள்ளியிலிருந்து துவங்கி நுண்மையான ஆய்வாக மேற்கொண்டிருக்கிறார்.


இந்நூல் பாரதக் கதையை சொல்வதில்லை. மாறாக அதில் இருக்கும் சில கதாபாத்திரத்தை முன்வைத்து நூலின் தலைப்பினை பேச முற்படுகிறது. யுகம் முடியும் பட்சத்தில் புதியதொரு யுகத்திற்கான, வாழ்வியல் முறைக்கான விதை விதைக்கப்படுகிறது. ஆனால் அதனுள் இருப்பவை முந்தையவற்றின் எச்சம் என்பதை தர்க்கமாகவே ஏற்றுக் கொள்ளமுடியும். அவ்வகையில் முந்தைய யுகமான பாரதம் நடக்கும் யுகத்தின் அரசியலையும் நிலவியலையும் சில கதாபாத்திரங்களை முன்வைத்து ஆராய்கிறார். இந்நூல் தனிப்பட்ட கதாபாத்திரங்களின் விளக்கங்களாக மட்டுமே நகர்கிறது. பீஷ்மன் என எடுத்துக்கொண்டால் அவனுடைய கதையின் வழியே அவன் கண்ட அரசியலையும், அவனால் உருவாக்கப்பட்ட அரசியலையும் தீர்க்கமாக நூல் பேசுகிறது. இம்மாதிரியான தன்மையை எம்.டிவாசுதேவன் நாயர் எழுதிய இரண்டாம் இடம் நாவலில் காணமுடியும். அக்கதை முழுக்க பீமனின் பார்வையில் நகர்கிறது. அவனுடைய புரிதலும் அறிதலுமே அக்கதைப்பரப்பிற்கான எல்லை. இந்நூலில் கதைக்கு வெளியிலிருந்து இந்த ஆய்வினை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் செய்வதால் வாசகரிடம் இருக்கும் புரிதலையும் சந்தேகிக்கிறது. அடிப்படை அளவிலான பாரத்ததை தெரிந்த பின் இந்நூலை வாசிப்பது சாலச் சிறந்ததாகும். மேலும் நூல் பேசும் அரசியலை சற்று கூடுதலாக உணரவும் வழிகோலும்.

அறிவியல் தர்க்கத்தின் வழி உருவாகக்கூடிய பதில்களை ஆதாரங்களுடன் அணுக முற்படுவது. அந்த தர்க்கங்கள் அனைத்தும் நிகழ்ந்தவற்றினை எதிர்த்து எழுப்பப்படும் கேள்வியிலிருந்து ஆரம்பம் கொள்கிறது. அவ்வகையில் பாரதத்தின் பாத்திரங்களை முன்வைத்து மானுடத்திற்காக இவர் எழுப்பும் கேள்விகள் பாரதத்தைக் காலம் கடந்த கதையுலகமாக மாற்றிவிடுகிறது. நூலிலிருந்து சில உதாரணங்களுடன் கூறலாம்.

குந்திக்கென தனியொரு அத்தியாயம் இடம்பெறுகிறது. குந்தி மாத்ரி மற்றும் பாண்டுன் வனவாச காலத்தில் ஐந்து பிள்ளைளும் பிறக்கின்றனர். பின்னும் மாத்ரியின் இச்சை நீங்கியபாடில்லை. கணவனின் உடல் உபாதைகளை அறிந்தும் அவனுடன் மாத்ரி கொள்ளும் உடலுறவு பாண்டுவின் மரணத்திற்கு வித்தாகிறது. அப்போது யார் உடன்கட்டை ஏறுதல் எனும் தர்க்கம் எழுகிறது. இந்த இடத்தை விவரிக்கும் பகுதியில் குந்தியினுள் இருந்த காமம் சார்ந்த ஏங்குதலுக்கு பின்னிருக்கும் உளவியலை மிக நுட்பமாக தீண்டியிருக்கிறார். குந்தி பாண்டுவின் மூத்த மனைவி. அவளுக்கும் இச்சைகள் தீர்ந்தபாடில்லை. ஆனாலும் அவளுக்குள்ளிருந்த கட்டுப்பாடு மாத்ரியிடம் இல்லை. ஒருக்கணம் மாத்ரியின் மீது பொறாமைப்படுக்கிறாள்.  தன்னால் அடைய முடியாத ஒன்றை அவள் எளிதில் அடைந்துவிட்டாளே எனும் எண்ணம் வலுப்பெறுகிறது. தன்னுள் இருக்கும் இக்குணத்தை அரசியலாக மாற்றும் பொழுதில் மாத்ரி உடன்கட்டை ஏறுகிறாள் என்கிறார். இது உளவியல் ரீதியான வன்முறை. இதை உணர்ந்தே அவள் வாழ்நாள் முழுக்க மேற்கொள்ளும் துறவறம் மாபெரும் போரை உண்டு செய்கிறது. அதில் வெற்றி கிடைத்த பின் மகன்களுடைய அரசின் கீழ் இல்லாமல் திருதிருராஷ்ட்ரன் மாறும் காந்தாரியுடன் கானகத்திற்கு செல்கிறாள். மாத்ரியியைப் பிரிந்த பிறகு அவள்வழியே பிறந்த நகுலன் சகாதேவன் மீத மூவருடன் இணைந்து ஐவராகவே இருக்க வேண்டும் என்று மட்டுமே குந்தி எண்ணுகிறாள். அதற்கு தான் ஏகப்பட்ட தடைகள் ஏற்படுகின்றன. திரௌபதியை ஐவருக்கும் மனைவியாக்கியது அவர்களின் ஒற்றுமையை வலுப்பெறச் செய்வதற்கே எனும் தர்க்கம் கடைசி வரை குந்தியிடம் மிச்சமாய் இருக்கிறது. குலதர்மத்தை மறந்தவர்களுக்கு ஒற்றுமையே அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் எனும் வகையில் போருக்கு தயார்படுத்துகிறாள். ஆனால் வெற்றிக்கு பின்னான பிரிவே நிகழ்ந்த அபத்தங்களை அர்த்தப்படுத்துகிறது. கிட்டத்தட்ட பாரதத்தின் அனைத்து பாத்திரங்களும் ஏதேனும் ஒரு கட்டத்தில் பிரிந்து செல்கிறார்கள். பிரிவால் உழல்கிறார்கள்.

குந்தியைப் போன்று ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கேள்விக்குட்படுத்துகிறார். தருமன், பீஷ்மன், விதுரன், அஸ்வத்தாமன், துரோணர், காந்தாரி, கர்ணன் முதலிய கதாபாத்திரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார். அவர்களின் வாழ்க்கையை கேள்விக்கணைகளால் துளைத்துச் செல்கிறார். அதற்கு மானுடத்தின் முன்னிலையில் அவர் முன்வைக்கும் பதில்கள் பாரதம் சார்ந்த புரிதலையும் கேள்விக்குட்படுத்துகிறது.

விதுரன் எனும் பாத்திரத்தை முன்வைத்து சமகால அரசியலையும் கேள்விக்குட்படுத்துகிறார். விதுரன் பணிப்பெண்ணிற்கும் வியாசனுக்கும் பிறந்தவன். உடல் உபாதைகளோ குறைபாடுகளோ எதுவுமே இல்லை. ஞானவான். ஆனாலும் கடைசி வரை அரசாட்சி கிடைக்கவில்லை. மைய அரசியலில் இருக்கும் அனைவரிடமும் நெருக்கமாக இருப்பினும் பாரதம் முழுக்க அவன் மீது பூசப்படும் சூதன் எனும் சாயம் வெளுக்காமல் இருப்பதை கோடிட்டு காட்டுகிறார். அவனுடைய திருமணத்திற்காக பார்க்கப்படும் பெண்ணும் சூதகுலத்தவளாக இருக்கிறாள். இதே நிலையை வேறு ஒரு பாத்திரமும் அடைகிறது எனில் கர்ணன். அதிரதன் வளர்ப்பதிலிருந்து கர்ணன் தனக்கு கிடைத்தவன் தான் எனும் உண்மையை சொல்லியே வளர்க்கிறார். தான் யார் எனும் தேடலிலேயே கதை முழுக்க வலம் வருகிறான். துரியோதனனுக்கும் கர்ணனுக்குமான நட்பை தெளிவாக பாரதம் கொண்டாடினாலும் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி எப்படி சூத குலத்தால் உருவாகிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறார். கர்ணனை துரியோதனன் பயன்படுத்திக்கொள்கிறான். நட்புக்கு இவர்களைக் காட்டிலும் கிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்குமான நட்பையே மேலாக வர்ணிக்கிறார்.

பாரதத்திற்கு பிறகான காலத்தை பௌத்தர்களின் காலமாக கூறுகிறார். அங்கு உருவாகும் தத்துவங்களுக்கான கதைப் பின்புலங்கள் பாரதத்திலிருந்து கையாளப்படுகிறது என்கிறார். வாசுதேவ – எதிர்வாசுதேவ எனும் நிலையை பௌத்தம் பேசுகிறது. இந்தத்தன்மையை கிருஷ்ணனுக்கான அத்தியாயத்தில் விளக்குகிறார். இந்த தத்துவத்தையே பாரதக்கதை முழுமைக்குமாக பேசுகிறது. மனிதர்களில் அனைவரிடமும் நற்குணங்களும் கெட்ட குணங்களும் கலந்து இருக்கின்றன. அவற்றில் எவை மானுடத்திற்கு தேவை என்பதே சவாலாக நிற்கிறது. அதை பகுத்தறியத் தெரியாதவன் வீழ்ச்சியுருகிறான். அந்த வீழ்ச்சியைப் பேசும் ஒரு யுகத்தை பாரதம் பதிவு செய்திருக்கிறது.

ஒரு யுகத்தின் முடிவில் இருக்கக்கூடிய அல்லது உருவாகக்கூடிய அபத்தம் அடுத்த யுகத்திற்கான வித்தாக அமைகிறது. அதை வளர்த்தெடுக்கும் பட்சத்தில் யுகம் அறம் பிறழ்ந்த பாதையைத் தேர்ந்தெடுக்க நேர்கிறது. யூதாஸின் நிலை அடுத்த யுகத்தின் ஆரம்பமாகவே என்னால் அர்த்தப்படுத்திக் கொள்ளமுடிகிறது. அங்ஙணம் எடுத்துவரப்பட்ட சாதீயப் படிநிலைகளையும், நிலவியல் வரையறைகளையும் தீர்க்கமாக சொல்லிச் செல்கிறார். இவர் சொல்லாத தர்க்கங்களும் கதாபாத்திரங்களும் நிறைய இருக்கின்றன எனும் விழிப்பையும் கொடுத்தே சொல்கிறார். ஓர் யுகம் முடிந்தாலும் முடிவற்ற தர்க்கத்தை உருவாக்கியே சென்றிருப்பதை நூலின் முழுமை உணரவைக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக