சத்தியாகிரகம்


சில நாட்களுக்கு முன் அமேரிக்காவில் வசித்த தோரோ என்பவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு தமிழ் இந்து செய்தித்தாளில் வெளிவந்திருந்தது. அதில் அவர் அமேரிக்காவில் நிகழ்ந்த அடிமைச் சட்டங்களை எதிர்த்து வரி கட்டாமல் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார் என்றொரு குறிப்பும் இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து தென்னாப்ப்ரிக்காவில் காந்தியின் போராட்டத்திற்கு இவ்விஷயம் உந்துதலாக அமைந்தது எனும் குறிப்பும் இருந்தது. தொடர்ந்து நூல்கள் சார்ந்து எழுதி வந்த என்னிடத்தில் புதிதாய் சோம்பேறித் தனம் ஒட்டியிருக்கிறது. அதைக் களைவதற்கு இந்த சிறு கட்டுரையே உதவி புரிந்தது. ஒத்துழையாமையையும் சத்தியாகிரகத்தையும் பெரிதாக நம்பி போராட்ட வடிவமாக மாற்றியவர் காந்தி. அதிலும் தென்னாப்ப்ரிக்காவில் நிகழ்ந்த போராட்டமே அதற்கான மாபெரும் உந்துதலாக அமைந்தது. அது சார்ந்து அவரே எழுதிய நூலொன்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் தென்னாப்ப்ரிக்க சத்தியாகிரகம்.

தென்னாப்ப்ரிக்காவில் நிகழ்ந்த போராட்டத்தின் முழு வடிவத்தை நேர்மையாகவும் செறிவாகவும் எழுதியிருக்கிறார். நேரடியாக போராட்டத்திற்குள் நுழையாமல் அந்நாட்டின் நிலவியல் அமைப்பு, அரசியல் பிண்ணனி, மக்கள் ஒடுக்கப்படுவதன் வரலாறு என சில கட்டுரைகளை நூலின் முன்குறிப்புகளாக எழுதுகிறார். அதற்கு பிறகு காந்தி தென்னாப்ப்ரிக்கா சென்ற காரணத்தையும் சிறிதாக சொல்கிறார். இங்கிருந்து அவருக்கு மக்களுடன் ஏற்பட்ட தொடர்பும் அவர்களின் குறைகளை கேட்கக் கிடைத்த சம்பவங்களும் தென்னாப்ப்ரிக்க போராட்டம் சார்ந்த மையத்திற்கு இழுத்து செல்கிறது.

இந்நூலை பல்வேறு அணுகுமுறையில் வாசிக்க முடியும். வரலாறு எனும் சிறுபகுதிக்குள் அடைக்க முயன்றால் முழுப்புத்தகமும் சில வரிகளுக்குள்ளாக அடங்கிப் போய்விடும். தென்னாப்ப்ரிக்காவில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக செல்லும் இந்தியர்கள் தங்கள் ஒப்பந்த காலம் முடிந்தவுடன் இந்தியா திரும்ப வேண்டும் எனும் கோரிக்கை பலதரப்பட்ட மக்களிடம் எழுகிறது. தென்னாப்ப்ரிக்கா இந்தியர்களைச் சேர்த்து மூன்று பெரும் பிரிவுகளாக இருக்கிறது. ஒன்று தென்னாப்ப்ரிக்காவின் பூர்வக்குடிகள். இவர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பிடுங்கி குடியேறிகளான ஐரோப்பியர்கள் இரண்டாம் தரப்பினர். மூன்றாம் தரப்பினரானவர்கள் தான் ஒப்பந்தத் தொழிலாளர்களாக குடியேறிய இந்தியர்கள். முதலாளிகள் இருக்கும் வரை இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதிக அளவிலான எண்ணிக்கையில் இருக்கும் இந்தியர்கள் அரசியலில் தடம் பதிப்பார்களோ எனும் எண்ணம் பிற குழுவினரிடம் அதிகமாகத் தென்படுகிறது. அந்நிலையில் இந்தியர்களின் மேல் வரி விதிக்கப்படுகிறது. ஒப்பந்தம் முடிந்தும் இந்தியா செல்லாமல் இருப்பவர்களிடத்தில் இந்த வரி விதிக்கப்படுகிறது. இந்த இடத்திலிருந்தே அதிகாரத்தின் திணிப்பும் அதிலிருந்து மீண்டுகொள்ள சத்தியாகிரகத்தின் வளர்ச்சியும் இணைகோடென வளர்கிறது.

ஒத்துழையாமை மற்றும் சத்தியாகிரகம் எனும் நோக்கிலேயே இந்த நூலை அணுக முயற்சிக்கிறேன். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் பொழுது அதிகாரத்திற்கு அடிபணிதல் கூடாது எனும் அடிப்படையில் ஒத்துழையாமமை ஆரம்பிக்கிறது. தலைக்கு வரி விதித்தமையால் போராட்டம் ஆரம்பிக்கிறது. அதற்கு பின்னோ வாக்குரிமையை பறித்தல், நிலத்தை இந்தியர்கள் வாங்கினாலும் அதில் உரிமை கொள்ள முடியாமை, கறுப்பர்களையும் இந்தியர்களையும் பதிவு செய்துகொள்ளச் சொல்வது போன்ற தொடர் திணிப்புகள் அரங்கேறுகின்றன. திணிப்புகளின் வழியே சத்தியாகிரகம் வளர்ச்சி கொள்கிறது.

நூல் முழுக்க சத்தியாகிரகம் எப்படி அமைய வேண்டும், அதன் வழிமுறைகள் எவ்வாறு இருத்தல் வேண்டும், ஒரு பிரச்சினை சார்ந்து போராடிக் கொண்டிருக்கும் பொழுது பிறிதொரு பிரச்சினை கிளைத்தால் என்ன செய்வது எனும் பல கேள்விகளை சோதனை முயற்சிகளாக காந்தி மக்களுடன் இணைந்து செய்திருக்கிறார். மேலும் இப்போராட்ட வடிவம் நம்பிக்கை அடிப்படையிலானது. எடுத்துரைத்தலே அதன் துணை ஆயுதம். அதற்கேற்ற சான்றுகள் நிறைய நூலில் விரவிக் கிடக்கின்றன.

இடையிடையில் காந்தி இந்தியா வந்து செல்கிறார். அப்போது தென்னாப்ப்ரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் நிலையை இந்தியாவிற்கு எடுத்து சொல்கிறார். இந்தியாவின் சார்பு அங்கிருக்கும் இந்தியர்களுக்கு கிடைக்கும் எனும் நம்பிக்கையே அவரை பயணம் செய்ய வைக்கிறது. இந்தியப்பயணத்தில் பேசப்பட்டவை தென்னாப்ப்ரிக்காவிற்கு தவறாக எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் ஐரோப்பியர்களின் மீது காந்தி தவறான பரப்புரையை தன் சொந்த நாட்டில் செய்து கொண்டிருக்கிறார் எனும் புரளி பரவுகிறது. அதன் விளைவாக துறைமுகத்திலேயே காக்க வைக்கப்படுகிறார். மனைவியை தனியாக அனுப்பிவிட்டு தோழரான ருஸ்தம்ஜி வீட்டிற்கு காவலர்களுடன் செல்க்கிறார். அப்போது ஒருவன் காந்தியை கல்கொண்டு அடிக்கிறான். கல்லெறிபவன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க சில நாட்கள் கழித்து காந்தியிடம் அனுமதி கேட்கிறது. காந்தியோ அனுமதி தர மறுக்கிறார். அங்கு நிகழும் உரையாடலும் அதன் தெளிவுமே அப்போராட்ட வடிவத்தின் நியாயவாதமாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட செய்தி திரித்துவிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பியனான அவனுக்கு நிச்சயம் இருத்தல் சார்ந்த சந்தேகமே எழுதிருந்திருக்கும். இந்தியர்களின் அதிகமான எண்ணிக்கையால் தனக்கான இடம் காணாமல் போய்விடுமே எனும் பயத்தில் அவனுக்கு தெரிந்த எதிரியான என்னை அடிக்க வந்திருக்கிறான். அவன் மீது தவறு கிடையாது. பரப்புரையை கட்டவிழ்த்துவிட்ட அதிகார மையத்தின் மீதே தவறு என்கிறார்.

மேலும் மீர் ஆலம் என்பவர் காந்தியை ஒருமுறை தாக்குகிறார். பின் சில மாதங்கள் கழித்து கறுப்பர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனில் இந்தியர்கள் தாங்களாகவே தங்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனும் அறிக்கை அரசிடமிருந்து வருகிறது. அதை காந்தியே மக்களிடம் செய்யச் சொல்கிறார். சிலர் எதிர்த்துரைத்தபோதும் அரசின் மீதிருந்த நம்பிக்கையில் அதை செய்யச் சொல்கிறார். பதிவு செய்த பின்னும் அரசு கறுப்பர் சட்டத்தை ரத்து செய்யவில்லை. அதனால் பதிவு செய்த பத்திரத்தைக் கொளுத்தலாம் எனும் அறைகூவல் விடுக்கிறார். பத்திரங்களின் சொக்கப்பனை எனும் அத்தியாயத்தில் இதன் விரிவான விவரணை அழகாக இடம்பெற்றிருக்கிறது. அங்கு காந்தியைத் தாக்கிய மீர் ஆலமும் பங்குகொள்கிறார். செய்த தவறை நினைத்து வருந்தும் மீர் ஆலமிடம் காந்தி தனக்கு அவர் மீது எந்த கோபமும் இல்லை என்பதை பகிர்கிறார்.

சத்தியாகிரகம் முன்னமே கூறியது போல் நம்பிக்கையின் அடிப்படையிலானது. நம்பிக்கை தனிமனிதன் சார்ந்தது. தனி மனிதனிடமிருக்கும் நம்பிக்கையை பொதுவெளிக்கு கடத்தும் நேரத்தில் அது சார்ந்த காரணார்த்தத்தை, விளக்கங்களை அளிக்க வேண்டியிருக்கிறது. அதை பகுத்தறிந்து ஏற்றுக்கொள்வதில் புரிதல் சிக்கல் இருக்கிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் இந்த போராட்ட வடிவம் தன் அடிப்படை இடத்தை அடைவதே பொறுமையுடன் தான். மேலும் முன்கூறிய பத்தியில் இருப்பது போல் நம்பிக்கை ஏமாற்றமும் ஏற்படலாம். காந்தியிடம் பலர் குறையெனவும் அதைக் கூறினர். இதே போன்றொதொரு குறையை இந்தியா வந்த பின்னும் காந்தி செய்கிறார். சுதந்திரம் கிடைக்கும் எனும் நபிக்கையில் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இரண்டம உலகப் போரில் பங்குகொள்வது.

போர் எனும் விஷயத்தை குறிப்பிடுவதால் வேறொரு விஷயத்தை பகிர விரும்புகிறேன். தென்னாப்ப்ரிக்காவில் காந்தியும் அவருடனிருக்கும் இந்தியர்களும் கூட போரில் பங்கு கொள்கின்றனர். வன்முறைகளால் நிரம்பிய போராக இல்லாமல் சேவையை மையப்படுத்திய போராக இருக்கிறது. காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவம் செய்வதே அவர் கொண்ட பணியாக அமைகிறது. அதில் எதிர் தரப்பு வீரர்களுக்கும் செய்யும் சேவை மானுடம் சார்ந்த திறப்பை சத்தியாகிரகம் கொடுக்கிறது என்பதாக விவரிக்கிறார். சத்தியாகிரகம் ஒருபோதும் மனிதர்களை எதிர்த்த போராட்ட வடிவம் கிடையாது. மாறாக அவர்களை தவறான வழியில் கொண்டு செல்லும் கொள்கைக்கு எதிரானது. அந்த எதிர்தரப்புடனான உரையாடலை சத்தியாகிரகம் சாத்தியப்படுத்துகிறது.

காந்தியின் மனைவி அவரிடம் தன்னை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுத்த கட்டுப்படுத்தாதது ஏன் என்று கேட்கிறார். அதற்கு அவர் கூறும் பதில் நான் உன் கணவன் என்பதாலேயே கலந்து கொள்கிறாய் என்றால் அது சத்தியாகிரகமாக இருக்காது. அது உள்ளுக்குள் இருக்கும் உண்மை சார்ந்தது. மக்களிடம் இருக்கும் அதிகாரத்தை களைய வேண்டும் எனும் தார்மீக அன்பு இருந்தால் மட்டுமே வர வேண்டியது என்று விளக்குகிறார்.

சத்திய சோதனை நூல் தனிமனித வாழ்க்கையில் சத்தியாகிரகத்தை பேசுகிறது எனில் இந்நூல் அது எப்படி அரசியலாகிறது என்பதை முழுமையாக பேசுகிறது. எரவாடா சிறையில் இருந்த தருணத்தில் நினைவுகளின் அடிப்படையில், சில தகவல்களை சேர்த்து முழுமையாக இந்நூலை எழுதியிருக்கிறார். கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும் வேறு வேறு கண்ணோட்டத்தை கொடுக்கவல்ல நூலாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. வெறும் வரலாற்று நூல் என ஒதுக்குபவர்கள் உள்ளீடுகளாக இருக்கும் விஷயங்களை இழக்கக் கடவர்.


அறிதலுக்கு அப்பாற்பட்ட உணர்வு ரீதியான போரட்ட வடிவம் சத்தியாகிரகம். அதன் வளர்ச்சி கொண்டிருந்த அனைத்து தடைகளையும், கசப்புகளையும், தவறுகளையும், வெற்றிகளையும் உள்ளடக்கி இந்நூல் செறிவாகக் கொடுக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக