வார்த்தைகளால் நிர்மாணிக்கப்பட்ட ஊரின் கதைகள்2015 சென்னை புத்தக திருவிழாவில் தான் சோ.தர்மனின் “சூல்” நாவலைக் கண்டேன். கூகை மற்றும் தூர்வை நாவலின் வழி மட்டுமே அவரின் எழுத்து சார்ந்த பரிச்சயம் இருக்கிறது. அவ்விரண்டு நூல்கள் சார்ந்து யாரிடம் பேசும் பொழுதும் நூற்றாண்டின் கதைசொல்லியாகவே சோ.தர்மன் என்னுள் உருக்கொண்டிருந்தார். இதே மனநிலையில் தான் சூல் நாவலை அணுகத் துவங்கினேன். முன்னர் எழுதிய இரு நாவல்களைப் போல சூல் பெரிய அளவிலான ஒற்றைக்கதை அன்று. மாறாக கதைகளின் கோப்பு. மண்ணிலிருந்தும் மழையிலிருந்தும் மக்களின் நம்பிக்கைகளிலிருந்தும் உருவாகும் கதைகளின் கோப்பு. அந்த மக்களால் நிரம்பிய ஒரு ஊர் தன்னிலிருந்து வெளிக்கொணரும் கதைகளின் கோப்பு தான் சூல் நாவல்.

Baroque என்றொரு கலைப்பாணி இருக்கிறது. அதில் ஓர் படைப்பின் நுண்ணிய அம்சங்களை விரிவாக நாடகத் தன்மையில் விவரித்து அதன் கருப்பொருளை நுகர்பவனுக்கு கொடுப்பது. இதற்கு தமிழளவில் உதாரணம் எனில் தி.ஜானகிரமனின் மோகமுள் நாவலைச் சொல்லலாம். அந்நாவலை வாசித்துவிட்டு சுகுமாரன் தஞ்சாவூரின் வீதிகளில் தி.ஜா காட்டிய அடையாளங்கில் நடந்து சென்றதாக முன்னுரையில் கூட குறிப்பிட்டிருப்பார். ஆனாலும் இந்த விவரிப்புகள் எல்லாவற்றையும் நாவல் நிகழும் கதைக்கான ஊரமைப்பாக மட்டுமே தி.ஜா பயன்படுத்தியிருப்பார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து ஆகிய நூல்கள் இந்த தன்மையை கதையுடன் இணைத்து வெளிக்காட்டும். சற்று விரிவாக இப்பாணியிலான கலைவடிவத்தை குறிப்பிட்டதன் காரணம் சூல் நாவல் உருவாக்கும் கதைக்களமும் அது சார்ந்த விவரிப்புகளும், வரவேற்பிற்கும் விமர்சனங்களுக்கும் ஒருசேர இடம்கொடுப்பவையாக இருக்கின்றன. நாவல் வாசிப்பின் வழியே முழுமையடையும் பொழுது பிரம்மாண்டத்தை உணர்ந்த உணர்வையும், வார்த்தைகளால் மட்டுமே அறிந்த ஊரின் வழியே மேற்கொண்ட மிகநீண்ட பயணத்தின் உணர்வையும் கொடுக்கிறது.

கூகை மற்றும் தூர்வையைப் போன்று குறிப்பிட்ட அல்லது வரையறுக்கப்பட்ட கதையினை இந்நாவல் பேசவில்லை. மாறாக உருளைக்குடி எனும் ஊரையே நாவலின் மையமாக மாற்றியிருக்கிறார். அனைத்து ஊர்களும் மக்களால் உருவாக்கப்பட்டு மக்களாலேயே பாதுகாப்பட்டு வருகிறது. ஆனால் ஊரின் வேர் அழியாமல் இருப்பதற்கு தேவையாய் இருப்பது அவ்வூரின் பூர்வக்குடிகளே ஆவர். அவர்களால் ஒவ்வொரு வம்சத்திற்கு கடத்தப்படும் வார்த்தைகளே அந்த ஊரின் உயிரை சுமந்து செல்கிறது. இந்த தொடர்ச்சி அறுபடும் பொழுது அந்த மண்ணிற்கும் அடுத்த மண்ணிற்கும் இடையே வித்தியாசமின்றி போகிறது. தனித்துவமான கலாச்சாரத்தை அம்மண் இழக்க நேரிடுகிறது. தனக்கான வரலாற்றை இழந்து அநாதரவாக நின்றுவிடுகிறது அவ்வூர். பல்வேறு கலாச்சாரத்தை அறிய முற்படுகிறேன் என கிளம்பிய உலகம் தன்னை அறியாமலேயே நிறைய கலாச்சாரங்களை அழித்துக் கொண்டு வந்திருக்கிறது என்பதற்கு புனைவின் சாட்சியாக நிற்கிறது சோ.தர்மனின் சூல் நாவல்.

கோவில்பட்டி தாலுகாவின் கீழ் வரும் உருளைக்குடி எனும் ஊரினை பற்றிய கதை தான் சூல். இந்நாவல் வீரபாண்டிய கட்டபொம்மனின் காலத்தில் ஆரம்பித்து ஜனநாயக ஆட்சிக்கு பிந்தி அரசியல் ரீதியான பிளவுகளை தமிழகம் காண ஆரம்பித்த காலம் வரை நீள்கிறது. நாவலின் அளவில் சொல்வதானால் மூன்று தலைமுறையின் கதையினை நாவல் விவரிக்கிறது. கதையினுள் செல்லும் முன் நாவல் உருவாக கதை என்றொரு முன்னுரையினை சோ.தர்மன் எழுதியிருக்கிறார். அதில் முக்கியமான சில வார்த்தைகளை உபயோகித்திருக்கிறார். அதுவே நாவலின் ஆன்மாவாக இருக்கிறது.

“அவர்கள் இயற்கையோடு கொண்டிருந்த வாழ்வியல் அறம். அவர்கள் பின்பற்றிய அந்த அறம், ஆன்மீகத்தின் ஆணிவேர். இது என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்ததோடு, அதைப் பற்றிய தேடலையும் முனைப்பாக்கியது. உதராணமாக, ஒரு கண்மாய் இருக்கிறதென்றால், அதை வெறும் நீர்நிலையாக மட்டும் பார்க்காமல் அந்த கண்மாயைப் பற்றிய அவர்களின் நம்பிக்கைகளை  ஆராய்ந்த போதுதான் இந்நாவல் உருவானது.”

உலகம் முழுக்க நம்பிக்கைகளால் நிரம்பியிருக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கைகள் எப்படி ஊரை நிர்வகிக்கிறது எனும் விதத்தில் இந்நாவல் தன் அரசியல் பார்வையை கொண்டிருக்கிறது. நாவலின் வழியே எண்ணற்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றனர். ஒவ்வொருவரிடமும் ஓர் நம்பிக்கை ஆழமாக குடிகொண்டிருக்கிறது. அந்நம்பிக்கையே அவரவர்களது அறமாக நாவலில் உருக்கொள்கிறது. அந்த அறத்தை நிலைநாட்ட நாவல் முழுக்க மனிதர்கள் நவீனத்துடன் போரிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி போரிடுபவர்கள் அனைவருமே கரிசல் காட்டின் தேர்ந்த கதைசொல்லிகளாகவும் வலம் வருகின்றனர்.

முத்துவீரன் தாத்தா எனும் கதாபாத்திரம் நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே இடம்கொள்கிறார். தூக்கணாங்குருவிக் கூட்டை வைத்து மழை வரப்போவதை சொல்கிறார். குழுமியிருக்கும் சிறுவர்கள் பரிகசிக்க அதன் விளக்கத்தை உரையாடலின் வழியே தெளிவாக எடுத்துரைக்கிறார். மண்ணிலிருந்து எவ்வளவு உயரத்தில் தூக்கணாங்குருவி கூடு கட்டுகிறதோ அதைப் பொறுத்தே மழையின் அளவு இருக்கும். மேலும் கூட்டில் இரண்டு ஓட்டைகள் இருக்குமாம். ஒன்று கீழ்பக்கம். மற்றொன்று பக்கவாட்டில். பக்கவாட்டில் இருக்கும் வாசல் தெற்கு பக்கமாக இருந்தால் வடகிழக்கு பருவமழை பெய்யும் எனவும் வடக்கு பக்கமாக இருந்தால் தென்மேற்கு பருவமழை பெய்யுமெனவும் சொல்கிறார்.

காக்கா, குருவி, செடிகளின் வளர்ச்சி, பனைமரத்தின் தன்மை என இயற்கையினை வைத்தே இயற்கையினை அளக்கின்றனர். இதை வாசிக்கும் போதெல்லாம் சமகால சமூகம் இழந்திருக்கும் உணர்வுசார் விஷயத்தை நினைவுபடுத்திக் கொள்ளமுடிகிறது. கலை மற்றும் இலக்கியம் சார்ந்த விழிப்புணர்வை நவீன யுகத்திற்கு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் சமகாலத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் மேற்கூறியபடி அஃறிணையும் உயர்திணையும் இணைந்தே ஊர் உருவாக்கப்பட்டிருந்தது. குருவியை வைத்து மழையின் அளவை சொல்லும் முத்துவீரன் தாத்தா எனும் கதாபாத்திரம் குருவியின் வாழ்க்கையை மையப்படுத்தி அம்முடிவிற்கு வருகிறார். ஒவ்வொரு வாழ்க்கையும் ஓர் இலக்கியமாகவும், பிற உயிரினுக்கு காட்டும் கரிசனம் அல்லது வாழ்வினோடான பங்கு கலையாகவும் நடைமுறையில் இருந்திருக்கிறது. அனைத்தும் தனிமைபடுத்தப்பட்ட பின் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நுகர வேண்டிய நிலை சமகாலத்திற்கு நேர்ந்திருக்கிறது. இந்த அவலத்தை இரு முனையிலிருந்தும் நாவல் அணுகுகிறது. அஃதாவது ஒன்றென இருக்கும் ஊரின் தோற்றத்தையும் பிரிவு கொள்ளும் அவல நிலையையும் தனித்தனியே கையாள்கிறது.

இந்த தன்மை சார்ந்து நாவலின் பகுதிகளை பார்ப்பதற்கு முன் விலங்குகள் சார்ந்து நாவலில் இடம்பெறும் விஷயங்களையும் பேசினால் இத்தருணத்தில் பொருத்தமாக அமையும். அது விலங்குகளின் வளர்ச்சியின் பால் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள். இது விலங்குகளுக்கு மட்டுமன்று. மரம் மற்றும் தாவரங்களுக்கும் பொருத்தமாகவே இருக்கும். நாவலில் இரண்டு நீளமான பகுதிகள் இடம்பெறுகின்றன. ஒன்று வெற்றிலை பற்றிய பகுதி. மகாலிங்கம் பிள்ளை தன் வெற்றிலை தோட்டத்தின் வெற்றிலைகள் காரம் குறைவாகவும் பிற தோட்டத்தின், பிற ஊர் வெற்றிலையின் காரம் அதிகமாகவும் இருக்கிறது என்பதை அறிய செல்கிறார். தாமிரபரணி ஆற்றின் நீரில் வெற்றிலைப் பந்தல் போட்டிருக்கும் நாடார் நாவலின் வழியே கூறும் வார்த்தைகள் வெறும் வெற்றிலைக்கான வார்த்தைகளாக இல்லாமல் இயற்கை வேளாண்மை சார்ந்த வார்த்தைகளாக இடம்பெற்றிருக்கின்றன.

பறவைகளை மையப்படுத்தி குறுகிய பகுதி ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அந்த ஒரு பகுதியே இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை எப்படியானது என்பதை தெளிவாக வாசகர்களுக்கு உணர்த்திவிடுகிறது. மொட்டைப்பாறை ஒன்றில் தானியங்களை காய வைக்கின்றனர். அப்போது பறவைகள் அதை கொஞ்சமாக கொத்தி கொத்தி செல்லும். நாவலில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் தன் கணவனை காவலுக்கு வைக்கிறாள். கணவன் பறவைகளை விரட்ட பல முறை முயன்றிருக்கிறான். எதற்கும் பறவைகள் மசியவில்லை. அதனால் வில்லினையும் அம்பையும் எடுத்து ஒரு காகத்தை எய்தி அதை நட்டு வைத்துவிடுகிறான். இறந்த பறவையை கண்டு பிற பறவைகள் வர பயப்படுகின்றன. இதை அறிந்த மனைவி கோபப்பட ஆரம்பித்தாள். வாக்குவாதங்கள் தொடர்ந்தன. காவல் எனும் போது பறவைகளை விரட்டத்தானே ? பறவையை விரட்ட வேண்டாம் எனில் காவல் எதற்கு எனும் கேள்வியை கேட்கிறான். அதற்கு அவள் பறவைகள் சாப்பிட்டு தானியங்கள் தீரப்போவதில்லை. மாறாக மாடுகள் மேய்ந்தால் அவை சாப்பிடவும் செய்யாமல் காய வைத்த தானியங்களை பாழாக்கிவிடும். அதை விரட்டவே காவல் என்கிறாள். அன்றிலிருந்து அவ்வூர் மக்கள் எந்த பறவையையும் விரட்டுவதில்லை எனும் நிலை உருவாகிறது. இது தான் மேற்குறிப்பிட்ட நம்பிக்கை. பல்லுயிர்களின் மேல் காட்டப்படும் அன்பு தன்னுயிரை காக்கும் எனும் நம்பிக்கையே ஊரை இயற்கையுடன் கூடி நாவலின் வழியே பயணிக்க வைக்கிறது.

விலங்குகள், தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றுடனான மனிதனின் வாழ்க்கையை எந்த அளவு சோ.தர்மன் விவரிக்கிறாரோ அதே அளவு ஊர் எப்படி பல்தொழில் செய்யும் மனிதர்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதையும் நுண்ணியமாக விவரிக்கிறார். இயற்கையை தனக்கான வளமாகக் கொண்டே தன் இனத்தை பிற இனங்களைக் காட்டிலும் உயர்ந்தவையாக வைக்க முனைகிறான். கிட்டத்தட்ட இயற்கையோடிணைந்த சங்கிலித் தொடரில் தன் அதிகாரத்தாலேயே மேலிடத்தை அடைந்த ஒரே இனம் மனிதன். அவன் தன் இனத்தாரிடையே எவ்வழியில் அல்லது எந்த அறத்தைக் காத்து மேலிடம் கொள்கிறான் என்பதில் நாவலின் பல கதாபாத்திரங்கள் ஒன்று கூடி இருக்கின்றன.

நீரளவை கணக்கிட்டு வைத்திருக்கும் மடைக்குடும்பன், லாடம் கட்டும் பிச்சை ஆசாரி, பனையேறியாக வரும் எலியன், சதாசிவப் பண்டாரம் முதலான ஒவ்வொரு குடிசையின் உள்ளே இருக்கக் கூடிய தொழில்சார் அம்சங்களை நாவல் விவரிக்கிறது. மேலும் அதில் ஒரு தொழில் ஊரிலிருந்து பிடுங்கப்பட்டாலும் மொத்த கிராமமே அதற்கான பின்விளைவுகளை அல்லது வெற்றிடத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதை நுட்பமாக அலசுகிறது. அதற்கு காரணமாக அமைவது பண்டமாற்று முறையிலேயே நாவலின் காலம் நகர்வது தான்.

கொப்புளாயி எனும் பெண் கதாபாத்திரம் இந்த தன்மையை மிக ஆழமாக, கால மாற்றத்தின் அழியா சின்னமாக விளக்குகிறது. கொப்புளாயியுக்கு திருமணம் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லை. மாடுகளை மேய்த்துக்கொண்டே காலத்தை கடக்கிறாள். நிறைய மரம் நடுகிறாள். ஊரார் கதைகளை செவிமடுத்து கேட்கிறாள். ஊர் முழுக்கவும் வழிப்போக்கர்களுக்கும் இலவசமாக மோர் கொடுக்கிறாள். அவளிடம் அடைக்கலமாக இருக்கும் பையன் காட்டுப்பூச்சி. அவன் அவ்வப்போது அருகிலிருக்கும் ஊருக்கு ஓடிச்சென்று சில காலம் கழித்து வந்துவிடுவான். அவன் சொல்லும் கதைகள் தான் உருளைக்குடியைத் தாண்டி கொப்புளாயியுக்கு தெரியவரும் ஊர்களின் கதை. இந்த காட்டுப்புச்சியின் பாத்திரம் தான் முதன்முதலாய் நாவலில் வணிகம் சார்ந்து பேசுகிறது. பொருள் இருப்பவனிடம் ஓர் விலைக்கு வாங்கி பொருள் தேவைப்படுபவனுக்கு வேறோர் விலைக்கு கொடுத்து அதன் வழியே பணம் ஈட்டுவதை அபத்தமாக பார்க்கிறாள் கொப்புளாயி. அவன் பக்கத்து ஊரில் காசிற்கு உணவளிக்கிறார்கள் எனும் பேச்சு கொப்புளாயியுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஊரோடு ஒட்டியிருக்கும் பந்தம் ஏதோ ஒரு வகையில் அறுபட்டுவிடும் எனும் பயமே கொப்புளாயியுக்கு மேலோங்கியிருக்கிறது.

இதே போன்றதொரு ஆற்றாமையை அல்லது தங்களது காலம் முடிவிற்கு வருகிறது என்பதை பல கதாபாத்திரங்கள் அவ்வப்போது சொல்லிக் கடந்து செல்கிறது. அதில் குப்பாண்டிச்சாமி எனும் கதாபாத்திரம் நாவலின் கடைசியில் மிக விரிவாக எதிர்காலத்தை கணித்து சொல்லும் பார்வையாக இடம்கொள்கிறது.

இந்த ஆற்றாமையின் பின் இருப்பதே நாவலின் அடிநாதமான அறம். இந்த அறம் ஊர் எனும் இயற்கைக்கு புறம்பாக நுழைய முனையும் நகரமயமாக்கலைக் கண்டு அச்சம் கொள்கிறது. இவர்கள் கையாளும் அறத்தை நாவலின் பல இடங்களில் காணலாம். அல்லது அறத்தையும் அறப்பிழையையும் நாவலின் பல இடங்களில் மிக அழகாக மோதவிடுகிறார். உதாரணத்திற்கு எனில் கள்ளன் ஒருவன் ஊரினுள் நுழைந்து பெண்மணி ஒருத்தியிடம் அருந்த நீர் கேட்கிறான். குடித்துமுடித்த உடன் அவளைத் தொட முனைகிறான். பெண் கத்துகிறாள். ஊரே துரத்துகிறது. ஓடியவன் பனையில் ஏறிவிடுகிறான். கீழிறங்கினால் எப்படியும் ஆபத்து என்றறிந்ததாலேயே அவனின் இந்த முடிவு. சில தந்திரங்களை செய்து இறங்கி கண்மாயில் குதிக்கிறான். இது நிகழ்வதெல்லாம் இரவில். விடியும் பொழுது கண்மாயின் மேல் அவனின் பிணம் மிதக்கிறது.

இதை இரு கோணத்தில் நாவலில் அணுகுகிறார். ஒன்று அவன் செய்த பிழைக்கு கிடைத்த தண்டனை என. மற்றொன்று அவன் வசத்தினின்று சொல்லப்படும் கூற்று. இத்தன்மை நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. அவனை பழித்து கூறப்படும் இடத்தில் அழகியல் நிறைந்த உரையாடல் இடம்பெறுகிறது. கண்மாய் முழுக்க நீந்தி நீந்தி கரையை காணவியலாமல் இறக்கிறான் கள்ளன். அதை நாட்டாரியல் தெய்வங்கள் பேசிக் கொள்கின்றன. நீச்சல் அடிக்கும் வித்தையை மறக்கடித்துவிட்டால் கள்ளனை கொன்றுவிடலாமே என, அதற்கு அத்தெய்வம்,

“கற்ற வித்தையை களவாடக்கூடாது. குரு துரோகம் செய்யவே கூடாது. வித்தையை செயல் இழக்க வைக்க வேண்டும். அந்த வித்தையை பயன்படாமல் போக வைக்க வேண்டும். நாம் கொல்வது வித்தையை அல்ல, வித்தையைக் கற்றவனை. வித்தை அழிவில்லாதது, ஏனெனில் வித்தைக்கு கூடுவிட்டு கூடு பாயும் வித்தை தெரியும்”

இதைக் குறிப்பிட்டுக் கூறக்காரணம் நாவல் நெடுக குற்றங்களும் பாவங்களும் இடம்பெறுகின்றன. குற்றங்கள் மனிதர்கள் செய்யும் தவறுகள். பாவங்கள் வகுக்கப்பட்ட அறங்களை மீறுவது. ஆக குற்றங்களுக்கான தீர்ப்பாக அபராதமோ சிறு ஊர் வளர்ச்சி சார்ந்த தண்டனையோ நிறைவேற்றப்படுகிறது. ஆனால் அந்த குற்றம் புரிந்தவன் கொள்ளும் உணர்ச்சி அவனை அறம் மீறச் செய்கிறது. உதாரணம் எனில் பன்னிமாடன் என்பவனின் பன்றிகள் பக்கத்து வயலில் மேய்ந்துவிடுகின்றன. அதனால் ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு ஊர் காலில் விழுந்து அபராதம் விதிக்கப்படுகிறது. பன்னிமாடன் ஊர் காலில் விழுந்ததை அவமானமாக கருதுகிறான். யார் ஊரினைக் கூட்டி இச்செய்கை நடந்ததோ அவனுடைய மகனை சதி செய்து பாம்பு கடிக்க செய்துவிடுகிறான். முதலில் அவனுடைய பன்றிகளை பாதுகாக்காததால் நிகழ்ந்த குற்றமும் அதற்கான தண்டனையும் கிடைக்கப்பெறுகிறது. அதிலிருந்து எழும் உணர்ச்சி அவனை பாவம் செய்யத் தூண்டுகிறது. அதற்கு எதிர்க்கட்சி விடும் சாபம் பன்னிமாடனின் குலத்தை வேரறுக்கிறது. எப்படி எனில் அவனுக்கு பிறக்கும் மகனின் உடல் பாம்பு போல் தோலுரிகிறது.

மேற்கூறிய கள்ளன் கதையுடன் இவ்விவரத்தை எடுத்துக்கூறக் காரணம் கள்ளன் பக்கமிருந்த நியாயத்தையும் நாவல் பேசுகிறது. அவன் விக்கல் வரவே தண்ணீர் கொடுத்த பெண்ணை திருப்ப யத்தனித்து தொட்டிருக்கிறான். கொன்றதனால் அவனின் ஆவி ஊரின் கருவையே அறுத்து சாபமிடுகிறது. அதற்கு பதிலாய் தானே சாமியாகிறான் கள்ளன்.

இது போன்று எண்ணற்ற கதைகள் ஊரினூடே இருக்கும் கதைசொல்லிகளால் கட்டமைக்கப்படுகிறது. குற்றம் – தண்டனை – குற்றவுணர்ச்சி -  பாவம் – விமோசனம் – ஊரின் வளர்ச்சி – நம்பிக்கை என சுழற்சி முறையில் நம்பிக்கை எல்லோர் மனதிலும் விதையூண்றப்படுகிறது. இதில் விமோசனம் எப்படி ஊரின் வளர்ச்சியாகும் என்றொரு சந்தேகம் எழலாம். கணவன் செய்த பாவத்தால் இரட்டைப்பிள்ளைகள் ஊமையாக பிறக்கின்றன. அதற்கு விமோசனம் ஊர் முழுக்க மரம் நடுகிறாள். அதில் பறவைகளின் கீச்சொலி கேட்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல் பல்லுயிர்களின் பூமி இது என்பதை நாவல் நெடுக உணரமுடிகிறது.

நாவலின் நீண்ட கதைப்பகுதியாக இடம்பெறுவது பிச்சை ஆசாரி – எலியன் – கோணக்கண்ணனின் கதையாகவே இருக்கிறது. இந்தப் பகுதியின் வாயிலாக மட்டுமே நாவல் நிகழும் காலத்தையும் நம்மால் உணரமுடிகிறது. எலியன் பனையேறி. காடுவழியே செல்லும் போது பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து தப்பித்த கட்டபொம்மனைக் காண்கிறான். அவரின் குதிரைகள் லாடத்தில் பிரச்சினையுடன் இருக்கிறது. இதற்கு பிச்சை ஆசாரி உதவுகிறார். இந்த உதவிக்கு இருவருக்கும் பொன்முடிகள் கொடுக்கப்படுகின்றன. இதை அறிந்த மற்றொருவன் கோணக்கண்ணன். இந்த பொன்முடிகளை இருவரும் மூன்று தலைமுறைகளாக பாதுகாத்து வருகின்றனர். அதன் நிலை என்ன என்பது மிக நீண்ட கதையாக விரிவடைகிறது. மேலும் கட்டபொம்மனுக்கு உதவும் இடத்தில் கொள்கை ரீதியாக முரண்படும் அரசின் பிரஜைகளாக இருப்பினும் உதவும் மாண்பு என்று கட்டபொம்மன் பாராட்டுகிறார். அடிப்படை அறிவைக் கொண்டே நாவல் நிகழும் இடம் எட்டப்பனின் இடமாக இருக்கக்கூடும் என்பதை அறிய முடிகிறது. மேலும் ராஜீய விஷயங்களை நாவலின் பிண்ணனியாக மட்டுமே கையாண்டிருக்கிறார்.

நாவல் கடைசி பகுதிகளை அடையும் பொழுது ராஜீய விஷயங்கள் தலைதூக்கி நம்பிக்கைகளும் அது சார்ந்த அறங்களும் பக்கங்களில் குறைய ஆரம்பிக்கின்றன. அந்த பக்கங்கள் அனைத்தும் சுதந்திரமும் அதற்கு பின்னான காலகட்டங்களிலும் நகர்கிறது. மன்னராட்சியின் முடிவினைக் கடந்து அனைவருக்குமான ஜனநாயக ஆட்சி நாவலில் ஆரம்பம் கொள்கிறது. இதனிடையே கதையின் பகுதியாகவே மதம் மாற்றம் செய்ய முயலும் கிறித்துவ மிஷனரிகளையும் அதற்கு ஊர் காட்டும் பதில்களையும் நுண்மையாக, அதே சமயம் கதையை விட்டு விலகாமல் பேசியிருக்கிறார்.

சுதந்திரம் எனும் விஷயம் உருளைக்குடி மக்களிடையே எவ்வித பெரிய மாறுதல்களையும் கொடுப்பதில்லை. அவரவர்களது தன்னிச்சையான ஆசைகளை சுதந்திரத்தினுள் அடைத்து சந்தோஷம் கொண்டிருந்தனர். மேலும் மன்னராட்சியிடமிருந்து ஜனநாயகம் நோக்கி நகரும் அரசியல் அசைவு அவர்களுக்கு அரசர் கைமாறும் சிறு அசைவாக மட்டுமே அமைகிறது. இதில் ஜனநாயக ஆட்சியில் அனைத்தும் நிறுவனமயமாகும் பொழுது பாரம்பரியமாக செய்து வந்த தொழில் கைமாறும் நிலை ஒவ்வொரு மனிதருக்கும் கையறுநிலையாக மாறுவதை நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். மன்னர் தன் அதிகார நிலையை இழந்து சாமான்ய மக்களாக மாறும் காட்சியை அபூர்வமாக இந்நாவலில் காணமுடிகிறது. அந்த மாறுதலை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் எனும் விஷயத்தையும் பதிவு செய்வதால் ஓர் அதிகாரம் உடைவதை முழுதாக உணரமுடிகிறது. மேலும் நகரமயமாக்கல் எனும் அம்சத்தையும் நாவலின் கடைசியில் வைத்திருப்பதால் உருளைக்குடி சார்ந்த பல பக்க விவரிப்புகள் அனைத்தும் நொடியில் வாசிப்பின் வழியே சிதிலமடையத் துவங்குகின்றன.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய The Animal Farm நாவல் சர்வாதிகாரத்தின் அடுத்த நிலை ஜனநாயகம் தான் என்பதை புனைவின் வழியே ஆணித்தரமாக நிறுவியிருக்கும். இங்கோ அது போன்றதான அரசியல் நிறுவுதலை சோ.தர்மன் செய்யத் தவறிவிட்டாரோ என்பது லேசாக வருத்தத்தை தருகிறது. நம்பிக்கைகளையும் அது சார்ந்த அறங்களையும் நம்பி இருந்த ஊர், ஜனநாயக அரசில் அபத்தமாக உருவெடுக்கிறது என்பதை கருவேல மர விதைகள், ஜிலேபி கெண்டை மீன்முட்டைகள் போன்ற எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறார். உலகம் நகர்ந்து செல்லும் நவீனம் நோக்கி குறிப்பிட்ட ஊர் நகராமல் இருப்பின் அது மாபெரும் தேக்கமாக அமைந்துவிடாதா ? மீண்டும் நம்பிக்கைகளும் அது சார்ந்த அறம் ஒழுகி வாழ்வது மட்டுமே தான் மண் நமக்காக விட்டு வைத்திருப்பதா ? ஆம் எனில் அதை நவீனத்தினுள் பொருத்திப் பார்க்க வேறு வழிகளே இல்லையா ? நாவல் முழுக்க தெரியும் வாழ்வியலுக்கான அறமும் இயற்கையான வாழ்வியல் முறையும் நாவலை முடிக்கும் தருவாயில் சில நடைமுறைக் கேள்விகளுடன் தொக்கி நின்றுவிடுகின்றன.

நாட்டாரியல் பண்பாடுகளை ஓர் சமூகம் இழந்துவிட்டு பண்பாட்டு வேர்களை செயற்கை முறைகளின் வழியே அறிய முற்பட்டுக் கொண்டிருக்கிறது. நாவல் இருபாகமாக பிரிந்து இருக்கிறது என்று கூறினாலும் தகும். அவ்வழி முதல் பாகத்தில் வர்க்கங்களாக பிரிந்திருந்தாலும் பின்பாதியில், சமகாலத்தில் பட்டவர்த்தனமாக தெரியும் வர்க்கப்பேதம் அங்கு இல்லை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை, தன்னை சக ஜீவராசியாக எண்ணி வாழும் ஞானத்தை நாட்டாரியல் கதைகளே கற்றுக் கொடுக்கின்றன. அறம் ஒழுகி வாழ வேண்டும் என்பதே ஒவ்வொருவரினுள்ளும் சூல் கொண்டிருக்கும் கூற்று. அதை நடைமுறைபடுத்துவது அவரவர்களின் வாழ்வியல் முறைகளில் தான் அடங்கியிருக்கிறது. அப்படி உருளைக்குடியில் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதைக்கோர்வையாக விரிகிறது சோ.தர்மனின் சூல் நாவல். கரிசல் மொழியின் எள்ளலும், சொலவடைகளும், சாபங்களும், நாட்டாரியல் தெய்வங்களின் வாக்குகளும் சோ.தர்மனின் வழியே காலத்திற்கும் எதிரொலிக்கப்போகிறது.

பி.கு : இடைவெளி முதல் இதழில் வெளியான கட்டுரை.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக