சிறார் கதைகள் சிறுவர்களுக்கானதல்ல


நடந்து முடிந்த சென்னை புத்தக திருவிழாவில் அகரமுதல்வனின் அன்பின் அளிப்பாய் இரு நூல்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று ஷிஞ்ஜி தாஜிமா ஜப்பானிய மொழியில் எழுதி ஆங்கில வழியில் வெங்கட் சாமிநாதன் தமிழில் மொழிபெயர்த்தஆச்சர்யம் என்னும் கிரகம்எனும் நூல். ஐந்து சிறுகதைகள் அடங்கியிருக்கும் நூல் இது. ஐந்துமே சிறுவர்களுக்கான கதைகள்.

இந்நூலை எஸ்.ராமகிருஷ்ணனும் நிகழ்ந்து முடிந்த வாசகசாலையின் முப்பெரும் விழாவில் பரிந்துரைத்திருந்தார். மேலும் அதில் இருக்கும் முதல் சிறுகதையானகோன்இச்சி வீடுமலைஎனும் கதையையும் சிலாகித்திருப்பார். அதை இந்த காணொலியில் காணலாம் -  https://www.youtube.com/watch?v=34e1Cczkcmc&t=1159s&list=PLPtYds6_0S7F9VRGNZRf63U8M8AntWZV1&index=7

இக்கதையை தாண்டி வேறொரு கதை என்னை வெகுவாக பாதித்தது. இந்நூலை வாசிக்கும் தருணத்தில் இயல்பு வாழ்க்கையின் பணி நிமித்தமான மன உளைச்சலில் இருந்தேன். ஒவ்வொரு முறையும் ஏதொவொரு சிறுகதை என்னை இயல்பு வாழ்க்கை சிடுக்குகளிலிருந்து மீட்பதைப் போல இம்முறையும் ஓர் சிறுகதை அமைந்தது. அது இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும்வசந்தம் வருவது எங்கிருந்து ?” எனும் சிறுகதை.

இக்கதைகளுக்கு செல்லும் முன் கதைகள் சார்ந்த பொதுப்பார்வையை முன்வைக்க விரும்புகிறேன். சமீபமாக பலரிடமும் கதை என்றால் ஒருவரின் கற்பனை தானே என உதாசீனப் படுத்தும் போக்கை வெகுவாக காண்கிறேன். மேலும் கதையை கடந்து சென்றுவிடுகிறார்கள். யதார்த்த வாழ்க்கையில் இருக்கும் எத்தனையோ சிடுக்குகளுக்கு துளியும் உதவாதது இந்த கற்பனைகள் எனப் பொதுவாய் கூறி கதைகளை கடந்து விடுகின்றனர். சட்டென மனதில் தோன்றுவதெல்லாம் கதைகள் கடந்து செல்லக்கூடியவை என நினைப்பது எவ்வளவு பெரிய கற்பனை!

இதைக் கூறுவதன் காரணம் கதைகள் சார்ந்த பொதுவான மற்றும் தவறான அபிப்பிராயம் அடுத்த தலைமுறைக்கும் சென்றுவிடுமோ எனும் பயம் தான். வாழ்க்கை சார்ந்த விஷயங்களை புனைவுகளாக்கி சின்னச் சின்ன கதைகளாக சொல்லிக் குழந்தைகளை நெறிபடுத்துவது கதைகள் தான். அதைச் சொல்ல வேண்டிய வயதில் இருப்பவர்கள் தான் யதார்த்தத்திற்கு உதவாதது கற்பனை என்று கூறுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த நூலையே பரிந்துரைக்க விரும்புவேன்.

இதில் இடம்பெற்றிருக்கும் கதைகள் ஐந்தும் சிறுவர்களுக்கான பிரம்மாண்டம் நிறைந்த கற்பனை உலகத்தை பேசுபவவை. ஆனால் வயதில், வளர்ச்சியில் இக்கதைகள் சார்ந்த புரிதலும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு கதையின் வழியேவும் மனிதன் சிந்தனையின் வசத்தால் எங்கனம் கீழ்மையுறுகிறான் என்பதை எளிமையாக ஆசிரியர் கூறிச் செல்கிறார். சக மனிதன் மீதிருக்கும் அன்பின் காரணத்தால் மட்டுமே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்பு ஓர் நம்பிக்கையை விதைக்கிறது. மனித இனத்தின் மீது பிற உயிரினங்கள் அன்பை கோருகின்றன. அதே மனிதன் தான் தன் வலிமையை உலகத்திடம் பிரயோகிக்கிறான். உலகம் அவனைக் கண்டு அஞ்சத் துவங்குகிறது. அச்சம் தான் அன்பின் முதல் எதிரி. அச்சத்திலிருந்து தான் வெறுப்பு பிறக்கிறது. இந்த வெறுப்பையும் அச்சத்தையும் கடந்து அன்பை அடைவது எப்படி என்பதை தான் இக்கதைகள் பேசுகின்றன.

வசந்தம் வருவது எங்கிருந்து எனும் கதையில் குரங்குமைலை என்றொரு மலை இடம்பெறுகிறது. அங்கிருக்கும் குரங்குகள் அனைத்தும் குறைந்தது முன்று பருவ காலங்களுக்கு வறுமையை சந்தித்து வருகிறது. பஞ்சம் ஒவ்வொரு பருவமாக அவர்களை துரத்தி வருகிறது. ஒவ்வொரு குரங்கும் ராஜா குரங்கிடம் முறையிடுகிறது. செய்வதறியாமல் அடிவாரத்தில் இருக்கும் மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய விழைகிறது. மனிதர்களில் ஒரு குடும்பம் விஷ நாய்க்குடைகளை குடும்பத்திற்கே கொடுத்து உயிர் விடுகிறது. குரங்குகளுக்கு தெரியாமல் சில நாய்க்குடைகளை இந்த தலைமைக் குரங்கும் எடுத்து வைக்கிறது. இதன் பிறகு அவர்களின் பஞ்சம் என்ன ஆனது என்பதாக கதை நகர்கிறது. இதை வாசிப்பவர்கள் யாரேனும் நேரில் சந்திக்க நேர்ந்து, அவர்கள் அக்கதைகளை கேட்டால் நிச்சயம் சொல்கிறேன். இத்தொகுப்பில் இக்கதையை திரும்ப திரும்ப வாசித்தேன். சிலரிடம் சொல்லவும் செய்தேன்.

குரங்கும் முதலில் மனிதனை நம்புகிறது. பிறகு அவனின் தவறுகளைக் கண்டு வாழ்வை எதிர்கொள்ள முடிவெடுக்கிறது. அந்த முடிவின் விளைவு என்ன என்பது ஒவ்வொரு கதையின் வழியேவும் வாசகனால் அறியப்பட முடிகிறது. ஒவ்வொரு சிறுவர்களுக்கும் இந்த கதையை சொல்ல விரும்புகிறேன். தேர்ந்த கதைசொல்லி இக்கதையை சிறுவரின் மனதில் பதிய வைத்துவிட்டால் வாழ்க்கை முழுக்க துவண்டு விழும் தருணத்தில் எல்லாம் இந்த குரங்கு கை கொடுக்கும். வாழ்வின் மீதான நம்பிக்கை மேலெழும்.

சிந்தனை இருப்பதால் மட்டுமே மனிதன் மேம்பட்டவன் எனும் விஷயத்தையும் இக்கதைகள் தெளிவுற எடுத்துரைக்கின்றன. அனைத்து மனிதர்களுக்கும் அறிவு கிடைக்கிறது. சிலரிடம் மட்டுமே அது தக்க இடத்தில் பயன்படுத்தப்பட்டு ஞானமாக மாறுகிறது. பலரிடம் அகம்பாவமாக மாறிவிடுகிறது. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் தான் மனிதன் மதிப்பிடப்படுகிறான். நாம் எந்த மதிப்பீட்டில் சுய அறத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அடிப்படையை இக்கதைகள் எடுத்துரைக்கின்றன. ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒருமுறையேனும் வாசித்திருக்க வேண்டிய நூல் என்று இந்நூலை பரிந்துரைப்பேன். பரிந்துரைத்தல் என் கொள்கைக்கு முரணானது எனினும் இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டியவை என்பதில் தீரா நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.


நூலை பரிசளித்த அகரமுதல்வனுக்கு நன்றி.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக