அறப்பிழைகளின் அரசியல்


சென்னை புத்தக திருவிழாவில் அதிகம் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் தான் தேடித் தேடி வாங்கினேன். மொழிபெயர்ப்பின் பக்கம் செல்லும் போதும் இவ்விரண்டு விஷயங்களே பிரதானமாக இருந்தன. அதன் வழி தான் சித்தக்கடல் எனும் பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியிருந்த பால்ஸாக் கதைகள் எனும் சிறு தொகுப்பை கண்டுகொண்டேன்.

பால்ஸாக் பற்றிய சின்ன முன்குறிப்பை மொழிபெயர்ப்பாளர் .ஜீவனகனே எழுதியிருக்கிறார். அதில் இரண்டு விஷயங்கள் இத்தொகுப்பின் கதைகளுக்கு முக்கியம் வாய்ந்தவை என உணர்கிறேன். பால்ஸாக் பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த ஃப்ரெஞ்சு எழுத்தாளர். இரண்டாவது அப்போது மதம் எனும் போர்வையில் சமூகத்தில் நிகழ்ந்த அறப்பிறழ்வை கதைகளின் வழியே காட்டியவர். இவ்விரு விஷயங்களையும் வாசகனால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அனைத்து சிறுகதைகளிலும் காணமுடியும்.

பால்ஸாக் கதைகளில் முக்கிய பங்காற்றுபவர்கள் பாதிரிமார்களாகளாகவே இருக்கின்றனர். அவர்களுக்குள் எழும் உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக வேசிகளும் பேரிளம் பெண்களும் கதைகளினூடே உலா வருகின்றனர். மேலும் சமூகம் வகுத்த அறங்களுக்கு அப்பால் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும் சாமான்யர்களின் உலகை படம் பிடித்து காட்டுகிறார். அதில் பலர் பெண்களாக இருப்பது நூலின் பொதுமையான விஷயங்களுள் ஒன்று. அவ்வாறு பேசப்படும் விஷயங்களின் வழியே சமூகம் வகுக்கும் அறத்திற்கு கேள்வி எழுப்புகிறார்.

உதாரணம் எனில் நித்தியகன்னி என்றொரு கதை இருக்கிறது. அதில் ப்ளான்ஸி எனும் நாயகிக்கு உறவு கொள்தல் எனும் விஷயமே தெரியாமல் வளர்த்தப்பட்டிருக்கிறாள். குழந்தை வேண்டுமெனும் ஆசை மட்டும் எழுகிறது. தீவிர பக்திமானான கணவனால் உறவு கொள்ள இயலாத நோய். எப்படியேனும் உறவு கொண்டால் குழந்தை கிடைத்துவிடும் என நினைக்கிறாள். அதை சமூகம் ஏற்பதில்லை. இந்நிலையில் அவள் வளர்க்கப்படும் தேவாலயத்தில் லைடோயர் கன்னி என்பவரின் கதையை பாதிரியார் கூறுகிறார். அவளை உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கயவன் கெடுத்துவிடுகிறான். தன்னை அறியாமல் நிகழும் செயல்கள் பாவங்களுக்குள் சேராது என்கிறார். இவ்விடத்தில் சமூகம் எதை பாவம் என்றும் எதை அறம் என்றும் நிர்ணயம் செய்கிறது எனும் சந்தேகம் மேலெழுகிறது. அறம் எல்லோருக்கானதாகவும் முடிவு செய்வது தவறு. எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னி நாவலில் அறம் எப்படி வகுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லியிருப்பார். மாநில சுயாட்சி எனும் வடிவமும் இந்த அறம் நிர்ணயம் செய்வதின் சாயலை கொண்டிருக்கும். இதை உறவை மையப்படுத்தி சொல்லியிருப்பது தான் சிறுகதையின், பால்ஸாக்கின் பெரிய பலமாக இருக்கிறது.

உடலுறவை மையமாக வைத்து பாதிரிமார்களின் ஒழுங்கீனங்களை மட்டுமல்லாது தனி மனித சுதந்திரத்தையும் பேசுகிறார். மதத்திற்கு காதலையும் உறவு கொள்ளும் வேட்கையையும் அடக்குவதற்கு அதிகாரம் கிடையாது. அப்படி நிகழும் பட்சத்தில் அந்த உறவு கொள்ள விழையும் மனம் கொள்ளும் பிறழ்வு எப்படியான சமூக அறமீறலை நிகழ்த்துகிறது என்பதையும் சொல்கிறார்.

நட்பு எனும் சிறுகதையில் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி பேசுகிறார். இயல்பாக நிகழும் ஓரின திருமணத்தை பகை நீங்கி ஒன்றாக வாழ்ந்தனர் என்று விவரிக்கிறார். அதில் ஒருவன் அழகானவன். மற்றொருவன் முந்தையவனைக் காட்டிலும் அழகில் குறைந்தவன். இருவருக்கும் தனித்தனியே காதலி இருந்தனர். இருவரும் போர்வீரர்கள். அழகானவன் பெயர் மெய்லி. அழகற்றவனின் பெயர் ஸீயர். ஸீயரின் மனைவிக்கு மெய்லியின் அழகு வசீகரிக்கிறது. ஸீயர் போரின் காரணமாக மெய்லியை மனைவிக்கு காவலாக வைத்துவிட்டு செல்கிறான். நிர்ணயிக்கப்பட்ட கதைகளில் கூட எதிர்பாராத மனிதர்கள் சந்திக்கும் பொழுது வாழ்வின் சாத்தியப்பாடுகளை இலக்கியம் நேர்மையாக பேசுகிறது. அதை இக்கதையில் மெய்லிக்கும் ஸீயரின் மனைவிக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் வழியேவும் சம்பவங்கள் வழியேவும் வாசகனால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். இப்படி எதிர்பாராத எத்தனையோ மனிதர்களை நேர்முகங்கொண்டு பேசவைக்கிறார்.

பாதிரிமார்களின் ஒழுங்கீனங்களை பேசும் அதே பால்ஸாக் அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட அறங்களையும் ஒருங்கே பேசுகிறார். புனித ஆத்மா எனும் கதையில் கன்னியாஸ்திரியை நேசிக்கும் பொற்கல்லனை பாதிரியார் சந்திக்கிறார். கன்னியின் மீது காதல் கொள்வது தவறு. ஆனால் இருவரும் காதலிக்கின்றனர். இந்நிலையில் பாதியாரினுள் இருக்கும் மனிதனும் அறவாதியும் மோதிக் கொள்கின்றனர். முடிவு என்ன நிகழ்கிறது என்பதில் பால்ஸாக்கின் முத்திரை தெரிகிறது.

தொகுப்பில் மூன்று சிறுகதைகள் வெகுவாக கவர்ந்தன. அவையாவன மனைவி அமைவதெல்லாம், நித்திய கன்னி மற்றும் அவன் அவள் ஆத்மா எனும் கதைகள். நித்திய கன்னியை சற்று முன்பு பேசிவிட்டேன். அவன் அவள் ஆத்மா எனும் கதை உறவை மையப்படுத்தி பொருளீட்டல் சார்ந்து உருவாகும் அதிகாரத்தை ஆண் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறான் என்பதை விரிவாக பேசுகிறது. ஒரு வேசியை மூன்று பேர் காதலிக்கின்றனர். மதகுரு படிநிலைகளில் வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் அம்மூவர். ஆசைகளைக் கடந்து அதிகாரம் மட்டுமே கதை முழுக்க கோலோச்சுகிறது. தொழில் ரீதியான அதிகாரத்தைக் கடந்து ஆணாதிக்க அதிகாரத்தை பேசும் இடத்தில் கதை மையமாக இருக்கும் பெண்ணின் பக்கம் சாய்கிறது.

மூன்றிலும் மிகவும் பிடித்த சிறுகதை மனைவி அமைவதெல்லாம் என்பது தான். சம காலத்திலும் வரலாற்று ரீதியாகவுமே பெண்கள் சார்ந்து ஆண்கள் வெளிக்காட்டும் அதிகாரம் அத்துமீறி உறவுகொள்ளுவதாக இருக்கிறது. எதிர்ப்பின் சாயலாக இந்த செயல் ஆணிற்கென மாறிவிட்டிருக்கிறது. சுருங்க சொன்னால் சில ஆண்களின் செயல்களால் ஆண்களின் மீது பொதுமையாக வைக்கப்படும் குற்றாச்சாட்டாக மாறியிருக்கிறது. இந்நிலையில் பெண் உறவின் ரீதியாக எதிர்ப்பை வெளிக்காட்டினால் அது எப்படி இருக்கும் ? இக்கேள்விக்கான பதிலை சிறுகதையாக பேசியிருக்கும் விதம் சிறுகதையை காலம் கடந்து நிற்க வைக்கிறது. கயமைகளால் ஒடுக்கப்பட்டவன் ஆண் என்பதை கதையில் நிறுவியிருப்பது சிறுகதையை தனித்து காட்டுகிறது.

தொகுப்பின் குறையெனப் படுவது ஒற்றை மனோபாவம் கொண்ட கதைகளையே தொடர்ந்து வாசிக்கிறோமோ எனும் சந்தேகம் வாசிப்பில் எழுகிறது. பால்ஸாக்கின் இயங்குதளம் மட்டுமே இப்படியான சந்தேகத்தை கொடுக்கிறதே அன்றி அவற்றை சொல்லும் விதம் ஒவ்வொரு கதைக்கும் பிரத்யேகமாக மாறியிருக்கிறது. காமத்தையும் அதன் பிண்ணனியில் இருக்கும் உளவியல் சிக்கலை பேசும் சிறுகதைகளினிடையே உடலுறவையும் அதற்கு பின்னியங்கும் அரசியலையும் பேசியிருப்பது சமகால இலக்கியத்தின் வெற்றிடத்தை எண்ண வைக்கிறது. காமம் ஓர் உணர்வு. உடல் உறவு அதன் வெளிப்பாடு. ஆனால் இரண்டின் பின்னிருக்கும் அரசியலும் வெவ்வேறானது என்பதை நுண்மையாக உணர உதவுகிறது பால்ஸாக்கின் சிறுகதைகள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக