உரையாடலற்ற கடைசி சந்திப்புஅந்த வாரத்திற்கான அலுவலக வேலையினை நான் முடித்திருக்கவில்லை. வியாழன் இரவு எப்படியும் பதினோரு மணியளவாவது பணியை முடித்து வீடு திரும்பலாம் என்றிருந்தேன். பத்து மணியளவில் அருணிடமிருந்து அழைப்பு வந்தது. பேசி நாட்களாகிவிட்டதே எனும் எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினேன். அசோகமித்திரனின் மரணச் செய்தி அவரிடமிருந்தே செவிகளுக்குள் விழுந்தது. கேட்ட மறுநொடியில் கண்களிலிருந்து கசிந்த கண்ணீரின் காரணார்த்தத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை. சட்டென அறைக்கு கிளம்பினேன்.
வண்டியை ஓட்டிச் செல்லும் போதும் அறைக்கு சென்ற பிறகும் அழுகை மட்டுமே மீதமாய் என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. என்னுடன் பேசும் சக நண்பர்களுக்கு என் அழுகையின் அர்த்தமும் அதை சமாதானப் படுத்தும் வார்த்தைகளும் தெரியவில்லை. உடனே அவரை சந்திக்க செல்லலாமா எனும் எண்ணமும் இணைகோடென ஓடிக் கொண்டிருந்தது. ராஜனுடனான பேச்சில் காலை செல்லலாம் எனும் முடிவில் அறையில் இருந்தேன்.
அந்த ஓரிரவில் அசோகமித்திரனை முழுதாக வாசித்து முடிக்க முடியுமெனில் அதுவே எனக்கான சமாதானமாக அமையும் என்றெண்ணினேன். ஓரிரவில் முடிக்கக்கூடிய அளவிலா அம்மனிதர் எழுதியிருக்கிறார் ? காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் அவர்களின் நிலைத்தகவலில் புதிதாக ஐந்து சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அது அடுத்த தொகுப்பிற்கென என்பதை வாசித்தேன். எதைத் தேடி இந்த எழுத்தை எழுதி கொண்டே இருந்தார் என்பதற்கு என்னுள் விடைகாணமுடியவில்லை.
உறக்கமற்ற இரவினைக் கடந்து ஆறுமணிக்கெல்லாம் விழிப்பு கொண்டேன். ராஜனை எழுப்பிக் கொண்டு இருவரும் அசோகமித்திரனின் அஞ்சலிக்காக சென்றோம். குடும்பத்தார் மட்டுமிருக்க கண்ணாடிப் பேழையினுள் உறங்கிக் கொண்டிருந்தார். லேசாக திறந்திருந்த வாயும், பாதி மூடிய கண்களும், நினைவுகளின் வழியே உதடுகளில் தெரிந்த புன்னகையும் மீண்டும் கண்ணீரை வரவழைத்தது.
எதற்கு அழுகிறாய் ?
அசோகமித்திரனுக்கும் உனக்கும் எழுத்தாளர்-வாசகர் என்பதைத் தாண்டிய உறவென்ன ?
அழுவதால் மீண்டுவரப் போகிறாரா ?
தர்க்க கேள்விகள் ஆயிரம் எழும்பினும் ஒரே ஒரு பதில் ஆறுதாலய் என்னுள்ளே ஒலித்தது. சொல் இட்டு நிரப்ப முடியாத உரையாடலை கண்ணீர் நிரப்ப முயற்சிக்கிறது. முயற்சி தான் செய்துவிட்டு போகட்டுமே!
நானும் ராஜனும் மாறி மாறி எட்டு மணிக்கு கிளம்பலாம் ஒன்பதுக்கு கிளம்பலாம் பத்து மணிக்கு கிளம்பலாம் என சொல்லிக் கொண்டே இருந்தோம். இருவருக்குமே அங்கிருந்து கிளம்ப மனம் வரவில்லை. அடிக்கடி உள்ளே சென்று அசோகமித்திரனைப் பார்த்துக் கொண்டோம். அரவிந்தன், யுவன் சந்திரசேகர், வண்ணநிலவன், வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், கல்யாணராமன், ஜி.குப்புசாமி, சாரு நிவேதிதா, சல்மா, அசோக் ராம்ராஜ், வேடியப்பன் என நிறைய பேர் வர ஆரம்பித்தனர். ஆங்காங்கே கேட்கப்பட்ட அசோகமித்திரனின் எழுத்து சார்ந்த உரையாடல்களே அங்கே மறைந்தது ஒரு எழுத்து ஆளுமை எனும் உணர்வை அளிக்கத் துவங்கியது. ஸ்ருதி டிவி கபிலனின் செயல் பிற முன்னணி ஊடகங்களின் மீதிருந்த வெறுப்பிற்கு ஆறுதலாய் அமைந்தது.
அசோகமித்திரனின் உடல் வேளச்சேரியிலிருந்து பெசன்ட் நகர் க்ரீமடோரியத்திற்கு கிளம்பும் போது நாங்களிருவரும் கிளம்பினோம். அசோகமித்திரனின் புனைவினைப் போலவே அவருடைய இறுதி அஞ்சலியும் எளிமையாக நிகழ்ந்தேறியது.


ஐந்தாவது சந்திப்பில் மட்டுமே நாங்கள் உரையாடவில்லை. அந்த மௌனம் மட்டுமே பெரும் அதிர்வலைகளை மனதுள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வாசிப்பே அதிலிருந்து விடுதலை அளிக்கும். சொல்லைக் கடக்க சொல்லே தேவை!!
பி.கு : முதல் உரையாடலுக்கும் கடைசி உரையாடலுக்குமான இடைவெளியே இவ்விரு புகைப்படங்கள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக