காமத்தை கடக்க முனையும் நவீன சிறுகதைகள்

நவீன எழுத்தாளர்களிடமும், இளம் படைப்பாளிகளிடமும் பொதுத் தன்மையில் வைக்கப்படும் கேள்வி காமம் இல்லாமல் படைப்பினை கொணர முடியாதா என்பதே. கிட்டதட்ட சமகாலத்தில் வெளியாகும் முக்கால்வாசி முதல் படைப்புகளில் காமத்தை காண முடிகிறது. இதனுடன் கிளைக்கேள்வியாக வேறொன்றும் எழுகிறது. இலக்கியத்தில் காமம் கூடாதா ? இருக்கலாம் எனில் சமகால படைப்புகளில் அவை இருப்பதால் ஏற்படும் முகச்சுளிவுகள் என்ன என்ன போன்றவையாகும்.

காமத்தை எழுதுதலும் அந்தந்த மண் சார்ந்தது தான். உடலை கொண்டாடும் தேசத்தில் காமத்தை களியாட்டமாக எழுதுவது பிழையாகாது. நமக்கோ பாரம்பரியம் மட்டுமே உடலை கொண்டாடுகிறது. சமகாலத்தில் உடல் பெரும் அரசியலாக மாறியிருக்கிறது. ஓர் இனத்தின் உடல் மற்றொரு இனத்திடம் பலகீனமாக்கப்படுகிறது. அங்கு எழுதப்படும் காமம் நிச்சயம் இவ்வரசியலை பேச வேண்டிய தீர்மானத்தில் இருக்கிறது. அவற்றை மிகச்சிறப்பாக செய்திருக்கிறது சமீபத்தில் வெளியான தூயன் எழுதிய இருமுனை எனும் சிறுகதைத் தொகுப்பு. இது அவருடைய முதல் நூலும் முதல் சிறுகதை தொகுப்புமாகும்.


தூயனை தனிப்பட்ட முறையிலும் பத்திரிக்கைகளில் வெளியான சில சிறுகதைகளின் வழியேவும் அறிந்திருந்தேன். அவருடைய படைப்புலகத்தினூடாக முழுமையான முதற்பயணம் இத்தொகுப்பின் வழியே தான் நிகழ்ந்திருக்கிறது. இத்தொகுப்பில் ஏழு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றிருக்கிறது. வகைமைகளைக் கடந்து அனைத்து கதைகளும் சில மையப்புள்ளிகளில் இணைகின்றன. அவையாவன,

1. ஓவியம், நாட்டாரியல் கதைக்கூறுகள், தொன்மங்கள், புராணீகங்கள், வரலாறு போன்றவற்றின் நீட்சியாய் வாழ்க்கை சில கற்பனைகளுடன் தொக்கி நிற்பது.
2. வாழ்வின் அனைத்து தருணத்தையும் காமத்துடன் இணைத்து அரசியலாக்குவது. உடல் அரசியலாவதும் அரசியலால் உடல் ஆட்கொள்ளப்படுவதுமாய் கதைகள் நகர்கின்றன.

இவ்விரு விஷயங்களில் இருந்தும் தனித்து தெரிவதுமஞ்சள் நிற மீன்எனும் சிறுகதை மட்டும் தான். கதைசொல்லல் மரபிலிருந்து வந்த நம் சமூகம் புதிதாக ஓர் கதைசொல்லியை எப்படி உருவாக்குகிறது என்பதை சிறுவர்களின் அளவிலேயே நேர்த்தியாக அளித்திருக்கிறார். மேலும் குழந்தைகளின் உலகில் புறக்கணிப்பு மிக எளிமையானது. கற்பனை தன்னை காலத்திற்கொப்ப புணரமைத்துக் கொண்டே இருக்கும். அவ்வாறு நிகழும் பொழுது பழைய கற்பனைகளும் அதை சொல்லிய ஆட்களும் நினைவுகளிலிருந்து அழிக்கப்படுவார்கள். இந்த தன்மையை கதைமாந்தர்களாக உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர்.

இத்தொகுப்பில் இருக்கும்பேராழம்”, “இருமுனை”, “தலைபிரட்டைகள்ஆகிய சிறுகதைகளை நவீன முயற்சியாக உணர்கிறேன். தலைபிரட்டைகள் சிறுகதையில் முடி திருத்தும் அப்பாவின் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியும், தனிப்பட்ட வாழ்க்கையில் துரத்தும் அபத்தங்களும் நாயகனை எவ்வாறெல்லாம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார். வம்சாழிவழியாக முடி திருத்துபவர்களின் வாழ்க்கையை சின்னதாக பதிவு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியலின் பங்கு என நம்புபவன் நான். க்ரீன் ட்ரெண்ட்ஸ், நேச்சுரல்ஸ், டொனி அண்ட் கை போன்ற நவீனகால முடிதிருத்தகங்கள் வந்தபின்னர் வழிவழியாக வந்த முடிதிருத்துபவர்களின் நிலை என்ன ஆனது என்னும் கேள்வியை இச்சிறுகதை எழுப்பியே செல்கிறது. சொல்லப்பட்ட கதையின் எழுப்பப்படாத கேள்வி என்று பிரதியளவில் கடந்து செல்லத் தான் முடிகிறது.

இருமுனைஉளவியலை நுண்மையாக பேசுகிறது. நிழலுடன் மட்டுமே உரையாடும் மனிதன் தன்னைப் போலவே இருக்கும் பெண்ணொருத்தியை சந்திக்கிறான். அம்மனித நிழலுடன் ஏன் உரையாடுகிறான், அந்த பெண்ணுடனான சந்திப்பு என்ன ஆனது என்பதை துல்லியமாக எழுதிச் செல்கிறார். இடையில் வரும் ஓர் வரி கதையின் சாராம்சத்தையும் தூயனின் படைப்புலகத்தையும் விவரிப்பதாகவே உணர்கிறேன். அவ்வரி,

ஓவியன் முதன் முதலில் தன் நிழலைப் பார்த்துதான் ஓவியம் வரைய ஆரம்பித்தான். பின் அவனிடமிருந்து வெளியேறிய அந்நிழலை, தான் வரைந்த பல்வேறு ஓவியங்களில் தினம் தேடிக் கொண்டேயிருந்தான். அப்படித் தொலைந்த நிழல்கள் இன்னும் ஓவியங்களுக்குள் இருக்கின்றன

முகம் என்றொரு கதை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. அது பன்றிகளால் ஆன கதை. பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் உறவு, பன்றிகளை முன்வைத்து அப்பகுதி  எப்படியொரு அரசியலுக்குள் சிக்கப்படுகிறது, அதிலிருக்கும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை விவரித்து செல்கிறார். இடையில் திரைப்படத்தின் கதைப்போக்கில் நழுவிச் சென்றாலும் மனித மனம் கொள்ளும் வன்மத்தை சிறுகதையின் கடைசியில் நிறுவியே செல்கிறார்.

காமத்தை பேசும் கதைகள் தூயனுடையவை என்று சொல்லியிருந்தேன். அதற்கான விளக்கத்தை அவரேபேராழத்தில்எனும் சிறுகதையில் வைத்துள்ளார். அது வரலாற்று சிறுகதை. செங்கிறைமறவனின் ஆட்சிக்காலத்தில் மண்டபம் ஒன்றின் கட்டுமானப் பணி சிற்பக் கலைஞர் வேதசாதகரிடம் ஒப்படைக்கப்படுகிறது. காலங்கள் கடத்தப்பட்டுக்கொண்டே செல்கின்றன. ஆனாலும் முடிந்த பாடில்லை. அவருக்கும் பிரச்சினையாக இருப்பது காமம் தான். இவ்விரு விஷயங்களும் எப்படி ஒன்றிணைகின்றன எனும் இடத்தில் தான் சிறுகதையின் செறிவை உணர முடிகிறது. சிறுகதையின் ஒரு பகுதியில் வேதசாதகர் தன் குரு அஞ்ஞாசகரிடம் உரையாடுகிறார். அதில் அவர் சொல்லும் பதில் தான் தூயன் கதைகளின் மையநீரோட்டமாக அமைகிறது,

காமம் எங்கிருக்கிறதென அறிந்துவிட்டீரா ? ஆசை இருக்கிறதல்லவா. மானுட விருப்பு வெறுப்புகள் இருக்கிறதல்லவா ? அவையெல்லாம் காமம் அல்லாதவைகள் என்று நினைக்கிறீரோ ? மானுடம் ஆசைகளால் இயங்குகிறது. இச்சை அரூபமானது. அதன் தோற்றத்தை எங்கு காண முடியும் ? அதற்கென ஒரு தோற்றமிருக்குமென்றால் அது இந்த உடல். இந்த சரீரம் தானே. இதுதான் அதன் ரூபம். ரதியை நீர் கண்டடைந்து பாருங்கள் அவளுள் எஞ்சியது எதுவும் இங்கு இல்லை

தூயனுடைய எழுத்துகளின் பலம் என இரு விஷயங்களை உணர்கிறேன். ஒன்று விவரணைகள். “இன்னொருவன்எனும் கதையில் வரும் அப்பா கதாபாத்திரம் ஆசிட் தொழிற்சாலையில் பணிபுரிபவர். அதனால் புற்றுநோய் ஏற்படுகிறது. அதை அவர் சில பக்கங்களுக்கு விவரிக்கிறார். நோயாளியை நேரில் காணும் தன்மையை அப்பக்கங்கள் கொண்டிருக்கின்றன. “முகம்சிறுகதையிலும் பன்றிகள் உலவும் இடத்தை விவரிக்கும் பகுதிகள் நேர்மையாக அமைந்திருக்கின்றன.

மற்றொரு பலம் உவமை. உவமையின் பயன்பாடே காட்சிப்படுத்த முனையும் விஷயம் வாசகர்கள் எளிதில் கற்பனை செய்யும் விதத்தில் அமைய வேண்டும் என்பதே. அதை காலந்தொட்டு குறிப்பிட்ட சில விஷயங்களோடே சொல்லி சொல்லி பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தூயன் சில நவீன உவமைகளை கையாள்கிறார். இந்திய வரைபடத்தை சிலுவையில் தொங்கும் கர்த்தருடனும், ஆண்குறியை வாலில்லாத பல்லியெனவும், காமத்தை மென்மையாக செய்யப்படும் கொலை எனவும், சங்கிலிகளால் கட்டப்பட்ட பைத்தியத்தை புணர்தல் மென்பொருள் வேலை எனவும் நிறைய உவமைகள் தொகுப்பு முழுக்க இடம்பெறுகின்றன. வருத்தத்திற்குரிய விஷயம் உவமைகளே தூயனின் பலகீனமாகவும் அறியப்படுகின்றன. அடுக்கடுக்கான உவமைகள் கதையின், கதைக்களனின் நகர்வுக்கு துணைபோகாமல் விவரிப்பிலேயே வாசகனை நிறுத்திவிடுகின்றன. சுருங்கச் சொன்னால் பலமும் பலகீனமும் ஒரே விஷயங்களில் தூயனிடம் இடம்பெற்றிருக்கிறது.

மேலும் ஒரு பலகீனமாக கதைகளில் இருப்பது ஒவ்வொரு கதையினையும் அற்புதமாக நகர்த்தி செல்லும் ஆசிரியர், வேறு வார்த்தைகளில் கதையின் போக்கிலேயே செல்லும் பக்கங்கள் தூயனின் வார்த்தைகளில் முடிவடைகின்றன. வாசகனின் கற்பனையை முழுதாக தூண்டிவிட்டு அற்புதமான தருணத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் அவரின் வார்த்தைகள் கதையினை விட்டு நகர்த்திவிடுகின்றன. தேவிபாரதியின் மொழியில் இதைக் காண முடியும். ஆனால் இந்தத் தன்மையை வெகு சுலபமாக புனைவின் மொழியாக்கியிருப்பார். இதை பலகீனமாக குறிப்பிட்டிருந்தாலும் சிறுகதைகள் கதையின் கருவில் வாசகர் மனதில் சலனத்தை ஏற்படுத்தியே செல்லும்.

இவ்வளவு நேரம் சொல்லப்படாத கதை அவருடைய குறுநாவல்ஒற்றைக்கண் துலையன்”. குறுநாவல் அற்புதமானதொரு களம். அதை பலர் சோதனை முயற்சியாக கூட மேற்கொள்வதில்லை. தமிழில் வெளியான குறுநாவல்களின் அளவு கூட பிற இலக்கிய வடிவங்களுடன் ஒப்பிடும் பொழுது குறைந்த அளவிலேயே இருக்கிறது. இதில் தூயனின் குறுநாவல் வடிவ நேர்த்தியுடன் மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் ஒருங்கே பெற்றறிருக்கிறது. ராசாத்தி அக்காவிற்கு புத்தி பேதலித்திருக்கிறது. அதற்காக கோயிலுக்கு அழைத்து செல்கிறார்கள். அந்த கோயிலுக்கென இருக்கும் தொன்மக் கதையும் குறுநாவலினூடே சொல்லப்படுகிறது. இரண்டும் ஏதோ ஓர் இடத்தில் இயல்பாக இணைகிறது. அவ்விடம் குறுநாவல் வாசகனுக்கு கொடுக்க வேண்டிய திறப்பை செவ்வனே செய்கிறது. அந்த தொன்மக் கதையினூடே வரலாற்றுப் பின்புலத்தையும் கையாண்டிருக்கிறார். இருக்குவேளர் எனும் வம்சத்தையும் அசவகுலத்தையும், அரச வம்சத்திற்கு அவர்கள் செய்த பங்கையும் கதையின் போக்கில் சொல்லிச் செல்கிறார்.


தொன்மங்களையும் புராணீகங்களையும் தொட்டு சமகாலத்துடன் பொருத்தி பார்த்து நவீன இலக்கிய மொழியை தூயன் உருவாக்குகிறார். ஒவ்வொரு சிறுகதையும் சிறு சிறு பகுதியாகவே அமைந்திருக்கிறது. தனக்கென வடிவத்தையும், பிரத்யேக மொழியையும் கொண்டிருக்கும் தூயனின் இருமுனை சமகால படைப்புகளிடையே தனக்கென ஓரிடத்தை நிச்சயம் பிடிக்கும்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

"ஒற்றைக்கண் துலையன்" வாசிக்க விரும்புறேன்...

நன்றி...

Post a comment

கருத்திடுக