மரணத்தின் மெல்லிய சரடு

சி.மோகனின் எழுத்துகள் முதலில் பரிச்சயம் ஆனது ஓநாய் குலச் சின்னம் வழியே தான். அது மொழிபெயர்ப்பு என்பதால் அவருடைய படைப்பிலக்கியம் சார்ந்து அறிய சின்ன ஆசை கொண்டேன். அவரின்விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்நாவலும்சி.மோகன் கட்டுரைகள்தொகுப்பும் தமிழில் இதுகாறும் முக்கிய இடத்தை பிடித்து வந்திருக்கிறது. இப்படி நேர்க்கோட்டில் அமையாத வாசிப்பினாலேயே அவருடைய புனைவுலகம் சார்ந்த புரிதல் என்னுள் ஏற்படாமல் இருந்தது. கட்டுரைகளின் வழியே இலக்கியத்திற்கு அவர் கொடுக்கும் முகமும் அவருடைய நாவல் புனைவுலகமும் வாசகனாய் என்னுள் ஏற்பட்ட பிம்பத்தை சந்தேகம் கொள்ள வைத்தன. இந்த நிலையில் தான் பரிசல் புத்தக நிலையத்தில் புத்தக இரவை முன்னிட்டு அவருடையகடல் மனிதனின் வருகைஎனும் சிறுகதை தொகுப்பை பற்றி பேசவிருந்தேன். அந்த வாய்ப்பு மேலும் சி.மோகனின் புனைவுலகை அறிய உதவி புரிந்தது.


இத்தொகுப்பில் பதிமூன்று கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் முக்கால்வாசிக் கதைகள் மரணத்தைப் பற்றியான கதைகளாக மட்டுமே இருக்கின்றன. மரணத்தை வன்முறையின் முடிவாக நிறுத்தாமல் அழகிய சலனமாக மாற்றுகிறார். மரணம் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு அர்த்தத்தை எடுத்துக்கொள்ளக்கூடியது. எந்த ஒரு மனிதனாலும் மரணத்தை உணர முடியாது. ஆனால் வாழ்க்கை முழுக்க அறியாத அந்த ஒரு விஷயத்திற்கு அர்த்தம் கொடுக்க முனைந்து கொண்டே இருக்கிறான். அதை வாழ்வின் விளிம்பு எனக் கருதுவதாலேயே மிகக் கடினமான வாழ்க்கை அனுபவங்களை மரணத்துடன் ஒப்பிட்டு நினைவுகளாக சேமித்து வைத்துக்கொள்கிறான். இப்படி மரணம் பற்றிய பயத்தை, கற்பனையை, காதலை, அந்நினைவுகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வாழும் வாழ்க்கையை சி.மோகனின் சிறுகதைகள் பேசுகின்றன.

மரணத்தை தொடர்ந்து எல்லா கதைகளிலும் பேசி வந்தாலும் அவற்றை பிரதானப்படுத்தி ஏதேனும் வாழ்வியல் தர்க்கத்தை கதையினுள்ளே ஏற்படுத்துகிறார். ஓடிய கால்கள் கதையில் எழுத்தாளனின் அபத்த வாழ்வை சித்தரித்துக்கொண்டே பிணத்திற்கும் உயிர் இருக்கும் உடலிற்கும் இடையே நிலவக்கூடிய வேறுபாட்டை விவரிக்கிறார். மரணவாடை எனும் கதையில் நண்பனின் மரணத்திற்கும் அப்பாவின் மரணத்திற்கும் இடையே மனம் கொள்ளும் வேற்றுமகளை எளிய புனைவாக மாற்றியிருக்கிறார். அம்மாவின் மரணம் எனும் கதையில் மூன்றாம் வகுப்புக் குழந்தையின் பார்வையில் மரணம் எப்படி இருக்கிறது என்பதை காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார். சொல்லப்படாத மரணத்தின் பயம் எப்படி மகளிடமிருந்து அம்மாவிற்கு பரவக்கூடியது என்பதை பட்டுப்பூச்சியும் கல்வீணையும்  எனும் சிறுகதையில் கூற முயன்றிருக்கிறார். சிதைவு எனும் கதையில் அறியப்படாத அல்லது நிச்சயமாக அறியாத மரணத்தின் செய்தியை மனித மனம் எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளுள் சில வாழ்வின் உணர்வுகளையும் சித்திரப்படுத்துகின்றன. ரகசிய வேட்கை எனும் சிறுகதை இத்தொகுப்பிலேயே சிறந்த கதை என என் பக்கத்தினின்று கூறுவேன். காமத்தின் மீதிருக்கும் பயம், அது உருவாகும் விதம், அதை பெண் தன்னுள்ளேயே எப்படி உலகமாக மாற்றிக் கொள்கிறாள், அதிலிருந்து விடுபட முனையும் தருணத்தில் காமத்திற்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் உறவை எப்படி அறிந்து கொள்கிறாள் என மிக நுண்மையாக புனையப்பட்டிருக்கிறது.

இதே போல மேலும் இரண்டு கதைகளை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்றுமருதாயிக் கிழவியின் காகிதப் பைகள்எனும் சிறுகதை. காகிதப் பைகளின் மேல் ஆர்வம் கொள்ளும் கிழவியின் வாழ்க்கையும் மரணமும் எவ்வளவு சுருங்கியதாகவும் வசீகரமானதாகவும் மாறுகிறது என்பதை விவரித்திருக்கிறார். சிறுகதை கொடுக்கும் முடிவு தலைப்பிற்கொப்ப ஏற்புடையதாய் இருக்கிறது. அம்மாவின் மரணம் எனும் சிறுகதையில் ரகசியம் எனும் விஷயம் மனதினுள்ளே புகும் தருணத்தில் உலகிடமிருந்து எப்படி ஒருவன் தனிப்படுத்தப்படுகிறான் என்பதையும் அந்த தனிமை கொடுக்கக்கூடிய விஷயங்கள் தான் என்ன எனும் அடிப்படைக் கேள்வியையும் சிறுமியின் வழியே சொல்லியிருப்பது அற்புதமாக வெளிவந்திருக்கிறது.

அனைத்துக் கதைகளும் நேர்க்கோட்டு தன்மையில் அமைந்திருக்கின்றன. கதையின் ஆரம்பத்தில் திருப்பங்களை வைத்து, பின் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் கடந்த காலத்தை சொல்லி கடைசியில் மீண்டும் முதலிடத்திற்கே வந்து முடிக்கும் யுக்தியை பல கதைகளில் காணமுடிவதால் தொகுப்பளவில் புதுமையின்றி நகர்கிறது. நிலவெளி அச்சம் மற்றும் சிதைவு ஆகிய கதைகளில் ஈழம் சார்ந்த பின்புலத்தை கையாண்டிருந்தாலும் அவை மிக சுருக்கமாக அமைவதால் வாசிப்பில் ஆழமாக வேரூன்ற மறுக்கிறது.


குறைந்த ஆளவிலான சிறுகதைகளை எழுதியவர் சி.மோகன். இது அவருடைய ஒரே சிறுகதைத் தொகுப்பு. மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட சட்டகத்தினுள் மொழிக்கூர்மையுடன் மரணத்தை சுமந்து கொண்டு அலைகின்றன சி.மோகனின் கதாபாத்திரங்கள். அவை பேசும் கதைகள் தான் கடல் மனிதனின் வருகை.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக