சாத்வீகமும் சாத்தானும்

சாத்தானின் சதைத் துணுக்கு நூல் வெளியாவதற்கு முந்தைய நாள் அசோகமித்திரனை சந்திக்க நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். காலியான அறையில் படுக்கையின் ஒரு மூலைக்கருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். உள்ளே சென்றமர்ந்தவுடன் என் உடன் வந்தவரை பற்றி விசாரித்தார். ராஜன் என அறிமுகமாகிக் கொண்டபின் ராஜனிடம் என்னைப் பற்றி குறிப்பாக நான் பணிபுரியும் கேடர்பில்லர் பற்றி பேச ஆரம்பித்தார். அதன் தொழில் ரீதியான போட்டியாளர்களான ஜான் டீர் கம்பேனியின் வளர்ச்சி பற்றி பேச ஆரம்பித்தார். உழவு தொழிலில் அவர்களின் நவீன கண்டுபிடிப்புகள் எப்படியெல்லாம் இயங்கி வந்தன என்பதை மிக நுட்பமாக பேசினார். அப்பேச்சினூடே வார்தாவின் தாக்கமும் அதிலிருந்து தெரு மீண்ட கதையும் குழந்தையின் போக்கில் அவர் வாயினின்று கேட்க முடிந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் மரத்தை பேண்ட் சா (இயந்திர ரம்பம்) அறுக்கிறது என்பதை அதன் சப்தத்தை எழுப்பிக்கொண்டே ஆச்சர்யமென வியந்தார்.

சட்டென நினைவுகள் திரும்பி நாங்கள் வந்ததன் நோக்கத்தை கேட்டறிந்தார். நூலை கொடுத்தவுடன் சிறிதும் மௌனமின்றி,

“சாத்தானா சாத்வீகமா எதாவது பேரு வச்சிருக்கலாமே”


நூலின் பதிப்பகம் சார்ந்த விஷயங்களை கேட்க ஆரம்பித்தார். இடையில் அலைபேசி அழைப்பு வந்தமையால் பேச்சு தடம் மாறிப் போனது.  பெயர்கள் சார்ந்த அவரின் நுண்ணிய உணர்வை இம்முறைச் சந்திப்பில் நன்கு உணர முடிந்தது. அழகிய சிங்கர் எனும் பெயரில் இருக்கக்கூடிய கடின வசீகரத்தையும் ராஜன் எனும் பெயரில் இருக்கும் சுருங்கிய தன்மையையும் அவரின் முக பாவனைகளிலேயே காண முடிந்தது.

என்னுடைய அப்பாவையும் யாரோ ஒருவருடைய அப்பாவையும் ஆள் மாற்றி மனதில் பதிய வைத்திருந்தார். என்னிடம்

“உன் அப்பா தானே உனக்கு சமைச்சிண்டு, அவரும் சாப்டுண்டு இருக்கார்”
இல்லை எனப் புரிய வைத்தவுடன்,

“இங்க சென்னைல ஒருத்தர் இருக்கார். அவா வீட்ல வொய்ஃப் வேற ஊர்ல இருக்கா. அவர் தான் பையனுக்கு சமைச்சிட்டு அப்பறமா வேலைக்கும் போய்ட்டு வர்றார்,. ம்ம் இப்படியும் இந்த ஊர்ல மனுஷாள் இருக்கா” எனச் சொல்லிவிட்டு கடைசியாக இருவரிடமும்,

“பாத்தியா கேடர்பில்லர், ஜான் டீர ஞாபகம் வச்சிகறதுல எனக்கு பிரச்சினையே இல்ல. மனுஷாள தான் குழப்பிக்கறேன்” என்று சிரிக்க ஆரம்பித்தார்.

பேச்சு மீண்டும் தடம் மாறிய பொழுது தமிழ் இந்துவில் வந்த கட்டுரைகள் சார்ந்து ஓர் கேள்வி கேட்டிருந்தேன். அவர் வேளச்சேரியிலிருந்து வீடு மாற்றிய பொழுது பல நூல்களை நண்பர்களுக்கு அளித்ததாக எழுதியிருந்த ஞாபகம். அதை எனக்கு ஒரு மின்னஞ்சல் போட்டிருந்தால் வந்திருப்பேனே என அசட்டுத் தனமாக கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை வியக்கவே செய்தது. அனைத்து நூலையும் கொடுக்கவில்லை. குறிப்பாக தெஸாரஸை கொடுக்கவில்லை என்றார். சொன்னதோடு நில்லாமல் தெஸாரஸ் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை எப்படியெல்லாம் கொடுக்கிறது, முதன் முதலில் இவற்றையெல்லாம் தொகுத்தது யார், எழுத்தாளனுக்கு தெஸாரசின் தேவை என்ன என்று பேசினார். கைகளில் நூலைக் கொடுத்தும் பொறுப்பற்ற எழுத்தாளனாக இருக்கிறோமோ எனும் குற்றாவுணர்ச்சி தன் மெல்லிய நிழலை என்மீது படரவிட்டு சென்றது. சிறிய மௌனத்தை கலைத்தவாறு,

“சரி வயித்தெறிச்சல் படாத உனக்கும் புக்கு தர்றேன்” என இருவருக்கும் கை(பை) நிறைய புத்தகங்கள் கொடுத்துவிட்டார்.

காலை உணவை சாப்பிடும் பொழுது அவருடைய எழுத்து சார்ந்த பேச்சினை பேச ஆரம்பித்தோம். ராஜன் தான் வாசித்த குறுநாவலை குறிப்பிட்டு அந்த கதையின் புரிபடாத் தன்மையை புரிந்துகொள்ள முயன்றார். இதனூடே அடியேனால் சிறு தர்க்கமும் எழுந்தது. எல்லா வடிவங்களிலும் நேர்த்தியை அசோகமித்திரனால் எப்படி செய்ய முடிந்தது என்பதே என் தர்க்கத்தின் நோக்கமாக அமைந்தது. அப்போது முக்கியமான விஷயமொன்றை பகிர்ந்தார். அஃதாவது அவருடைய கரு எவ்வடிவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அக்கருவாகவே முடிவு செய்கிறது. அதை மாற்ற முனையும் தருணத்தில் திருப்தி ஏற்படாது. மேலும் அனைத்து எழுத்தாளர்களிடமும் ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கிறது. ஒவ்வொரு வடிவத்திலும் அதை தொட்டுவிட்டால் அது அவரளவில் நல்ல கதையாகவே இருக்கும். போதனையாக அமைந்தது அவ்வார்த்தைகள்.

கிளம்புவதற்கு முன் போட்டோ எடுக்க கேட்டோம். அவரும் சம்மதிக்க நூலுடன் நான் முதலில் எடுத்துக்கொண்டேன். பின் ராஜன் அவரருகில் அமரும் பொழுது நூலினை அசோகமித்திரன் கைகளில் இருந்து எடுத்துக் கொண்டேன். அப்போது அவர் ராஜனிடம்,

“உங்கிட்ட புக் இருந்தா குடு. இல்லையா ? முகம் மட்டும் தான் இருக்கா ?”

வயோதிகம் கொடுக்கும் அழகு எழுத்தாளனைப் பொறுத்தவரை அலாதியான ஒன்றுதான். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் வாழ்க்கையின் அங்கதத்தை சுமக்கிறவராகவே அசோகமித்திரன் எனக்கு தெரிகிறார்.அவருக்கு நூலை சம்ர்ப்பணம் செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நூலின் வழியே எனக்கும் ராஜனுக்கு கிடைத்தது மகத்தான ‘எளிமையின்’ தரிசனமாக இருந்தது.


பி.கு 1: அசோகமித்திரன் lighting ஐ பொறுத்து இடத்தை சொல்ல அழகுற போட்டோ நல்கிய த.ராஜனுக்கு நன்றி.

பி.கு 2 :  இப்பதிவிலும் சொல்லாமல் கடந்து சென்றுள்ள விஷயங்களே அதிகம்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக