கண்டவர் விண்டிலர்


லா..ராமாமிருதத்தை படைப்பிலக்கியம் வழியாக மட்டுமே அறிவேன். அவர் சார்ந்து நான் கொண்ட தேடலும் பிறர் மூலம் எனக்கு கிடைத்த அறிமுகங்களும் கூட அவருடைய படைப்பிலக்கியம் சார்ந்தே அமைந்திருந்தது. சாஹித்ய அகாதெமி விருது அவருடையசிந்தா நதிஎனும் நூலுக்கு தான் கிடைத்தது. அது படைப்பிலக்கியம் அன்று. நினைவலைகளின் தொகுப்பு. படைப்பிலக்கியத்தில் மொழியின் கட்டற்ற பயணத்தை தடை செய்யாமல் அதன் இஷ்டத்திற்கு பயணம் செய்ய விட்டிருப்பார். லா..ராவின் படைப்புகள் கண்களை மூடி லயித்து செல்லும் இசையின் கனம். அவரின் கட்டுரைகள் எப்படியிருக்கும் என்பது என் கற்பனைக்கு சாத்தியமற்றதாக இருந்தது. இந்நிலையில் அவருடைய பாற்கடல் எனும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. இந்நூலும் கிட்டதட்ட அவருடைய நினைவலைகள் தான்.

எழுத்தாளனின் வாழ்வியல் அனுபவங்களை வாசிப்பதும் கேட்டறிவதும் அலாதியான சுகம். மேற்கொள்ளும் பயணங்களும் அதன் வழியே காணக்கிடைக்கும் மனிதர்களும் சாமான்ய வாசகனான எனக்கு பொறாமையையே மேலெழும்பச் செய்யும். இதைத் தாண்டிய வேறொரு விஷயம் என்னை எப்போதும் வியப்புற வைக்கும். சாமான்ய மக்கள் சந்திக்கும் அல்லது அனுபவிக்கும் பல சந்தர்ப்பங்கள் எழுத்தாளனின் வாழ்விலும் அரங்கேறுகிறது. ஆனால் அதிலிருந்து அவன் வரும் முடிவுகள் அவனை மேம்படுத்தியவனாக அல்லது ஞானவானாக காட்டுகிறது. படைப்பிலக்கியவாதி சமூகத்திற்கு ஒருபோதும் உபதேசம் செய்வதில்லை. மாறாக உபதேசங்களின் உருவகமாக கதாபாத்திரங்களை மக்களிடையே அசை போட உலவவிடுகிறார்கள். அப்படி லா..ரா உலவவிட்ட பாத்திரம் தான் அபிதா. லா..ரா என்றாலே இலக்கிய வாசகனின் நினைவலைகளில் அதிர்வுகளாய் எழும் வார்த்தை அபிதா.

லா..ராவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ? எங்கிருந்து இப்படியான பாத்திரங்களையும் நாவல்களையும் அவரால் புனைய முடிந்தது என்பதை அறிய இந்நூல் சிறு உதவி புரிகிறது. வெறும் சுயசரிதையாக இந்நூல் முடிந்துவிடாமல் இலக்கியத்தின் உள்ளே தனி மனிதனின் தேடல் எப்படி விஸ்தீரணம் கொள்கிறது என்பதையும் விளக்குகிறது. தனி மனித அனுபவங்களுக்காக இலக்கியமும் இலக்கிய நேர்த்திக்காக தனி மனித அனுபவங்களும் எப்படி வளைய வேண்டியிருக்கும் என்பதையும் எழுதிய அனுபவங்களின் வாயிலாக விளக்கியிருக்கிறார்.

அதற்கு பாற்கடல் எனும் பெயர் அமையவும் காரணம் அவர்வசம் இருக்கிறது. அமுதசுரபி இதழில் தொடராக வந்ததே இந்த பாற்கடல். அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைகின்றனர். தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கிறது. சிவனுக்கு விஷம் கிடைக்கிறது. ஆனால் அசுரர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. நியாயம் சொல்பவனிடத்திலிருந்து தான் உருவாக்கப்படுகிறது. அதையே அவர் சொல்கிறார்,

அன்றிலிருந்து இன்றுவரை நியாயங்கள் பாற்கடலின் பங்குகளாய்த்தான் நடைபெற்று வருகின்றன

இந்த நியாயத்தை இக்கட்டுரைத்தொகுப்பிலேயே பல இடங்களில் தர்க்கம் செய்ய முனைகிறார். ஆங்காங்கே what is truth ? எனும் கேள்வி வாசிப்பில் தட்டுப் பட்டுக் கொண்டே வருகிறது. வாழ்க்கையில் உண்மை என்பதை யாராலும் அறிய முடியாது. எல்லாமே தருணங்கள். அத்தருணத்தில் எவன் பார்வைக்கு எது உண்மையோ நியாயமோ அதுவே உண்மையும் நியாயமும். இந்த பார்வையை கட்டுரை எனும் அளவில் மட்டுமே வைக்காமல் நாவலிலும் வாழ்க்கையினூடே சந்தித்த மனிதர்களின் வழியேவும் கண்டுகொண்டிருக்கிறார்.

இந்நூலின் வழியே அவர்தம் வாழ்வில் பெரியோர் என மதித்த சில மனிதர்களின் வாழ்வியல் தருணங்களை எழுத முயன்றிருக்கிறார். அது தன் எழுத்தில் எப்படி தாக்கம் செய்திருக்கிறது என்பதையும் விளக்கி செல்கிறார். இதனிடையே எழுத்தாளன் எனும் அளவில் சமூக மதிப்பீடுகளை அவர் காணும் விதம் ஆச்சர்யமுற வைக்கிறது. லா..ராவின் கதைகளை புரியவில்லை எனவும் பிடித்திருக்கிறது எனவும் கடிதங்கள் வந்து கொண்டிருந்த பொழுது அவருடைய வார்த்தைகள் இப்படி அமைகின்றன,

““பிறருடைய போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் என் எழுத்து அப்பாற்பட்டதுஎன்று எழுத்தாளன் சொல்லிக் கொள்ளலாம். அது ஒரு கட்டத்துக்குப் பின் உண்மையாகவுமிருக்கலாம். ஆனால் எழுத்தாளனும் மனுஷன்தான். “என் எழுத்து அத்தனையும் மாணிக்கம்; வாசகர்கள் அதற்கு லாயக்கற்றவர்கள்என்று சாதிக்காமல், தர்க்கம் முற்றினால் கோதாவில் இறங்காமல், தன் எழுத்தில் தன்னம்பிக்கையை மௌனத்தில் நிலைநாட்டினால் பெரிசு. ஆனால் பாராட்டை வேண்டாம் என்கிற மறுப்பை யாரும் நம்ப வேண்டாம். எங்களுக்கும் முதுகு தட்டல் பிடிக்கும், வேணும்.”

தன் அபிலாஷைகளை வெளிப்படையாக சொல்லும் லா..ரா தன் நேர்மையை கடைசி வரை தாங்கிப் பிடிக்கிறார். அதற்கு உதாரணம் ஓர் வாசகர் லா..ராவை சிறுகதைகளின் பிதாமகன் என்று கூறியிருக்கிறார். அதை அவர் ஏற்பதாயில்லை. சிறுகதைகளின் அளவீடுகளை கூறும் அதே சமயம் பிதாமகன் எனும் வார்த்தையின் அர்த்தத்தையும் விளக்குகிறார். எழுத்தாளன் வயதாகிறானே ஒழிய எழுத்து வயதாவதில்லை. இந்நிலையில் தன்னை பிதாமகன் எனக் கூறுவது தவறானது என்பதை எளிமையாக எடுத்துரைக்கிறார். மேலும் எழுத்து எனும் வார்த்தைக்கு அதீத முக்கியத்துவத்தை கொடுக்கிறார். காரணம் கதை ஒருபோதும் முடிவதில்லை. உலகம் அழிந்துவிட்டது எனக் கூறினால் அது அழிந்ததை சொல்ல யாரோ ஒருவன் இருக்கிறான் என்பதாகிவிடும். ஆக கதைகள் ஒருபோதும் முடிவதில்லை. மாறாக எழுத்து அந்த தருணங்களை எழுதிக் கொண்டே இருக்கிறது. நூலின் பல இடங்களில் இந்த எழுத்திற்கு விளக்கம் கொடுக்க முனைகிறார். அதில் ஒன்று,

எழுத்து ஒரு சின்னம்மை, அரிப்பு மாதிரி. அது வராதவர்களே கிடையாது. ஆனால் எத்தனை பேர் குடலிலேயே போட்டுக்கறது, ஜ்வாலையாக வளர்ந்து அவர்களிலும் எத்தனை பேரை எரிக்கறது. அதிலும் எத்தனை பேரை எரித்துக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் கேள்வி

எழுத்தை கூறும் அதே நேரம் அதன் உட்பிரிவுகளை மிக அழகாக விவரிக்கிறார். கட்டுரை என்பது எப்படி அமைய வேண்டும், எவற்றையெல்லாம் அது தன்னுள் சேர்த்துக் கொள்ள வேண்டும், கட்டுரைகளிடையே பிரிவுகளாக இருக்கும் விஷயங்கள் என்ன, அவற்றிற்கு எழுத்தாளனின் தேவை யாதாக இருக்க வேண்டும் என்பதை மிக நிதானமாக சொல்கிறார். இலக்கியம் சார்ந்து எங்கு பேச்சு வந்தாலும் அங்கு அவர் முக்கியமாக முன்வைக்கும் விஷயம் யதார்த்தம். யதார்த்தம் கலந்து தான் கற்பனையை மெருகேற்றுகிறது.. வெறும் கற்பனையை வாசகனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.

கற்பனையை பற்றி விரிவாக கட்டுரை இதில் இடம்பெற்றிருக்கிறது. மதுரை சர்வகலாசாலையில் 1978 ஆம் ஆண்டு லா..ராவின் எழுத்துகள் சார்ந்த முழு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. அதில் அவருடைய கதையொன்றை எடுத்து logical சார்ந்த தர்க்கங்களை கேட்கிறார்கள். அந்த கதையின் வரிகளையும் எடுத்துக்காட்டி அவர் கொடுத்த விளக்கங்களையும் சேர்த்திருக்கிறார். அங்கு கொடுத்த விளக்கங்களைத் தாண்டி வேறு சில நுண்மைகளையும் அவர் கூறுகிறார். குறிப்பாக அவரளவில் கற்பனை என்பது என்ன என்று.

ஏதோ போதனா புத்தகத்திலிருந்து படிக்கவில்லை. எழுத்தநுபவத்திலிருந்து சொல்கிறேன். கற்பனை என்பது வெறும் கப்பு. ‘gas’ காற்றாடி விடுவதல்ல; இஷ்டத்துக்கு கயிறு திரிப்பதல்ல. அதற்கும் பிரமாணங்கள், பிரமாணிக்கங்கள் உண்டு. நித்தியத்துவத்துக்கு நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலவரைகளைத் தாண்டி, எண்ணத்தின் வன்மையில், சாதுர்யத்தில், நிகழ்ச்சியை அதன் வரம்பு கோட்டினின்று விடுதலை செய்து, விரிவு கண்ட அந்தத் தடத்தில் என்ன நடக்கிறது, நடக்கக்கூடும் என்பதை அனுமானத்தில் காண்பது தான் கற்பனை. It is not anybody’s any guess. It is calculated”

இந்த கற்பனைகளுக்கு வித்திடுவதாக அவர் வாழ்க்கையில் பார்த்த கதாபாத்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவரது முழுக்குடும்பமே இலக்கியத்தில் பாண்டித்யம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதன் வழியே சில நபர்களின் அந்திமக் காலம் காவியத் தன்மையுடன் அமைந்திருக்கிறது. எழுத்தை அபத்த வாழ்வின் நினைவுமீட்டல்களின் வழியே கற்பிதமாக கொள்ளக்கூடும் என்பதை இந்நூலின் வழியே அறிய முடிகிறது. இதிகாசங்களையும் காவியங்களையும் சமகாலத்தில் வைத்து மதிப்பீடு செய்கிறார்கள். அப்படி செய்யும் தருணத்தில் சமகாலத்தில் கண்ணுறும் மனிதர்களுக்கு சமமானவர்களாக மாறுகின்றனர் காவிய புருஷர்கள். அதே லா..ராவின் வாழ்க்கையின் வழியே வாசகன் காணும் மனிதர்கள் வேறு வகையில் காவிய புருஷர்களாக மாறுகின்றனர்.

அவரின் முன்னிருந்தவர்கள் காவியத்தை மதிப்பீடு செய்கிறார்கள் எனில் லா..ரா தன் சமகாலத்தவர்களை பரிசீலனை செய்கிறார். பரிசீலனை என்பதை விட அவர்களின் வழியே ஆன்மீகத்தை உணர்கிறார். தான் காணும் ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் நம்பிக்கைகளுக்கு உளமாற செவிகொடுக்கிறார். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உணர்ந்தது டிராமைப் பற்றி அவர் எழுதிய பகுதிகள். இக்காலத்தில் டிராமை காண முடிவதில்லை. அப்போது அதற்காக ஊழியம் செய்தவர்களின் வாழ்க்கையை விவரிக்கிறார். அதை முடிக்கையில் அவருக்கேயான பாணியில் பின்வருமாறு சொல்கிறார்,

எதிர் எதிராக இரண்டு ட்ராம்கள் கடக்கையில் ஒரு டிரைவரின் உதடு அசையும். எதிர் வண்டி டிரைவரின் புருவங்கள் உயரும்; ஏதோ சேதி பரிமாறப்பட்டுவிட்டது. எனக்கு அப்பவே தோன்றிற்றுடிரைவர்கள் மூலம் டிராம்களே பேசிக்கொண்டன

வாழ்வின் வழியே சந்தித்த மனிதர்களையும், அதன் வழியே ஓடிய கற்பனைகளையும், அதற்கு உயிரூட்ட எழுதிய மொழியையும், அதை பயன்படுத்திய விதத்தையும், அதன் வழியே கண்டடைந்த தரிசனங்களையும் நேரடியாக சொல்லாமல் பல உவமைகளின் துணை கொண்டு உணர்த்த முயற்சிக்கும் தொகுப்பாகவே பாற்கடல் இருக்கிறது. ஆனால் உண்மையை நோக்கிய அவரின், அவர் படைத்த கதை மாந்தர்களின் தேடல் முழுமையடைந்ததாக தெரியவில்லை. அந்த உண்மையின் தேடலுக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தையே இப்பதிவிற்கான தலைப்பென வைத்து இப்பதிவை முடிக்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக