ஐரோப்பிய கதைசொல்லிகள்

இலக்கிய வாசிப்பினை மேற்கொள்ளும் எல்லோராலும் வியந்தோதப்படும் ஒரே நபர் க.நா.சுவாகத் தான் இருக்கும். அதற்கான மூலக்காரணம் அவருடைய எண்ணிக்கையிலடங்காத இலக்கிய பங்களிப்பு. எழுதிக் கொண்டே இருந்தார். எழுதியதைக் காட்டிலும் வாசித்துக் கொண்டிருந்தார். வாசித்தவற்றிலிருந்து சிலவற்றை மொழிபெயர்த்தும் கொண்டிருந்தார். அவரை மட்டுமே வாசிக்கக் கூட பல மாதங்கள் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட செலவிடப்பட வேண்டியிருக்கும். காரணம் அவர் எழுதியதன் அளவு.

இதில் அதிகம் பேசப்பட்டது அவருடைய மொழிபெயர்ப்புகள் தான். என்னளவில் அவருடைய மொழிபெயர்ப்புடன் சில விஷயங்களில் ஒத்துப் போக மாட்டேன். காரணம் க.நா.சு கதையின் ஆன்மாவை தன்னுடைய மொழிபெயர்ப்பில் கொணர்பவர். மாறாக முழுமையான மொழிபெயர்ப்பை நல்குபவர் என்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது வாசித்தலின் வழியே உணர்ந்த விஷயம். தெளிவுபெறவேண்டி இந்த சந்தேகத்தை கோணங்கியிடமும் ஒருமுறை விசாரித்திருந்தேன். அவருடைய பதிலும் இதுவாகவே இருந்தது. ஆனாலும் க.நா.சுவின் மொழிபெயர்ப்புகள் வாசிப்பினில் பெரிதான, மகத்தான தரிசனங்களை தருகின்றன. அதை மட்டும் மறுக்க முடியவில்லை.அவருடைய மிகச் சிறிய மொழிபெயர்ப்பு தொகுப்பினை வ.உ.சி நூலகம் வெளியிட்டில் கண்டேன். அது தான் “ஐரோப்பிய சிறுகதைகள்”. இதில் ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆன்டான் செகாவ், ரோமர் வில்சன், எர்னஸ்ட் காடன் முதலான பத்தொன்பது எழுத்தாளர்களின் ஒரு சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் அதனதன் அம்சத்தில் தனித்தே நிற்கின்றன. எந்த அடிப்படையில் இப்படியான முற்றிலும் மாறுபட்ட தொகுப்பினை உருவாக்கினார் என்பதை என்னால் யோசிக்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்தே ஓருலகம் இயங்குகின்றது. அடுத்தவனுக்கு அவ்வுலகம் முக்கியமற்றதாக இருக்கிறது. இந்த இரு நிலைகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டையே இந்தக் கதைகள் பெரிதாக பேசுகின்றன. உதாரணத்திற்கு எனில் புத்திர சோகம் எனும் ஆண்டன் செகாவின் கதையில் தன் மகன் இறந்துவிட்டான் என்பதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என தன் வண்டியில் ஏற்பவர்களிடம் எல்லாம் கூறுகிறான். அவன் ஒரு குதிரை வண்டிக்காரன். சிலருக்கு அவன் செய்கையும் நடத்தையும் பிடிப்பதில்லை. சிலர் சோகத்தை கேட்க தயாராயில்லை. ஆனாலும் அவன் எல்லோரிடமும் சொல்ல நினைக்கிறான். சொன்ன பின்பு என்ன ஆகும் ? சோகம் தீர்ந்துவிடுமா ? மகன் நினைவுகள் அழிந்துவிடுமா ? இந்த கேள்விகளுக்கு அல்லது தீர்மானங்களுக்கு அவன் மனம் தயாராயில்லை. ஆனாலும் சொல்வதே அவனுள்ளே இருக்கும் உந்துதல். இதை மிகச் செறிவான மொழியாக்கமாக்கியிருக்கிறார். கடைசியில் அவன் யாரிடம் சொல்கிறான் என்பதில் தான் செகாவின் கதைக்கே ஆன தன்மை ஒளிந்து இருக்கிறது.

காவ்யா பதிப்பக வெளியீட்டில் க.நா.சுவின் மொத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இருக்கிறது. அத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் இலக்கியகர்த்தாவின் அன்றாட வாழ்க்கையினை மையப்படுத்தியதாக இருக்கும். எழுத்தாளனின் ஏழ்மை, அவனுடைய கஷ்டங்கள், அவனுடைய உறவினர்கள் என. இந்த கதைகளின் தாக்கம் அவருடைய மொழிபெயர்ப்புகளிலும் தெரிகிறது.

கியோவன்னி பாபினீ என்னும் எழுத்தாளரின் இலக்கிய பிச்சை  எனும் சிறுகதையின் மையம் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. எழுத்தாளனுக்கு உடனே கதை எழுதியாக வேண்டும். எழுத்தாளனால் அதிகபட்சம் எழுத்தக்கூடியது தன்னுடைய வாழ்க்கையைத் தான். அது முடிந்துபோயின் அவன்வசம் எழுத என எதுவுமே இல்லை. இந்நிலையில் தான் அவனுக்கு யாரேனும் சாமான்யனின் வாழ்க்கையை அறிந்து அவனைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறான். வழியில் சாமான்யன் ஒருவனையும் சந்திக்கிறான். இந்த சந்திப்பு என்னவாகிறது என்பது தான் கதையாகிறது. எழுத்தாளனுக்குள் சாமான்யன் சார்ந்த ஈர்ப்பு எப்படி ஒட்டுமொத்த சாம்னாயர்கள் சார்ந்த வெறுப்பாக மாறுகிறது என்பது கதையின் வேதியியல் மாற்றமாக இருக்கிறது.

இதே போன்ற இன்னுமொரு கதையும் இடம்பெற்றிருக்கிறது., அது அஸோரின் எழுதிய நடந்ததும் கற்பனையும். ஒரு கதை எப்படி உருவாகிறது என்பது தான் கதை. கற்பனை எப்படி கதாபாத்திரத்தின் விதியை சமைக்கிறது. அதே நேரம் கதாபாத்திரம் எப்படி தனக்கான விதியை நோக்கி நகர்கிறது என மிகத் தெளிவாக எழுதியுள்ளார். இது போன்ற கதைகள் வாசகனுக்கு முற்றிலும் அந்நியமானவை. ஆக எழுத்தாளனுக்கு இருக்கும் ஆகப் பெரும் சவால் அதை அவனருகில் கொண்டுசெல்வது தான். அது இக்கதையில் மிகச் சிறப்பாக நிகழ்கிறது.

மொத்த தொகுப்பில் ஆகச் சிறந்த கதை பெல் ஹால்ஸ்ட்ராம் எழுதிய “தோட்டக்காரன் மனைவி” என்னும் கதை. அதில்  மகன் இறந்துவிட்டான். அவனை ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும். இறந்தவன் எனத் தெரிந்தால் இரயிலில் விலை அதிகமாக கேட்பார்கள். அவள்வசம் பணம் இல்லை. ஏழைகள். ஆனாலும் உயிருடன் இருப்பதுப் போலவே எடுத்து செல்கிறாள். அந்த இரயில்பெட்டியில் இருக்கும் மற்ற பெண்மணிகளுடன் பேசிக் கொண்டே செல்கிறாள். அந்த பேச்சு எப்படியான பேச்சாக இருக்கிறது, எப்படி அவளால் உள்ளுக்குள் ஒன்றாகவும் வெளியில் வேறொன்றாகவும் இருக்க முடிகிறது எனவும் சந்தேகம் எழும்பும் வகையில் அமையப்பெற்றிருக்கிறது சிறுகதை. இடையில் அவளின் பேச்சுகளை பாருங்கள்,

தாயின் உள்ளத்து உணர்ச்சிகளை சொல்லி முடியாது. ஆனால் அவள் ஏழை. குழந்தை போய்விட்ட துக்கத்தை பாராட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. துக்கம் உண்மையில் மகத்தானது தான். ஆனால் சில்லரைத் துன்பங்கள் நெருங்கி தோன்றி ஏழைகளை துன்பத்தில் ஆழந்துவிடாமல் பார்த்துக் கொண்டுவிடும். இந்த சிறு துன்பங்களில் உள்ளத்துக் காயம் மறைந்து ஆறிவிட்டது போலிருக்கும். ஆனால் அவற்றால் காயம் அதிகப்படுமே தவிர குறையாது. பரிபூரணமான நிஷ் கவலையான துக்கப்பட ஏழைகளுக்கு சுதந்திரம் கிடையாது. அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளைப் போல அதுவும் பணமுடையால் பாதிக்கப்படுவது தான்”


எல்லா கதைகளும் துக்கம், சோகம், குற்றவுணர்ச்சி என எதிர்மறை எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது. இதன் உள்ளர்த்தத்தை என்னால் சிந்திக்க முடிவதில்லை. அதே நேரம் எல்லா கதைகளும் ஏதேனும் ஒருவகையில் என் அன்றாட உணர்ச்சிகளை, செயல்களை சீண்டிப் பார்க்கிறது. அதன் வகையில் ஒவ்வொரு கதையும் முன்னரே சொன்னது போல மகத்தான தரிசனம் தான்…

Share this:

CONVERSATION