இருகருங் காக்கைகள்


நேற்றிரவு  இரண்டரை மணியிருக்கும். தூக்கம் வரவில்லை. அறையின் பலகணியிலிருந்து சாலையை வெறித்துக் கொண்டிருந்தேன். கண்களுக்கு அகப்பட்டது மின்சாரக் கம்பியின் மேல் அமர்ந்திருந்த இரண்டு காக்கைகள். வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த இரவே வந்துவிட்டது. ஆனாலும் அந்த இருகாக்கைகள் என்னுள் ஏற்படுத்திய சலனம் மட்டும் புரிபடாமல் இருக்கிறது. வார்த்தைபடுத்த முயன்றேன். ஆனாலும் நீரில் எறிந்த கல் போன்று அந்த காக்கைகள் என்னுள் இருந்துகொண்டே வருகிறது.

இருகருங் காக்கைகள்

வெளிச்சத்தின் நிழல் உருகிய
கருமையான நடுநிசிப் பொழுதில்
மின்கம்பிகளின் மேல்
கம்பீரமாக வீற்றிருந்தன
இருகருங் காக்கைகள்

அலகுகளை அசைக்கவில்லை
பார்வையை நகர்த்தவில்லை
சாம்பல் நிற சிறுதொப்பையும்
ஏறி இறங்கவில்லை
அலைந்தோடிய மென்காற்றுக்கு
இறகின் சிற்றிழையும்
பதிலளிக்கவில்லை - ஆனாலும்
நிலைகுத்தி நின்றிருந்தன
இருகருங் காக்கைகள்

சிற்றின்பத்தின் நுண்ணிய அசைவை
பகல் துரோகங்களின் மிஞ்சிய கசடை
பகல் அறியாத பல்முனை உண்மையை
காரணமற்று கசியும் கண்ணீர்த் துளியை
உலகமறியா குழந்தையின் மூச்சுக்காற்றை
இரவில் மடுமே உயிர்த்தெழும் இரகசியங்களை
ஒட்டுகேட்டு கொண்டிருந்தன
இருகருங் காக்கைகள்

உயிர்த்தெழும் இரைச்சலுக்கு
செவிகொடுக்காத இரவும்
அறிந்துகொண்ட கணங்களுக்கு
அசைந்திடாத காக்கைகளும் - காத்திருக்கின்றன
சுவாரஸ்யமற்ற
அடுத்த
பகல்பொழுதிற்கு.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக