சென்னையின் “ரியல்” எஸ்டேட்


பழைய வேலையிலும் சரி புதிதாக இருக்கும் வேலையிலும் சரி ஒரே கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ளவேண்டியதாய் இருந்தது. அதிலும் குறிப்பாக இளமை வயதை கடந்தவர்களிடமிருந்து. தங்கியிருக்கும் இடம் சார்ந்த கேள்விகளே அது. யாருடனாவது பேச ஆரம்பிக்கும் போது என் ஊரை கேட்டுவிட்டு எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள். PG(Paying Guest) என்று சொல்லிவிட்டால் போதும் அவர்களின் பால்யகால நினைவுகளையும் தர்க்கங்களைம் அரசியலையும் முன்வைக்க ஆரம்பித்துவிடுவர்.

இடைக்கால சினிமாக்களில் பாதிக்கும் மேலாக மேன்சனின் இடம் நிலையாக இருந்தது. அப்போது ஒரு அறைக்கான வாடகை இன்னது என நிர்ணயித்துவிட்டு குறிப்பிட்ட அளவிலான நபர்கள் அங்கு தங்கிக் கொள்வர். அந்த வாடகை அந்நபர்களால் பிரித்துக்கொள்ளப்படும். இதில் சாப்பாடு சேர்த்தி இல்லை. வெளியே எங்காவது மெஸ்ஸினை தான் தேடிக் கொள்ள வேண்டும்.

இன்றைய சென்னையின் நிலை என்ன ? மேலே சொல்லப்படும் அமைப்புகளை வாடகை வீடு என்னும் நிலைக்குள் உள்ளடக்கியிருக்கின்றனர். மேன்சன் என்னும் பெயரில் மேலே சொன்னது போல் இயங்குவது வெகுவாக குறைந்துவிட்டது. வாடகை வீட்டிலும் சில இடங்களில் குடும்பஸ்தர்களுக்கு நிர்ணயிக்கும் வாடகையினையே பேச்சிலர்களுக்கும் நிர்ணயிக்கிறார்கள். சில இடங்களில் தங்கிக் கொள்ளும் ஆட்களைப் பொறுத்து வாடகையை மாற்றிவிடுகிறார்கள்.

வாடகை வீட்டை தவிர இருக்கும் இன்னுமொரு பெரிய வணிகம் தான் பி.ஜி. இந்த வார்த்தையினை கேட்டவுடன் ஓ காதல் கண்மணியின் நினைவு எழுமாயின் அது அபத்தத்தின் பாற்பட்டதே. இங்கு ஒரு வீட்டினை சொந்தமாக எடுத்து அதை கார்ட் போர்டின் மூலம் நாலாமூன்றாக பிரித்து தனித்தனி அறைகளாக்கிக் கொள்கிறார்கள். அதில் சில அறைகள் குளிர்சாதன வசதியுடன், சில அவை இல்லாமல். ஒவ்வொரு அறையிலும் எத்தனை பேர் தங்க வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்துவிடுகிறார்கள். ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வாடகை. இந்த வாடகை தனி நபர்களுக்கே தவிர அறையினை முன்வைத்து அல்ல. சமைப்பதற்கும் அங்கேயே ஒரு ஆள்.

தற்சமயம் பெருங்குடியின் அருகே தங்கியிருக்கிறேன். இந்த அபார்ட்மெண்டையே ரெட்டி(வீட்டின் முதலாளி) வாங்கியிருக்கிறார். மொத்தம் ஆறு வீடு. வீட்டிற்கு மூன்று அறை. அறைக்கு நான்கு பேர். சமையலறையில் ஒரு ஆள். கணக்கிட்டு பார்த்தால் தோராயமாக ஐம்பது பேர். ஒருவரிடம் தலா ஆறாயிரம் எனில் மாதம் கிடைக்கும் வருமானம் குறைந்தபட்சம் மூன்று லட்சம். சாப்பாடு எல்லாம் மலிவான பொருட்களால் தான் செய்யப்படுகிறது. இதிலேயே வசதிகளை பொறுத்து பத்தாயிரம் வரை வசூலிக்கும் அறைகளும் இருக்கின்றன.

எவ்வளவு பெரிய வணிகம் எனப் பாருங்கள்! ஆளுமைத் திறன் இருந்தால் பணத்தையும், வேலைக்காகவும், விடுதியின் சுதந்திரமின்மையை சகித்துக் கொள்ளாமல் திரியும் இளைஞர்களையும் கவர்ந்தால் போதும் வருமானத்தை முதலீடுகளை விட அதிகமாக அள்ளிவிடலாம். பெங்களூரு போன்ற பிற நகரங்களில் இதன் அர்த்தம் வேறாக, நியாயமாக இருக்கிறது. அஃதாவது குடும்பஸ்தர்கள் தங்கள் வீட்டின் சின்ன பகுதியை திருமணமாகாதவர்களுக்கு வாடகைக்கு விடுவர். அதை இங்கு அதிகமாக காணமுடிவதில்லை.

சென்னை வீடுகளால் நிரம்பி வழிகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் பண்பாட்டின் சுவடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இளமையை செலவு செய்ய எல்லா இடங்களிலும் வீடு தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களை வைத்து வியாபார சந்தைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன பேயிங் கெஸ்ட் கலாச்சாரம். ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையிலும் வீடுகளுக்கென சில அத்தியாயங்கள் கதைகளாய் விரிந்து கிடக்கின்றன. கேட்டுப்பாருங்கள் கெட்ட வார்த்தைகளுடன் பல அரசியல் விஷயங்கள் வெளிவரும்!!!

மேன்சனிலிருந்து பேயிங் கெஸ்ட் என்பது காலமாற்றத்தின் குறியீடு!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக