மனிதன் தனித்தீவல்ல


கடல் சார்ந்த எழுத்துகள் அதிகமாக பரிச்சயமற்றவை. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய என்னைத் தீண்டிய கடல் என்னும் தொகுப்பே எனக்கு கடல் சார்ந்த, அதனை விடாது கருப்பாக பிடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கான திறப்பாக இருந்தது. இதனைத் தவிர அவ்வப்போது வாசித்த சில நாவல்களின் வாயிலாக அதன் அம்சங்களை அறிய நேர்ந்திருக்கிறது. இந்நிலையில் எப்போதோ டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிய “கரைக்கு வராத மீனவத் துயரம்” எனும் நூல் கண்ணில் பட்டது. படுவேகமாக பயணிக்க முடிந்தது நீரினால் நிரம்பிய பிரம்மாண்டத்தில்.

இந்நூலின் தனிப்பெருமையாக நான் நினைப்பது கட்டுரைகளை வரிசைப்படுத்திய விதம். நெய்தல் நிலம் சார்ந்த விஷயங்களை அறிய முற்படுபவனுக்கு இந்நூல் மிகச்சிறந்த அறிமுகமாக இருக்கும். இந்நூல் இரண்டு இயல்களாக பிரிந்து இருக்கிறது. முதல் இயல் முழுக்க கடல் சார்ந்த அறிமுகங்கள். கடலுக்கு என்ன அறிமுகம் வேண்டி இருக்கிறது ? கடற்கரையில் நின்று பார்த்தால் பரந்து விரிந்திருக்கும் நீல நிற போர்வையை பார்த்துவிடலாமே என எளிதில் எண்ணலாம். ஆனால் மனிதனுக்கும் கடலுக்கும் இடையே இருக்கும் உறவு தொப்புள் கொடிக்கு ஈடானது என்பதை உணர்வுப் பூர்வமாகவும் தர்க்கப்பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் இந்நூலில் விவரித்திருக்கிறார் வறீதையா கான்ஸ்தந்தின். அதனாலேயே இந்நூலை வாசித்து முடிக்கையில் கடல் பிரம்மாண்டமானதொரு தோற்றத்தை என்னுள் எடுக்கிறது.

கடல் கொண்டாட்டமாகவும் கேளிக்கைக்காவும் பார்க்கும் கூட்டம் இருக்கும் அதே சமயத்தில் அதன் மூலம் வாழ்வாதாரத்தை வைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் ஒருபக்கம் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது ? சாமான்யனாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கடலோடியின் வாழ்க்கை முற்றிலும் அந்நியமானது. எனக்கு இருக்கும் அதே அரசு தான் அவர்களுக்கும். அது மாநில அரசாக இருந்தாலும் சரி நடுவண் அரசாக இருப்பினும் சரி. அப்படியிருக்கையில் எனக்கும் அவர்களுக்கும் கிடைக்கும் மானியங்கள் ஒரே அளவில் ஜனநாயகரீதியாக இருக்கின்றன. அது அவர்களுக்கு சரியானதா ? அவர்களின் வாழ்வியலுக்கு இந்த அரசு எவ்வளவு பெரிய உறுதுணையாக இருக்கிறது என்பதை என்னால் ஒருபோதும் உணர முடியாது. கடலோர மாவட்டங்களை தவிர்த்து உள்மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு தொலைகாட்சிகளும் செய்தி ஊடகங்களும் வெளிச்சம் பாய்ச்சும் விஷயங்கள் மட்டுமே கடலோடிகளின் பிரச்சினைகளாக இருக்கின்றன. ஆனால் உண்மையில் அவை மட்டும் தான் பிரச்ச்சினையா ? இந்த கேள்விகளுக்கு பதிலாய் பல சமுகங்களுக்கும் கடலோடிகளின் பிரச்சினைகளை அரசியல் விஷயங்களை எடுத்து செல்லும் தோணியாய் இந்நூல் பெரும் உதவி புரிகிறது.

எடுத்த எடுப்பில் அரசியல் விஷயங்களை கொடுத்தால் நிச்சயம் சாமான்யனால் உணர்ந்து கொள்ளமுடியாது. அதற்கொப்ப இந்நூல் பல விஷயங்களை முதலில் அறிமுகம் செய்கிறது. இயல் ஒன்று முழுக்க அந்த பகுதிகளாக இருக்கிறது. மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ளதொடர்பு, மேலும் இவ்வுலகம் எப்படி வாழ்வதற்கான இடமாக மாறியிருக்கிறது, அதற்கு தோதாய் எப்படி மனிதன் நாகரீகம் என்னும் வளர்ச்சியடைந்து பிற உயிரினங்கள் மேல் ஆதிக்கம் செலுத்த துவங்கினான், அந்த ஆதிக்கத்தை எப்படி சமனிலை செய்து பல்லுயிர்களை வளப்படுத்தி வாழக் கற்றுக் கொண்டான் என அறிவியல் தரவுகள் கொண்டு விளக்குகிறார்.

இயற்கை எனும் பொதுப்பிரிவிலிருந்து கடல் எனும் தனிப்பிரிவிற்கு வந்து கடலையும் அதனூடாக இருக்கும் உயிரினங்களையும் வரையரைப்பது கடலின் பிரம்மாண்ட உருவத்தை தெளிவுற எடுத்துக்காட்டுகிறது. மீனின் வகைகள் அவை எங்கெங்கு இருக்கின்றன, அவற்றில் இந்தியாவின் கடற்பகுதிகளில் எவை எவை இருக்கின்றன என்பதையும் விரிவாக முன்வைக்கிறார்.

முதல் இயலின் கடைசி பகுதியில் கடலை மட்டுமே விவரிக்கிறார். அதில் அவர் கொடுக்கும் கடலின் விளக்கத்தை பாருங்கள்

“அயனி நிலை, கரைக்கும் திறன் ஒட்டும் பண்பு, உவர்தன்மை, அடர்த்தி, வெப்பத்தை உள்வாங்கும் பண்பு, நீரியல் சுழற்சி, பருவக்காற்றுகள், நீரோட்டங்கள், ஓதங்கள், அலைகள் புவியீர்ப்பு, கோளீர்ப்பு, வெளிச்சம், உயிர்கள், உணவுச் சங்கிலி எல்லாவற்றையும் மனதில் திரட்டிப் பாருங்கள் - ஒரு பிரம்மாண்டம் உருக்கொள்ளும் - அதன் பெயர் தான் கடல்.”

இந்த விஷயங்கள் தட்பவெட்ப நிலை, அழுத்தங்களின் அளவு அதைப் பொறுத்து அமையும் உயிரினங்களின் தன்மை முதலானவற்றைக் கொண்டும் விளக்குகிறார். இந்த பகுதியிலிருந்து அடுத்ததான அறிமுகம் தான் நூலின் மைய விஷயத்திற்கு அதி தேவையானதாக அமைகிறது. அது கடல் சார்ந்த வாணிபமும் அதன் மூலம் நாடு ஈட்டும் பொருளாதாரமும். அதனை வரலாற்றின் பார்வையில் முன்வைப்பதால் கடல் சார்ந்த பொருளாதரம் எப்படியான தொடக்கத்தை இந்தியாவில் கொண்டது என்பதை வாசகர்களால் புரிந்து கொள்ளமுடிகிறது.

இதன் பிறகு இரண்டாம் இயல் ஆரம்பம் ஆகிறது. அதில் இடம்பெறும் மூன்று கட்டுரைகள் மூன்று வெவ்வேறு தலைப்புகளில் பேசினாலும் கிட்டதட்ட மீனவர்களின் தலையாய தேவைகளையும் அரசின் மேம்போக்கான அரசியல் முடிவுகளையும் தெளிவுற கூறுகின்றன. முதல் கட்டுரை 2009 ஆம் ஆண்டு வந்த பியான் புயலை முன்வைத்தும், இரண்டாம் கட்டுரை அதே ஆண்டில் வெளிவந்த மீன்வள மசோதாவை முன்வைத்தும் மூன்றாவது கட்டுரை சுனாமியின் மறுவாழ்வினை முன்வைத்தும் இடம்பெற்றிருக்கிறது.

இம்மூன்றில் எந்த கட்டுரையினை எடுத்தாலும் அதன் காரணம் அல்லது சம்பவம் நிகழ்ந்த விளக்கம், அதனூடாக எழுந்த மக்களின் பிரச்சினை, அதை அனுபவித்த அம்மக்களின் நிலை, அதனை வேடிக்கை பார்க்கும் அரசின் போக்கு, அதை எஎதிர்த்து எழும்பிய மக்களின் உணர்வெழுச்சிகள், அதற்கான தீர்வுகள் என்ன என விளக்கமாக கொடுக்கிறார். ஒருவகையில் பார்க்கும் போது வாசகனுக்கு தெளிவு தருகிறது என்றாலும் மற்றொரு பக்கம் இது வறீதையா என்றொரு தனிமனிதரின் தீர்வுகளாக இருக்கக்கூடுமோ எனும் சந்தேகமும் எழ வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கொப்ப சரியான தரவுகளையும் முன்வைப்பதால் அந்த முடிவுகளும் காலாவதியாகின்றன.

இரண்டாம் இயலின் ஆரம்பத்தில் ஒரு வரி வருகிறது. “நெய்தல் வாழ்க்கையின் சாரத்தை இரண்டே வார்த்தைகளில் குறித்துவிடலாம்: இழப்பு, மரணம். சங்க காலம் முதல் தொழில்நுட்பமும் தொலைதொடர்பும் மலிந்து கிடக்கும் இந்நாள்வரை நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகவே நீடிக்கிறது” . சட்டென என்னால் இவ்வாதத்தை ஏற்க முடியவில்லை. எல்லாவகையிலும் அவர்களுக்கு பிரச்சினைகள் மட்டுமேவா இருக்கின்றன எனும் சந்தேகமே எழும்பியது.

நாம், நாம் என குறிப்பிடுவது கடலிலிருந்து வெகு தொலைவில் உள்மாவட்டங்களில் வசிப்பவர்கள் செய்தித்தாள்களில் மூலம் அறியும் விஷயங்கள் யாவும் பெரிதுபடுத்திய, அல்லது பரவலாக நிகழ்ந்த சம்பவங்களை ஒட்டி எழுவது. மாறாக உண்மையான அரசியில் மிக நுண்மையாக ஒவ்வொரு கடலோடியின் அன்றாடத்திலும் அரசால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கட்டுரையை வாசிக்கும் பட்சத்தில் முதல் கட்டுரையில் இடம்பெறும் சில கருத்துகளின் அவசியத்தன்மையை வாசகனால் உணரமுடிகிறது. மீன்வள மசோதாவில் மீனவர்கள் எவ்வளவு நீளமான படகுகளை வைத்திருக்க வேண்டும், அதில் எத்தனை மீன்களை பிடிக்க வேண்டும், அதற்கான உரிமத்தை எப்படியெல்லாம் சரிவர வைத்திருக்க வேண்டும், மீன்பிடிப்பதற்கான காரணம் என்ன என பல கேள்விகளை முன்வைக்கிறது. மேலும் கடலினுள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் அரசே முடிவு செய்கிறது. இவை எல்லாமே மீனவனின் அன்றாடத்தை பாதிக்கிறது.

மீனவனுக்கு கடல் விவசாய நிலத்தைப் போன்று. மாறாக இங்கே அவனது விளைச்சல் பொருள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இலக்கணப்பிழையின்றி சொல்ல வேண்டுமெனில் நீந்திக் கொண்டே இருக்கின்றன. அப்படியிருக்கையில் அரசு நிர்ணயிக்கும் அளவுகளை வைத்துக் கொண்டு அவனது பிழைப்பை எப்படி நடத்துவது ? இதைத் தாண்டி தங்கல் முறையிலான மீன்பிடி வழிகளும் இருக்கின்றன. அதற்கும் அரசு விதிமுறைகளை வைத்திருக்கிறது என பட்டியலிடுகிறார். மீனவனுக்கு தெரிந்ததெல்லாம் தொன்மத்தையொத்த மீன்பிடித்தலையும் கடலையும் தான். அதை அவனிடமிருந்து பிரிப்பதற்கு ஏற்றார் போல இந்த விஷயங்களை அரசு முன்மொழிகிறது.

இந்த விதிகளுக்கு அப்பால் எல்லாவற்றையும் அனுபவிக்கும் ஓர் பெரு வணிகமும் இருக்கிறது. அதை அரசு ஆதரிப்பது தான் மீனவனின் மடியில் அரசே கைவைப்பது போலாகிறது. இந்தியாவிலிருந்து மீன் இறக்குமதி செய்யும் நாடுகள் பெரும் கப்பல்களில் இவ்வேலையை செய்கின்றனர். இந்தியக் கடல்களில் இருக்கும் மீன்களை இந்தியக் கரை காணவிடாமலேயே எடுத்து செல்லும் வணிகம். அதற்கு மீனவர்களை வேலைக்கு அமர்த்தலாம் எனும் நுட்பமும் அரசுடன் இணைந்து பேசப்படுகிறது. மீனவனுக்கு மீன்பிடித்தல் சுதந்திரத்துடன் கூடிய இனிமையான வாழ்வாதாரம். அப்படியிருக்கையில் இந்த அடிமைத்தனத்தை எப்படி அரசு ஏற்கிறது ? இது சார்ந்து வறீதையா முன்வைக்கும் தரவுகள் வாசிப்பவனுக்குள்ளிருந்தும் கோவத்தை எழுப்புகிறது.

சராசரி மீனவனுக்காக ஏன் இவ்வளவு குரல் எழுப்ப வேண்டும் என சாமான்ய கேள்வியும் வாசகனுக்கு நிச்சயமாய் எழும். அதற்கு இவர் சொல்லும் அல்லது முன்வைக்கும் பதில் தான் அரசின் முதலாளித்துவ போக்கையும் கடலோடி எப்படி கடைநிலை குடிமகனாகிறான் என்பதையும் புரிந்து கொள்ள உதவுகிறது. ஒரு மீனவனின் வேலைக்கு அரசு வைக்கும் உலை அவனை மட்டும் பாதிப்பதில்லை. வறீதையாவின் வார்த்தைகளையே பாருங்கள்,

கடலில் மீன்பிடிக்கும் ஒவ்வொரு மீனவனும் கரையில் நான்கு தொழிலாளிகளை உருவாக்குகிறான். படகு கட்டுவது, மீன்பிடிக் கருவிகள் செய்வது, பனிக்கட்டி உற்பத்தி, மீனைச் சிப்பம் கட்டுவது, சந்தைப்படுத்துவது, வினியோகிப்பது, குளிர்ப்பதனிடுவது, மீன்பிடி சார்ந்த சாதனங்கள் உற்பத்தி செய்வது, பழுது நீக்குவது என்பதான பல்வேறு தொழில்கள் மீன் அறுவடையுடன் பின்னிக் கிடக்கின்றன. இவை தவிர மீன்துறை சார்ந்த ஆய்வுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள், நிர்வாக நடவடிக்கைகள்  சார்ந்த ஏராளமான வேலை வாய்ப்புகளையும் மீனவன் உருவாக்குகிறான்.”

மீனவன் அளவிலும் அவனுக்கு அரசின் தரப்பிலிருந்தும் கிடைக்கும் நெருக்கடியை பார்த்தோம். இதைத் தாண்டி மக்களின் பக்கத்தினின்றும் அவனுக்கு நெருக்கடிகள் நெருங்குகின்றன. மீனின் தரம் நன்றாக இல்லையெனில் நிச்சயம் மக்கள் வாங்க மாட்ட்டார்கள். அதற்கு உதாரணமாய் சுனாமி வந்த பொழுது மக்களுக்கு ஏற்பட்ட பயத்தினை எடுத்துக்காட்டாய் முன்வைக்கிறார். மேலும் தனிமனிதனுக்கு மீனின் தேவை அவனது ஆரோக்யத்திற்கு எவ்வளவு என்பதையும், உலக நாடுகளின் ஒப்பீட்டளவில் இந்தியாவில் அதன் நிலை என்ன என்பதையும் தரவுகள் கொண்டு விளக்குகிறார்.

இந்த எல்லா தீர்வுகளிலிருந்தும் விடுபட பல்வேறு தேவைகள் மீனவன் பக்கத்தினின்று எழும்புகிறது.  ஆனால் அரசு கொடுக்கும் மானியங்கள் அவர்களுக்கு முக்கியமற்றதாய் இருக்கிறது. அதற்கும் மீனவக் குரல்களை தன் எழுத்தின் மூலம் முன்மொழிகிறார். கடலுக்கு சென்றுவர மீனவனுக்கு தேவையான டீசலை மானிய விலையில் தருகிறது அரசு. ஆனால் பெருங்கப்பல்களில் வந்து எடுக்கும் அந்நியக்காரர்களுக்கு அளிக்கப்படும் மானியம் இதைவிட அதிகம். மேலும் பாதுகாப்பு கருவிகளை மானிய விலையில் அளிப்பதற்கு அரசு தயங்குகிறது.

ஒவ்வொரு விஷயங்களையும் மீனவர்கள் பக்கத்தினின்று வாசிக்கும் பொழுது அரசு நியாயமானதைத் தானே சொல்கிறது என்று தோன்றும். வறீதையா ஆரம்பத்திலேயே ஒரு வார்த்தையை சொல்லிவிடுகிறார் இது மீனவர்களின் அனுபவ ரீதியான தர்க்கங்கள் என. கடலோடிகளுக்கு கடல் அனுபவத்தின் ஊற்று. அவர்களுக்கான வாழ்க்கை அந்த கடல் தானே அன்றி நிலமன்று. ஆனால் அவர்களின் பிரச்சினை அந்த கடலைத் தாண்டி கரைக்கே வர மறுக்கின்றன. மறுக்கப்படுகின்றன. கரையைத் தாண்டிதான் பல ஊர்களுக்கு அவ்விஷயம் சென்று சேரவேண்டியிருக்கிறது. ஆக மீனவ விஷயங்கள் மிக நீளமானது. பல காத தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

மீனவர்களின் பிரச்சினை வெறும் அவர்களுக்கானது என ஒதுக்கி தள்ளிவிட முடியாது என்பதை நன்கு உணரமுடிகிறது. நான் சில பிரச்சினைகளை மட்டுமே நூலிலிருந்து எடுத்தாண்டு பேசியிருக்கிறேன். இந்நூலிலேயே இன்னமும் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கடலோடு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் மீனவனின் அழுகுரல் இந்நூலின் வாயிலாக கரையினை எட்டியிருக்கிறது என்றே நம்புகிறேன். பள்ளி கல்லூரிகளின் நூலக்கத்தில் இச்சிறு நூலிற்கும் இடமளித்தால் கடல் சார்ந்த அறிதலை இளம் வயதினரிடம் கொண்டு சேர்க்க முடியும். அது கடலின் தேவையாகவும் இருக்கிறது. கடைசியில் வறீதையாவின் வரிகளிலேயே முடிக்கிறேன்,

மனிதன் தனித்தீவல்ல. அவனுடையது உறவு வாழ்க்கை. அருந்தொழில்நுட்பங்களைவிட சூழலியலுடனான அவனது உறவு முக்கியமானது. இன்று மனித இனத்தின் முன்னால் இரண்டே தீர்வுகள் வைக்கப்படுகின்றன. ஒத்து வாழ்வது, இல்லையென்றால் ஒட்டு மொத்த மனித இனமும் செத்து ஒழிவது.


கோடரி தேவைதான் - மனிதனின் கழுத்தில் வைக்கப்படாதிருக்கும் வரை.”

Share this:

CONVERSATION