Why are you loving ?ஆங்கில இலக்கணத்தில் wh format என ஒன்றுண்டு. அதனை relative pronouns என்று சொல்வர். அவை எல்லாமே வினா எழுப்பக்கூடிய வார்த்தைகள். ஆங்கில இலக்கணத்தில் அடியேன் பலகீனமானவன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் இலக்கணமே மனப்பாடம் தான். பிற பாடங்களில் நன்மதிப்பெண் பெற்றாலும் இதில் மிகக் குறைவாகவே எடுத்திருப்பேன். சுட்டுப் போட்டாலும் வராத  மொழியாகிப் போனது ஆங்கிலம்.

இந்த வினா எழுப்பும் வார்த்தைகளை எப்போதும் வெறுப்பவன் நான். அதை யார் ஆரம்பிக்கிறார்களோ அவர்கள் அதிகாரப்பீடத்தில் சட்டென அமர்ந்துவிடுகிறார்கள். கேள்வியொன்றை எழுப்பிவிட்டால் பதில் நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும். எப்படி தப்பிப்பது ? பொருளியல் சார்ந்த கேள்வி எனில் பதில் நிச்சயம் இருக்கும். அதே வாழ்வியல் சார்ந்த கேள்வி எனில் ? ஏன் காதலிக்கிறீர்கள் ? ஏன் ஓவியம் வரைகிறீர்கள் ? ஏன் அந்தப் பாட்டையே கேட்கிறாய் ? எத்தனை ஏன் ஒரு மனிதனை அன்றாடம் துரத்துகிறது என யோசித்து பாருங்கள்.

சில மாதங்களுக்கு முன் தேனாம்பேட்டையில் எம்.எம்.ஏ என்னும் அமைப்பு நடத்திய சின்ன நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன், பழைய நிறுவனத்தின் மூலமாக. அந்த அமைப்பு சுய முன்னேற்றத்தை, ஆளுமைத் திறனை தொழில் ரீதியாக வளர்க்க பயிற்சி கொடுக்கும் அமைப்பு. அங்கு  பெர்சனாலிட்டியை வளர்க்கும் வகுப்பிற்காக அனுப்பப்பட்டிருந்தேன். அதில் இதே கேள்வியை முன்வைத்து நீண்ட விஷயங்களை அதன் ஒருங்கிணைப்பாளர் பேசினார். இரண்டு நாள் வகுப்பில் மிக சுவாரஸ்யமாக இருந்தது அந்த பகுதி தான். காரணம் அவர் கூறிய விஷயம் ஏற்கனவே என்னுள் ஆழமாக பதிந்து இருக்கும் ஒன்று.

அஃதாவது ரசனைக்கோ காதலுக்கோ ஒருப்போதும் காரணம் இருக்க முடியாது. ஏன் அந்த பெண்ணை காதலிக்கிறாய் எனும் கேள்விக்கு பேந்த பேந்த முழித்தால் அதுவே மிகச்சரியான பதிலாக இருக்கக்கூடும். ஏதொரு விஷயத்திற்கும் காரணம் என ஒன்றிருப்பின் அது காலாவதியாகக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது. இதற்கு அந்த அமைப்பில் அழகானதொரு பதிலையும் கூறினார்கள். அது -  I am loving her because I am loving her. இதை அப்படியே வேலைக்கு என மாற்றினார்கள். இதை ஒட்டியே எனக்கு வந்த நண்பரின் அழைப்பும் இதே விஷயத்தை கூறியது. சமகாலத்தில் யாருக்கும் செய்யும் வேலை அன்றாடத்தில் ஒன்றாக இருப்பதில்லை. எட்டு மணி நேரம் வேலைக்கு என ஒரு நாளில் ஒதுக்கி வைக்கிறார்கள். காரணம் மூலதனத்திறகான வழி அது என்பதே. இந்த நிலை மாறினால் மாட்டுமே நாள் ஒருவருக்கு இனிமையாக மாறும் என்றார். கிட்டதட்ட இதுவும் காரணமில்லாத ஈர்ப்பும் ஒன்று தான். எல்லோருக்கும் அப்படியான வேலை அமைவதில்லை.

என்னுடைய அப்பா எம்.ஜி.ஆர் படமொன்றை இருபத்தியோரு முறை திரையரங்கில் பார்த்ததாக கூறினார். படத்தின் பெயர் இப்போது ஞாபகம் வர மறுக்கிறது. ஏன் என்று கேட்டால் சுருக்கங்கள் முளைக்கும் கன்னத்தில் வெட்கத்தையே பார்க்க முடிகிறது. தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆரை இப்போது பார்த்தாலும் சிரிப்பை காணமுடிகிறது. மகத்தான ரசனை அது என்பேன்.

சமகாலத்தில் எல்லோரும் காரணத்தின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறோம். காரணம் கிடைத்தால் ஓர் உணர்வு முழுமையடைகிறது. ஓர் விஷயம் நிறைவு காணுகிறது. முழுமையடையாத விஷயத்தில்தான் எப்போதும் மனிதன் ஈர்ப்பு கொள்கிறான். நாம் ஈர்ப்பு கொள்கிறோம். கொண்டாட்டமானதாக இருப்பின் அது மேஜிக். மன உளைச்சலை தருமாயின் அது அமானுஷ்யம். காதலும் ரசனையும் அப்படியானதொரு மேஜிக். அதை ஒருக்காலும் குறுக்குவிசாரணை செய்தல் கூடாது.


இப்பதிவை எழுதுவதற்கு சில நொடிகள் முன்பு எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது, உடைந்த ஆங்கிலத்தில். அதுவே எழுதவும் வைத்தது. அக்கேள்வி -  why are you asking why to others ?

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக