கலியுகத்துபரணிசில நாட்களுக்கு முன் சேலத்திலிருந்து சென்னைக்கு அன்ரிசர்வ்டில் பயணம் செய்தேன். அதில் கல்லூரியின் ஆரம்ப ஆண்டுகளில் அதிகம் பயணம் செய்திருக்கிறேன். சமீபத்தில் தான் குறைந்துவிட்டது. அந்த மாதிரியான பயணத்தில் புதிய மனிதர்களையும் அவர்களுடனான உரையாடல்களும் புத்தம் புதிய அனுபவத்தை கொடுக்கும். இம்முறை சந்தித்த மனிதரோ என்னுள் பெரும் கோபத்தையே தூண்டிவிட்டார். அவரை அலாக்காக தூக்கி ரயிலை விட்டே எறிந்துவிடலாம் போலிருந்தது.

வயதை பார்த்தால் நாற்பதிலிருந்து ஐம்பதற்குள் இருக்கும். படிகட்டின் அருகில் நின்றுகொண்டே பயணம் செய்துவந்தோம். அவருடைய மனைவி குத்துகாலிட்டு கீழே அமர்ந்துகொண்டார். பேச்சினை ஆரம்பித்தால் அவர் வாலஜாவில் குறிப்பாக ராணிப்பேட்டில் சின்னதான தோல் தொழிற்சாலை நடத்திவருகிறார் என்றும் மாத வருமானமே ஒரு லட்சத்தை தாண்டும் எனவும் அவர் வாயால் சொன்னதை வைத்து அறிந்து கொண்டேன். வேலை சார்ந்து அறிந்துகொள்ளலாம் என கழிவுகள் சார்ந்து கேட்கும் போது அதனை சுத்திகரிக்கும் முறைமைகளை தெளிவாக கூறினார்.

இங்கு இப்போது எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டேன். அவர்களுக்கு இரு மகன்கள். ஒருவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். மற்றொருவன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். எங்கு எனில் சேலத்தின் தனியார் பள்ளியொன்றில். எதற்காக இவர்கள் அலைய வேண்டும் மகன் இள வயதினன் தானே அவனே வந்து செல்லலாமே என கேட்டேன். அதற்கு அந்த பள்ளியின் விதிமுறைகள் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பேச ஆரம்பித்தோம்.

“அதெல்லாம் விட மாட்டங்க தம்பி. மாசத்துல ஒரு நா, ஏதாவது ஞாயித்துக் கெழமையா பாத்து சொல்லுவாங்க. அன்னிக்கு போய் ஒரு மணிலருந்து. . .”

இடைமறித்து, “பையனை வெளிய கூட்டிகிட்டு போலாமா ?”

“அதேல்லாம் இல்லை தம்பி. நாலு மணிவரைக்கும் பாக்கலாம். வீட்லருந்து சாப்பாடு ஏதாவது செஞ்சு எடுத்துகிட்டு வந்து குடும்பமா சாப்பிடலாம்”

“பையன் வீட்டுக்கு வரமாட்டானா ?”

“மூணுமாசத்துக்கு ஒருதடவ நாலு மாசத்துக்கு ஒரு தடவ”

“லீவு விடுவாங்களா ?”

“தீபாவளி பொங்கல்னு சேந்தாப்ல மூணு நாலுநாள் லீவு வருமே ? எல்லாம் படிப்புக்காகத் தான ?”

“ஸ்கூலுக்கு அப்பறம் காலேஜ் ஊர்லயா. . .” என இழுத்தேன்

“பையன டாக்டராக்கணும். எப்படியும் நூத்தி தொண்ணுத்தஞ்சு மேல எடுத்திருவான்”

“சின்னவன. . .”

“அவன டிப்ளமோ படிக்க வைக்கலாம்னு இருக்கேன்”

மனதினுள்ளே குஷி ஒன்று கரைபுரண்டோடியது. சின்னவனாவது தப்பித்தானே என. இதனைப் போன்றதொரு சின்ன அவஸ்தையை கூட கல்லூரி முடியும் வரை நான் அனுபவித்ததில்லை. இதற்கு இவர்கள் கொடுக்கும் தொகை ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய். மேலும் இது எனக்கு தான் புதிதே ஒழிய பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் பழைய விஷயமாகவே இருந்தது.

இந்த அப்பாக்கள் எல்லோரும் யார் யாருடன் பழகுகிறார்கள் என்பதையே அறிந்து கொள்ள விரும்புகிறேன். இவர் தன் மகனை அங்கு சேர்த்தமைக்கும் அந்த நண்பர்களே காரணம் என்பதையும் அறிந்து கொண்டேன். மதிப்பெண்கள் அடுத்த கட்ட படிப்பிற்கு உதவுகிறதே ஒழிய அன்றாடத்தில் ஒரு பைசாவிற்கு கூட பிரயோஜனம் இல்லை. சமூக-மொழி-பண்பாட்டு பிரக்ஞை அற்ற பிண்டங்களைத் தான் இந்த அதிகாரவர்க்க கல்விக்கூடங்கள் உருவாக்குகின்றன. அதற்கு ஒத்து ஊதுக்கிறார்கள் இவர்களைப் போன்ற தந்தைகள்.

என் தலைமுறையே பள்ளிக்கூட அனுபவங்கள் என சொல்லுவதற்கொப்ப இருக்கும் பல அனுபவங்களை இழந்திருக்கின்றன. விளையாடச் சென்று பள்ளிக்காக கோப்பைகளை ஒருவன் வாங்கி வந்தாலும் அந்த பள்ளி அவனை படிக்காத மாணவன் என்னும் தரத்திலேயே வைத்திருக்கும். அவனை அந்த அளவில் தான் உருவாக்குகிறது. இது என்னளவில் ஒரு சைபர் க்ரைம். புற்கள் முளைத்த மைதானங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அதற்கான கடமை அங்கே நிறைவேறவில்லை. நிறைவேற்றப்படவில்லை. புற்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. பாடபுத்தக பக்கங்கள் கரைத்து குடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதிலிருந்து மாணவர்களை விடுவிக்க தனி அமைப்புகள் எதுவும் தேவையில்லை. பெற்றோர்களின் தன்முனைப்பே போதுமானது.

கலிங்கத்துபரணி என்றொரு சிற்றிலக்கியம் உள்ளது. அதில் குடும்பத்தாரை போருக்கு உற்சாகம் ஊட்டி அனுப்பிவிடுவார்கள். மரணம் எய்தினாலும் அது அந்த குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமையே. அதையே இக்காலத்தில் லட்சக்கணக்காக பணம் கொடுத்து மகன்களையும் மகள்களையும் அனுப்புகிறார்கள். அவர்களிடம்  அந்த வயதிற்குரிய என்ன அனுபவம் இருக்கப்போகிறது. பேசும் போது வார்த்தை வேண்டுமெனில் வரும் பழைய ஸ்கூலே பரவாயில்லை என!

பி.கு :  அவரிடம் இடையில் எப்படி மகன அங்க சேத்தீங்க எனக் கேட்டேன். அவர் சொன்ன பதிலில் பேசாமல் நான் ஓடும் இரயிலில் இருந்து குதித்துவிடலாமா என தோன்றிற்று. அந்த பதில்,


“இராசிபுரம் பக்கத்துல வேலை வழியா தெரிஞ்சவங்க இருக்காங்க தம்பி. அவங்களே ‘அட்மிட்’ பண்ணிட்டாங்க”

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக