மனிதத்தன்மையற்றவர்களின் ஒளி மானுடத்தின் இருட்டுஒருவாரமாக எழுத வேண்டும் என நினைத்து சேமித்து வைத்திருக்கும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதில் பிரதானமானது அகரமுதல்வனின் சிறுகதை தொகுப்பான “இரண்டம் லெப்ரினன்ட்”. வாசிப்பு அதிலும் குறிப்பாக இலக்கிய வாசிப்பு ஒருவரை பண்படுத்தும் என கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுள்ளோ பெரும் திமிரினை வளர்த்துவிட்டிருக்கிறது. எதை வாசிக்க வேண்டும் என அத்தருணத்தில் நினைக்கிறேனோ அதை வாசிக்கிறேன். அடுத்தவர் சிபாரிசு செய்கிறார் எனில் அச்சமயம் பூம்பூம் மாடு போல் தலையாட்டிவிட்டு என் தேர்வுகளின் பக்கம் திரும்பிவிடுகிறேன். என் தேர்வுகள் சரியா தவறா எனும் முடிவிற்கு என்னால் வர முடிவதில்லை. ஆனால் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.

இடையில் தான் பரிசல் சிவ.செந்திநாதன் அழைத்து அகரமுதல்வனின் நூல் சார்ந்து பேச அழைத்தார். வெகு நாட்களுக்கு பிறகு கிடைக்கும் வாய்ப்பு என வாசித்தேன். வாசித்த போதே நான் இழந்திருக்கக்கூடிய எழுத்தாளரின் வரிசையில் அகரமுதல்வன் இருப்பதை கண்டேன். அவர் எழுத்துடனான முதல் பரிச்சயம் இச்சிறுகதை நூல் தான். இது அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு என்பது குறிப்பிடதக்கது.

போர் சார்ந்த நூல்கள் தமிழில் குறைந்த அளவே இருக்கின்றன. மேலும் தமிழில் போரினை மையமாக வைத்து மனிதர்களின் அன்றாடங்களை புனைவாக்கிய நூலொன்றே மகத்தான படைப்பாக தமிழில் திகழ்கிறது. நான் குறிப்பிடுவது ப.சிங்காரம் இயற்றிய புயலிலே ஒரு தோணியை. இலங்கையில் நிகழ்ந்த போர் சார்ந்த நூல்கள் அதிக அளவில் எழுதப்படவில்லை. மேலும் அவை பெருமளவில் கவனிக்கப்படவில்லை.

பொத்தாம் பொதுவாக அடித்துவிடுகிறேன் என எண்ண வேண்டாம். என் வயதினையொத்த இலக்கிய வாசகர்களிடமே இலங்கை போர் சார்ந்த, ஈழ இனப்படுகொலை சார்ந்த நூல்கள் எனக் கேட்டால் எதுவுமே தெரியவில்லை என்பதே பதிலாக இருக்கிறது. சில மாத , காலாண்டு சிற்றிதழ்களில் ஒரு கதையேனும் இப்போரினை மையப்படுத்தி வெளிவருகிறது. இந்நிலையில் இப்படியான கருத்தாளுமை கொண்ட நூல்கள் வரவேண்டிய தேவை தமிழில் இருக்கிறது.

இந்நூல் முழுக்க விரவி கிடப்பது இரண்டே விஷயங்கள் தான். உடலும் வலியும். இராணுவம் இரண்டாம் ஆயுதமாய் வைத்திருப்பது பெண்களை. அதை நிறைவேற்றும் பட்சத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கை எத்திசையில் எல்லாம் பயணிக்கிறது என்பதை வலியின் அளவில் துல்லியமாக எழுத்தாக்கியிருக்கிறார். பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் ஒரு கதையை தவிர்த்து மற்ற எல்லா கதைகளும் பெண்ணுடலை மையமாக வைத்து பேசுகிறது.

ஒவ்வொரு கதைகளிலும் ஏதேனும் ஒரு பெண் சிதைக்கப்படுகிறாள். அடிகளாலும் உதைகளாலும் துன்புறுத்தப்படுகிறாள். கரும்புலி எனும் கதையில் பெண் இருட்டு அறையினுள்ளே அடைக்கப்பட்டிருக்கிறாள். தாழினை திறக்கும் சப்தம் கேட்டாலே கைகளால் தன் யோனியை மறைத்துக் கொள்கிறாள் என வருகிறது. உடல் மன அளவில் ஆட்கொண்டு வலியே உலகம் என்னும் பயத்தை அவர்களுள் ஏற்படுத்துகிறது. வலியே அவர்களுக்கான உலகமகிறது.

கதைக்கு கதை மாறும் போது இந்த பெண்களின் வயது மாறிக் கொண்டே இருக்கிறது. பள்ளிக்குழந்தையின் கதையை எழுதுகிறார். அவளுக்கே உண்டான சுட்டித்தனமான உலகமும், அதனூடாக எழும்பப்படும் போரும் அச்சிறு உடலை என்ன செய்யும் ? வாசிக்கும் வாசகனுக்கோ அப்பெண் இறந்தாலும் பரவாயில்லை ஆனால் சித்ரவதைக்கு ஆட்பட வேண்டாம் எனும் எண்ணமே மேலெழுகிறது. அதற்கான காரணம் முந்தைய கதைகளில் அவர் வெளிக்காட்டியிருக்கும் வன்முறை. ஒவ்வொரு கதையிலுமே வாசகன் எதிர்பார்ப்பது அல்லது பூரணத்துவத்தை உணர்வது அக்கதாபாத்திரம் இறக்கும் தருவாயில் தான். ஒவ்வொருவரின் மகிழ்ச்சியான தருணங்களும் மரணமும் துய்ப்பை வாசகனுக்கு அளிக்கிறது. ஆனால் அவர்களுக்கோ இடைப்பட்ட வலியே உலகமாக மாறியிருக்கிறது.

மேலும் இலங்கையில் இருக்கும் இடங்கள் சார்ந்த நினைவுகளை வலிகளுடன் கலந்து இனிமையாக வெளிக்காட்டியிருக்கிறார். தத்தமது இடங்களை கடந்து செல்லுந்தோறும் தான் மகிழ்ச்சியாக திரிந்த நாட்களை நினைவு கொள்கின்றனர். அதே சமயத்தில் அங்கிருந்து பிரிந்து வரக்கூடிய, அல்லது வர நேர்ந்த வலி தரும் நினைவுகளையும் ஒருசேர வெளிக்காட்டுகின்றனர். தங்கள் நிலத்திலிருந்து தங்கள் உடலிலிருந்து தாங்களே அந்நியமாகிப் போன தருணங்களை எல்லா கதாபாத்திரங்களும் கதை நெடுக சுமந்து கொண்டே செல்கின்றன.

அந்த மக்கள் தேடியது சுதந்திரமோ சமத்துவமோ அன்று. மாறாக நிம்மதியான நாட்கள். அந்நம்பிக்கையை கொடுத்து வந்த தலைவன் இறந்த பின்பு திக்கு தெரியாமல் அலைந்த கூட்டம் எப்படி வாழ்வியல் சார்ந்த சவால்களை எதிர்நோக்குகிறது என்பதையும் கதைகளில் வெளிப்படுத்துகிறார்.

நூலின் கடைசியில் வரும் கதைகள் அனைத்திலும் ஆசிரியரின் நேர்த்தி அல்லது செறிவு தெளிவாக தெரிகிறது. பைத்தியகாரியின் தம்பி என்னும் சிறுகதையில் அவள் பைத்தியம் அன்று என வாசிக்கும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அந்த பிம்பத்தை சுமப்பது மானசீகமாக வலியில் இருந்து தப்பிக்க. இப்படியான பிம்பங்களை வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு வடிவில் சுமக்கின்றன. எல்லோரும் காத்திருப்பது மகத்தானதொரு விடிவிற்காக. அது வரும்வரை போராட்டம் மட்டுமே தொடரும் என்பதை கதைகளின் வாயிலாக அறிய முடிகிறது.

போர் முடிந்துபோனது என உலகிற்கு அறிவித்த பின்னர் நிகழ்ந்தவற்றை தான் இக்கதைகள் வெளிச்சமாக்குகின்றன. இரண்டு அமைப்புகளுக்கு இடையே நிகழ்ந்த போர் அன்று இது. மாறாக உலக நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் இடையே நிகழ்ந்த போர். அதில் மீதமிருந்தது என்னமோ அப்பாவிகளின் உடல்கள் மட்டும் தான். உடலே போரினை தீர்மானிக்கிறது. வெற்றியாயினும் தோல்வியாயினும் பதிலற்று கேள்விகளை மட்டுமே சுமந்து கொண்டு அவ்வுடல்கள் மீதமாய் இருக்கும். விசாரணை என்னும் கதையில் சித்ரவதைக்குள்ளாகும் ஆணுடலும் இதனுள் அடக்கம்.

இதிலுள்ள சிறுகதைகள் குறிப்பிட்ட கட்சிகளை அல்லது அமைப்பினை சார்ந்தோ எதிர்த்தோ பேசவில்லை. மாறாக மக்களின், லட்சோப லட்ச உடல்களின் வடுக்களிலிருந்து வார்த்தைகளை எடுக்கிறது. அதன் வீச்சம் வாசிப்பவனின்  உணர்விலும் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. தொகுப்பில் குறையெனப்பட்டது ஒரே ஒரு விஷயம் தான். இம்மக்கள் அனுபவித்த வலிகளை வாழ்நாளில் ஒருபோதும் நான் அனுபவிக்க போவதில்லை. அனுபவித்ததும் இல்லை. அவை வலிகளின் உச்சம். அப்படி இருக்கையில் அதை மிக சாமான்ய உவமைகளை கொண்டு வெளிக்காட்டும் போது அந்த தன்மையை இழந்ததாய் உணர்ந்தேன். மேலும் சிறுகதைகள் முழுக்க உவமைகள் வருவது சிறுகதையின் ஓட்டத்தில் செயற்கையாய் அமைந்துவிடுகிறது.

இது போன்ற சிறுகதைகள் ஓர் நல்ல தொடக்கமாக மட்டுமே அமைய வேண்டும். இழிவு படுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இதைப் போன்று இன்னமும் பல உண்மைகளை புனைவின் வழியே கூற வேறு சில எழுத்தாளர்களும் கதைகளும் வர வேண்டும் என்பதே என் ஆதங்கம். ஆகவே தான் சொல்கிறேன் இரண்டாம் லெப்ரினன்ட் ஓர் நல்ல தொடக்கம் என.


பி.கு : கட்டுரையின் தலைப்பு இத்தொகுப்பிலுள்ள ‘கரும்புலி’ சிறுகதையினூடே வரும் வரி.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக