சிதிலங்களின் அழகிய வரலாறுஇரண்டு வாரங்களுக்கும் மேல் கடந்துவிட்டது இரா.முருகவேளின் முகிலினி நாவல் வெளியீடு முடிந்து. இப்போது தான் வாசிக்க முடிந்தது. இரவு பகலாக தூக்கத்தை தொலைத்து வாசித்து முடித்திருக்கிறேன் என்பது தான் உண்மை. இதில் தாமதம் ஏற்பட முக்கிய காரணம் வரலாற்றையும் போராட்டத்தையும் பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் இது எனும் மேற்பூச்சலே ஆகும். அவ்வழியாக எழுதப்பட்ட நாவல்கள் எல்லாமுமே கருத்தளவில் அடர்த்தியாய் இருந்தாலும் எழுதிய வகையில் வாசகனுக்கு லேசான சலிப்பினையே ஊட்டி செல்லும். அப்படி சொல்லப்பட்ட நாவல்களின் வழியே வரலாற்றினை அல்லது ஆவணங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் எல்லாவற்றிலுமே இந்த த்வனி இருப்பதன் காரணம் என்ன ? சுவாரஸ்யமாக துளியும் தொய்வினை தராமல் போராட்டகால நாவலை வாசிக்க முடியாதா என்பது எனக்கான ஏக்கமாக இருந்தது. வாசித்த வரை ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றை முதன்மை என வைத்து வந்திருந்தேன். அவை எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி சிறந்த நாவலென என்னுள் மேலெழுகிறது இரா.முருகவேளின் முகிலினி.

நாவல் வெளியீட்டில் பேசிய அனைவரும் கிட்டதட்ட கதையினையே சொல்லிவிட்டார்கள். இதற்குமேல் இதில் என்ன இருக்கப் போகிறது எனும் எண்ணத்தை உள்ளூற விதைத்துவிட்டு நாவலினை பார்த்தேன். ஐநூறு பக்கங்களை கொண்டிருந்த நாவல் கணக்கவே செய்தது. வாசிக்கும் போது தான் அவர்கள் சொல்ல மறந்த அல்லது நிச்சயம் சொல்ல வேண்டிய விஷயங்கள் பலவற்றை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ளமுடிந்தது. நாவல் பல இடங்களில் சமூகம் சார்ந்த கேள்விகளுக்கு பெரும் திறப்பாகவே இருக்கிறது.

சமூகத்தில் பெரும் நிகழ்வொன்று நிகழ்கிறது என வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு உலகின் முன்னணி லாரி நிறுவனம் ஒன்று இந்தியாவில் தயாரிப்பு ஆலையை நிறுவுகிறது. மேலளவில் பார்க்கும் பொழுது இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் பலருக்கு வேலை கிடைக்கும் என அடிப்படைவாத எண்ணங்கள் சாமான்யனுக்கு எழுந்த வண்ணமே இருக்கும். உண்மையில் அதன் பின்னே நிகழ்வது என்ன ? ஒரு நிறுவனத்தை இந்தியாவினுள் நுழைய விடுவதால் அரசிற்கு கிடைக்கக்கூடிய ஆதாயமும் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதாயமும் என்ன ? இவை இரண்டும் உலகின் இரு துருவங்களைப் போல. காரணம் இதில் ஒரு பக்கம் மட்டுமே ஆதாயங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. மறுபக்கம் உழைப்பின் சுரண்டல்கள் மட்டுமே நிகழ்கின்றன. எதற்காக தங்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது அதற்காக யார் போராடுகிறார்கள் என பல தீர்க்கவியலாக் கேள்விகள் எழுகின்றன.

இந்த எடுத்துக்காட்டிற்கான காரணம் நாவல் இப்படியான அரசியல் நுணுக்கங்களை அல்லது நாட்டின் மாபெரும் அசைவின் பின்னே இருக்கக்கூடிய நுண்மையான அரசியலை வெளிச்சம் போட்டு நாவல் வடிவில் கொடுக்கிறது. அதற்கு நாவல் கையிலெடுக்கும் தொழில் டெக்கான் ரேயான் தொழிற்சாலை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பருத்தி விளையும் இடம் பாகிஸ்தானிடமும் மில்கள் அனைத்தும் இந்தியாவிடமும் வந்துவிடுகிறது. அப்போது நுழைகிறது இந்த செயற்கை பருத்தி ஆலை என்னும் பன்னாட்டு நிறுவனம். இந்த நிறுவனம் எப்படி கோவை ஈரோடு சத்தியமங்கலம் கோபிசெட்டிப்பாளையம் போன்ற பகுதிகளில் இருக்கும் அடித்தட்டு மக்களிடமிருந்து உழைப்பினை வாங்குகிறது பதிலுக்கு அந்த ஊரிடம் எதை கொடுக்கிறது என்பதாக நாவல் தன் நகர்வை வெளிக்காட்டுகிறது.

இதில் ஆலை கழிவுகளை ஆற்றில் கலப்பதால் விவசாயம், கால்நடை, அன்றாடம் என எல்லாமே பாதிக்கப்படுகிறது. அதை மக்கள் எப்படி அனுபவிக்கிறார்கள், அந்த அழிவு எப்படி தன்னை ஊரினுள்ளே ஒருமை கொள்கிறது என்பதை மிக அழகாக விரிவுபடுத்துகிறார் ஆசிரியர். அதே நேரத்தில் இதை எதிர்த்த போராட்டமும் விரிவாக சற்றும் தளர்ச்சியினை தொனிக்காமல் இடம்பெறுகிறது.

இது ஒருபாதியில் நிகழக்கூடிய கதையின் சின்ன இழை. மற்றொரு பாதி எதுவெனில் ஆர்கானிக் என்னும் பெயரில் சமூகத்தின் பெரும் பகுதியை தன் வணிகத்தினுள் அமிழ்த்தியிருக்கும் முதலாளிகளைப் பற்றியது. இந்த வார்த்தையை உபயோகம் செய்ததன் காரணம் நாவல் முழுக்கவே உழைப்பாளர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் இடையில் நிகழும் அன்றாட தேவைகளுக்கான போராட்டமாக மட்டுமே இருக்கிறது. முதலாளியின் அன்றாட தேவை பணம். உழைப்பாளியின் அன்றாடத் தேவை உணவு. இந்த இரண்டையும் தான் நாவல் ஒவ்வொரு அசைவிலும் வாசகனுக்கு எடுத்துரைக்கிறது.

இவையினுள் தான் கதையும் அடங்கியிருக்கிறது. அந்த கதையைத் தான் கிட்டதட்ட அனேக விமர்சகர்கள் கூறிவிடுகிறார்கள். பின் நாவல் என்ன செய்யும் எனும் கேள்வியை கேட்கத் தோன்றுகிறது. இதைத் தாண்டிய பல நுட்பங்களை ஆசிரியர் நாவலில் கையாண்டிடுக்கிறார்.

முழு நாவலிலும் நாயகன் என ஒருவன் இல்லை. நாயகியும் இல்லை. தொடர்ச்சியாய் இருக்கக்கூடிய கதபாத்திரங்கள் இல்லை. ஆனால் எல்லோரையும் இழுக்கும் மைய இழையாக எல்லா பக்கங்களிலும் இருக்கும் விஷயமாக இருக்கிறது டெக்கான் ரேயான் தொழிற்சாலை. அது கட்டிடமாக உருமாறத்துவங்கும் தருணத்திலிருந்து சிதிலமடைந்து தன் உருவை தானே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கும் தருணம் வரை மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். நாவலை வாசித்து சில தருணங்கள்  கடந்த பின்பும் கூட என் தூக்கத்தை திருடிக் கொண்டு டெக்கான் ரேயானே என் நினைவில் நின்று கொண்டிருந்தது. நாவலில் டெக்கான் ரேயான் ஓர் அழகியல் குறியீடு.

மேலும் நாவல் அறுபது ஆண்டுகால வாழ்க்கையை கூறுகிறது. அப்படியெனில் அறுபது ஆண்டுகாலம் நிகழ்ந்த நானாவித மாற்றத்தையும் கூற வேண்டுமல்லவா ? அதையும் இந்நாவல் செவ்வனே செய்கிறது. ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் அந்த தருணத்தில் அத்தலைவர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேவைகளையும் அல்லது நல்லாட்சியையும் அவர்களின் வாயிலாகவே மேலும் அக்காலத்திய மொழியின் வாயிலாகவே வாசகனுக்கு அளிக்கிறார். அது அறுபதாண்டு காலம் நிகழும் காலமாற்றத்தை வாசகனுக்கு துல்லியமாக அறிந்துகொள்ள வழில்கோலுகிறது.

டெக்கான் ரேயான் தயரிக்கும் செயற்கை பருத்தி எப்படி தயாரிக்கப்படுகிறது, அதற்கு தேவைகள் என்ன, ஒரு நிறுவனம் ஒரே தொழிற்சாலையில் அது நிறுவப்பட்டிருக்கும் நாட்டை விட்டுவிடுமா, எப்படியெல்லாம் தன்னுடைய கிளைகளை விரிக்கும், அப்படி விரிப்பதன் நோக்கம் என்ன, அதை எப்படி உலகமயமாக்கல் என்கிறார்கள், அந்த உலகமயமாக்கல் எந்த வர்க்கத்தினருக்கு நன்மையை விளைவிக்கிறது, அங்கேயும் உலகமயமாக்கலுக்கு துளியும் சம்மந்தமில்லாது உழைப்பாளர்கள் கரைந்து செல்வதன் காரணம் என்ன என நிறுவனத்தின் வழியே நிகழும் அல்லது நிகழக்கூடிய அரசியலையும் படம்போட்டு காட்டுகிறார்.

காலமாற்றத்தின் அரசியல் நிகழ்வுகளை நாவல் பதிவு செய்கிறது எனக் கூறியிருந்தேன் அல்லவா, அத்தருணங்களில் தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு போராட்டங்களையும் மறக்காமல் குறிப்பிடுகிறார். அப்படிக் குறிப்பிட்டு அதை நாவலின் மைய இழையுடன் இணைக்கும் தருணத்தில் அது நாவல் நிகழும் காலத்தை நிலையானதாக மாற்றிவிடுகிறது. மேலும் எந்த ஒரு நிகழ்வையும் தேவையற்றது என சொல்லும் விதத்தில் அவர் பதிவு செய்யவில்லை. பல அரசியல் தலைவர்களின் பெயர்களையும் கட்சிகளின் செயல்பாட்டையும் வெளிப்படையாகவே கூறியும் விடுகிறார். சில பக்கங்களை கடக்கும் தோறும் ஆசிரியர் கதாபாத்திரங்களின் வழியே வெளிப்படுத்தும் ரௌத்திரம் வசீகரமாய் இருக்கிறது. வாசகனுக்குள்ளேயும் அத்தர்க்கம் நீள்வதாயும் அமைந்துவிடுகிறது.

ஆர்கானிக் மார்க்கெட்டைப் பற்றிய பகுதிகளில் சில என்.ஜி.ஓக்களின் செயல்பாடுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அதற்கு காரணமாக கதையில் வைத்திருப்பது விதைகள் தேடிய பயணம். அதில் வரும் பல விஷயங்கள் அவரே எழுதிய சின்ன தொகுப்பான “கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் - என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்” என்னும் தொகுப்பிலிருந்து இடம் பெறுகிறது. ஆனால் அந்த கட்டுரைகளை புனைவாக்கிய விதம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது.

இயற்கை உணவை மாற்று வாழ்க்கை முறை என முன்வைக்கிறார். அதற்கு தேவையான விவசாயம் என்ன, அதற்கான உரங்கள் எப்படியாக இருக்க வேண்டும் எனவும் இதற்கு பின்னே இருக்கக்கூடிய முன்னோடிகளான நம்மாழ்வாரின் கூற்றுகள், காந்தீயவாத விவசாய முறை என பல தர்க்கங்களை எளிமையாக முன்வைக்கிறார். அதில் முக்கியமானது நம்மாழ்வாருக்கும் செல்லச்சாமிக்கும் இடையே நிகழும் உரையாடல்

“ “இந்த உரத்தையும் விதையையும் பூச்சிக்கொல்லியையும் யார் கொண்டுவந்து விட்டது ? அரசாங்கம்! பணக்காரனுக்காக அதப் பண்ணுச்சு. இப்ப ஆத்துல விசத்தை கலக்கறப்ப அவனை விட்டுட்டு நம்ம கைது பண்ண வர்றவன் யாரு ? அரசாங்கம்! இந்த மண்ணை ஆளறெங்கறான். உண்மையா ஆண்டா அது கெடுறதை பாத்துகிட்டு இருப்பானா ? அவனுக்கு இந்த மண்மேல அக்கறையில்ல. அப்படியிருக்கும் போது இந்த சின்னசின்ன விவசாயிகளை மட்டும் திருந்து, திருந்துன்னா எப்படி திருந்த முடியும் ? பழைய விதைகள் இப்ப இருக்கா ? உழறதே மண்ணை எளக்கி விடத்தான்னு சொல்றீங்க.. ..டிராக்டர் உழும்போது மேல் மண்ணப் பொரட்டி போடுது. ஆனால் அதோட அஞ்சு டன் கணத்தால அடி மண் இறுகிப் போகுது. அதனால நெலத்துக்கும் பயிறுக்கும் கெடுதல்தான்னு சொல்றீங்க. சரிதான். ஆனால் டிராக்டர் இல்லாம உழவு செய்ய லட்சக்கணக்கான நாட்டு மாடுகளுக்கு எங்க போறது ? மாட்டத்தான் ஒழிச்சுப் போட்டானே ? மேய்ச்சல் நிலம் என்ன மீதியிருக்கு ? தண்ணியே வெசமாகிக் கிடக்குது. இதுல இயற்கை உரம் போட்டா மட்டும் நல்ல சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் ? ஆட்சிய மாத்தறதைப் பத்தி பேசுங்க” என்பார் செல்லச்சாமி

நம்மாழ்வார் சிரித்துக் கொள்வார். “நீங்க சொல்றது சரிதான். ஆனால் அதுவரைக்கும் சும்மா இருக்க முடியாது. அது ஒரு பக்கம் போகட்டும். நாம நம்ம வெலைய செஞ்சுகிட்டு இருக்கலாம்” என்பார்.”

இந்த வரிகளை வாசிக்கும் போது ஜியாங் ரோங் எழுதிய ஓநாய்க் குலச் சின்னத்தையே என்னால் நினைவு கொள்ள முடிந்தது. இதைத் தானே அவர் முழு நாவலாக வேறு ஒரு களத்தில் எழுதினார். இவ்வளவு ஆழமான சமகாலத்திற்கு உதவும் தர்க்கங்கள் நாவல் முழுக்க விரவி இருக்கின்றன. நாவலில் வரும் மனிதர்கள் எனில் ராஜு என்னும் கதாபாத்திரத்தில் ஆரம்பித்து அவர்களின் அன்றாடம் அது எப்படி காலத்திற்கொப்ப மாற்றம் கொண்டு அவனுடைய சந்ததியில் ஒருவனான கௌதமின் அன்றாடம் வரை நாவல் நீள்கிறது. இரண்டு பேரையும் ஒரே தருணத்தில் நினைக்கும் நிமிடம் நாவல் மிக நீண்ட காலத்தில் பயணிக்கிறது என்பதை வாசகனால் எளிதில் உணர்ந்து கொள்ளமுடிகிறது.

இதற்கு பெரிதாய் துணை போவது முருகவேளின் எழுத்து என்று தான் சொல்வேன். அவருடைய எழுத்து நடைக்கு மிளிர்கல் நாவல் முதலே ரசிகன் நான். சமகாலத்திற்கொப்ப செறிவான எழுத்துமுறையை கொண்டிருக்கிறார். வாக்கியத்தை அமைக்கும் இடத்தில் திரிபுகள் எதுவுமின்றி எளிமையை கையாண்டு வாசகனுக்கு சொல்லவருவதை புரியவைத்துவிடுகிறார். சின்ன உதாரணம் எனில் ராஜு மனைவி மரகதத்திற்கு கடிதம் எழுதுகிறான். இக்கடிதம் கதைப்படி இப்போதிலிருந்து  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்கிறது

அன்பே மரகதம்,
எனக்கு இரண்டு காதலிகள். ஒன்று நீ. இன்னொன்று தமிழ். உன் மீது நான் கொண்டிருக்கும் காதலால் அவள் என்மீது கோபம் கொண்டிருக்கிறாள். என்னை ஒரு நோய் வாட்டுகிறது. அதற்கு சூடான உணவுகளும் பிடிப்பதில்லை, குளிர்ச்சியானவையும் பிடிப்பதில்லை. இந்த நோயைத் தான் காதல் என்கிறான் அந்த பெரும்புலவன்

எனக் கடிதம் நீள்கிறது. இதே சமகாலத்திற்கு வரும் போது தமிழ்ப்பற்று நாயகர்களிடமிருந்து காணாமலாகிறது. நேசுரல்ஸ், ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால், கேஃப் காப்பி டே, செல்ஃபி, மொக்கைகள் என இம்மி பிசகாமல் மொழியில் சமகாலத்தை தொடுகிறார்.

அவருக்கே உரிய அங்கதச் சுவை நாவல் முழுக்க ஏன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நீள்கிறது. ஒரு அத்தியாயத்தில் இயற்கை விவசாய முறையை முழுமையாக கூறுகிறார். அதன் எல்லா நுட்பங்களையும் விவரிக்கிறார். கடைசியில் நாயகன் நாயகியை அங்கு கூட்டிவரலாம் என எண்ணி அதை நாயகியிடம் சொல்கிறான். அவன் செய்வது கத்திரிக்காய் விவசாயம். அப்போது அவனின் உரையாடல்,

“”வர்ஷினி உனக்கு கத்திரிக்காய் வேணுமா ? ஆர்கானிக் ?”
“நீ அதை அண்ணாச்சி கடைல வித்திட்டு பணத்தை எடுத்துகிட்டு வந்து காபி டேல ஒரு ட்ரீட் கொடு” என்கிறாள்.

 ஒவ்வொரு அத்தியாயமும் அங்கதச் சுவையுடனேயே முடிவடைகிறது. முருகவேள் தொழில் அளவில் வழக்குரைஞர். அது சார்ந்து தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அதை புனைவாக்கி நாவலுடன் இணைத்திருப்பது வாசிக்க அத்துணை சுவையாக இருக்கிறது.

 நாவலில் குறையே இல்லையா எனில் சில இருக்கின்றன. அதிகமான கதாபாத்திரங்களும் அடர்த்தியான கதையும் இருப்பதால் குழம்பி செல்வதற்கு நாவலில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கொள்கை ரீதியான வசனங்கள் அல்லது சில நுட்பங்களை விவரித்தல் போன்ற இடங்களில் வழக்கு மொழியை விட்டு எழுத்து மொழியை கையில் எடுப்பதால் அங்கே வாசகன் சின்ன தளர்வினை அடைந்துவிடுகிறான். அஃதாவது நாவல் என்னும் உலகின் தொடர்சி அற்றுவிடுகிறது. மேலும் முகிலினி நாவலுக்கான சரியான தலைப்பே இல்லை. இப்படி கூறுவதை விட தனிப்பட்ட முறையில் எனக்கு முரணாக இருக்கிறது. காரணம் முகிலினியை விட பிரம்மாண்டமாக நாவலில் எழும்புவது டெக்கான் ரேயான் தொழிற்சாலையே அன்றி முகிலினி ஆறு அன்று. மேலும் பிழைகள் நிறைய இருக்கின்றன. அது பதிப்பகத்தாரின் தவறு என்பதால் இனிவரும் பதிப்புகளில் மாற்றம்  நூலிற்கு அவசியமாய் தேவைப்படுகிறது.

இந்நாவலை அளவிற்கு அதிகமாக கொண்டாட முக்கிய காரணமொன்று இருக்கிறது. எல்லா போராட்டங்களுமே தனி மனிதனின் மனதில் ஏற்படும் சிறு அசைவின் விளைவாகவே அமைந்திருக்கிறது. காந்தி மனதின் சின்ன அசைவு அஹிம்சை வழிப் போராட்டமாக மாறியது. இந்த போராட்டங்கள் எல்லாமே சமூகத்தின் மேம்படுதலுக்காகவே நிகழ்ந்தவை. இந்த போராட்ட எழுச்சிகள் அனைத்தும் இளைய சமுதாயத்திடமிருந்து தொடங்க வேண்டியவை. அப்படியான சமுதாயத்தில் பழைய விஷயங்களை கூறி அதன் வேர்கள் எப்படி இன்றளவு நீடிக்கிறது என்று எடுத்துரைக்க அவர்களின் உலகிலிருந்து கூற வேண்டும். அதை பல நாவல்கள் செய்வதில்லை. வரலாற்று நாவல்கள் அதன் காலகட்டத்திலேயே நின்றுவிடுகின்றன. அதிலிருந்து கற்க வேண்டுமெனில் அதன் தாக்கம் சமகாலத்தில் எப்படி இருக்கிறது என்பதையும் அந்த எழுத்தாளன் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறான். இதை பலர் செய்ய மறந்திருக்கிறார்கள். மேலும் நாவலுக்கான மொழியை காலத்திற்கொப்ப மாற்றாமல் தனக்கு வரும் மொழியை காலத்தின் பெயர் போட்டு எழுதியிருக்கின்றனர் பலர். இந்நாவலில் இருக்கும் அந்நேர்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. வரலாற்று நாவல் எழுத முனைபவர்களுக்கான பெரும் சவால் என்று கூட இதை சொல்லலாம்.

இந்நாவல் கூறும் மாற்று வாழ்க்கை முறை எதுவுமே அறுபதை கடந்திருக்கும் என் அப்பாவின் எதிர்காலத்திற்கு உதவப் போவதில்லை. மாறாக எனக்கான மொழியில் என்னுள் சஞ்சரிக்கிறது இந்நாவல். என் போன்றவர்களின் எதிர்கால மாற்றத்திற்கு தோள் கொடுக்கிறது முகிலியின் கரங்கள். இப்படியான மொழி தான் சமகாலத்தின் தேவையாகவும் இருக்கிறது.

மிளிர்கல் நாவலில் குதிரையின் கடிவாளமென கதையின் மையச்சரடில் மட்டுமே நகர்ந்த முருகவேளின் எழுத்து முகிலினியில் ஆச்சர்யத்தையே அளிக்கிறது. மிளிர்கல்லை விட முகிலினி பெருமளவில் பேசப்படுவாள் என்பதில் துளியும் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஏணிப்படிகள், ஆரோக்ய நிகேதனம், புத்தம் வீடு, அக்னி நதி, இயந்திரம், சிப்பியின் வயிற்றில் முத்து போன்ற வரிசையில் இந்நாவலையும் முன்வைப்பேன். ஏன் சமகாலத்தில் வரலாறுகளை மையமாக கொண்டு நாவல் எழுத வேண்டுமென்றாலும் அல்லது வரலாற்று நிகழ்வுகளை அணுக வேண்டிய முறைகளை அறிந்து கொள்ளவும் முகிலினியை முன்மாதிரியாக மொழிவேன். முகிலினி எனக்கான கொண்டாட்டம். முதன் முதலாய் நான் கொண்டாடும் ஒரு வரலாற்று களம் கொண்ட நாவல்.


எழுத நினைத்ததெல்லாம் முழுமையாக எழுதவில்லை. இருந்தும் மனம் முழுக்க வியாபித்து இருக்கிறது சிதிலமடைந்த டெக்கான் ரேயான் தொழிற்சாலை. அதுவே நாவலின் வெற்றி என கொண்டாடுகிறேன். முகிலினிக்கும் முருகவேளிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்….

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக