சிலுவையின் பாதை


பன்னிரெண்டாவது வரையிலான படிப்பு கிறித்துவ பள்ளியிலேயே நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் கிறித்துவ பாடல்கள், அவ்வப்போது மாஸ் என மதம் சார்ந்த நிகழ்வுகள் மேலதிகமாக நிகழும். அரை ட்ரௌசர் போட்டிருந்த வரையில் பள்ளியென்றால் இதெல்லாம் நிகழ வேண்டும் போல என நினைத்திருந்தேன். பின் தான் ஏன் இவை கட்டாயமாக நிகழ வேண்டும் என்னும் கேள்வி எழுந்தது. இந்து சமய பள்ளிகளிலும் இவையெல்லம் நிகழ்கிறதா ? இந்து சமய பாடல்களை கட்டாயமாக இடம்பெறுக்கிறதா எனில் ஆம் என்பதையே சிலரின் மூலம் அறிந்து கொண்டேன். மதங்கள் அதிகார பீடத்தில் பள்ளிகளின் வாயிலாக தம்மை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதையே உணர்கிறேன்.

பள்ளியினை விட்டு வந்த பிறகு கிடைத்த சில தோழமையால் தான் கிறித்துவத்தை அறியத் துவங்கினேன். பள்ளியில் இருந்தவரை கிறித்துவம் எனக்கான obsession ஆக மட்டுமே இருந்தது. ஜோசே சரமாகோ எழுதிய Gospel according to Jesus Christ நாவலும் Stations of the cross என்னும் ஜெர்மானிய திரைப்படமும் தான் கிறித்துவமும் வசீகரமன மதம் என நினைக்க வைத்தது. இந்த நிலையில் யதேச்சையாய் ஜெயமோகனின் வலைதளத்தில் “சிலுவையின் பெயரால் – கிறித்தவம் குறித்து” எனும் நூலை எழுதியிருக்கிறார் என்பதை அறிந்தேன். வாசிக்கும் போது கிறித்துவம் எனும் தத்துவத்தை நுண்மையாக அறிய முடிகிறது.

என் வயதொத்தவர்களுக்கு அதிகமாக கிறித்துவம் என்றாலே தொலைக்காட்சியின் வாயிலாகவும் சினிமாக்களின் வாயிலாகவும் அறிந்த விஷயங்களே முதன்மையாய் வந்து நிற்கும். அவை மட்டுமா கிறித்துவம் ? உண்மையில் கிறித்துவம் கூறுவது என்ன ? கிறித்துவம் தோன்றுவதற்கு காலவரையறை இருக்கிறதா ? இருக்கிறது எனில் உண்மையில் அது தேவையா ? மதத்தின் அவசியம், என்ன ? மனிதன் ஏன் ஒரு மதத்தை பின்பற்ற எண்ணுகிறான் ? இத்தனை மதங்கள் எதற்காக ? என பல பொதுமையான கேள்விகளுக்கு அல்லது அடிப்படைவாத கேள்விகளுக்கு நுண்மையான பதிலை கூறியபடியே இந்நூல் கிறித்துவத்திற்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது.

கிறித்துவத்தை தனிமனிதன் அறிய பைபிளே பிரதான சுவடியாக இருக்கிறது. ஆனால் அந்த பைபிள் ஓர் அரசியலின் வெளிப்பாடு என்னும் கருத்து உலகில் நிலவி வருகிறது. ஆக ஜெயமோகன் அந்த அரசியலையும் இந்நூலில் ஆராய்கிறார். பைபிளின் பின்னே இருக்ககூடிய வரலாறு, யூத மதத்திலிருந்து எப்படி கிறித்துவம் தத்துவார்த்தமாக பிரிகிறது என பல விஷயங்களை இந்நூல் அடுக்குகிறது.

கிறித்துவம் இந்தியாவில் அரசியலாக மாறிய விஷயம் என்பதை பலர் அறிவர். மிஷனரிகள் வாயிலாக பல மதமாற்ற நிகவுகள் இங்கே அரங்கேறியிருக்கின்றன. ஆனால் மதம் மாறினால் ஒருவன் கிறித்துவன் ஆகிவிட முடியுமா ? தேவாலயங்களுக்கு செல்லும் ஒருவனால் கிறித்துவை கண்டுவிட முடியுமா ? இந்நூலின் முதல் பக்கத்தில் அவரின் வார்த்தைகளிலேயே பல அதிர்ச்சியலைகளை நம்மால் கண்டுணரமுடிகிறது.

தச்சன்மகன் எளியவன். அவனை நெரிசலான சாலைகளில் ஒருவருமே அடையாளம் காணமுடியாமல் போகலாம். அவன் நம் வீட்டுவாசலில் வந்து நின்றானென்றால் நாம் ஒருவேளை அதிருப்தியுடன் முகம் சுளிக்கக்கூடும். மாட்டுத்தொழுவில் பிறந்த அவன் ஒருவேளையேனும் நல்ல உணவு உண்டிருக்க வாய்ப்பில்லை. புழுதியில்லாத உடை ஒன்றை அவன் அணிந்திருக்க மாட்டான். பாம்புகளுக்கு வளைகளிருந்தன பறவைகளுக்கு வானமிருந்தது, மனிதகுமாரன் தலைசாய்க்க இடமிருந்ததில்லை.

அவனுக்காகவா இந்த மாபெரும் ஆலயம் ? அவன் இங்கே எப்படி உணர்கிறான் ? இந்த மாபெரும் சிற்பவளைவின் கீழ், இந்த நீரலை மின்னும் பளிங்குக்கல் தரையில், இந்த ஒளி நடனமிடும் வண்ணக்கண்ணாடிச் சில்லுகளில் அவன் தன்னை எப்படி உணர்கிறான் ?”

இரண்டாவது அத்தியாயத்தில் அல்போன்ஸ்ம்மாள் என்னும் சிஸ்டரின் கதையை விரிவாக்குகிறார். அங்கு வரும் ஒரு வரியை பாருங்கள் -   வலி மனிதனை உடல் மட்டுமாக சுருக்க முனையும் மாபெரும் சக்தி  என்கிறார். அல்போன்ஸ்ம்மாளிற்கு வந்த மலேரியா நோயினால் கடும் உடல் வலியினை ஏற்கும் நிலை வந்தது. அப்போதும் அந்த வலியினை ஆன்மீக தியானமாக மாற்றினார். அதையே தனக்கான சிலுவையாக எண்ணினார்.  இதுவே கிறித்துவத்தின் தரிசனம். இதை எடுத்துக்காட்டுடன் விளக்கும் ஜெயமோகன் பின்வரும் பக்கங்களில் தத்துவார்த்தமாகவும் விவரிக்கிறார்.

ஒவ்வொரு மதமும் ஒரு மைய கோட்பாட்டினை வைத்து அதனை சுற்றி தன்னை தகவமைத்துக் கொள்கிறது. பௌத்தத்திற்கு துறவினை போல.  கிறுத்துவம் தியாகத்தை வைத்திருக்கிறது. எல்லோரின் பாவத்திற்காகவும் தன்னை தியாகித்து கொண்டவர் கிறிஸ்து. ஆனால் அந்த தியாகம் பின்னாட்களில் எப்படியாக மாறுகிறது ? ஓர் அரசியலாக, மதமாற்ற நிகழ்வுகளாக, பண்பாட்டின் சிதைவுகளாக. இந்த சிதைவுகளையும் ஆவணப்படுத்துகிறார் ஜெயமோகன்.

அதற்கு எதிர்ப்பதமாய் அவர் வைக்கும் விஷயம் இந்திய ஞான மரபினை. எல்லாவித தத்துவங்களையும் உள்ளடக்கக்கூடியது இந்திய ஞான மரபு. அதனை வரலாற்று ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் எடுத்து வைக்கிறார். பொய் பிரசங்கங்களை எதிர்க்க சில நியாய வாதங்கள் தேவைப்படுவதால் எல்லா விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்குகிறது. அஃதாவது பொய் பிரசங்கங்களின் விளக்கம். அதை எதிர்க்கும் ஜெமோவின் நீண்ட விவரிப்புகள் என. இவை மட்டுமின்றி ஜனநாயக ரீதியாக ஜெயமோகனின் கட்டுரைகளுக்கு வந்த விமர்சனங்களையும் பகிர்ந்திருக்கிறார். அதிலும் பல விஷயங்கள் வாசகனுக்கு புலனாகிறது. அதன் மூலம் கிறித்துவம் எந்தெந்த வகையில் சமகாலத்திற்கொப்ப தன்னை புணரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகிறது.

தோமையரை வைத்து நீண்ட பகுதி நூலில் இடம்பெறுகிறது. அவரிடமிருந்தே திராவிடம் தொடங்கியது என பல சித்தாதங்களின் மூலம் முன்மொழிந்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து பல விஷயங்களையும், தோமையர் எந்த விதத்தில் முக்கியமானவர் என்பதையும் அவரின் சித்தாந்த இடம் என்ன என்பதையும் இந்நூல் விளக்குகிறது. இந்த பகுதியில் இந்திய ஞான மரபிற்கும் இந்து ஞான மரபிற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டையும், திராவிடத்தின் மீதுள்ள அதீத பற்று எப்படி ஃபாஸிஸம் ஆகிறது என்னும் விஷயத்தையும் நயம்பட கூறிச் செல்கிறார்.

நூலின் கடைசியில் தோமையரின் வார்த்தைகளும், பைபிளின் பகுதிகளையும் பகிர்கிறார். தோமையரின் வார்த்தைகள் எல்லாமே என்னை வசீகரித்தன. குறிப்பாக

ஏசு சொன்னார்: “மனிதனால் உள்வாங்கப்பட்டு மனிதனாக மாறும் சிங்கம் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. மனிதன் சிங்கத்தால் உள்வாங்கப்பட்டு சிங்கம் மனிதனாக ஆகுமென்றால் அந்த மனிதன் சபிக்கப்பட்டவனாகிறான்”

இந்நூல் பல விஷயங்களுக்கு திறப்பாக இருக்கிறது. அது கிறித்துவமாக இருக்கலாம், ஆன்மீகத்தின் தேவையாக இருக்கலாம், அல்லது சுய அகத்தின் திறப்பாகவும் இருக்கலாம். மிக சுருக்கமாகவே நூல் சார்து இப்பதிவில் சொல்லியிருந்தாலும் என்னளவில் இதுவும் ஒரு புனித நூல்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக