விலைபோகாத விஷயங்களின் வியாபாரம்நாம் நம் வரலாற்றில் அதிகமாக ஒரு விஷயத்தை அறிந்திருப்போம். முன்பெல்லாம் வாணிபமானது பண்டமாற்று முறையாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரு பிராந்தியத்தில் இருக்கும் விஷயங்களை இன்னுமொரு பிராந்தியத்தில் இருக்கும் விஷயங்களோடு பகிர்ந்து கொள்ளுதல். இது காலப்போக்கில் பிராந்தியம் குறுநிலமாக விஸ்தீரணம் அடைந்து அண்டை நாடுகள் வரை சென்றது.

சில நேரங்களில் ஒரு மன்னன் அடுத்த மன்னனின் ராஜ்ஜியங்களோடு மக்களுக்கு தேவையான விஷயங்களை பண்டமாற்றம் செய்துகொள்வர். இந்த பண்டமாற்று முறையானது இன்னமும் அதிகரித்து பணம் என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. பண்டம் பொதுப்பொருளாகி யார் வேண்டுமென்றாலும் இந்த பணத்தை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்னும் ஒரு நிலை.

இவை நான் அறிந்தது. இப்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கே செல்வோம். ஒருவரிடம் நான் அரிசியை கொடுத்து அவர் நிலத்தில் விலையும் மிளகை வாங்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் நிலத்திற்கும் என் நிலத்திற்கும் இடையே இருக்கும் தூரமானது தோராயமாக ஒரு முந்நூறு கி.மீ என வைத்துக் கொள்ளலாம். எனக்கு அவர் மிளகை தருபவர் என்பதே அந்த ஊருக்கு நான் சென்ற போது தான் தெரியவந்தது. அப்படியெனில் எனக்கு அவர் எப்படி அந்த மிளகைத் தருவார் ? அல்லது அவரிடமிருந்து பண்டமாற்று முறையின் மூலம் நான் மிளகை பெற என்ன செய்ய வேண்டும் ? அவரிடம் நா குழைந்து பேசி அவரிடம் மிளகை பெற்று ஊருக்கு சென்று என்வசம் இருக்கும் அரிசியை அவருக்கு யார் மூலமாகவோ அல்லது நானே நேரடியாக சென்றோ கொடுக்க வேண்டும். இவை தான் சாத்தியக் கூறுகள்.

1849 ஆம் வருடம் இந்த வாணிபத்தில் கிங்கரனாக இருந்த ஒருவரை அமேரிக்க அரசாங்கம் சிறைபிடித்தது. என்ன காரணெமனில் அவர் எப்போதும் தனக்கு தெரியாத அந்நியரிடத்தில் சென்று பேசுவார். பேசும் போது தன் மீது அந்த அந்நியருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்னும் யுத்தியிலேயே பேசுவார். அவருக்கு நம்பிகை வந்துவிட்டது என்று அவர் நினைத்தவுடன் அவரிடம் இன்று இரவு எனக்கு தங்களின் கைகடிகாரத்தை தர முடியுமா ? நாளை காலை திருப்பி தந்துவிடுகிறேன் என்பார். அதன்படி இவரின் நம்பிக்கையினால் அவரும் கைகடிகாரத்தை தருவார். ஆனால் பதிலியாக இவர் எதுவும் தராமல் சென்றுவிடுவார். நூதனமான அதே நேரம் நாகரீகமான ஒரு திருட்டு என்று தான் இதை சொல்ல வேண்டும். இப்படியே தொடர்ந்து செய்து வந்த போது ஒரு முறை பறிகொடுத்தவரிடம் மாட்டிக் கொண்டார். அப்படியே ஆரம்பத்தில் சொன்னது போல் சிறைபிடிக்கவும் பட்டார். அவர் பெயர் வில்லியம் தாம்ப்சன். அவரை மையமாக வைத்து 1857 இல் Herman Melville என்பவரால் The Confidence-Man என்னும் தலைப்பில் ஒரு நாவலும் எழுதபட்டது.
-       ஸ்டிவ் ஃப்ரேசர் 2008 இல் எழுதிய கட்டுரையிலிருந்து தான் இந்த தாம்ப்சனை கண்டுக்கொண்டேன்.

இந்த தாம்ப்சனின் அறிவுஜீவி கோட்பாடுகளை உலகம் கண்டறியத் தொடங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிலருக்கு கடிதப் போக்குவரத்து இருந்தது. அந்த கடிதம் குறிப்பிட்ட நபரிடமிருந்து வருமல்லவா அவர் ஸ்பெயின் நாட்டின் சிறையில் இருப்பார்(கடிதத்தின்படி). அவருடைய பின்புலங்கள் அந்த கடிதத்தில் இருக்கும். குறிப்பாக இந்த கடிதம் தங்கள் கைகளுக்கு கிடைத்தது ஒரு பாக்கியம் என்றே அக்கடிதங்கள் ஆரம்பிக்கும். அந்த சிறையில் இருப்பவர்கள் அந்த நாட்டின் கோடீஸ்வரர்களுள் ஒருவர். ஆனால் அவர்கள் பெயர் தவறாக பதிவேட்டில் விழுந்து யாரோ செய்த குற்றங்களுக்காக அவர்களை பிடித்து சிறையில் போட்டுவிட்டார்கள். இப்போது அவர்களின் சொத்து, அந்தக்கால சொத்து என்பதால் பணமாக இல்லாமல் நிலம், வீடு, தோப்பு போன்று தான் இருக்கும். அந்த சொத்துகள் மீட்கப்படமுடியாமல் அரசாங்கம் கையகப்படுத்தியிருக்கும். அல்லது யார் பிடியிலாவது இருக்கும். அந்த சிறைவாசியின் நம்பிக்கையானவர் ஒருவர் வந்து குறிப்பிட்ட தொகையை இன்னாருக்கு கொடுத்தால் தான் அவருடைய சொத்தானது அவருக்கே வந்து சேரும். கொடுப்பதற்கு ஆளில்லாமல் தான் இங்கே தனிமையில் சிறைவாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று வரும். நீங்கள்(கடிதம் வாசிப்பவர்) தனக்கு உதவுவதாய் இருந்தால் அந்த நபருக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து சொத்தை மீட்டுத் தாருங்கள் என்பர். எனக்கு பதின் வயதில் அழகிய பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளை தங்களுக்கே மணம் முடித்து வைக்கிறேன். பண வியாபாரத்துடன் நின்றுவிடாமல் ஒரு உறவு மேற்கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று நினைக்கிறேன் என்றெல்லாம் கடிதம் நீளும். சிறையிலிருந்து அந்த செல்வந்தாரால் அதிகம் தொடர்பு கொள்ளவும் முடியாது. அப்படி வாசிப்பவர் உதவி செய்ய முற்பட்டு பணத்தை அவர் கடிதம் மூலம் குறிப்பிட்ட நபரிடமோ பேங்கிலோ செலுத்தினாலும் அவர்களுக்கு அடுத்த கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் இந்த வாசகன் பணம் அனுப்பிக் கொண்டே இருப்பான். கைகளில் பணம் அனுப்ப முடியாமல் இருக்கும் நிலையில் இருவரும் அமைதியாகிவிடுவார்கள். ஒருவன் தோற்றவன் ஆவான். ஏமாந்தவன் ஆவான்.

இந்த முறையை அஃதாவது வில்லியம் தாம்ப்சன் மற்றும் ஸ்பெயின் நாட்டு சிறைகைதிகள் கையாண்ட முறையை confidential trick என்கிறார்கள். இவர்களின் பண்டமாற்று முறையே நம்பிக்கையும் பண்டமும் தான். அவர்களை எப்படியாவது நம்ப வைப்பது மட்டுமே இவர்களின் வேலை. நம்ப வைப்பதற்கு அவர்களின் மனிதாபிமான உணர்வுகளை தூண்டும் வண்ணம் கொஞ்சம் வன்மமும் கொஞ்சம் இரக்கமும் அவர்களின் கடிதத்தில் இருக்கும்.

மேலும் ஒரு முக்கிய விஷயம் என்ன எனில் இந்த ஸ்பெயினிய முறைகளில் அவர்கள் தனக்கு உதவுபவர்களுக்கு குறிப்பிட்ட பணத்தை தருவதாகவும் கூறுகின்றனர். இதனால் நம்பிக்கையுறும் மக்கள் இதில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்த ஸ்பெயின் நாட்டை விட தீவிரம் அடைந்தது நைஜீரியா நாடு தான். அங்கிருப்பவர்கள் இந்த முதல் செலவான கடித போக்குவரத்தை குறைத்து தொலைபேசி இன்னும் சென்று மின்னஞ்சல்கள், வலைதளங்கள் வழியாக தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள். இங்கே இவர்களின் வழியும் வேறுவிதமாய் இருந்தது. ஸ்பெயினில் மூதாதையர்களின் நிலம் என்றிருந்தது. இங்கோ இவர்கள் தங்களின் சொந்த அப்பாவின் பணம் வங்கியில் இருக்கிறது தன் வாரீசின் அயல்நாட்டு நண்பனோ உறவுக்காரனோ வந்து கையொப்பம் இட்டால் தான் அது மீட்கப்படும் என்னும் அளவில் எழுதபட்டிருக்கிறது என்று சொல்வார்கள்.

இப்படி வெறுமனே சொன்னால் யாரும் மசியமாட்டார்கள் என்பது போல் தன் நிலவரங்களை மிக மோசமாக சொல்லுவார்கள். தன் சகோதரர் அம்மா அப்பா ஆகியோர் ஏதேனும் விபத்தில் இறந்ததாக கதை கட்டுவார்கள். தான் இப்போது அவதியின் பிடியில் இருப்பதை பூடகமாக காதல் கலந்து சொல்லிவிட்டு வங்கி எண்ணையெல்லாம் அளித்து விடுவார்கள். கூட தொலைபேசி எண்ணும். இதில் உதவுபருக்கான பங்கு அவர்கள் எவ்வளவு பணத்தை மீட்டுத் தருகிறார்களோ அதில் முப்பது சதவிகிதத்தை. கேட்பது பெண்ணாக இருப்பின் அவளையே அந்த உதவுபவருக்கு அளிப்பார்கள். சில நேரங்களில் உயிர் போகும் அளவு வாய்ப்புகள் இருக்கிறது இந்த நூதன வாணிபத்தில்.

இந்த மின்னஞ்சல்கள் நிறைய பேருக்கு நைஜீரியாவில் இருந்து வந்திருக்கிறது என்றும் மேற்கு ஆப்ரிக்காவின் சில நாடுகளிலிருந்து வந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதை 419 என்னும் எண்ணைக் கொண்டு குறிக்கிறார்கள். அது நைஜீரிய சட்டத்தில் அடுத்தவர்களின் சொத்துகளை பொய்களை சொல்லி கபளீகரம் செய்யும் ஆட்களுக்கு எதிரான சட்டத்தின் எண். ஆனால் ஒரு ஆய்வு அமேரிக்க நாடுகளில் இருந்து தான் இந்த ஆட்கள் கிளம்புகிறார்கள் என்று சொல்கிறது.

நைஜீரியாவிலிருந்து மக்கள் மேற்கு ஆப்ரிக்காவிற்கு கிளம்பிவிட்டார்கள். எனினும் அவர்கள் தங்களின் நைஜீரியா என்னும் உரிமையை எடுத்து செல்கிறார்கள். இதனாலே தான் இந்த விளைவுகள். இதை, இவர்களை ஸ்கேமர்ஸ் என்கிறார்கள்.

இங்கே நம்பிக்கையும் விலைபொருளாகத் தான் இருக்கிறது. விலைபோகாத விஷயங்களையும் நாம் இங்கே வியாபாரம் செய்ய முடியும். இன்மையை நம்பி இருத்தலை நாம் நம்பிக்கையின் பெயரில் ஏமாந்து இழந்து கொண்டிருக்கிறோம். அந்த இழப்பில் நாளை நீயோ உன் நண்பனோ அல்லது என் நண்பனோ இருக்கலாம். அதனால் இப்போதே தெளிந்து கொள்….
- எழுத்தாளன்.

வாசகன் cum நண்பன்டேய் மச்சி! நீ ஏதோ எழுதி பத்திரிக்கைல வந்திருக்காம். . . ? எப்பலர்ந்து ?

எழுத்தாளன்ஹா ஹா ஹா அது ஒண்ணுமில்ல. விக்கிபீடியா, கூகிள் மாமா இவங்களயெல்லாம் கொஞ்சம் கேள்வி கேட்டேன். எப்படியும் எழுதுனத நோண்டு பாப்பானுவ திருட்டு பயலுக. அதனால நான் என்ன பண்ணேன் கூகிள்ள கீழ நெறைய பக்கம் வரும்ல அதுல ஒரு அஞ்சுக்கு மேல க்ளிக்கு பண்ணி அங்கருந்து மேட்டர எடுத்து அங்க அங்க கோர்த்து கடைசியா ஒரு கருத்து. இப்ப நான் ஒரு சமூக ஆர்வலர்!


பி.கு : சில மாதங்களுக்கு முன்பு அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் என்றொரு நாவலை எழுதினேன். ப.சிங்காரம் என்னும் பெயரில் பரிசுத்தொகையும் அந்நாவலுக்கு கிட்டிற்று. அது பதிப்பளவில் காலாவதியாகிப் போயிருந்தாலும் சில நீக்கப்பட்ட அத்தியாயங்கள் என்வசம் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றே மேலே எழுதியது. 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக