Sell me this pen!முதல் வேலை எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டவசமானதுதான். கல்லூரியின் வாயிலாக எனக்கு கிடைத்த பணி சில ஏமாற்றுக்காரர்களின் வழியே நிகழ்ந்த நூதன மோசடி என்பது சில காலத்திற்குபின்னரே தெரியவந்தது. அதற்குள் என் மூன்று மாதம் விழுங்கப்பட்டிருந்தது. சென்னையில் நாமாகவே வேலை தேடலாம் என கிளம்பினேன். பேருந்தில் அசரீரியாய் ஒரு மனிதரை சந்திக்க நேர்ந்தது, அதுவும் பக்கத்து இருக்கையில்.

முகமனுடன் சின்னதாக பேச ஆரம்பிக்கும் போது பேச்சு மார்க்கெடிங் பக்கம் திரும்பிற்று. அவர் அந்த பணியில் தான் இருக்கிறார் என்பதை ஓரிரு பரிவர்த்தனைகளில் அறிந்துகொண்டேன். அதன் பெருமைகளை அவர் சொன்னவிதம் இள மண்டையில் சட்டென பதிந்தது. அஃதாவது வேலை தேடிச் செல்லும் போது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் படையெடுப்பது படிப்பினை முடித்த இளைஞர்களுக்கே உரிய வழக்கம். எல்லா இடங்களிலும் நிகழ்வது என்னவோ வாசலில் இருக்கும் செக்யூரிட்டியிடமே புறமுதுகிட்டு ஓடுவதுதான். அதே மார்க்கெட்டிங்கினுள் நுழைந்துவிட்டால் உள்நுழையவிடாத பல நிறுவனங்களுக்குள் அதிகாரத்துடன் நுழையலாம் என்றார். கேட்கவே அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.

பொது மக்களுக்கு மார்க்கெட்டிங் என்றாலே இரண்டு விஷயங்கள் தான் நினைவினில் எழுகின்றன. ஒன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இருக்கும் ரெப்ரஸண்டேடிவ் மற்றொன்று வீட்டு வாசலில் அடிக்கடி வரும் சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ். அதிலும் அந்த இரண்டாவது ரகம் ரொம்ப பாவம். பிச்சைக்காரனை விட கேவலமாக வீட்டிலுள்ளோர் விரட்டியடிப்பார்கள். தன் பொருளை ஏதென்று சொல்வதற்குமுன் வீட்டம்மாக்களின் குரல் போய்ட்டுவாப்பா வேணாம் என்று எழுந்துவிடும். அடியேனும் இந்த பாவத்தை செய்திருக்கிறேன்!

வீட்டம்மாக்களை குறை சொல்ல முடியாது. அன்றாட வேலைகள் மற்றும் சமூகத்தில் அதிகரித்து வரும் திருட்டு பயம் கணவன் வேலைக்கு செல்லும் சமயத்தில் கூடடைந்த பறவையாக மாற்றிவிடுகிறது. பிழை எல்லாமே அந்த ரெப்பிடம் தான். ஒரு பொருளை விற்பதற்கு அதிமுக்கியமான விஷயம் அந்த பொருளின் நுட்பமான தகவல்களை அறிவது. மக்கள் அறிந்திராத பொருளை அவர்களிம் கொண்டு செல்கிறோம் எனில் முதலில் அவர்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும். வேறு விதமாக சொல்ல வேண்டுமெனில் எல்லோர் வீட்டிலும் துணி துவைப்பதற்கான தூள் இருக்கிறது. ஆனாலும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தூளை வாசல் வாசலாக எடுத்து சென்று விற்க முனைகிறார்கள். அப்போது அவர்கள் தங்களுக்குள் சந்திக்க வேண்டிய முதல் கேள்வி- ஏற்கனவே முண்ணனியாக இருக்கும் தூளை அவர்கள் உபயோகிக்கிறார்கள். அதை நிராகரித்து ஏன் நம்முடைய பொருளை வாங்கி உபயோகிக்க வேண்டும் ?

பதில் மிக எளிமையானது. எந்த விற்பனையாளனும் பொருளை நேரடியாக விற்பதில்லை. மாறாக அந்த பொருளினால் நுகர்வோருக்கு கிடைக்கக்கூடிய லாபத்தை தான் விற்கிறான். அவனுடைய விற்பனை சார்ந்த பேச்சுகள் முழுக்க இதை சுற்றியாகவே இருக்க வேண்டும். இந்த விஷயம் மக்களின் மனதில் லேசாக ஏறியவுடனேயே அவர்களிடமிருந்து பொருள் சார்ந்த கேள்விகள் எழ ஆரம்பிக்கும். அஃதாவது பொருளை வாங்கினால் உபயோகமாக இருக்குமோ என்னும் சபலம். இதன்பிறகு மீதியெல்லாம் அவன் பாடு சிவன் பாடு தான்!

மார்டின் ஸ்கார்ஸே இயக்கிய The wolf of the wall street என்னும் திரைப்படத்தில் இந்த விஷயங்களை மிகத் தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார். குறிப்பாக நாயகன் பேசும் முதல் அழைப்பும் உடன் இருப்பவர்களுக்கு பாடம் எடுக்கும் போது வரும் வசனங்களும் இதை தெளிவாய் உணர்த்தும். அப்படத்தின் மிக முக்கியமான வசனம் தான் இப்பத்தியின் தலைப்பும் கூட. ஏன் முக்கியம் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த வசனம் படம் நெடுக ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பும். அதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது.. உங்களுக்குள் மார்க்கெட்டிங் திறமை உள்ளதா என்பதை ஆராயவும் இக்கேள்வி உதவும். படம் பார்த்தால் அனிச்சை செயலாகவே இக்கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பார்ப்பீர்கள். அதனால் தான் அதையே தலைப்பாக வைத்திருக்கிறேன்.

மேலும் விலைபோகாத பொருளை யாரும் மெனக்கெட்டு தயாரிப்பதில்லை.  விற்பனையாளன் அந்த பொருள் சார்ந்த நுட்பத்தில் விற்பன்னனாக இருப்பின் எல்லாமே நுகர்வோர் கலச்சாரத்தின் போட்டி நிறுவனங்களாக மாறிவிடும்..


பி.கு : அசரீரியாக வந்த அந்த நபரின் பேச்சா என்ன  என்று தெரியவில்லை என்னுடைய முதல் வேலை மார்க்கெட்டிங்கிலேயே அமைந்தது. அங்கு கற்றதிலிருந்து தான் மேலே எழுதியிருப்பதை என்னால் கூற முடிந்தது. இல்லையெனில் மீண்டும் ரெப்புகளை இழிவானவர்களாகவே கருதும் பொதுபுத்தி என்னிடமிருந்து நீங்காமல் இருந்திருக்கும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக