ஆண்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்நெருங்கிய வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் சமீபகாலத்தில் என்னிடம் கேட்கும் கேள்வி நீ க்ரிக்கெட் பாப்பியா என்பதாகத்தான் இருக்கிறது. க்ரிக்கெட்டின் மிகத்தீவிர ரசிகன் நான். பழக்கமோ என்ன எனத் தெரியவில்லை ஒரு விஷயம் பிடித்துப் போய்விட்டால் அதற்கு வேண்டுமென்றே இடைவெளி விட்டுவிடுகிறேன். அது சில நேரம் இயற்கையாகவே கூட அமைந்தும்விடுகிறது.

சிறுவயதில் கங்குலியின் தீவிர ரசிகன் நான். அதற்காகவே வலதிலிருந்து இடது பக்கம் பேட் செய்ய பழகினேன். யாருடனாவது க்ரிக்கெட் பார்க்க நேரிட்டால் அச்சமயம் கங்குலியும் அவுட் ஆனால் என்னை அவர்கள் அடிக்கும் கிண்டலில் அழவும் செய்திருக்கிறேன். அத்தனை பெரிய கங்குலியின் வாய்ச்செவுடாலாக இருந்திருக்கிறேன். எனக்கென நண்பர்கள் வட்டம் அமைய ஆரம்பித்த பொழுது க்ரிக்கெட்டிலிருந்து விலக ஆரம்பித்திருந்தேன். சமீபகலாமாக உருவாகியிருக்கும் அணிகளின் சூழலும் அவர்களின் ஆட்டமும் தான் என்னை மீண்டும் க்ரிக்கெட்டின் ரசிகனாக மாற்றியிருக்கிறது. எல்லோரின் மேட்சுகளையும் பார்ப்பேன். இந்திய அணியெனில் ஈர்ப்பு பன்மடங்காக இருக்கும். அவ்வளவுதான்.

ஒருமுறையேனும் க்ரிக்கெட்டை மைதானத்திற்கு சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் இதுகாறும் இருந்து வந்தது. பழைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தபோது இன்று சேப்பாக்கம் போலாமா என்றேன். ஆட்டம் யாருக்கும் யாருக்கும் எனில் மேற்கிந்திய தீவுகளுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே நிகழும் மகளிர் பிரிவிலான உலகக் கோப்பை ஆட்டம். ஒருவாராக எல்லோரும் ஒப்புக்கொண்டு(ஒப்புக்கொள்ளவைத்து) சென்றோம். முழுப்போட்டியும் இருக்க முடியவில்லையென்றாலும் பார்த்தவரையில் கொண்டாடினேன் என்பதே உண்மை. அதே நேரம், அந்த போட்டி பல தர்க்கங்களை என்னுள் எழுப்பியது.

ஆடுகளத்தில் அம்பயர்கள் சொல்வதே முடிவெனத் தெரிந்தது(பார்க்கையில்), மூன்றாவது நடுவர் இருப்பதாகவே தெரியவில்லை. ஸ்பைடர் கேம் இல்லை. பவுண்டரிக்கு அருகில் கேமிராவுடன் யாரும் இல்லை. அவ்வப்போது ஹாட்ஸ்டாரின் விளம்பரம் பெரிய திரையில் ஓடிற்று. வீட்டில் நான் க்ரிக்கெட் பார்க்கிறேன் என சொன்னவுடன் அவர்கள் எந்த சேனல்லயும் வரலியே டா என்றனர். கேள்விகளுக்கு மேல் கேள்விகளே எழுந்தன.

ஒரே ஒருமுறை இந்திய மகளிரின் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஐம்பது ஓவருக்கு 160 ரன்களையே குவித்திருந்தனர். அதை எடுக்கவும் எதிரணி போராடிக் கொண்டிருந்தது. ஆடவர்களுக்கான ஆட்டங்களை தொடர்ந்து பார்த்துவருவதால் நீங்க என்னடா பச்சாஸ் இதெல்லாம் யாராவது பாப்பாங்களா என்னும் திமிரே என்னிடம் அப்போது இருந்தது. இன்று எனக்கே அந்நினைவு அசிங்கமாக இருக்கிறது.

மகளிர் மேம்பாடு என பள்ளி கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்க சொல்லும் அரசு இப்போது என்ன செய்கிறது ? மேலும் இன்று பார்த்த மேட்சில் ஆடவருக்கான ஆட்டத்திற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து போட்டிகளை வைப்பார்களாயின் ஆடவர்களைப் போலவே இவர்களும் பார்வையாளர்களின் இடங்களை பந்துகளால் பதம் பார்ப்பார்கள். ஆனால் அதை யார் செய்ய வேண்டும் ?

நேற்று முந்தினம் நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி விளையாட்டளவில் மிகச்சாதாரண ஆட்டம் தான். ஆனால் அதை பரபரபாக்கியது பின்னால் நிகழ்ந்த அரசியலின் விளைவு. தொலைக்காட்சி சேனல்கள் கொடுத்த அதீத விளம்பரங்களின் விளைவு. அதை ஏன் மகளிரின் ஆட்டங்களுக்கு செய்யக்கூடாது ? இந்தியாவில் க்ரிக்கெட் என்பது மதமெனில் சச்சின் அதன் கடவுள் என்னும் சொலவடை புழக்கத்தில் உள்ளது. அந்த மதத்தில் மகளிர் என்ன தடை செய்யப்பட்டவர்களா ?

சமகாலத்தில் ஆணாதிக்கத்தின் அடியில் க்ரிக்கெட் இருக்கிறது என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அதை சமபங்காக்க அதே ஆடவர்கள் நினைத்தால் நிச்சயம் முடியும். மிகச்சாதாரணமாக நிகழ்ந்து முடிந்த மேட்சிற்கு சிறப்பு விருந்தினர்களாக மம்தா பானர்ஜி, அமிதாப்பச்சன், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் என பெரும்படையினையே கொணர முடியுமெனில் அப்படை நினைத்தால் மகளிர் அணியை சமூகத்தினிடையே கொண்டுசெல்ல முடியாதா என்ன ?

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எப்படியேனும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என மகளிர் அணி களம் இறங்கியிருக்கிறார்கள் இந்தியாவில். ஆளில்லாத மைதானத்தில் நாட்டிற்காக தீர்க்கமாக விளையாட்டினை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தேவை ஒரு கேமிரா. ஒரு சேனல். இது அவர்கள் கேட்டு கொடுக்க வேண்டியது அல்ல. அரசு தானாக செய்ய வேண்டியது. அவர்களும் கேட்கவில்லை. நாமும் செய்யவில்லை.

மேற்கூறிய படி ஆன்மீத்தின் வழியே ஒரே ஒரு விஷயத்தை சொல்ல விழைகிறேன். க்ரிக்கெட்டின் மதத்தில் ஆண்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இரண்டு இந்திய அணிகளும் உலக கோப்பையில் வெல்ல வாழ்த்துகள். . .

பி.கு 1: மைதானத்தில் ஆட்டத்தை பார்த்த அனுபவத்தை சொல்லவில்லையே. தொலைக்காட்சியில் பார்ப்பதைவிட நன்றாக இருக்கிறது.தொலைக்காட்சியில் பார்க்கும் போது கவனச்சிதறல்களால் சில தருணங்களை இழக்கிறோம். அந்த அலட்சியத்திற்கு ரீப்ளே போடுவார்கள் என்னும் கர்வம் தான் காரணம். அது நேரில் இல்லையாதலால் ஒவ்வொரு பந்தையும் கூர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது(தீவிர க்ரிக்கெட் ரசிகர்களுக்கு). சுருங்கச் சொன்னால் மைதானத்தில் க்ரிக்கெட் பார்ப்பது ஒரு தியானம்.


பி.கு 2 : இந்திய மகளிரின் ஆட்டங்கள் மட்டும் நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ஏனைய ஆட்டங்கள் espn இல் ஒளிபரப்பாகும். எனக்குத் தெரிந்து அதை தனியாக subscribe செய்ய வேண்டும் என நினைக்கிறேன்!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக