வேற்றுலகவாசியை வெகுவாக ரசிக்கிறேன்அன்றாடத்துடன் வாசிப்பும் எழுத்தும் கலக்கும் வண்ணம் வேலைகிடைத்தது என் அதிர்ஷட்ம என்றே நினைக்கிறேன். கடந்த சில மாதங்களாக நூல் வாசிப்பே என்னிடமிருந்து தற்காலிகமாக மறைந்து இருந்தது. அதை மீட்டெடுத்தது சாரு நிவேதிதாவின் புதிய சில புத்தகங்கள் தான். அதில் இரண்டு நூல்கள் சார்ந்து இப்பதிவில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

சாரு நிவேதிதாவை தொடர்ந்து வெறிகொண்டவனாக வாசித்தது மூன்று நான்காண்டுகளுக்கு முன்பு என நினைவில் இருக்கிறது. அதன் பிறகு மிகப்பெரிதான மாற்றம் தேவைப்பட்டது என்பதாலேயே அவரின் நூல்களை வாசிக்காமல் அவர் விமர்சித்த, சிலாகித்த நூல்களை தேடி வாசிக்க தொடங்கினேன். எழுத்தை லேசாக அறிய பெரிய வழிகாட்டுதலாக சாருவின் எழுத்தும் அங்கிருந்து நான் கொண்ட இடைவெளியும் உதவியது.

சாருவின் எழுத்துகளுடன் எப்போதும் நான் நிகழ்த்துவது ஓர் உரையாடல். அந்த உரையாடலை சாரு சமூகத்துடன் நிகழ்த்துகிறார். அதில் நானும் ஓர் அங்கத்தினன் என்பதால் என் அருகாமையிலும் அந்த கேள்விகளின் உரையாடலின் உஷ்ணங்களை உணர முடிகிறது. கிட்டதட்ட இதைத்தான் சமீபத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழாவில் மனுஷ்யபுத்திரனும் சொல்லியிருந்தார். மிகச்சரியான அவதானிப்பாகவே இதை உணர்கிறேன். அதுவும் இதுவே முதன்முறையாய் வேறு ஒரு குரலினின்று சாருவின் எழுத்துகள் பற்றி கேட்பதுமாகும்.

சமூகத்தில் எத்தனை அவலங்கள் நிகழ்கின்றன ? அதில் எத்தனை விஷயங்களை மக்கள் அன்றாடம் கவனிக்கிறார்கள் ? எத்தனை விஷயங்களுக்கு தீர்வுகள் கிடைக்கின்றன ? விழுமியங்கள் எப்படி அன்றாடங்களாகிப் போகின்றன ? தீதையும் நன்றையும் சமகாலத்தில் எப்படி பிரித்துப் பார்ப்பது ? இப்படி பல கேள்விகளை சமூகம் சார்ந்து கேட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் பதில்கள் கிடைக்குமா ? இதுவும் கேள்விக்குறியாக தொக்கி மட்டுமே நிற்கும்.

சமீபத்தில் கூட உடுமலையில் கலப்பு திருமணமான தம்பதியைரை நடுரோட்டில் தாக்கியிருக்கிறது ஒரு கும்பல். அதில் ஒருவர் இறந்து போய்விட்டார். பெண் மருத்துவமனையில் மன உளைச்சலுடன் இருக்கிறார். ஐவர் பிடிபட்டனர். அவர்களுக்கு விரைவிலோ சற்று தாமதமாகவோ தீர்ப்பு என ஒன்றும் கிட்டும். அதே சமயம் இதை மையமாக வைத்து வேறு சில கலப்பு திருமணங்களை பாதுகாக்க சட்டம் தீட்ட முனைவர். ஆனால் இந்த செயலை செய்ய அந்த ஐவருக்கு உந்துதலாக இருந்தது என்ன ? அவர்களும் இச்சமூகத்தில் ஒருவர் தானே ? ஏன் அதை செய்தவர்களின் நெருங்கிய வட்டத்தில் கூட அது தோன்றவில்லை அல்லது துணியவில்லை ஆனால் இந்த ஐவர் செய்திருக்கிறார்கள் எனில் அதன் அடிப்படை யாதாக இருக்கும் ? இதற்கு பிண்ணனியில் உள்ள நூதன கேள்விகளை தான் சாருவின் எழுத்துகள் சொல்பவை.

அஃதாவது தனி மனிதனின் சுதந்திரம். சுதந்திரம் என்பது எதை வேண்டுமென்றாலும் செய்வது அன்று. மாறாக சுதந்திரமாக அடுத்தவரின் சுதந்திரத்தை துன்புறுத்தாமல் இன்பமாய் வாழ்தல்.  வால்டெரின் கூற்றொன்றினை கூட சாருவின் பழைய கட்டுரை தொகுதிகளில் அதிகமாக பார்க்கலாம். அஃதாவது உன் கருத்துடன் நான் முரண்படலாம். அதே நேரம் உன் கருத்தை வெளிப்படுத்த யாரெனும் முட்டுக்கட்டையாக இருப்பின் உனக்காக போராடுபவர்களில் நான் முதன்மையானவனாய் இருப்பேன்.(மொழியாக்கம் செய்யவில்லை. மனதில் படிந்த அர்த்தத்தை எழுதுகிறேன்).

சமூகத்தில் நிகழும் பெரிய தவறுகளையே நம் கண்கள் கண்காணிக்கின்றன. சின்ன சின்ன பிழைகளை, பண்பாட்டு கூற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள தவறியதை கவனிக்க மறுக்கிறோம். அதைத்தான் சாருவின் கட்டுரைகள் இதுகாறும் கூறிவந்திருக்கின்றன. இவ்வளவு நேரம் கூறியது தான் சாருவின் பலகீனம் என்றும் சொல்லலாம். Repetitiveness.  

ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் அவர் கூறுவது. அவரின் பார்வையில் ஆணித்தரமாக ஓர் விஷயத்தை பதிக்கிறோம் என்றாக இருக்கலாம். அதே வாசகன் பக்கத்தினின்று ? நூலிலிருந்து புதுமையை தான் எதிர்நோக்குகிறான் சராசரி வாசகன். திசை அறியும் பறவைகள், எனக்கு குழந்தைகளை பிடிக்காது, கோணல் பக்கங்கள், மூடுபனிச்சாலை, வாழ்வது எப்படி, கெட்ட வார்த்தை என எல்லாவற்றிலுமே சில கட்டுரைகள் தொடர்கின்றன. அதே சமயம் ஒவ்வொன்றிலும் முக்கியமான கட்டுரைகள் என சில இருக்கின்றன. மீதமெல்லாம் எங்கோ எதிலோ சாருவாலேயே சொல்லப்பட்டவையாக இருக்கின்றன.

இந்த முக்கிய கட்டுரைகள் என நான் குறிப்பிடுவன எல்லாம் சாமான்யனின் பார்வையில். அஃதாவது கட்டுரையில் புதிய விஷயங்கள் இருக்க வேண்டும், அன்றாடங்களினின்று மாறுபட்டு பார்க்கப்படும் கோணம் இருக்க வேண்டும். இவ்விரண்டும் சாருவின் தொகுதிகளில் இருந்தும் ஒரு தொகுதிக்கும் மற்றொரு தொகுதிக்கும் வித்தியாசமின்றி இருக்கும். இதை நான் உரக்கக் கூற வேண்டுமெனில் அவரிடமிருந்து கட்டுரைகளில் மாஸ்டர்பீஸ் என ஒன்றை சொல்ல வேண்டுமல்லவா ? அப்படி எதை சொல்வது ? (இதில் தீராக்காதலி, தப்புதாளங்கள், கலகம் காதல் இசை, கனவுகளின் மொழிபெயர்ப்பாளன், போன்ற நூல்களை சேர்க்கவில்லை. அவை மையச்சரடுகளுடன் நன்கு இணைபவை. தீராக்காதலி எனில் எல்லா கட்டுரைகளும் இசைக்கலைஞர்கள்/கலைஞர்கள் பற்றியதாக இருக்கும். நான் குறிப்பிடுவன எல்லாம் அனுபவக்கட்டுரைகளின் தொகுப்பு வரிசை) இத்தனை நாட்களுக்கான காத்திருப்பிற்கு பின்னர் வந்திருக்கிறது “வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்” என்னும் நூல்.

இந்நூல் புதிய தலைமுறையில் தொடராக வெளிவந்தது. வந்த போது அதை நான் வாசித்திருக்கவில்லை. பலர் என்னிடம் அத்தொடர் சார்ந்து பேசிய வண்ணமே இருந்தனர். அதை நூல்வடிவில் வாசிக்கும் போதே முழுமையாக உணர்ந்தேன்.

இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பொதுவெளியில் கவனிக்கப்படாத விஷயங்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. அப்பா மகன் மீதான உறவு, தமிழ் மொழியின் நிலைமை, மாறி வரும் காலத்தின் வளர்ச்சி, பயணங்கள், உலகளாவிய பயணங்களும் இந்தியக் குடும்பங்களின் பயணங்களும், குடும்ப அரசியல், தனி மனித ஒழுக்கம், தமிழ் மொழியின் சமகால நிலை, மொழிபெயர்ப்புகளின் அவசியம், ஆரோக்யமான வாழ்வு, உண்மையின் தத்துவ விசாரம் என பல விஷயங்களை தீண்டிச் செல்கிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் தனக்கென ஒரு அமைப்பை கொண்டிருக்கின்றது. புதியதாக விஷயமொன்றை சொல்கிறது. அடுத்து பழையதான விஷயத்தை பகுப்பாய்கிறது, மற்றும் சமகால விழுமியங்களை பகடியாக்குகிறது. இந்த கட்டமைப்பினின்று சிறிதும் மாறாமல் நூலின் கடைசி வரை சென்றிருப்பது முழுமையான தொகுதியினை வாசித்த திருப்தியை அளிக்கிறது.

தலைப்பினைப் போலவே முற்றிலும் அந்நியமாகிப் போய் இங்கிருக்கும் நுண்மையான தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். அதே நேரம் அவர் குறிப்பிடும் விழுமியங்கள் எல்லாம் சமகால குடும்பங்களின் அன்றாடம் ஆகிவிட்டன. இது தவறு என எடுத்துக்காட்டவேணும் இந்நூல் பெரிதளவில் பேசப்பட வேண்டும். இதை நினைக்கும் போது வேறொரு பதிலற்ற கேள்வி என்னுள் எழுகிறது. கோணல் பக்கங்கள் பேசப்பட்ட அளவிற்கு ஏன் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் பேசப்படவில்லை ? பதிலற்று கிடக்கிறேன். யாரிடம் கேட்க என்றும் தெரியவில்லை.

வேற்றுலகவாசியை வெகுவாக ரசிக்கிறேன். Love you Charu. . .


பி.கு : இரண்டு நூல் என சொல்லியிருந்தேன் அல்லவா. இரண்டாவது நூல் “கடைசி பக்கங்கள்”. நியூஸ் சைரன் இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. அதில் பல பத்திகள் repetitive ஆகவே இருக்கின்றன என்பதால் எழுதவில்லை. வேற்றுலகவாசியின் டைரிக் குறிப்புகள் ஓர் அனுபவம் எனில் கடைசி பக்கங்கள் ஏற்கனவே கொண்ட அனுபவங்களின் நினைவுகளாக மட்டுமே நின்றுவிடுகிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக