ஐ.ஏ.எஸ் படிக்கிறீர்களா ?சென்ற பதிவில் ஐ.ஏ.எஸ் ஒருவரை குறிபிட்டிருந்தமையால் வேறு சில விஷயங்களும் நினைவில் எழுந்தன. சென்னையில் அண்ணா நகரை தீவு என்றே அங்கிருக்கும் பல இளைஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்கு தோதாய் சில வீடியோக்களும் மீம்களும் கூட இணையத்தில் கிடைக்கின்றன. அதற்கு பிரதான காரணம் எது வேண்டுமென்றாலும் கிடைக்கும் வசதி தான். ஊதியத்திற்கேற்ற வாழ்வியலை அமைத்துக் கொள்ளலாம். இது அங்குள்ளவர்களின் கூற்று.

வெளியூர்க்கார இளைஞன் வருகிறான் எனில் அவனுக்கு பிரதானமாக இரண்டு விஷயங்கள் அண்ணா நகரை நோக்கி இழுக்கின்றன. அது கல்வியும் வேலைவாய்ப்பும். அந்நகரின் சந்து பொந்துகளில் எல்லாம் கன்சல்டன்சிகள் இருக்கின்றன. இதை விட அதிகமாக இருப்பது ஐ.ஏ.எஸ் அகாடமிக்கள். நெருங்கிய நண்பனொருவன் படித்துக் கொண்டிருப்பதால் அவனைக் காண அங்கு செல்வது வழக்கம். அப்போது என் பள்ளியிலிருந்து பலர் அங்கு படிக்கிறார்கள் என்பர்தை அறிந்து கொண்டேன். அவர்களிடமும் வேறு சிலரிடமும் ஏன் ஐ.ஏ.எஸ் படிக்கிறீர்கள் எனும் கேள்வியை முன்வைத்தேன். பலர் ஒருமித்தப் குரலில் சொன்ன பதில் – அடுத்தவனுக்கு கீழ வேலை பாக்கறது எனக்கு ஒத்துவராது டா!

இது என்னுள் முக்கியமான சில கேள்விகளை எழுப்பின. அதற்காக தொடர்ந்து நண்பனுடன் பேசி அவர்களின் அன்றாட படிப்பினை அறிய முற்பட்டேன். ஐ.ஏ.எஸ் படிப்பில் இந்தியாவின் வரலாற்றை அதன் நுண்மைகளுடன் படிக்க சொல்கிறார்கள். எந்த ஆண்டில் போர் நிகழ்ந்தது, அதில் தலைமை தாங்கிய நபர் யார், வென்றது யார், வைஸ்ராய் யார் போன்றவை அந்த முக்கியமான விஷயங்கள். இதைத்தவிர இந்தியாவின் புவிசார் தகவல்கள், பொருளாதார நிலைப்பாடுகள் என யாவையும் கற்பிக்கப்படுகின்றன. இதைவிட முக்கியமான ஒரு படிப்பினை செய்தித்தாள். சில நாட்களில் தமிழ் இந்துவின் நடுப்பக்க கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டு நண்பனை அழைத்து சற்று பேசலாமே என அழைப்பேன். அவன் கூறும் ஒரே பதில் – அது யு.பி.எஸ்.ஸிக்கு தேவையில்லைடா என்பதே.

ஏன் தேவையில்லையெனில் செய்தித்தாளை எப்படி படிக்க(!) வேண்டும் என்றும் சொல்லித்தருகிறார்கள். உதாரணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் IRNSS-1F எனும் ஏவுகணையை விண்ணில் பாய்ச்சினார்கள் அல்லவா அந்த செய்தி கண்ணில் படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மாணவன் அது சார்ந்து இருக்கும் எல்லா விபரங்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அஃதவது தேதி, யார் தலைமையில் ,அதில் இருக்கும் சுருக்கங்களுக்கான விளக்கம், அதன் தொழில்நுட்ப தகவல்கள், இதற்கு முன் அனுப்பப்பட்ட ஏவுகணைகள் என.

இப்படிப்பு சார்ந்த விஷயங்களை அறியும் போது என் மண்டையே வெடித்துவிடும் போல இருந்தது. பின் என்ன சொல்வது ஐ.ஏ.எஸ் என்பது படிப்பா ? அது சமூகத்துடன் ஒன்றாகி  அதனை முழுமைக்குமாக அறிந்து அதன் வளர்ச்சிக்கு தன்னார்வ சிந்தனைகளையும் அதிகார ஒத்துழைப்பையும் நல்குவதுதானே so called ஐ.ஏ.எஸ். இல்லையா ? மேலும் நான் சொல்வது என்ன ஐ.ஏ.எஸ்ஸிற்கு மட்டுமா பொருந்தும் ? அதன் படிப்பிற்கு எவ்விதத்திலும் விரோதமானவன் அல்ல நான். மாறாக  அம்மாணவர்களை சந்திக்கும் போது இவர்கள் சமூக நூல்களின் புத்தக புழுவாகமாறுகிறார்களே என்னும் ஆதங்கமே எழுகிறது. அதற்கு உதாரணமே தருகிறேன் பாருங்கள்.

அண்ணா நகரில் ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற நிறுவனம் ஒன்று இருக்கிறது.சிண்டிகேட் வங்கிக்கு மேல் மாடி. நண்பனை பார்க்க செல்லும் போது மூச்சா முட்டிவிட்டது. சிண்டிகேட் வங்கியின் பின்புறம் உள்ள கழிவறைக்கு வழிகாட்டினான். உள்ளே சுவற்றுடன் ஒட்டி வைக்கட்டிருந்தது கழிப்பறை. அதன் மேல் தாளொன்றில் கைப்பட எழுதி ஒட்டியிருந்தனர் “தயவு செய்து சுயிங்கத்தை துப்பாதீர்கள். சுத்தம் செய்பவர்கள் கைகளால் எடுக்கிறார்கள்”. மூச்சா முடிந்தவுடன் கீழே பார்த்தேன். சிறுநீருடன் மிதந்து கொண்டிருந்தது யாரோ நன்கு சவைத்த சுயிங்கம்!

நண்பனிடம், “இத யாராவது சொல்லி மாத்தலாம்ல”

நண்பன் “நாங்க மேல யூஸ் பண்ணிப்போம்.இது பேங்க் காரங்களுக்கும் வர்ற கஸ்டமர்ஸுக்கும்!”

நான் சொன்னது வேறு அர்த்தத்தில். அவன் புரிந்து கொண்டது வேறு அர்த்தத்தில். வாயடைத்து நின்றேன். கிளம்பும் போது,

“நல்லா படி மச்சி. அடுத்தவாரம் பாப்போம்!”


அதற்கு பிறகு போக மனம் வரவில்லை.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக